Quantcast
Channel: அ.ராமசாமி எழுத்துகள்
Viewing all 58 articles
Browse latest View live

இந்த ஒரேயொரு கவிதைக்காக....

$
0
0

உலக மொழிகள் பலவற்றில் இருந்தும்மொழிபெயர்க்கப்பெற்றுஉலகக் கவிதைகள்என்றொரு தொகுப்பு வெளியிடப்படுகிறது என்றால் தமிழிலிருந்து யார்யாரையெல்லாம் பரிந்துரை செய்வீர்கள்? என்றொரு கேள்வியை ஒரு இந்தியவியல் அறிஞர் என்னிடம் கேட்டார்.
நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் வார்சா பல்கலைக்கழகத்தில்  நடந்த போரும் அமைதியும் இந்திய இலக்கியங்களும்என்ற கருத்தரங்கின் போது சந்தித்த அவருக்கு இந்திய மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியப் பரப்பின் அகலமும் ஆழமும் தெரிந்திருந்தது என்பதை அவரது கருத்தரங்க உரையும், பிந்திய விவாதங்களும் எடுத்துக் காட்டின.
காபி குடிப்பதற்கான இடைவேளையின் போது அந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்டார் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. “தமிழிலிருந்து நூறு பெயர்களையும் அவர்களது கவிதைத் தலைப்புகளையும் நாளையே எழுதித் தருகிறேன்” என்றேன். “நூறு அல்ல; பத்துப் பேரின் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம்” என்றால் யார் யாரைச் சொல்வீர்கள் என்றார்? உலகக் கவிதை இலக்கியத்திற்கு ஆயிரக் கணக்கான கவிதைகளைத் தரக் கூடிய தமிழிலிருந்து வெறும் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம் என்று சொன்னவுடன் நான் கொஞ்சம் திகைத்துப் போய் விட்டேன். பல்வேறு மொழிகளிலிருந்து ஆகச் சிறந்த கவிதைகள் தொகுக்கப் படும்போது பேசுபொருளில் இருக்கும் உண்மைத்துவம், கவிதையின் செய்நேர்த்தி சார்ந்த நுட்பங்கள், எழுதப்பெற்ற மொழியில் அது செலுத்திய தாக்கம் மற்றும் செல்வாக்கு எனப் பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டு கவிதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த அடிப்படைகளைப் பின்பற்றிப் பத்துத் தமிழ்க் கவிதைகளைத் தேர்வு செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை நானறிவேன்.
நூறு கவிதைகளைப் பரிந்துரை செய்வதற்குப் பதிலாகப் பத்துக் கவிதைகளைப் பரிந்துரை செய்வதுதான் எனக்குச் சிரமமே ஒழிய ஒரேயொரு கவிதையைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் சிரமமே பட மாட்டேன். கண்ணை மூடிக் கொண்டு அந்தக் கவிதையைச் சொல்லி விடுவேன். ஆம் தமிழின் ஆகச் சிறந்த கவிதையாக நான் நினைப்பது கவி கணியன் பூங்குன்றனின்
யாதும் ஊரே யாவருங் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழி படூஉ மென்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம், ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமோ!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.[ புறநானூறு 192.]

தொடங்கிய இடத்தில் முடிவதல்ல;வாழ்க்கை. ஒரு மழைத்துளியின் ஆசை பெருங்கடலின் பகுதியாக ஆவதில் இருக்கிறது. ஒரு மனிதப் பிறப்பின் வாழ்க்கை நிலையாமையின் இருப்பில் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றாக இருந்தாலும், நிலைத்து நின்று விடும் ஆசையை ஒவ்வொரு மனிதனும் விட்டுவிடுவதில்லை. மனிதம் நிலையாமை என்பது தெரிந்ததால் தான் நிலையானது இறைமை என ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதுவாகி விட முயல்கிறது. ஆம் மனிதர்கள் கடவுளாகி விடுவதில் வாழ்க்கை முழுமை அடைவதாக நம்புகிறார்கள். அதற்காகவே அலைகிறார்கள்; தேடுகிறார்கள். அந்த முழுமை ஞானத்தில் இருக்கிறது என்கிறான் ஒருவன். ஒருவனுக்கு வீரத்தில் இருக்கிறதாகப் படுகிறது. மற்றொருவனுக்கோ செல்வத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. பெரும்பணக்காரனாக ஆவதும், பெரும்சாகசக் காரனாகக் காட்டிக் கொள்வதும், ஞானத்தின் உச்சத்தில் இருப்பதாகப் பாவித்துக் கொள்வதுமான வாழ்க்கையெல்லாம் பாவனைகள் தான் என்பதைக் கணியன் பூங்குன்றன் அந்தக் கவிதையின் ஒரு தெப்பத்தைக் காட்டிச் சொல்கிறான்.
மழை பெய்ததாலோ அல்லது ஊற்றுப் பெருக்காகவோ மலையிலிருந்து கிளம்பு நீரின் பயண நோக்கம் கடலை அடைவது என்பதை நீர் அறியுமா? என்று தெரியவில்லை. அறியாமலேயே தொடங்கும் நீரின் பயணம் ஓடையாக, தடாகமாக,அருவியாக, சிற்றாறாக, நதியாகப் பயணம் செய்கிறது. அதன் போக்கிலான பயணத்தை மனிதர்கள் குளமாகவும், ஏரியாகவும் அணையாகவும் மாற்றித் தடுத்து நிறுத்தவும் கூடும். என்றாலும் அதன் ஆசை என்னவோ கடலைச் சேர்வது என்பதில் தான் இருக்கிறது. அந்த நீர் அதற்காக மட்டுமே நிகழவில்லை; அதற்குள் கிடக்கும் தெப்பத்திற்காகவும் சேர்த்தே நிகழ்கிறது என நினைக்கிறான் பூங்குன்றன். 
நீருக்குள் விழும் ஒரு தெப்பத்தின் பயணமும் அந்த நீரின் பயணப்பாதையையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. திசைமாற்றப்படும் தெப்பத்தின் போக்கைப் போல மனித வாழ்க்கையின் பயணமும் பல நெருக்கடிகளால் திசை மாற்றம் அடையக் கூடியது. தனிமனித வாழ்க்கையில் அடுத்தவரின் பார்வைக்கு வராமல் - நடக்கும் திசைமாற்றங்களை முன் வைத்தே கணியன் பூங்குன்றன் தன் கவிதைப் பொருளை அமைத்துள்ளான். ஆகப் பெரிய காரியங்கள் எதனையும் செய்யாத சிறியோரை அவர்களின் சிறுமைக்காக இகழாமல் இருப்பது போலவே, சாகசங்கள் செய்தவர்கள் என்பதற்காகப் பெருமை பாராட்டுவதும் தேவையில்லை எனச் சொல்லும் அவன் சொல்லும் தொனியாலும் விதத்தாலும் அதனை பெரும் மனிதக் கூட்டத்திற்கே உரியதாக மாற்றியுள்ளான். யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனத் தொடங்கும் அந்த வரிகள் ஆகப் பெரும் பொதுமையை நோக்கிப் பேசும் சொற்கூட்டம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? என்ற ஐயம் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கணியன் பூங்குன்றனின் உள்ளார்ந்த நோக்கத்தை மொழிபெயர்ப்பில் வாசித்தவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள்; ஆனால் நேர் தமிழில் வாசித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்கிறார்கள்.
தனிமனிதர்களின் வாழ்க்கைப் பாதையைப் பற்றிப் பேசும் பூங்குன்றனின் இக்கவிதை ஒரு இனத்தின் இருப்பையும் அலைக்கழிப்பையும் கூடப் பேசும் கவிதையாக மாறியிருப்பதை நாம் உணர வேண்டும். சமூகத்தின் வழித்தடங்களை – ஒரு கூட்டத்தின் பாதையை – திசை மாற்றம் செய்வதில் போர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை பண்டைய வரலாற்று நிகழ்வுகள் காட்டியுள்ளன. உலக வரலாற்றில் போர்களால் திசை தடுமாறிப் பல இடங்களுக்குப் பரவிய கூட்டங்கள் பலவாகும். அலெக்ஸாண்டரையும் செங்கிஸ்கானையும் மாவீரர்களாக மட்டுமே போர்கள் காட்டியது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் நம்பலாம். அவர்கள் நடத்திய போர்களுக்குப் பின் ஏற்பட்ட கலப்புகளும் சேர்மானங்களும் மனித குல வாழ்க்கையில் ஏற்படுத்திய அடையாளங்கள் பலவிதமானவை. சிலுவைப் போர்களும் இரண்டு உலக யுத்தங்களும் நபர்களை வீரர்களாகக் கட்டமைக்க நடந்த போர்கள் அல்ல. மனிதக் கூட்டத்தை இடம் சார்ந்து நிலைத்து நிற்க விடாமல் அலைக்கழிக்க நடந்த போர்கள் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த பல போர்களும் பின் விளைவுகளுமே பாரத தேசம் என்னும் அடையாளத்தை உருவாக்கும் பயணத்தைத் தொடங்கி வைத்தன.
கண் முன்னே சின்னஞ்சிறு நாடான இலங்கையில் நடந்த யுத்தம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்த உண்மையை உணர்த்தியுள்ளது. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு அதை உணர்த்தத் தவறி விட்டது என்றே தோன்றுகிறது. அந்த வகையில் தான் கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர மறுக்கிறார்கள் என்ற நினைப்பு தோன்றுகிறது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் வெறும் போராட்டங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி விடக் கூடியன அல்ல. போராட்டங்கள் போர்களாகவும் நடந்தன. போர்கள் என்றாலே இடங்கள் பறிபோவதும், அவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடிப் பயணம் செய்ய நேர்வதும் தவிர்க்க முடியாதவை. ஈழப் போராட்டத்திலும் யுத்தங்களிலும் அதுதான் நடந்தன. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது இயன்றவர்கள் வெளியேறி பூமிப் பந்தின் பல பாகங்களுக்கும் சென்றனர். யுத்தத்தின் காரணமாய் மரணத்துள் வாழ நேர்ந்தவர்கள் அகதிகளாய் அலைய நேரிட்டதையும் பதிவுகளாக்கித் தந்துள்ளார்கள். நிலைகொள்ளல் இன்றி நீரில் பட்ட தெப்பமாய் அலையும் மனிதர்களாய் இருப்பவர்களின் நிலை அறியாது தமிழ்நாட்டுத் தமிழர்கள், தனித்து வாழ்வதன் தாத்பரியங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நிலம், தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசுவதன் ஆபத்து தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட பேச்சா? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் அடையாளத்தை உருவாக்கும் மொழி, பண்பாடு, அறிவு ஆகியவற்றை உருவாக்கும் ஒரு நிலப்பரப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அந்த நிலம் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் என வாதிடுவதன் ஆபத்துக்களை உணர வேண்டும்.
காவிரியாற்றில் நமது உரிமையைக் கோரிப் பெறுவதில் காட்டும் நமது அக்கறை அண்டை மாநில மக்களை எதிரிகளாகப் பாவித்துப் பகை வளர்க்கும் எல்லைக்குப் போய்விடக் கூடாது. முல்லைப் பெரியார் அணையைக் காரணமாக்கி இன்னொரு மாநில மக்களை மற்றவர்களாக நினைத்துப் போர்க்களத்தை உருவாக்கி விடக் கூடாது. தமிழ்த் தேசிய உணர்வு என்பது தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பண்பாட்டு அடையாள உருவாக்கங்களுக்காகவும் குரல் கொடுக்கும் உணர்வாக இருக்க வேண்டும். அவற்றை அடைய விடாமல் தடுக்கும் அதிகாரத்துவ சக்திகளை, அமைப்புகளை அடையாளங்காட்டும் முயற்சியில் வலிமையோடு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் அண்டை மாநில மக்களை வெறுக்கும் கூட்டமாகத் தமிழர்களை ஆக்கும் எத்தணிப்புகளைச் செய்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டிலிருந்து தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை அந்நியர்கள் எனச் சித்திரித்துப் பேசும் குரல்கள் அவ்வப்போது தலை தூக்கி வந்துள்ளன. தமிழைத் தாய்மொழியாக் கொள்ளாதவர்களால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடை பட்டுள்ளது என அந்தக் குரல்கள் வலியுறுத்துகின்றன. தமிழைத் தவிர வேறு மொழியை அறியாதவர்களைக் கூட அவர்களின் சில நூறாண்டுப் பூர்வீகத்தைத் தோண்டி எடுத்து அந்நியர்கள் என முத்திரை குத்துவதன் நோக்கம் தமிழர்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும் என்பதாகப் படவில்லை. அருகருகே வாழ்ந்து தன்னிலை மறந்தவர்களின் மனத்திற்குள் கலவர பயத்தை உண்டாக்குவதின் மூலம் எதிரிகளைக் கட்டமைத்து வளர்ச்சியை முடக்கிப் போடவே இந்த வாதங்கள் பயன்படும். அது மட்டுமல்லாமல், இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அம்மாநிலங்களின் பெருநகரங்களில் மட்டுமல்லாமல், சிறுசிறு கிராமப் பகுதிகளிலும் வாழ நேர்ந்ததால் அதன் பூர்வகுடிகளாகவே ஆகி விட்ட தமிழர்களின் வாழ்க்கையையும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஆபத்து கொண்டது இந்த வாதங்கள்.  இந்த வாதங்கள் குறுகிய வாதங்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான இடப் பெயர்வுகளையும் நம் மனங்களில் நிழலாட விட்டு இக்குரல்களுக்குச் செவி மடுக்க வேண்டும்.
  
ஈழப் போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கி விட்டார்கள். கனடாவிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அடிப்படை உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுக் குடியேறிவிட்டார்கள். அவர்களை அந்நாடுகள் திருப்பி அனுப்பி விடும் என்ற ஆபத்தில்லாமல் உலக மனிதர்களாக ஆகி விட்டார்கள். இவர்களின் வாழ்க்கையையெல்லாம் பாதிக்கும் விதமான ஒன்றாகத் தமிழ் தேசிய உணர்வு வடிவம் கொண்டுவிடக் கூடாது என்பதைத் தமிழ்த் தேசிய வாதிகள் மனங்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசும் பேச்சுக்கள், ‘ இந்தியா இந்தியர்களின் நாடு’ எனப் பேசும் பாசிசக்குரலின் இன்னொரு வடிவம் தான். சகிப்பின் அடையாளமாகக் கருதப்படும் ஜனநாயக நாட்டில் மதச் சிறுபான்மையினரின் இருப்புக்காகப் பேசுவது நாகரிகத்தின் அடையாளம் என்றால், மொழிச் சிறுபான்மையினருக்காகப் பேசுவதும், அவர்களை ஏற்பதும் ஜனநாயகத்தின் – நாகரிகத்தின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழின் பெயரால் தமிழர்களின் மனம் குறுக்கப்படுவது கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழர்கள் விரும்பித் தொலைத்து விடச் செய்யும் முயற்சியாகும்.
உலகக் கவிதைகள் தொகுப்பில் இடம் பெறத்தக்க கணியன் பூங்குன்றனின் கவிதையைக் காப்பாற்றுவது என்பது அதன் தாக்கத்தை – அதன் அர்த்த இருப்பைத் தமிழ்ச் சமூகம் தக்க வைப்பதில் தான் இருக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்

$
0
0

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக்குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு  எடுத்து  விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.
அதற்காக இந்தக் கொள்கை முடிவு திரும்பப் பெறப்படும் என்று யாரும் நம்ப வேண்டியதில்லை. மைய அரசின் முடிவுகளுக்கு மாற்றாகச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஜெ.ஜெயலலிதாவின் மாநில அரசு உடனடியாக இந்தக் கொள்கை முடிவை ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் தள்ளிப் போடலாம். உலகமயப் பொருளாதாரத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில் தீர்மானகரமான முடிவு எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அவ்வப்போது மனதில் தோன்றும் நிலைபாடுகளுக்கேற்பச் செயல்படும் அவரின் ஆலோசகர்களில் பலர்  இந்தக் கொள்கை முடிவின் ஆதரவாளர்கள் என்பதால் நீண்ட காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகளும் இல்லை.
இந்தியாவைப் போலவே 20 ஆண்டுகளுக்கு முன்பு தாராளமயப் பொருளாதாரத்திற்குள் நுழைந்த ஐரோப்பிய நாடான போலந்து நாட்டில் -. அதன் தலைநகரம் வார்சாவில் வசித்துக் கொண்டிருக்கிறேன். வந்து ஓராண்டு முடிந்து விட்டது. போலந்து 1990 களுக்கு முன்பு சோவியத் யூனியனின் சோசலிச உற்பத்தி முறையைப் பின்பற்றி குடிமைப் பொருட்களைத் தேவைக்கேற்ப வழங்கும் பங்கீட்டு முறையையும், ஆடம்பரமற்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்த நாடு. அடிப்படை உணவுப் பொருட்களான உருளைக்கிழங்கையும் காய்கறி களையும் இறைச்சியையும் (மாடு, பன்றி) போதுமான அளவுக்கு மேல் உற்பத்தி செய்த நாடு. ஆனால் சோசலிச விநியோக முறையில் இருந்த குளறுபடிகளாலும் நட்பு நாடுகளின் நெருக்கடியாலும் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அவை கிடைக்காமல் போனது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் சொந்த நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைத் தர முடியாமல் தத்தளித்த சோசலிசக் கட்டமைப்பில் அதிகாரத்துவமும் சுதந்திரமின்மையும் தலையாட்டம் போட்ட போது போராட்டங்கள் வெடித்தன. 1980 களின் இறுதி ஆண்டுகளில் வீதியில் இறங்கிப் போராடினார்கள். உணவுக்காக மட்டுமல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்காகவும் தான் போராடினார்கள். பலவகையான தடைகளை நீக்கிய அரசதிகாரம் 1990 1990-களின் தொடக்கத்தில் சோசலிசக் கட்டமைப்பைக் கைவிட்டது. தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனத் திசைகளைத் தெரிவு செய்த உடனேயே பன்னாட்டு மூலதனத்தில் தொடங்கப்பட்ட பெரும் பேரங்காடிகளும்  அவற்றில் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்லாமல் சில்லறைப் பொருட்களின் விற்பனையும் வந்து விட்டன. அதன் பலன்களை அனுபவிக்கும்  போலந்துக்காரர்களின் வாழ்நிலையை.- அந்த அனுபவத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் சிலவற்றை இங்கே கூறலாம் என நினைக்கிறேன். இந்தியச் சூழ்நிலையில் எப்படிப் பொருத்திக் கொள்வது என்பதை  வாசிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். . 
காலனியத்திற்குப் பிந்திய இந்திய அரசுகள், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போலத் தான் கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. தனியார் மயம் கொஞ்சம்; பொதுத்துறையில் கொஞ்சம்; அரசுத்துறையாகக் கொஞ்சம் என அல்லாடுகின்றன. போலந்து அப்படியெல்லாம் தயக்கம் காட்டவில்லை. சோவியத் ருஷ்யாவின் நினைவுகள் கனவிலும் வரக் கூடாது என முடிவு செய்து விட்டுப் பக்கத்தில் இருந்த ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை மாதிரியாக எடுத்துக் கொண்டு தொடக்கத்திலேயே முக்கிய முடிவுகளை எடுத்து விட்டது. .கசப்பான சோசலிசக் கட்டமைப்பை முற்ற முழுதாகக் கைவிட்டு விட்டு முதலாளியப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நுழைந்த நாடு என்பதால் தயக்கமின்றி எல்லா நிலைகளிலும் தனியார் மயத்தையும் தாராளமயத்தையும் உலகமயத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டது. ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் வருகைக்கு அனுமதி அளித்துள்ள போலந்து இன்னும் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட்டின் பேரங்காடிகள் இல்லை என்பதையும் இந்தியர்கள் கவனிக்க வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்னும் சொலவடையை உணர்ந்த இந்தியக் கிராமத்துக்காரகள் போல அமெரிக்கா புகுந்த நாடும் விளங்காது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன; நமது மத்திய அரசாங்கத்திற்கு மட்டும் அது புரியவில்லை.
மைய மாநில அரசுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சிகள், கட்சி அரசியலின் லாபத்திற்காக பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகளின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து விட்டுத் திசைதடுமாறிக் கொண்டிருந்த போதுதான் உலக அளவில் சோசலிசக் கட்டமைப்பு நாடுகளும் மறு சீரமைப்பு என்ற பெயரில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்கி நகரத் தொடங்கின. இந்தியாவின் பிரதமராக வந்து சேர்ந்த பி.வி. நரசிம்மராவுக்கு நிதி அமைச்சராக அனுப்பப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங்கின் வழிகாட்டுதலில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தாராளமயத்துக்குள் இந்தியாவும் நுழைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் கொள்கை முடிவுகளை நரசிம்மராவ் அரசாங்கமும், அவருக்குப் பின்னால் வந்த வாஜ்பாய் அரசாங்கமும் தவணை முறையில் எடுத்தன
#######               #########
வார்சாவில் ஒரு நுகர்வோனாக என்னுடைய அன்றாடத் தேவைக்கான பொருட்களைப் பல விதமான கடைகளில் வாங்கிக் கொண்டிருக்கிறேன். கேரிபோர், டெஸ்கோ, அவுசான், ரியால், மார்க்போல், மோக்போல், லிடல், சாம்சூப்பர், பித்ரங்கோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளில் மட்டும் அல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நம்மூர் உழவர் சந்தைப் போன்ற சந்தையிலும் தினசரித் தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்கிறேன். அதற்குப் பக்கத்திலேயே வாகனங்களையே விற்பனை யகமாக மாற்றி வார இறுதி நாட்களில் வந்து விடும் ’நகரும் அங்காடி’களிலும் கூடச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். நான் மட்டுமல்ல; இங்குள்ள எல்லாரும் இவ்வகைக்கடைகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பன்னாட்டுப் பேரங்காடிகள் நுழைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும் போலந்தில்- அதன் தலைநகர் வார்சாவிலும் வார்சாவைப் போன்ற பெருநகரங்களான க்ராக்கோ, போஸ்னான், கிடான்ஸ் போன்றவற்றிலும் எல்லா தரப்புக் கடைகளும் இருக்கின்றன; அவை காணாமல் போய்விடவில்லை என்பது ஆறுதலான செய்தி. அதற்குக் காரணம் போலந்து அரசு கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளும் விதி மீறல்களை அனுமதிக்காக நிர்வாக நடைமுறைகளும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு வகை அங்காடிகளும் 10 அல்லது 15 நிமிடப் பயணத்தில் அடைந்து விடக்கூடிய தூரத்தில் இருக்கின்றன. ஆனால் பெரும்பேரங்காடிகளை உள்ளடக்கிய ”மால்கள்”அருகருகே அமைக்கப்படவில்லை. வாகனங்களில் போனாலே அரைமணி நேரம் ஆகும் விதமாகப் பத்துக் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடைவெளியில் தான் அமைக்கப்பட்டுள்ளன.  
பேரங்காடிகளில். அதிகப்படியாக இருப்பவை ஆடைகள் விற்பனையகங்கள் தான். காலணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மின்னியல் சாதனங்கள், உணவு விடுதிகள், பயணத்தேவைகள், எனத் தேவை சார்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல் அழகு சாதனப் பொருட்கள், ஆடம்பரப்பொருட்கள், உள் அலங்கார, வெளி அலங்காரப் பொருட்கள் எனப் பலவகையான பொருட்களை விற்கும் மையங்கள் இருக்கின்றன. முக்கிய வங்கிகளின் கிளைகளும் அவற்றின் தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரங்களும் இருப்பதோடு திரையரங்குகள், விளையாட்டுக்கூடங்கள், கொண்டாட்ட மையங்கள், என எல்லாம் உள்ளேயே அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் இருக்கும் ஸ்பென்சர் வணிக வளாகம் போன்றன எனச் சொன்னால் புரியும் என நினைக்கிறேன்.  இத்தகைய வணிக வளாகங்களில் ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் நுழைந்து விட்ட ரிலையன்ஸ், மெகாமார்ட் போன்றன செயல்படுவதுபோல இனி வால்மார்ட்டும் அதன் வகைமாதிரிகளான கேரிபோர், ரியால், அவுசான், டெஸ்கோ போன்றனவும் இந்தியாவில் கடை விரிக்கும். சில்லறை வியாபாரத்தில் இந்தியப் பெருமுதலாளிகள் தொடர் அங்காடிகள் செய்யத் தொடங்கி விட்ட வியாபாரத்தைத் தான் பன்னாட்டுக் குழுமங்களின் பேரங்காடிகள் செய்யப்போகின்றன வேறுபாடு அவ்வளவு தான்.
இந்தக் கடைவிரிப்பின் மூலம் லாபம் அடையப்போகிறவர்கள் யார்? யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளலாம்.  இக்கொள்கை முடிவினால் அதிக லாபம் அடையப் போவது முதலீடு செய்யப் போகும் பன்னாட்டுக் குழுமங்கள் மட்டுமே என்பது போன்ற வாதங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஆனால் அது மட்டுமே உண்மை அல்ல. இந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. முதலீடு செய்வதே லாபத்திற்காகத் தானே. பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் பன்னாட்டுக் குழுமங்கள் லாபம் அடையாமல் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமல் அரசும், காங்கிரஸ்காரர்களும் இந்தியப் பொருளாதாரத்திற்கு, இந்திய விவசாயத்திற்கு, இந்திய நுகர்வோருக்கு, இந்தியத் தொழிலாளர் களுக்கு ஏற்படும் நன்மைகளை மட்டுமே பேசுகிறார்கள். இது திசை திருப்பும் வேலை. .  
கொள்கை முடிவு நடைமுறைப் படுத்தப்படும்போது அதன் தொடர்புச் சங்கிலியில் அனுமதி அளிக்கும் அரசு நிர்வாகம், அதன் மூலம் பெரும்பேரங்காடிகளை அமைக்கப் போகும் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள், அப்பெரும்பேரங்காடிகளில் பொருட்களை வாங்கப் போகும் நுகர்வோர் ஆகிய மூவரும் உடனடியாகக் கண்ணுக்குத் தெரிகின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் பிணைக்கப்படுவனவாக மூலப் பொருட்களை உற்பத்தி செய்து தரும் இந்திய வேளாண்மையும், சிறு மற்றும் பெரும் ஆலைத் தொழில்களும் நிற்கின்றன. .அவற்றோடு இவை எல்லாவற்றிலும் உழைப்பை மட்டும் கொடுத்துக் கூலியைப் பெற்றுக் கொள்ளப்போகும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் யார் யாரெல்லாம் எந்தெந்த விகிதத்தில் பலன் அடைவார்கள் என்பதைச் சுருதி சுத்தமாகச் சொல்ல முடியாது என்றாலும் சில அனுமானங்களை முன் வைக்க முடியும்.    
உடனடியாகப் பலன் அடையப் போகின்றவர்கள் பெருநகரவாசிகளான உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் என்பதில் மாற்றுச் சொல்ல முடியாது. தரமான பொருட்களை, நேர்மையான விலையில் வாங்க விரும்பும் இவர்களை இந்தக் கொள்கை முடிவு அதிகம் கவரப் போகிறது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெரும்பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களையும் அலங்காரப் பொருட்களையும் வாங்கிவிட்டு அவற்றுக் குரிய விலையை வரியோடு செலுத்திய மனநிறைவோடு இனி வீடு திரும்புவார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைத் தங்களிடமிருந்து வாங்கும் வியாபாரிகள் அரசுக்குச் செலுத்துவதில்லை என்ற ஆதங்கமும், ரசீது போடாமல் பொருட்களை வாங்கி விட்டுக் குற்றவுணர்வில் நெளியும் மனச் சிக்கலும் இனி இருக்காது. இந்த வரிகளைக் கட்டுவதோடு சேர்த்து அவர்கள் தரப் போகும் விலைகளும் விலை உயர்வும் அவர்களுக்குத் தெரியாமலேயே ஏற்றப்படும் என்பதை அவர்கள் கவனிக்கப்போவதில்லை. மறைமுக விலையேற்றம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அன்றே சாப்பிடும் தயிர் கால்கிலோவுக்கு 2 ஜுலாட்டி  (இந்தியரூபாய் 30/-) ஒருவாரம் தாக்குப்பிடிக்க 2.2  அதே தயிர் ஒருமாதம் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்றால் 2.7 தர வேண்டும்  விலை நிர்ணயிப்பில் காலம் நுழையும் போது ஏன் இந்த வேறுபாடு என்று நுகர்வோர் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
அடிக்கடி கடைக்கு வர விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் நீண்ட நாள் கெடாமல் இருப்பதையே விரும்புவார்கள் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. கைவிரல்களால் எண்ணித் தரப்படாத கரன்சிகளை கணிணி வழியாகவே பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது விலை உயர்வுகளைப் பொருட்படுத்தும் மனநிலையெல்லாம் அவர்களுக்கு வராது. தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அந்த விலையைக் கொடுப்பவர்களாக அரசுகளும் தனியார்நிறுவனங்களும் அவர்களை ஆக்கி வைத்திருக் கின்றன. உயரும் விலைவாசிகளுக்கேற்ப படிகளும் ஊக்கத் தொகைகளும் தரப்படுவதன் மூலம் அவர்கள் முழுமையாக நுகர்வோராக ஆகி விட்டனர். எழுதி வைக்கப்படும் விலை, வசூலிக்கப்படும் வரிகள் உட்பட அனைத்தும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் ரசீதுடன் கூடிய வியாபாரத்தை இந்தப் பன்னாட்டுச் சில்லறை வணிகக் குழுமங்கள் நடத்திக் காட்டும். ஆகவே நடுத்தர வர்க்கம் இந்தக் கொள்கை முடிவால் தாங்கள் எதையும் இழக்கவில்லை என்றே நம்புவார்கள். மகிழ்ச்சி கொள்வார்கள். எதையும் இழக்காமலேயே பலன் அடைவதாக அவர்கள் நம்பப் போவதால் இந்தக் கொள்கை, நடுத்தர வர்க்கத்தினர் வரவேற்கவும் ஆதரிக்கவும் செய்வார்கள்; வந்தபின் விட்டுவிடவும் மாட்டார்கள்.
அடுத்ததாக உடனடியாகப் பலன் அடையப்போவது அரசாங்கம். மாதச் சம்பளக்காரர்களிடம் கறாராக வருமான வரியை வசூலிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது போலச் சில்லறை வணிகர்களிடம் கறாரான வரியை வசூலிக்கும் கட்டமைப்பு வசதியை உருவாக்கத் தவறி விட்டன நமது அரசுகள். எல்லாவற்றையும் கணக்கு மூலம் நிர்வாகம் செய்யும் பன்னாட்டுக் குழுமங்களிடம் பெரிய அளவு சிரமங்கள் இல்லாமல் வரியை வசூலித்து விடும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வரி இதுவரை கிடைத்த வரி வருவாயை விடப் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இந்த வரிவாயைக் கூட்டாமல் குறைப்பதற்கு அரசை நடத்தும் கட்சிகளும் அதன் பொறுப்பாளர்களும் பெறும் உள் ஒதுக்கீடுகள் அரசாங்கத்திற்கு வராமல் போகும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
அடுத்துத் தொழிலாளர்கள். இப்போதுள்ள சில்லறைக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவ்வளவு பேரும் தங்கள் அனுபவங்களை வைத்துக் கொண்டு அப்படியே அங்கே தாவி விட முடியும் என எதிர்பார்த்தால் நிச்சயம் நடக்காது. இவர்களின் அனுபவத்திற்கும் புதுவகைக் கடைகளில் வேலை செய்யப் போகின்றவர்களிடம் எதிர்பார்க்கப்படும் திறமைக்கும் பெருமளவு தொடர்புகள் இருக்காது. கீழ்நிலைப் பணிகளான சுத்தம் செய்தல், சுமைகளைத் தள்ளுதல், ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுவார்கள். மற்றவைகளையெல்லாம் எந்திரங்களும் மேலாளர்களும் கணிணியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள். அந்தத் தராதரங்களுக்கேற்ப சம்பளவிகிதங்கள் அளிக்கப்படலாம். அவை எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதை நமது அரசுகள் உறுதி செய்து தர வேண்டும். செய்யவில்லையென்றால் வறுமைக் கோட்டிற்குப் பக்கத்தில் இருப்பவர்களின் கூட்டம் அதிகமாகி விடும் ஆபத்துகளே அதிகமாகும் .
புதுவகை அங்காடிகளின் வியாபாரத்தின் மூலம் இந்திய வேளாண்மையும் சிறு மற்றும் குறு ஆலைத்தொழில்களும் பெரிய லாபம் அடையும் என்பதையும் மறுக்க முடியாது. லாபம் அடையும் என்பதைவிட அவற்றின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த மாற்றங்களால் இந்தியர்கள் மட்டுமே பலன் அடைவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. இப்போதுள்ள இந்திய விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், உற்பத்திப் பொருட்களைப் பாதுகாத்து தேவையை –நெருக்கடியை உண்டாக்கி விலையேற்றத்தை உருவாக்கிக் கொள்ளும் சாதகமான அம்சங்கள் அவர்களிடம் இல்லை. அதனைச் சாத்தியமாக்க அரசின் உதவியையும், வணிகர்களின் தயவையுமே நாடிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதும் அரசியல்வாதிகளின் மூலம் மானிய விலை உரம், கொள்முதல் விலை நிர்ணயம் ஆகியவற்றைக் கோருகின்றனர். அல்லது வந்த விலைக்கு உற்பத்தியான உடனேயே வியாபாரிகளின் விற்று விட்டுக் கையும் காலும் தான் மிச்சம் எனத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது தோல் துண்டுகளையே சுருக்குக் கயிறாக மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பெரும் மாற்றத்தை இந்தக் கொள்கை முடிவு கொண்டு வரும் என்பதைச் சொல்லும் அதே நேரத்தில் அந்த மாற்றம் சரியான திசையில் இருக்காது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்..இந்திய வேளாண்மை பெருந்தொழில்களைப் போல நவீன மயப்படும் வாய்ப்புகள் அதிகம். சிறு மற்றும் குறு விவசாயிகள் அப்போது போட்டியிட முடியாமல் பெரும்பண்ணைகளுக்குத் தங்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு அங்கே வேலை செய்யும் கூலிகளாக மாறும் வாய்ப்புகள் ஏற்படும். தங்கள் குடும்பத்தில் கார்ப்பரேட் முறையில் வேளாண்மையை வளர்த்தெடுக்கும் திறமைசாலிகளை வைத்திருக்கும் வேளாண் குடும்பங்கள் தொடர்ந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து பன்னாட்டுக் குழுமங்களின் தேவையை நிரப்பக்கூடும். அல்லது இந்திய வேளாண்மைக்குள்ளும் பண்ணைத் தொழில் என்ற போர்வையில் வெளிநாட்டுக் குழுமங்கள் நுழையக் கூடும். சிறு மற்றும் குறு விவசாயம் அழிக்கப்பட்டு பண்ணை வேளாண்மை பெருகுவதை வளர்ச்சி என நமது அரசுகளும் அதன் திட்டமிடல் வல்லுநர்களும் கூறுவார்கள்.
இந்திய அரசு, இந்தியத் தொழிலாளிகள், இந்திய விவசாயிகள், இந்திய நுகர்வோர் என எல்லோர் நிலையிலும் மாற்றங்களைக் கொண்டு வரப்போகும் இந்தக் கொள்கை முடிவு பன்னாட்டு மூலதனக் குழுமங்களுக்கு எதனைத் தரும் எனக் கேட்கலாம்.. இப்போது பல்லாயிரம் கோடிகளில் முதலீடு செய்யப் போகும் வால்மார்ட், கேரிபோர், டெஸ்கோ, அவுசான், ரியால் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் நிரந்தரமான லாபம் அடைய குறைந்தது நான்கு அல்லது ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராகவே இருப்பார்கள். ஐந்தாண்டுகளுக்கு முதலீடுகளைப் போட்டு விட்டுப் பின்னர் கிடைக்கும் மொத்த லாபத்தையும் எடுத்துக் கொண்டு இன்னொரு நாட்டுக்கு முதலீடு செய்யப்போய் விடுவார்கள்.
இங்கே அவர்களின் லாபம் ஈட்டும் வியாபாரமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்போது இந்தியாவில் இந்தியர்களின் சில்லறை வியாபாரம் மட்டுமே காணாமல் போயிருக்கும் என நினைக்க வேண்டாம். மரபான விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கும் கிராமங்களும், கைத் தொழில் பட்டறைகளும், சட்டை பாவாடைகள் தைத்துத் தரும் தையல்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டுபவர்கள், வாகனங்களைப் பழுது பார்த்துத் துடைத்துக் கழுவித் தரும் சேவைப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஓரங்கட்டப்பட்டு விளிம்புக்குத் தள்ளப் படுவார்கள். அவர்களுக்கான வெளியாகப் பெருநகரங்கள் இருக்காது. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்காகச் சேரிகளும் அதன் மனிதர்களும் ஓரங்களுக்குத் தள்ளப்படுவது போல ரோட்டோரத்துப் புரோட்டாக்கடைகளும், மாமி மெஸ்களும், நாயர் தேநீர்க்கடைகளும் கூடத் தேடிக் கண்டடைய வேண்டியனவாக மாறிப் போகும். பழவண்டிகளும் பூக்காரிகளும் பஞ்சு மிட்டாய் தாத்தாக்களும் இல்லாத பெருநகரங்களில் வாழ்வதை வளர்ச்சியல்ல என்று சொல்பவர்கள் பழம் பஞ்சாங்கமாகக் கருதப்படுவதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம். தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் ஆபத்து இருப்பதால் தப்பித்தல் சாத்தியமில்லை.
இப்படி ஆகிவிடுவதைத் தவர்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. கட்டுப்பாடுள்ள வியாபார நலன்கள் என்ற அளவில் தான் ஐரோப்பிய நாடுகள் தனியார் மயத்தை அனுமதித்துள்ளன. நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பக்கத்தில் 200 மீட்டர் தூரத்தில் ஒற்றைத் தளத்தில் அமைந்த அங்காடி வளாகம் ஒன்றிருக்கிறது. அந்த வளாகத்தில் உள்ள கடைகள் எல்லாம் ஒற்றைப் பொருள் விற்பனைக்கடைகள். நாய் உணவுகள் மட்டும் ஒரு கடையில் விற்கப்படுகிறது என்றால் இன்னொன்றில் மனிதர்களுக்கான ரொட்டிகள். மற்றொரு கடையில் இறைச்சிகள். ஒன்றில் ஆண்களுக்கான உள்ளாடைகள்; இன்னொன்றில் பெண்களுக்கான உள்ளாடைகள். பூட்டும் சாவியும் ஒரு கடையில் கிடைக்கிறது; அதுக்குப் பக்கத்திலேயே பல்புகள் கிடைக்கிறது. ஒரு கடையில் வீட்டுக்கான உள் அலங்காரப் பொருட்கள் விற்பனையாகிறது; அதுக்குப் பக்கத்தில் பூந்தொட்டிகளும் விற்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடிதிருத்தம் செய்யும் கடையின் எதிரில் குளியல் பொருட்களும், கழிவறைப் பொருட்களும். ஒரு ஓரத்தில் மதுபானங்கள் அருந்தும் வளாகமும் இன்னொரு ஓரத்தில் கையில் ஏந்திச் சாப்பிடும் கடைகளும் இருக்கின்றன.  இத்தகைய அங்காடி வளாகங்கள் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் பக்கத்திலும் இருக்கின்றன. இவையெவையும் பன்னாட்டுக் குழுமங்களின் வளாகங்கள் அல்ல. உள்ளூர்க்காரர்களின் கடைகள். அங்கும் வியாபாரம் நடக்கவே செய்கின்றன.
இந்தியாவில் இருக்கும் அளவுக்கு வேறுபாடுகள் இல்லையென்றாலும் பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட மக்கள் போலந்திலும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களின் வருமானத்திற்கேற்ப எல்லாவகை அங்காடிகளிலும் பொருட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்குப் பொருட்களைத் தரும் சில்லறைக் கடைகளும் அரசின் கண்காணிப்பி லிருந்து விலகிப் போய்விடவில்லை. ரசீதில்லாமல் எந்த வியாபாரமும் சாத்தியமில்லை என்ற நிலை அங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடையில் மீன் விற்கிறவர்களைப் போலக் கார்களில் வந்து ஆப்பிள் பழங்களையும் காரட்டையும் எடை போட்டு விற்கும் சிறுவியாபாரிகளும் ரசீது தந்து பணம் வாங்கிக் கொள்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி நமது அரசுகள் நமது மக்களுக்கான – விவசாயிகள், வியாபாரிகள், (உடல் மற்றும் மூளை சார்ந்த), தொழிலாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கான நலன்களைப் பேணும் அரசாங்கமாக இருக்க வேண்டும். அதை மறந்து விட்டுக் கொள்கைகளுக்காகவும் கோட்பாடுகளுக்காகவுமான தேசநலனைக் காவு கொடுப்பனவாக இருக்கக் கூடாது.
==============================================================================
நன்றி: உயிர்மை,நவம்பர் 2012 


சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.

$
0
0

              

மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை..
அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத்
தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும்.


இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை
. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது
.அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம்
 (1.).கடல்பயணத்தின்  விருப்பமுள்ள  அவள் வயதான கிழவன்
 (2) ஒரு இளைஞனும் இருக்கிறான்
 (3.) இவர்களோடு  சக பயணிகளாக நான்கு பேர்  (4-7)
 (8) சாவும்
 (9) ச்மாதான சக வாழ்வும் 
கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம்.
இரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகிறது.
ஆல்பட்ரோஸ்
நான் தான் ஆல்பட்ரோஸ். ஆல்பட்ரோஸ் என்னும் கடல்பறவை.
பிறந்தது முதலே இந்தக் கடலை அறிவேன்.
கோபங்கொண்ட கடவுளர்கள் மூச்சு விடும் போதும்,
மூச்சை இழுக்கும்போதும் கடல் புயலாக மாறி விடும்.
என் தாய் இருந்தபோது இது எதற்கும் கவலைப் பட மாட்டேன்
தனது சிறகுகளால் பொத்தி பொத்திப் புயல் வரும்பொழுது என்னைப் பாதுகாப்பாள்
அவள் இறந்து விட்டாள்
இன்னும் எனது இறக்கைகள் முதிர்ச்சியடையவில்லை.
தனியாக இந்தப் புயலை எதிர்த்துப் போரிடுவது என்னால் முடியாது
எனது இருப்பிடத்தை தேடியாக வேண்டும்
உதவு.. கடவுளே.. எனக்கு உதவு..
ஆம்.. மேகம் சூழ்ந்த புயலின் சுழிப்பில் தெளிவற்று ஒரு பாய்மரம் தெரிகிறது
நான் அங்கே போவேன்.. நான் அங்கே போவேன்
பேயுருக்களின் பாடல்
நிறைவேறாத ஆசைகள் நமக்குண்டு
எண்ண முடியாத காலங்களாய் நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறோம்..
வரலாற்றின் பக்கங்களில் நமது பெருமூச்சுக்களே நிரம்பியுள்ளன.
கொலைவெறியின் ரத்தத்துளிகளில் நமது பிறப்பு.
சிவப்பேறிய கோபவிழிகளில் நமது ஜனிப்பு
நமது இதயங்களில் பழி தீர்க்கும் கொலைப்புயல்.

சமூகக் கோட்பாடுகளும் மதங்களும் கூட நம்மை உண்டாக்குகின்றன.
நமது பயணம் காலந்தோறும் தொடர்கிறது.
இன்றிலிருந்து நாளைக்கு
இந்த வருடத்திலிருந்து அடுத்த வருடத்திற்கு
இந்த நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டிற்கு
நமது கண்களின் இமைப்பில் பயணம் தொடர்கிறது

நாங்கள் இங்கே இருக்கிறோம்; அங்கேயும் இருப்போம்
புதிய மனிதர்களின் இதயங்களில் நாம் புதிதாகக் குடியேறுவோம்
உங்களிடையேயும் நாங்கள் இருப்போம்
எல்லா இடங்களிலும் நாங்கள் இருப்போம்
நீங்கள் எங்களை நம்பவில்லை என்றால் அதோ அந்த வயதான கடற்பயணியைக் கவனியுங்கள்.
அவன் தனது கதையைச் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்.
அந்த மனிதனுக்குத் தெரியும்.
நாங்கள் எவ்வளவு உண்மையானவர்கள் என்று…
அவன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிட்டதென்று..
கவனியுங்கள்.. கவனித்துப் பாருங்கள்.. பாருங்கள் .. கவனத்துடன்

[அந்த பேயுருக்கள் மறைகின்றன]
கடல் பயணி
நான் ஒரு கடல் பயணி.
இளம்பிராயத்திலிருந்தே நானொரு கடல் பயணி
ஒரு வீரயுகப் பாடலின் கம்பீரம் போன்ற கடல் அலைகளின் ஒலியும்,
இரைச்சலும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை.
ஆனால் இப்பொழுது ஒரு பெரிய சாபத்தைச் சுமந்தவளாய் அந்திமக் காலத்தில் நிற்கிறேன்…
நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு கதைசொல்லியாகவும் –கடல்பயணியாகவும் இருந்தேன்.
எனது பயணம் ஒரு ராத்திரியைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊர் விட்டு ஊருக்கு… நாடு விட்டு நாட்டுக்கு…
கண்டம் விட்டு கண்டத்திற்கு என..
எதற்காக இந்தப் பயணம்.
எல்லாம் என் கதையைக்  கேட்கக் கூடிய ஒரு மனிதனைத் தேடித்தான்
என் கதையை ஒருவனிடம் சொல்வதன் மூலம் என்னுடைய இறக்க முடியாத அந்தப் பாரத்தை இறக்கி விடத்தான்.
சிறைக் கைதியைப் போன்ற என் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபடத்தான்

அந்த நாள் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
நாங்கள் பயணம் புறப்பட்ட அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்…
ஓ.. நானும் எனது வயது வந்த அந்த நண்பர்களும் கடலின் பரப்பில் என்ன செய்தோம் தெரியுமா?         


[ ஒளி குறைந்து திரும்பும்போது ஐந்து பேர் நுழைகின்றனர்]
நபர் 1
இதுதான் நமது கப்பல்.. ஆ..ஆ.. எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஒரு பெரிய கடல் மீன் போல. அது என்னை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளது. இதன் உதவியால் கடலின் நடுவே செல்வோம். அதன் வயிற்றில் அமர்ந்து பயணத்தைத் தொடர்வோம்.. ஹா.. ஹா..
நபர் 2
கடைசியாக எனது கனவு நிறைவேறப் போகிறது. எனக்கு இந்தக் கடலைப் பிடிக்கும். வானத்தையும் பிடிக்கும். புரிந்து கொள்ள முடியாத மர்மங்களோடு எல்லையற்ற பரப்பை நான் விரும்புகிறவனாக இருந்திருக்கிறேன். இந்தக் கடலுக்குள் இதுவரை யாரும் சென்றிருக்க மாட்டார்கள். அங்கே செல்வது அவ்வளவு சுலபம் அல்ல… கஷ்டப்படாமல் லாபம் கிடைக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே..
நபர் 3
என்னுடைய சமன்பாடுகளும் ஆசைகளும் மிக எளிமையானவை. நான் என்றும் கவிஞன் அல்ல. எனக்கு அதிகாரம் வேண்டும். இங்கே வந்ததே அதற்குத் தான்… இந்தப் பயணம் என்னைப் பணக்காரனாகவும் அதிகாரம் நிரம்பியவனாகவும் ஆக்கும் என்பது உண்மை. கடலில் ஏராளமான செல்வம் உள்ளது என்பதை வரலாறு எனக்குச் சொல்லி இருக்கிறது.
நபர் 4
என பயணம் முடிந்த பின்பு நிறைவேறாத எனது ஆசைகள் பலவற்றை நிறைவேற்றுவேன். இந்த உலகத்தில் ஏராளமான கொண்டாட்டங்கள் உள்ளன. நல்ல உணவு, மது, மங்கையென.. ஓ .. கடவுளே.. வாழ்க்கை முழுமையாக மாறிப் போகும். எல்லாவற்றையும் – களியாட்டங்களையும் கொண்டாட்டங்களையும் இதுவரை கற்பனையில் மட்டுமே கண்டு வந்தேன். இப்போது அதன் வாசம் என் அருகில் வந்து விட்டது.  [ ஐந்தாம் நபரை பார்த்து ] ஏ.. இவன் ஏன் நம்மோடு வருகிறான்.
நபர் 5
நானே சொல்லி விடுகிறேன். என் நண்பர்களோடு இருப்பது எனக்கு பிடிக்கும். நீங்கள் பயணம் செய்வதாக முடிவு செய்த போது, நான் என்ன செய்வது என்று யோசித்தேன். நான் உங்களோடு வரவில்லை என்றால், தனியாக இருக்க வேண்டும். தனிமை எனக்குப் பயம் ஆனது. நான் தனிமையை வெறுப்பவன். தனிமை எனக்குப் பயத்தையே தரும்… [ இருள் .. ஒளி கிழவன் மீது வருகிறது]
கடல் பயணி
ஓ! இதுதான் விதி.. எவரும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடிவதில்லை. நான் தனிமையாகப் பயணப்பட்டேன். ஆனால் அப்புறம் அந்தத் தனிமையே எனது நண்பனாகி விட்டது. கடல் வாழ்வில் உண்டான தனிமையே என் வாழ்வாகி விட்டது….  இது ஒரு கல்யாண வீடு. யாரோ ஒருத்தர் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார். அவரது சந்தோசத்தையே நான் விரும்புகிறேன்…..  முடிந்து போன என் வாழ்க்கையைச் சொல்லித் துன்புறுத்தப் போவதில்லை…..  ஆனால் அந்தக் கல்யாண வீட்டில் ஒரு விருந்தாளியைப் பார்த்தேன்….  கள்ளங்கபடமற்ற முகம். எதையும் கேட்கும் ஆர்வம் அவரிடம் இருந்தது….  அவன் தான் என்னுடைய கதையைக் கேட்பதற்குப் பொருத்தமான ஆள்.. அவனைப் பிடித்து எனது கதையைச் சொல்ல வேண்டும். அதன் மூலம் எனது வஞ்சகம் நிறைந்த, பாவம் சூழ்ந்த எனது வாழ்க்கையை விடுதலை ஆக்க வேண்டும். அதோ அவன் வருகிறான்.. [ அவனை நெருங்கி] தம்பி… நீதான்.. தயவுசெய்து.. இங்கே பார்.. நீதான்.. நீதான்.. நான் தேடிய ஆள்.. தயவு செய்து..
இளைஞன்
யார் நீ.. என் நண்பனின் திருமணத்திற்கு வந்த என்னைப் பிடித்து.. உன் போன்ற கிழடுகளோடு பேச எனக்கு நேரமில்லை. விருப்பம் இல்லை… ம்.. உனக்கு என்ன வேண்டும்? நீ பிச்சைக்காரன் தானே! இந்தா (பணம் தந்து)எடுத்துக் கொள்..  போய் விடு.
கடல் பயணி
நான் ஒன்றும் பிச்சைக்காரனல்ல… நீ கொஞ்சம் விவரம் தெரியாத ஆள்.. ஆனால் ஆர்வமான இளைஞன் என்பது எனக்குத் தெரியும். இனிய உன் நண்பன் என்று கூறினாய். நண்பன். யார் உன்னுடைய நண்பன்.. நீ மட்டும் தான். இன்று நீ நண்பர்களாக நினைப்பவர்கள், நாளையே உனது பகைவர்களாக ஆகி விடுவார்கள். மனித உறவு கடலில் வீசப்படும் வலையைப் போன்றது. உறவுகளின் பொய்மையில் மயங்கி விடாதே. அது மட்டுமல்ல. நட்பு என்பது இன்றில்லா விட்டால் நாளைக்குக் கிடைக்கலாம். நாளை இல்லா விட்டால்.. மறு நாள்.. இல்லையென்றால் அடுத்த மாதம்.. அடுத்த வருடம்.. ஆனால் நான் இருப்பதோ இன்று மட்டும் தான். இந்தக் கணத்தில் தான். என்னை இன்று உதறி விட்டால், ஒரு வேகம் நிரம்பிய கப்பல் பயணத்தின் கதையை இழந்து விடுவாய். அந்தக் கப்பல் ரத்தப்புயலில் சிக்கிய கப்பல். புதிய புதிய சுழற்சிகளில் அலைப்புண்டு சொந்த நிலம் நிரம்பிய கப்பல்… இளைஞனே! என்னைக் கவனி. என் கதையை கேள்.
இளைஞன்
(முதியவனை நெருங்கி கதை கேட்கும் பாவனையில்) சரி.. நீ யார்.. உன் கதை தான் என்ன..? உனது பிரகாசிக்கும் கண்களும் வரி நிரம்பிய முகமும் ஏதோ புதிய புதிய செய்திகளைச் சொல்ல விரும்புவதாக உணர்கிறேன். நான் தயாராக இருக்கிறேன். சொல்…
கடல் பயணி
நான் ஒரு வயதான கடல் பயணி. நானும் எனது நண்பர்களுமாய், வாழ்க்கையை முழுதும் உணராத அந்தப் பருவத்தில் எங்கள் கடல் பயணத் தொடங்கினோம். திரைக் கடலோடியும் திரவியம் தேட வேண்டும் என்ற ஆசை தான். ‘ கடல் பயணம்’ பற்றி யார் முதலில் சொன்னார்கள் என்பது நினைவில்லை. எவரோ ஒருத்தர் முன் மொழிந்த போது நாங்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டோம். ஏனென்றால் சாகசம் செய்வதிலும், புதியவைகளை அறிந்து கொள்வதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. உன்னைப் போல இளைஞர்களுக்கும் அது தானே ஆர்வம்.
ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் குதூகலமான மனத்தோடு எங்கள் பயணம் தொடங்கியது. மலைகளின் அடியில் .. கோபுரங்களின் அடியில்.. கலங்கரை விளக்கங்களின் அடியில்.. ஆழத்தில்… இந்த சூரியன் தினமும் கிழக்கே ஒரு மாவீரனைப் போல கிளம்பி, மாலையில் ஒரு வெற்றி பெற்ற தளபதி ஓய்வெடுக்கச் செல்வது போல மேற்கில் மறைகிறான்… இது தானே மிகப்பெரிய வட்டம். நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய அறைவட்டம்…  இந்த அரைவட்டம் கடலுக்கடியில் முழுமை அடைகிறது என்றே நினைத்துக் கொள்கிறேன். இப்படியாக எங்கள் நாட்கள் நகர்ந்தன.
ஆனால் ஒரு நாள் .. மிகப் பெரிய அலையின் சிறகால் எங்கள் கப்பல் தள்ளப்பட்டது. வெடித்துச் சிதறிய புயலும் அலையும் எழும்பி கடல் மேல் கவிழ்ந்தன. அலைதலும் குதித்தலுமாக.. இரைச்சலும் ஓலமும் நெருங்க.. நீண்ட தூரம் தள்ளப் பட்டோம். தெற்கே.. தென்கோடிக்கு.. பைத்தியக்காரத்தனமாய்..
புயல் ஓய்ந்தது.. ஆனால்.. பனியும் புகை மூட்டமும் சூழ்ந்து கொண்டன. சில்லிடும் குளிர்.. மேலே பார்த்தால் பாய் மரம் மட்டும் தெரிகிறது. மிகக் குறுகிய நேரத்தில், எல்லாம் பனிக்கட்டிகளாகி விட்டன. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி.. இங்கும் பனிக்கட்டி. அங்கும் பனிக்கட்டி.. கப்பலும் பனிக்கட்டியால் நிரம்பியது. எங்களைச் சுற்றிப் பனிக்கட்டி.. அப்பொழுதுதான் அந்தப் பறவையை- ஆல்பட் ரோஸைப் பார்த்தோம்.  அதுவும் எங்களைப் பார்த்தது. எங்களை ஆசிர்வதிக்க வந்த கடவுளைப் போல நாங்கள் உணர்ந்தோம். இரண்டு நாள் வெயிலுக்குப் பின் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கின. எங்கள் உணவை அதற்குக் கொடுத்து அதனோடு விளையாடினோம். எங்கள் பயணம் புத்துணர்ச்சியோடு மீண்டும் தொடங்கியது. எங்கள் பயணம் புதிய மாற்றங்களோடு இருந்தது.
ஆல்பட்ரோஸ்
ஓ.. என்ன குளிர்.. என்னுடைய சிறகுகள் உறைந்து விட்டன. இனியும் என்னால் பறக்க முடியாது. அந்தக் கப்பலின் அருகில் வந்து விட்டேன். இந்தச் சூழ்நிலையில் தான் என் அம்மா இல்லாதது குறித்து வருத்தமடைகிறேன். அவளது இறைக்கைகளால் என்னைப் பொத்திப் பாதுகாப்பாள். பல தடவை இத்தகைய புயல்களையும் மோசமான தட்பவெப்ப நிலையையும் அவளது அரவணைப்பில் கடந்து வந்துள்ளேன். அவள் ஒரு முறை சொன்னாள் “ குழந்தையே மனிதர்களிடம் மட்டும் நெருங்கி விடாதே”
ஏனென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும். அதல்லாமல் இவர்களும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் என்னோடு விளையாடுபவர்களாகவும் உள்ளனர்.
நபர் 1
பாருங்கள்.. அந்த ஆல்பட்ரோஸ் நம்மைத் தொடர்ந்து வருகிறது. நம்மோடு உறவு கொண்டு விட்டது. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. ஆனால் அதன் துயரத்தில் ஆழ்ந்து விட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. எதாவது சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கும்.
நபர் 2
ஏ.. நிறுத்து.. உன்னுடைய தத்துவ விசாரத்தை.. எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் நாம் வாழ்வா? சாவா? என்று இருந்த போது இந்தப் பறவை நம்மிடம் வந்து சேர்ந்தது.. உறவும் கொண்டது. இப்பொழுது அந்த நெருக்கடியோ தீர்ந்து விட்டது. அந்த உறவும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. பார்ப்பதற்கு அழகான ஒரு பறவை என்பதற்கு மேலாக எதுவும் இல்லை.
நபர் 3
என்னுடைய யோசனைகள் மிகவும் எளிமையானவை. தாழப் பறந்து நமது பாய் மரத்தில் உட்காரும் அப்பறவையைப் பாருங்கள். நல்ல கொழுகொழு என்று சதையுடன்.. கழுத்தில் எவ்வளவு தடிமனான தோல்.. நிச்சயம் சுவையான கறிதான். அதைச் சமைத்து வறுத்து சிவப்பு ஒயினோடு கலந்து உண்டால் … அந்த விருந்தே விருந்துதான்..
நபர் 4
உனக்கு மட்டும் தான் இந்த மாதிரி யோசனைகள் வருகின்றன. இதற்காகவே உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. காய்ந்துபோன மாட்டிறைச்சியையும் காய்களையும் தின்று தின்று சலித்து விட்டது. இந்தப் பறவையின் இறைச்சி மிகச் சிறந்த விருந்தாக அமைவது நிச்சயம். ஆனால் அதைக் கொல்வது யார்? ( அனைவரும் நபர் 5 இனைச் சூழ்ந்து கொண்டு)
நபர் 1
நாம் அந்த அரிய வாய்ப்பை – புனிதப் பணியை ஒதுங்கி நிற்கும் நம் கவிஞருக்கு அளிப்போம். அதனைக் கொல்லும் குரூரத்தில் அவருக்கு ஒரு புதிய கவிதை கிடைக்கக் கூடும் ( பறவையோடு விளையாடிக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டுத் திரும்பி)
நபர் 5
என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நபர் 4
நீதான் அந்த அதிர்ஷ்டசாலி.. அந்தப் பறவையை நமக்கு விருந்தாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். அதைச் செய்யப் போவது நீதான்.
நபர் 5
 ஓ.. கடவுளே! நீங்கள் என்ன பைத்தியமா? நானா..? என்னால் முடியாது. . தயவு செய்து .. தயவுசெய்து…
நபர் 1
நீயொன்றும் கவலைப் படாதே. கடவுள் எல்லாவற்றையும் மனிதர்களுக்காகவே படைத்துள்ளார். உண்மையில் கடவுள் மனிதர்கள் பக்கம் தான். நீ ஒரு மனிதன் தானே.. கவலை வேண்டாம்.. காலங்கடத்தாதே. கடத்தினால்.. அது மறைந்து விடும்.
நபர் 5
பறவையைக் கொல்ல வேண்டாம். நான் சொல்வதையும் மீறிக் கொல்வதானால் நீங்களே அதைச் செய்யுங்கள்..  என்னைக் கொல்லும்படி வற்புறுத்த வேண்டாம். என்னால் முடியாது. தயவு செய்து ..  என்னை விட்டு விடுங்கள்..
நபர் 3
எங்கள் வேண்டுகோளை நீ மறுக்க முடியாது. நீதான் அந்தப் பறவையைக் கொல்ல வேண்டும்.                  ( முடியாது.. என்பதற்காகத் தலையசைக்க அவர்கள் ஒருவர் பின் ஒருவராக)
அந்த வில்லையும் அம்பையும் எடு. பறவையைக் கொல்..
( நால்வரும் 2,3,1,4 மாறிமாறிச் சொல்கின்றனர்)
நபர் 5
(கதறலாகக் கெஞ்சியபடி) வேண்டாம். பறவையைக் கொல்ல வேண்டாம். அப்படிப் பார்க்க வேண்டாம். எனக்குப் பயமாக இருக்கிறது. சரி. நான் செய்கிறேன். நானே கொல்கிறேன். ( வில்லையும் அம்பையும் எடுத்துப் பறவையைக் குறி பார்க்கிறான்)
ஆல்பட் ரோஸ்
எவ்வளவு நல்ல இதயம் அவர்களுக்கு. என்னோடு தொடர்ந்து விளையாடினார்கள்.  நல்ல உணவையும் கொடுத்தார்கள். ஆனால் பனி விலகத் தொடங்கியதும் தங்கள் பயணத்தைத் தொடர்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.  என்னை யாரும் கவனிக்க வில்லையே. அதோ.. அந்த ஒரு மனிதன் மட்டும் என்னோடு விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் மிகவும் அன்பானவன். அவனுக்காகவே நான் இவர்களோடு பறந்து போவேன். அவனது கையில் இருப்பது என்ன?  நல்ல அழகிய பொம்மை போல. அவன் எனக்குத் தர விரும்புகிறானோ.?
ம்,,, ம்ம்.. அந்தப் பொம்மை என்னைக் கொன்று விட்டதோ. என்னால் பறக்க முடியவில்லையே. அந்த அன்பான இளைஞன் என்னைக் கொல்வான் என நம்ப முடியவில்லை. ம்ம்.. அம்மா மனிதர்களின் அருகில் போகாதே என்றது ஏனென்று புரிகிறது. அவர்கள் அன்பாகவும் இருக்கிறார்கள்; கொலையும் செய்கிறார்கள்.
கடல் பயணி
அந்தக் கோரமான செயலை நான் செய்ய நேர்ந்தது. அந்த வில்லையும் அம்பையும் எடுத்து அந்த ஆல்பட்ரோஸைக் கொன்றேன்.. ஓ..கடவுளே.. ஒரு பேரிடியாக என் மீது விழுந்திருக்கக் கூடாதா..? அந்தக் கொலை பாதகச் செயலைச் செய்யாமல் தடுக்கப்பட்டிருப்பேனே.. ஏன்.. ஏன்,, ஏன்..
இளைஞன்
கடல் பயணியே.. அப்படியெல்லாம் நினைக்காதே.. இந்த மாதிரி தவறுகளை எல்லோரும் தான் செய்கிறார்கள். உன்னையே நீ வெறுக்காதே..
கடல் பயணி
இல்லை.. என் இளைய நண்பனே. நீ சொல்வது போல அவ்வளவு சாதாரண செயல் அல்ல. நான் சொன்னது கதையின் முடிவு அல்ல. ஆரம்பம்.. தான்.. அதற்குப் பின்பு தான் மோசமானவை எல்லாம் அந்தக் கடலின் பரப்பில் நிகழ்ந்தன
இளைஞன்
 இவ்வளவு யோசிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களின் வேண்டுகோளை மறுத்திருக்கலாமே.. அதைச் செய்ததிலிருந்தே அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள் தானே.



கடல் பயணி
இந்தக் கேள்வியை மட்டும் கேட்க வேண்டாம். இளைஞனே .. இந்த வினா என் மனதில் ஆயிரம் தடவை தோன்றியது. ஆனால் நானே எனது மனதில் இருந்த வஞ்சக நிலையில் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டேன்.
இளைஞன்
இல்லை.. இல்லை.. இல்லை.. நீ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.
கடல் பயணி
ஆம்.. ஆம்.. ஆம்.. நான் ஒரு வஞ்சகன். என் வஞ்சகச் செயலுக்கு எனது ஆயுள் முழுவதும் விலை தந்தே ஆக வேண்டும். சரி.. அதை விடு. என் கதையைக் கேள். அந்த ஆல்பர்ட் ரோஸைக் கொன்ற பிறகு சில காலம் நன்றாக இருந்தது சீதோஷ்ண நிலை.  நீண்ட நாட்களுக்கு அப்படியே தொடர்ந்தது. ஆனால் கப்பலைத் தொடர்ந்து வரவும், கடல் பயணிகளோடு விளையாடவும் ஆல்பட்ரோஸ் இல்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே அதை உணர்ந்தார்கள்.. அவர்கள் சொன்னார்கள்
நால்வரும்
 ஆல்பட்ரோஸைக் கொன்றது சரியல்ல. மிக மோசமான செயல். மென்மையான கடல் காற்றைக் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவை தான். எங்கள் முடிவை நீ மறுத்திருக்கலாம். ஏன் அதை நீ கொன்றாய்.
கடல் பயணி
ஒரு ராத்திரி கழிந்தது. மறுநாள் சூரியன் சிவப்பாகவும் இல்லாமல், மங்கலாகவும் இல்லாமல், புதியதொரு நிறத்தில் கிழக்கே வந்தது. கடவுளின் தலையைப் போல.. சூரியன் வானத்தின் பரப்பில் மெல்லிய காற்றையும் வெண் மேகங்களையும் கொண்டு வந்த பொழுது மனம் மாறிய எனது நண்பர்கள் சொன்னார்கள்
நால்வரும்
அந்தப் பறவையைக் கொன்றது சரி தான். நம்மிடம் புகையையும் பனியையும் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவைதான். நீ சரியான செயலையே செய்துள்ளாய்.  கவலைப்படாதே.
கடல் பயணி
மெல்லிய கடல்காற்று வீசியது. வெண்மையான கடல் மேகங்களும் நகர்ந்தன. எங்கும் அமைதி. அமைதியை நாங்கள் உணர்ந்தோம்.
அந்த அமைதியான கடல் பகுதிக்குள் நுழைந்த மனிதர்களில் நாங்கள் தான் முதலாவது கூட்டமாக இருப்போம். அந்த அற்புதமான சீதோஷ்ணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எங்களின்… அந்தச் சாயல் கூட இல்லாமல் போய்விட்டது. நாங்கள் செய்த அந்தக் கொலைப் பழியால், கடலில் வெகுதூரத்திற்குச் சென்று விட்டோம்.
திடீரென்று கடல்காற்று நின்று விட்டது. பயணமும் தடைபட்டது. எல்லோருக்கும் ஒரே வருத்தம். ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும் இல்லை. கடல் அமைதியான போது பேசாமல் இருப்பது தாங்க முடியாத ஒன்று. அந்த அமைதியைக் குலைக்கவாவது நாங்கள் பேசியிருக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் அதே சீதோஷ்ண நிலையில் நாங்கள் துன்பப்பட்டோம். வெப்பமும் தகிப்பும் நிறைந்த வானம், எங்கள் தலையின் அருகிலிருந்து, ரத்தச் சூரியன், வெப்ப மழை பொழிந்தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் மூச்சு விட முடியாமல், நகரவும் முடியாமல் எங்கள் நாட்கள்  நகர்ந்தன. எங்கள் கப்பல் ஏறத்தாழ நின்று விட்டது. எல்லாமே இறந்து போன ஒன்றாக,,. கப்பல், கடல், சீதோஷ்ணநிலை, உலகம் எல்லாம்,… நான் சாவின் பிரதேசத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன். ஓவியக் கடலில் ஓவியமாகி விட்டது. எங்கள் கப்பல். அதற்குப் பின்பு எதிர்பாராத புயல்கள் பல ஏற்படத் தொடங்கின.

      [ தீயொடு கூடிய நடனம். கடல் பயணியான கதைசொல்லியைச் சுற்றி ஆடுகின்றனர். முடிவில்   
       உறங்குகின்றனர். மகிழ்ச்சியான உறக்கமாக இல்லை. தூக்கத்திலும் அதே நினைப்பு.. ஒரு      
             மனிதனின் கனவில் பேயுரு தோன்றி..]
பேயுரு
நன்றாகத் தூங்குங்கள். ஆனால் உங்கள் விதி முடிவாகி விட்டது. நீங்கள் பனியில் சிக்கி மீண்ட நாளிலிருந்தே உங்கள் கப்பலின் அடியில் கைக்கெட்டும் தூரத்தில் முடிவு வந்து விட்டது. முடிவு நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் உங்களின் நண்பனாக ஆகி விடுவேன்.

நபர் 3
(பயந்து சத்தத்துடன் எழுந்து)ஓ.. கடவுளே.. என்னிடம் வராதே.. (மற்றவர்களும் எழுந்து விடுகின்றனர்)என்னைத் தொடாதே..
நபர் 2
ஏ,,ஏ.. என் சப்தம் போடுகிறாய். என்ன என்ன நடந்தது.
நபர் 3
கனவு எவ்வளவு கோரமான கனவு. ஒரு குரூரமான உருவம், கப்பலின் உச்சியில் வந்து என்னிடம் சொன்னது…” நாம் பனியில் சிக்கி ஆல்பட் ரோஸைப் பார்த்ததிலிருந்தே அது நம்மைப் பின் தொடர்கிறதாம். நம்முடைய தலைவிதி அதன் கையில் இருக்கிறதாம். அதன் சகாக்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாம்
நபர் 2
அப்படியா.. ஓ.. கடவுளே..
நபர் 5
என்ன?.. என்ன? நடந்தது?
நபர்1
அதோ.. அந்தக் கடல் நீரைக் கவனியுங்கள்.. மந்திரவாதி வீசும் எண்ணெயைப் போல பச்சையாகவும் நீலமாகவும் வெள்ளையாகவும் எரிவதைப் பாருங்கள். ( நால்வரும் 5 ஆம் நபரைச் சுற்றி நின்று பார்த்து)
நபர் 2
அவன் அந்தப் பறவையைக் கொன்றான். அன்றிலிருந்தே துன்பமும் வந்து சேர்ந்தது,
மற்றவர்கள்
ஆம்.. ஆம்.. நீதான் பறவையைக் கொன்றாய்..
நபர் 5
நீங்கள் சொன்னீர்கள். நான் செய்தேன்.
நபர் 2
அதனால் என்ன? கடலில் குதியென்று நாங்கள் சொல்லியிருந்தால் குதித்திருப்பாயா?
நபர் 3
அவன் தான் இந்தத் துயரங்களுக்குக் காரணம். அவனது குற்றத்திற்காக நாம் பொறுப்பேற்க முடியாது.
குழு
ஆம் அவன் தான் எல்லா அழிவிற்கும் காரணம்.
கடல் பயணி
என்ன மோசமான நாள் அது. அவர்கள் மிருகங்களைவிடவும் சுயநலமானவர்கள் என்று உணர்ந்தேன். எனக்கெதிராக அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். மனிதர்களின் சுயநலம் பற்றி அதற்குப் பின் ஆயிரம் தடவைக்கு மேல் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மனிதர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்கிறார்கள்; யாரையும் பகைத்துக் கொள்வார்கள்; யாரையும் உதறிவிடுவார்கள்
என்னுடைய நண்பர்கள் எல்லாச் சாபத்தையும் என் கழுத்தில் விட்டார்கள்.
நால்வரும்
”நீதான் ஆல்பட்ரோஸைக் கொன்றாய்; உன்னையே அந்தச் சாபம் சேரும்” (ஒவ்வொருவரும் இதைச் சொல்லி கழுத்தில் கயிறொன்றை வீசி விடுகிறார்கள். அவை ஐந்தாம் நபர் கழுத்தில் விழுந்து கொள்கின்றன. அவன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான்)
கடல் பயணி
நாங்கள் அந்த வெப்ப நாட்களைக் கழித்து விட்டோம். நாக்கெல்லாம் வறண்டு, கண்கள் புழுங்கியதாய், அந்தக் கோடை.. நான் மேற்கே பார்த்த போது, சிலவற்றைக் கவனித்தேன்.
“ஹே.. மேற்கே பாருங்கள்.. அதோ கடலில் எதோ தெரிகின்றது. நம்மை நோக்கி வருகின்றது.
நபர் 1
சிறு புள்ளியாக.. பாய்மர உச்சியாக.. நம்மை நெருங்கி பக்கத்தில்.. பக்கத்தில் ஒரு கடல் ஆவியைப் போல புரண்டெழுந்து வருகிறதே.. இடமாகவும் வலமாகவும்.. மேலும் கீழுமாக.. அசைந்து.. ஆர்ப்பரிப்புடன்..
நபர் 2
இது என்ன கனவு. (கையைக் கடித்து ரத்தத்தைச் சுவைத்துப் பார்த்து விட்டு) இல்லை இது பொய்யல்ல.. உண்மை தான். கப்பல்.. அது ஒரு கப்பல்..
நபர் 3
நீதான் ஒரு பெரிய தேவன். நீயொரு தேவன்.
கடல் பயணி
பாருங்கள்.. பாருங்கள்.. அதற்குப் பின் அது நகரவில்லை. ரொம்பவும் மாயமானதாய் தோன்றுகிறது. கடலில் காற்றும் இல்லை. சீதோஷ்ணமும் மாறவில்லை. அலையும் காற்றும் இன்றி கப்பல் அசையுமா..?
நபர் 4
நம் விதி நம்மோடு விளையாடுகிறது. அது கப்பல் அல்ல. மேலைக்காற்று. சூரிய ஒளியோடு சேர்ந்து ஒளிச்சுடரை உண்டாக்கியிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒன்றுமே இல்லை. சூரியன் கடலுக்கடியில் சென்று மறைகிறான். ஆனால் இது காற்றின் செயலல்ல என்றே நம்புகிறேன். ராத்திரி வந்து எல்லோரும் தூங்கும் வேளையில் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணுமாக இருவர் இந்தக் கப்பலின் குறுக்கே மிதந்து போனதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தி வாழ்வு. இன்னொருத்தி சாவு. தாயம் உருட்டி விளையாண்டபடியே பேசிக் கொண்டே போனார்கள்
சாவு
ஏற்கெனவே அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார்கள். நான் சாவு. அவர்களை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளேன்.
வாழ்வு
நீயேன் இவ்வளவு அவசரமாக வந்தாய்? அவர்கள் அனைவரும் இளைய வயதினர். அவர்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன்.
சாவு
இங்கே பார்.. என் வேலையில் நீ குறுக்கிடுவது சரியல்ல.. சாவு என்பது வயதைப் பொறுத்தது அல்ல. அது ரொம்பவும் சிக்கலான கணிப்பு..
வாழ்வு
சரி..நாம் தாயம் உருட்டி விளையாடுவோம். வெல்லும் நபர் யாரோ அவரது முடிவே செயல்படுத்தப்படும். (அவர்கள் தாயம் விளையாடுகின்றனர்)
சாவு
ஹ..ஹா.. விளையாட்டு முடிந்தது. நானே ஜெயித்தேன். நான் ஜெயித்து விட்டேன்.
கதைசொல்லி
அவர்கள் எல்லோருமே விழித்து அந்த விளையாட்டைப் பயந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. எங்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதை உணர்ந்தோம். நட்சத்திரங்கள் மங்கலாகத் தெரிந்தன. இரவு கடினமாக இருந்தது. கப்பலில் இருந்து துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. நிலவு செவ்விருந்தாகக் காட்சி அளித்தது.
வேகமாக நடந்தது. அது வெகு வேகமாக நடந்தது.. பெரிய சத்தத்துடன் விழுந்தார்கள். செத்தார்கள்..  ரொம்பவும் .. வேகமாக அவர்களிடமிருந்து உயிர் பிரியும் அடையாளமோ கேவலோ கூட இல்லை. ஒவ்வொருவராக விழுந்தார்கள். ஆன்மாவும் ரத்தமும் உடலை விட்டுப் பிரிந்தது. என் வில்லிலிருந்து கிளம்பிப் போன அம்பைப் போன என்னை விட்டு விலகிப் போனார்கள் அவர்கள். 
நான் பயப்படுகிறேன்.
இளைஞன்
கடல் பயணியே.. நான் பயப்படுகிறேன். ஒரு பறவையைக் கொன்றது ஒரு சாதாரண விசயம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் விதி .. மிகச் சாதாரண ஒன்றின் காரணமாகக் கூடத் தன் விளையாட்டை மூர்க்கமாக நடத்தும் என்று புரிந்து கொண்டேன். நான் பயப்படுகிறேன்.                கடல் பயணியே நான் பயப்படுகிறேன். உங்கள் .. முடிவளர்ந்த கைகளையும் கடல் மண்ணால் திரிக்கப்பட்ட கயிறைப் போல புடைத்துக் கொண்டிருக்கும் உனது நரம்புகளையும் பார்த்து.. ஒளிரும் உனது கண்களையும் கண்டு பயமாக இருக்கிறது. உனது கதை பெரியதொரு பாரம்.


கடல் பயணி
பயப்பட வேண்டாம். கல்யாண விருந்தாளியே பயப்பட வேண்டாம்.. இந்த உடல் இன்னும் விழவில்லை.
தனியாக.. தனியாக.. தன்னந் தனியாகப் பறந்த , மிகப் பரந்த கடலின் பரப்பில் தனியாக.. என் மீது இறக்கம் காட்டவே இல்லை கடவுள்.  எனது ஆன்மாவின் துடிப்புக்கு நிவாரணியே வரவில்லை. என் இனிய நண்பர்கள்.. எனது குழந்தைப் பிராயத்திலிருந்தே என்னோடு இருந்த நண்பர்கள்.. எனது பெரும்பாலான நேரத்தை அவர்களோடு தான் கழித்திருப்பேன். அவர்கள் எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். நான் மட்டும் இந்த உலகத்திற்குப் பாரமாக, ஒரு கொடிய விளக்கைப் போல ஆயிரக்கணக்கான கோரப் படைப்புகளில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறேன்,
என் கண்கள் வெகுதூரம் பார்க்கின்றன. நம்பிக்கை தரும் விதமாக எதுவுமே தெரியவில்லை. கப்பலின் தளத்தில் எனது நண்பர்களின் வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்ய முயன்றேன்… முடியவில்லை.. பிரார்த்தனை செய்ய முடியவில்லை. மனப்பாரத்தோடு.. ஈரமற்ற, வஞ்சகம் நிறைந்த இதயத்தின் குறுகுறுப்பையும் மீறி பிரார்த்தனை சாத்தியமே இல்லை. அதிகமான பயம் கூட.. எனது மூச்சுக் காற்று வெளியேற மறுத்தது; நகரவும் முடியவில்லை. எல்லா பாரமும் என் மீது இருப்பதாக உணர்ந்தேன். ஆகாயம், கடல், எனது இறந்து போன என் நண்பர்கள் என எல்லாப் பாரமும் என்னை அழுத்தியது. இறந்து போன என் நண்பர்கள் பாக்கியவான்கள் என்று அவர்கள் மீது எனக்குப் பொறாமை கூட. அவர்களின் கண்களைப் பார்த்தேன். அவை மற்றும் உயிரோடு… செத்துப் போனவர்களின் அசையும் கண்களைப் பார்ப்பதைவிடக் கொடுமையான சாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
ஏழு இரவு.. ஏழு பகல் அந்தச் சாபத்தோடு, அந்தப் புயலின் போது எங்களின் உணவையும் குடிநீரையும் கூட இழந்தோம். இப்பொழுது பசியோடும் தாகத்தோடும், கடலின் பரப்பில் பிணங்களின் அசையும் கண்களைச் சந்திக்கும் சாபம்.
தண்ணீர்.. தண்ணீர்.. எல்லா இடத்திலும் தண்ணீர். ஆனால் ஒரு துளியும் நாவை நனைக்காது. வானத்தில் நகரும் நிலவோடு இரவு நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் கதிர்கள், வெப்பக் கடலில் பட்டுத் தெறித்தது ரொம்பவும் அழகாக இருந்தது. ஆனால் கப்பலின் அருகில், அதன் நிழலிலேயே கடல் நீர் செம்பிழப்பாய் இருந்தது. கப்பலின் நிழலைத் தாண்டி கடல் நீரை கவனித்தேன்.. நீர் குழம்பி, ஒளியுடன் கூடிய வெந்நிறமாய்த் தளும்பியது. தளும்பும் கடல் அலையின் நிறம் மேலும் கூடி வெவ்வேறு வண்ணங்களில் பளிச்சிட்டன.
ஓ.! அவற்றின் அழகை எப்படி என்னால் சொல்ல முடியும். சவங்களோடு ஏழு நாட்களைக் கடந்து பின்பு உயிரினங்களைப் பார்த்தேன். என் வாழ்நாளில் எத்தனையோ அழகான பொருட்களைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கடல் சுழிப்பின் வண்ணக் கோலங்கள் தான் மிகவும் அழகானவை என்பேன்..
ஓ! மகிழ்ச்சியான உயிரினங்கள்!
அவற்றின் அழகைச் சொல்ல
வார்த்தைகளே இல்லை.
அதைப் பார்த்தபின்பு வாழ்வதின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அந்த உணர்வில் எனது இதயம் அன்பை நிறைத்துக் கொண்டது. நிச்சயமாக, கடவுள் என்னைக் காத்து விட்டார். என் மீது இரக்கம் கொண்டிருக்கிறார். கப்பலைச் சுற்றி நெளியும் அந்த வண்ணக் கோலத்தில்- அலையில் மற்ற எல்லாவற்றையும் மறந்து போனேன். அவற்றைப் பார்த்தபடியே கடவுளிடம் அன்பாகப் பிரார்த்தனை செய்தேன். உடனடியாக எனது கழுத்து விடுதலை அடைவதாக உணர்ந்தேன்.
இறந்து போன ஆல்பட் ரோஸின் இறகால்… எனது இனிய நண்பர்கள் சூட்டிய அந்த மாலை.. கடலில் விழுந்து, வழிகாட்டியாய் மூழ்கியது.
                            

எஸ்.டி. கோலரிட்ஜ் எழுதிய ‘தி ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’ என்ற      
           கவிதையின் உணர்வும் அதில் உள்ள கதைக்கூறுமே இந்த நாடகத்தின்   
          கட்டமைப்பாக மாறியிருக்கிறது. இந்தக் கவிதையை நாடகமாக ஆக்க   
        வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி விவாதத்தில் ஈடுபட்டவர்  
       ஷெஷ்துர் ரஹ்மான். வங்கதேசத்தில் இருந்து வந்து என்னிடம் ஆய்வு   
    மாணவராகச் சேர்ந்தார். பின்னர் திருநெல்வேலிக்குப் போனபின்பு பேரா.  
      கே.ஏ.குணசேகரனிடம் ஆய்வை முடித்தார். இந்த நாடகத்தை மேடையேற்ற 
      விரும்புபவர்கள் எனது இணைய முகவரிக்குத் தகவல் அனுப்பி முன் அனுமதி பெற 
           வேண்டும்.

நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்

$
0
0


என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்)திரைக்கு வந்த1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.
அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.
கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.  
ரசிகன் (fan)என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப்  படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.  
விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம்.  என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.
கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்தபாட்டுக்காரியானகலையரசியைப்பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து  அவர்களுக்குப் பிடித்த  விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்பு களைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும்  காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.  
கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழர்களின் வாழ்க்கையைப் பெருமளவு பாதித்து வெகுமக்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் இயக்குகருவியாக இருக்கும் தமிழ்ச் சினிமாவை அதன் உள்ளிருந்து பார்த்துப் பகுப்பாய்வு செய்து சொல்லும் வேலையையே நான் தொடர்ந்து செய்து வந்துள்ளேன். அப்படிச் செய்வதற்கு முழுமையும் தமிழ்ச் சினிமாவையே தரவுகளாகக் கொண்டிருக்கிறேன் என்று நான் சொல்லும்போது, திரைப்படக்கலை சார்ந்த உலகம் தழுவிய பொதுவிதிகளைக் கவனிக்காமல் குருட்டாம் போக்கில் கருத்துக்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றேன் என நினைத்து விட வேண்டாம். வெகுமக்கள் வாழ்க்கையைக் கட்டமைக்கும் சமகாலப் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், அவற்றைப் பின்னின்று இயக்கும் சிந்தனைத் தளங்கள், அவற்றை முன் மொழியும் நபர்களின் ஆளுமைத் தாக்கம் போன்றவற்றைக் கவனத்துடன் பரிசீலித்தே எனது திரைப்படப் பகுப்பாய்வுகளை முன் வைத்து வந்துள்ளேன்.  இந்திய அளவிலும் உலக அளவிலும் உச்சரிக்கப்படும் பெயர்களையும் கூற்றுகளையும், சொல்லப் பட்ட விதிகளையும் உச்சரிப்பு மாறாமல் எனது கட்டுரைகளில் நான் எழுதிக் காட்டவில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அவற்றை உள்வாங்கி எந்த வகையில் எனக்குத் தேவையோ அந்த வகையில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். அந்தப் பாதைகளில் கொஞ்சம் முன்னும் பின்னுமாகப் பயணம் செய்யலாம்..  
***********  ***********  ***********                                                              ***********  ***********  *********** 
எம்.ஜி.ஆர் கட்சியாகவே அறியப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு விரியத் தொடங்கியிருந்த அறுபதுகளின் பின்பாதியிலும் எழுபதுகளின் முன்பாதியிலும் பள்ளிப் படிப்பில் இருந்த நான், அவரது நூற்றுச் சொச்சம் சினிமாக்களில் 75 சதவீதம் படங்களைப் பார்த்தவன். அவரது அரசியல் வாழ்க்கைக்குக் காரணமாக இருந்த நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், காவல்காரன், எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், நாளை நமதே ஒளி விளக்கு,  இதயக்கனி போன்ற படங்கள்  நிகழ்கால அரசியலைப் பேசிய படங்கள் இல்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழக அரசியலோடு சேர்த்துப் புரிந்து கொண்டு பார்த்து ரசித்த காலம் அது. அவர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய பின் வந்த நம்நாடு, நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை அவரது புதிய கட்சியின் நிலைபாட்டோடு பொருத்திப் பார்த்து ரசித்த காலமும் பள்ளிப் பருவக் காலம் தான். எனது பள்ளிப் பருவக் காலத்தில் எனக்குப் பிடித்த சினிமாவைத் தேர்வு செய்வதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிக பிம்பம் காரணமாக இருந்தது என்பதைவிட அவரது அரசியல் பிம்பமே அதிகக் காரணமாக இருந்தது. அதிலும் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட பட்டுக் கோட்டைக் கலியாண சுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் வரிகளுக்கு வாயசைத்துக் கைகளை ஆட்டிய எம்.ஜி. ஆரின் பிம்பங்களைப் பார்ப்பதற்காகவே நான் அவரது ரசிகனாக இருந்தேன்; என் தலைமுறையில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததற்கு அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவற்றைக் காட்சிப் படுத்திய இயக்குநர்களின் திறமைகளுமே காரணங்களாக இருந்தன எனச் சொல்வது மிகையான ஒன்றல்ல.
பள்ளிப்பருவத்தின் தொடர்ச்சியைச் சட்டென்று அறுத்துப் போட்டது எனது கல்லூரிக் கால வாழ்க்கை. இலக்கியம் படிக்கும் மாணவனாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவனாக நுழைந்த பின்னரும் வாரந்தோறும் மதுரைத் திரையரங்குகளில் வெளியாகும் எல்லாவகைப் படங்களையும் பார்த்தவனாகவே இருந்தேன் என்றாலும். எம்.ஜி.ஆர் ஒரு நடிகராக ரசிக்கப்பட வேண்டியவர் அல்ல என்ற பேரிடியை என் தலையில் இறக்கின எனது பேராசிரியர் சாமுவேல் சுதானந்தாவின் இலக்கிய வகுப்புகள். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் வகுப்பில் பாடங்கள் நடத்தவில்லை என்றாலும் நல்ல இலக்கியம், ரசிக்க வேண்டிய கலைக் கூறுகள், கவனிக்க வேண்டிய போக்குகள் என்பனவற்றை  அடையாளப்படுத்தினார். பாடத்திட்டத்திற்கு அப்பால் அவர் அறிமுகப் படுத்திய புத்தகங்கள், இலக்கிய இதழ்கள் அந்தக் கல்லூரியில் செயல்பட்ட திரைப்பட ரசனைக் குழுக்கள், அதன் சிறப்பு நிகழ்வுகள், நாடக மேடையேற்றங்கள், அவற்றில் பங்கேற்க வந்த ஆளுமைகளின் பேச்சுகள் என எல்லாம் சேர்ந்து குவிக்கப்பட்ட கற்குவியல்களிலிருந்து ஒரு சில கற்களை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடும்போது ஒருவித சுகம் உண்டு எனக் காட்டின. உலக சினிமா பற்றிய பேச்சுகள் எப்போதும் நடிகர்களை மையப்படுத்தியதாக இல்லாமல் இயக்குநர்களின் பெயர்கள் வழியாகவே அறிமுகம் ஆனபோது தமிழ் நடிகர்களின் பால் இருந்த ஈர்ப்பும் வெறுப்பும் தானாக விலகிப் போயின.
நடிகர்களின் பிம்பங்கள் விலகிப் போன அந்த நேரத்தில் புதிய அலையெனத் தமிழ்ச் சினிமா உலகத்தில் நுழைந்து அதன் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் சொல் முறைகளையும் மாற்றிக் கட்டமைத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதி ராஜா, மகேந்திரன் என்ற பெயர்கள் பிம்பங்களாக அல்லாமல் ஆளுமைகளாக எனக்குள் நுழைந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் சேராமல் ஏற்கெனவே எழுத்தின் வழியாக எனது நேரத்தைக் களவாடிக் கொண்டிருந்த ஜெயகாந்தன் சினிமா வழியாகவும் என்னை இணைத்துக் கொண்டார்.  சினிமா என்பது நடிகனின் கலை அல்ல; இயக்குநரின் வெளிப்பாட்டு வடிவம் என்பதை நான் உணர்ந்ததை ஒரு தீபாவளிக்கு வெளியான படங்கள் தான் எனக்கு உணர்த்தின. பட்டப்படிப்பில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தத் தீபாவளிக்கு வெளியான எட்டுப் படங்களில் எட்டாவது இடத்தை வழங்கும் விதமாக ருத்திரையாவின் அவள் அப்படித்தானுக்குஆனந்த விகடன் மதிப்பெண் வழங்கியதில் பிழை இருப்பதாகத் தோன்றியது அந்த நேரத்தில் நடிப்பில் உச்சத்தில் இருந்த கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சிவச்சந்திரன், ரவீந்திர் போன்றவர்களோடு மையப் பாத்திரமான மஞ்சு பாத்திரத்தில் ஸ்ரீபிரியாஅற்புதமாக நடித்திருந்தார். திரையிசைப் பயணத்தில் தாவித்தாவிப் பயணம் செய்து கொண்டிருந்த இளையராஜாவின் பின்னணி இசையும் கருத்தாழம் மிக்க பாடல்களும் கூட அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாடல்களில் ஒன்றைக் கமல்ஹாசனே பாடியிருந்தார் என்ற போதிலும் ஆனந்த விகடனின் கவனம் விழவில்லை.
பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள், பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களுடன் சேர்ந்து 1978 தீபாவளிக்கு வெளியான எட்டுச் சினிமாக்களுள் அவள் அப்படித்தான்படத்தை முக்கியமான படமாக முன்னிறுத்தத் தவறிய ஆனந்த விகடனின் விமரிசனக்குழுவின் திரைப்படப் பார்வையில் ஏதோ கோளாறு இருப்பது மட்டும் புரிந்தது; ஆனால் என்ன வகையான கோளாறு என்பது அப்போது விளங்கவில்லை. கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் கதை சொல்லிய முறையிலும், காட்சிகளை அடுக்கிய முறையிலும் வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் அவர்கள் அந்தப் பாத்திரங்களைத் தமிழ்ப் பெருந்திரளுக்குள் அடையாளமற்றவர்களாகக் கரைந்து போகும் நபர்களாகக் காட்டாமல் துருத்திக் கொண்டிருக்கும் நபர்களாக- குறிப்பாக அந்த அவளை- மஞ்சுவை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ருத்திரையா. ஆண்களைச் சார்ந்து வாழ்வதே பெண்ணின் இருப்பாக நம்பும் தமிழ்ச் சமூகத்தின் முன் தன் செயல்பாடுகளின் தோல்வியை உணர்ந்தவளாகவும், அதன் வழியாகச் சிதையும் நம்பிக்கைகளோடு ஆண்களை எதிர் கொள்ளும் தனித்தன்மை கொண்டவளாகவும் இருக்கும் பெண்ணைக் கவனப்படுத்தும் ஒரு திரைப்படத்தை ஆனந்த விகடனின் மரபான கலைப்பார்வை ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருக்கும் என்பது இப்போது புரிகிறது. 
சினிமா என்னும் சர்வதேசக் கலைவடிவத்திற்கான மொழியை உள்வாங்கித் தமிழ் வாழ்வில் தன் காலத்தில் நடக்கும் நுட்பமான மாற்றங்களையும் விலகல்களையும் சொன்ன உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்றஜெயகாந்தனின்நாவல்களை அடிப்படை யாகக் கொண்டு எடுக்க பெற்ற படங்களும், ருத்திரையாவின் அவள் அப்படித்தான், ஸ்ரீதர்ராஜனின் கண் சிவந்தால் மண் சிவக்கும், பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், மூடுபனி  பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம்,மகேந்திரனின் உதிரிப் பூக்கள், மெட்டி, நாசரின் அவதாரம்,  போன்றன வெகுமக்கள் ரசனையைக் கட்டமைக்கும் பத்திரிகைகளுக்குப் பிடிக்காமல் போனது போலவே பெருந்திரள் பார்வையாளர்களையும் ஈர்த்ததில்லை. அதே நேரத்தில் முள்ளும் மலரும், முதல் மரியாதை, தேவர் மகன், மகாநதி, நாயகன், அலைபாயுதே, காதல், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, பிதாமகன், சுப்பிரமணியபுரம், அழகி,  போன்ற விதி விலக்குகளும்இல்லாமல் இல்லை இவையெல்லாம் இன்றளவும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான அடையாளங்களாக இருக்கும் படங்கள்.    
ஆனந்த விகடன் அளித்த மதிப்பெண்களும் விட்டேத்தியான விமரிசனக்குறிப்புகளும் தான், மாற்றங்களை முன் வைக்கும் படைப்பாளியின் இடத்தை உருவாக்கித் தரும் பொறுப்பைத் தவறவிடும் விமரிசனத்தின் நிலைபாட்டை எனக்கு உணர்த்தியது. அப்படி உணர்ந்த உடனேயே திரைப்படங்களைப் பற்றிய விமரிசனக் கட்டுரைகளை எழுத வேண்டும் என்ற ஆவலும் விருப்பமும் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி எழுதுவதற்கான தரவுகளும் சொற்களும் என்னிடம் இருக்கவில்லை. தரவுகளைத் திரட்டுவதற்காக திரைப்பட ரசனையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குழுமங்களில் உறுப்பினராகிப் பல்வேறு மொழி படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே ஒரு திரைப்படச் சங்கம் இருந்தது. அச்சங்கம் தனியாகவும், மதுரையில் செயல்பட்ட யதார்த்தாதிரைப்படச் சங்கத்தோடு இணைந்தும் படங்களைத் திரையிடும். திரையிட்ட படங்களைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்காகத் தேர்ந்த விமரிசகர்களாக அறியப்பட்ட நபர்கள் வந்து உரையாடல் நடத்துவார்கள். அவர்கள் வழியாகத் திரைப்படக்கலை என்பது நான் ஈடுபாட்டோடு செயல்படத்தொடங்கிய நாடகக் கலையைப் போலவே ஒரு கூட்டுக் கலை என்பதையும், நாடகக் கலையைவிடச் சக்தி வாய்ந்த வெகுமக்கள் ஊடகம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
லாபத்தை நோக்கமாகக் கொண்ட வியாபாரத்தில் முதலீடு செய்வது போலவே திரைப்படத் தயாரிப்புக்கும் பெரும் மூலதனம் தேவைப் படுகிறது. அம்மூலதனத்தின் உதவியோடு உருவாகும் சினிமா என்னும் சலனப்படம் அன்றாட வாழ்வில் பயன்படும் பேச்சு மொழியை முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் சாதாரணமனிதர்களின் உடமையாக ஆகிக் கொள்கிறது. அதன் வழி அவர்களை வந்தடையும் காட்சி அடுக்குகளும், சொல்லடுக்குகளும்  முதன்மையாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. அந்த மகிழ்ச்சி மனித உயிரியின் ஐம்புலன்களுக்குமானது அல்ல. கண்களுக்கும் காதுகளுக்குமானவை. இவ்விரண்டின் வழியாக உயிரியின் இருப்புக்குள் நுழையும் அந்தக் குறியீடுகள் மகிழ்ச்சிப் படுத்துவதோடு, அந்த உயிரியின் இருப்பை- வாழ்வைக் கட்டமைக்கவும் முயல்கின்றன. தொடர்ச்சியாக மனித உயிரியின் மூளைக்குள் நுழையும் எல்லாவகைக் குறியீடுகளும் அவ்வுயரியின் இருப்பையும் மாற்றத்தையும் கட்டமைக்கும் என்பதை மார்க்சியம் தொடங்கி அமைப்பியல் வரையிலான புதுவகைச் சிந்தனைகள் நிறுவிக்காட்டியிருந்ததை வாசித்தவன் என்ற நிலையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டவனாக மாறினேன்.  அதன் காரணமாகவே என் முன் விரியும் எல்லாவற்றையும் சந்தேகத்தோடு கேள்வி கேட்பவனாக மாறி இருந்தேன். கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நடப்புகளையும் ஐயத்தோடு கவனிப்பதும், ஐயத்தின் விளைவாகக் காரணங்களை உருவாக்குவதும், காரணங்களைப் பொருத்திப் பார்த்து விளங்கிக் கொள்வதும் அறிதலின் வினைகள் என்பதையும் நான் கற்ற நூல்கள் எனக்குச் சொல்லித் தந்திருந்தன.  ஆகவே என் முன் அடுக்கடுக்காய் வந்து விரியும் எழுத்துப் பிரதிகளையும் காட்சிப் பிரதிகளையும் அறிதலின் வினையாகவே நான் வாசிக்கிறேன். விளங்கிக் கொள்கிறேன். நான் விளங்கிக் கொண்ட விதத்தை மற்றவர்களுக்கு நான் விளக்கும் போது அவை எனது விமரிசனக் கட்டுரைகளாக – பகுப்பாய்வுப் பார்வையாக ஆகி அறியப்பட்டு விட்டன.
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலையின் போதாமையை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள் திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு வெகுமக்கள் சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள்.மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பதன் அடையாளங்களே இதுவரை நான் எழுதிய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள். தொழில் துறை அல்லது தொழிற்சாலை என்பது அரூபமான வினைகள் நடக்கும் வெளி அல்ல. விதிகளின்படி இயங்கும் கணதியான வினைகள் நிகழும் வெளி அது. ஆனால் களியாட்டத் தொழிற்துறையாக இருக்கும் திரைப்படம் ஒரு கனவுத் தொழிற்சாலையாக இருக்கிறது. கனவு என்பது கணதியானது அல்ல; அரூபமானது. அரூபத்தை உருவங்களாக்கி அலைய விடும் சினிமா ஒவ்வொரு தேசங்களிலும் ஒவ்வொரு விதமாக இயங்குகின்றது. இந்தியா போன்ற பன்மைச் சமூகத்திலும், தமிழ்மொழி பேசும் வெளிகளிலும் எவ்வாறு இயங்குகின்றது என்பதைச் சொல்ல வேண்டியது அதன் தேர்ந்த பார்வையாளன் என்ற கோட்டைத் தாண்டிய விமரிசகர்களின் வேலை. அந்த வேலையையே எனது கட்டுரைகள் செய்கின்றன.
இந்தப் பணியைச் செய்யும் பகுப்பாய்வு, மனிதர்களைச் சந்தோசப்படுத்தும் திரைப்படம் என்னும் வெகுஜனக் கலைத் திரும்பத் திரும்ப ஒன்று போல் உற்பத்தி செய்யும் வினையில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும். பின்னர் அதன் தொடர்ச்சியாக அவ்வுற்பத்திக்கு என்னென்ன கச்சாப்பொருட்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது என்ற தளத்திற்குள் நுழைய வேண்டும். வாய்மொழி, இசைமொழி, காட்சிமொழி எனத் திரைப்பட மொழியின் கூறுகளில் மரபான சமூகத்தின் கூறுகள் எவ்வாறு நுழைந்து பழைய மதிப்பீடுகளை மறு உற்பத்தி செய்யவும், இருக்கும் சமூகப் போக்கில் மாற்றம் வந்துவிடாமல் தடுக்கவுமான பங்களிப்பை எவ்வாறு ஆற்றுகின்றன என்ற வேலையைச் செய்வது முக்கியமான ஆய்வுப் பணி என நான் நினைக்கிறேன். அந்த ஒற்றை நோக்கத்தோடு சேர்த்து மாற்றத்தை நோக்கிய பார்வைகள் எவ்வாறு இருக்கக் கூடும் என்ற அடையாளப்படுத்துதலையும் விலக்கி விடுவதில்லை.  ஷங்கரின் பிருமாண்டமான படங்களுக்குள் இருக்கும் எதிர்மறைக் கூறுகளை விளக்கிக் காட்டும் எனது கட்டுரைகளிலிருந்து பாலாவின் படங்கள் பற்றிய கட்டுரைகள் வேறுபடுவதைக் காணலாம். அவரது படங்கள் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய- விலக்கப்பட்ட மனிதர்களை அடையாளப் படுத்தும் விதமாக இருப்பதைச் சொல்லியிருப்பதைக் காணலா,
இருப்பை விளக்குவதோடு மாற்றத்தைச் சுட்டிக் காட்டும் நகர்வாகவே எனது விமரிசனப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது                                                     ***********  *********** 
 நன்றி : எதுவரை.6

காதலும் வன்முறையும்: நிகழ்வுகளும் புனைவும்

$
0
0

” யதார்த்தம் செத்து விட்டது” எனவும் ”நடப்பியல் பாணி எழுத்தின் காலம் முடிந்து விட்டது” எனவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக உச்சரிக்கப் பட்டதைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த உச்சரிப்பின் ஓங்காரம் கேட்டுப் பல எழுத்தாளர்கள் மிரண்டு போய் எழுத்துப் பயணத்தில் எந்தத் திசையில் தொடர்வது எனத் திகைத்து நின்றார்கள். நேர்கோட்டுக் கதைசொல்லலில் தான் யதார்த்தம் உருவாக்கப்படுவதாக நம்பி அதைக் கைவிட்டு நேர்கோடற்ற எழுத்து பாணியை முயன்று பார்த்தனர். அம்முயற்சி கைகூடாத நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டு ஓய்வில் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ, அ-புனைவு எழுத்தாளர்களாக மாறிப் போனார்கள்.

நாடகத்துறைச் செயல்பாட்டாளர்கள் தான் நடப்பியல் பாணியின் மீது விமரிசனங்களை முன் வைத்தவர்கள் என்பது உலக இலக்கிய வர்லாறு. யதார்த்தம் அல்லது நடப்பியல் பாணி நாடகங்களின் நோக்கம் கேள்விகளற்ற ஏற்பு மனநிலையையே உருவாக்கும் என்ற விமரிசனங்களை முன் வைத்த பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் முதன்மையாக அறியப்படுவது நாடகக்காரராக என்பதை இங்கே நினைத்துக் கொண்டால் நான் சொல்வதை விளங்கிக் கொள்ளலாம்.  தங்கள் கருத்தை வலிமையான மொழிப் பயன்பாட்டின் வழி நிலைநிறுத்த முயலும் ஆதிக்கக் கருத்தியலாளர்களுக்கே நடப்பியல் உதவும் என்பது அதன் பலவீனமான பக்கம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் மறுதலையாக பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்கும் பலமும் அதற்கு உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கவனமான எழுத்து ஏற்படுத்தும் குற்றவுணர்வின் வழி மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் சாத்தியங்களும் அதற்கு உண்டு. இந்தச் சாத்தியத்தைத் தனது தொடக்க நாவலான கோவேறு கழுதைகள்வழிப் பலமாக நிரூபித்தவர் எழுத்தாளர் இமையம். அவரது  ஆறுமுகம், செடல்ஆகிய நாவல்களில் இடம் பெறும் பாத்திரங்களை வாசிக்கும் வாசக மனமும் கூட அவை முன் வைக்கும் உண்மைகளைக் கண்டு பதற்றப்படையாமல் இருக்காது. அந்தப் பாத்திரங்களின் வாழ்நிலைக்கு மேலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் குற்றவுணர்வால் தாக்கப்படுவதும், அதே நிலையில் இருந்தால் “என்னை ஒத்த மனிதர்களின் வாழ்நிலைக்கு என்ன காரணம்” எனத் தேடுவதும், “அதற்கான காரணம் இந்த சமூகத்தின் அமைப்பும், நம்பிக்கைகளும், அவற்றை நிலைபெறச் செய்யப்பாடுபடும் மனிதர்களும்” என்ற புரிதலை உண்டாக்குவதையும் அப்படைப்புகளுக்குள்ளேயே சாத்தியமாக்கியிருக்கிறார் இமையம். அவரது நாவல்களைப் படித்தபோது உண்டான பதற்றங்களையெல்லாம் தாண்டிய- வாசக மனத்தை உலுக்கும் கதையாக அவர் அண்மையில் எழுதிய பெத்தவன்கதையைக் கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல; சமகாலப் பிரக்ஞையுள்ள ஒவ்வொரு வாசகருக்குள்ளும் அப்படித் தோன்றும்படி அந்தக் கதை செய்துள்ளது என்பதை அந்தக் கதை பெற்றுள்ள கவனத்தின் வழி அறியலாம்.    
அக்டோபர் மாத உயிர்மையில் அச்சான பெத்தவன்கதையை வாசித்து முடிக்கும்போது, தமிழ் அச்சு ஊடகங்களில் கௌரவக் கொலைகள்எனத் தலைப்பிட்டு எழுதப் பெற்ற செய்திக் கட்டுரைகள் முதலில் நினைவுக்கு வரக்கூடும். நடப்பியல் எழுத்தின் மிக முக்கியமான கூறு சரியான செய்திக் கட்டுரையைப் போல உண்மையைப் பளிச்செனச் சொல்வது தான். ஆனால் புனைகதை ஆசிரியன், செய்திக் கட்டுரையாசிரியன் அல்ல. அவனது எழுத்து முறை நேர்க்காட்சி வருணனை அல்ல; மனதில் அலையும் நினைவுகளைப் பதிவு செய்வது. மனக்காட்சிப் பதிவுகளை விவரிப்பதின் வழியே தான் புனைவுத் தன்மையை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும்போது கட்டுரையின் கூறுகள் காணாமல் போய் புனைகதை உயிர் பெறும். பல கட்டுரைகளை உயிர்ப்பிப்பதன் வழி நடப்பியல் எழுத்தின் பலமான பக்கங்களை வலிமைப் படுத்துவதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருபவர் இமையம் என்பதை அவரது சிறுகதைகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. 
இமையத்தின் கதையை வாசித்த பின்  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இமையத்தின் ஊரான விருத்தாசலம் பகுதியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்ட கண்ணகியும் முருகேசனும்நினைவுக்கு வந்தார்கள். வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி, தலித்தான முருகேசனைக் காதலித்து வெற்றிகரமாக வாழ்கிறாள் என்று பாராட்டுவதற்காக ஊடகங்கள் பரப்புரை செய்யவில்லை. காதலித்த பின், அதற்குக் குறுக்கீடாக இருந்த குடும்பம் மற்றும் சாதித் தடைகளை மீறிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது என்பதற்காகவே அந்தப் பெயர்கள் ஊடகங்களின் பரப்புரையில் இடம் பெற்றன. கலப்புத் திருமணம்  செய்து கொண்ட அவர்களைக் கொலை செய்ததற்காக- தற்கொலைக்குத் தூண்டியதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. தண்டிக்கப்படாத நிலையில் கலப்புத் திருமணங்களுக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டிக் கொலை செய்த சாதியின் இருப்பு கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்பெற்றது. அப்படி ஆக்கப்பெற்ற கொலைகளைக் கௌரவக் கொலைகள்எனப் பெயரிட்டு அழைத்ததன் மூலம் சமூக அங்கீகாரமும் தரப்பெற்றது.
கௌரவக்கொலைகளைச் சாதிய சமூகம் அங்கீகரிக்கலாம். ஆனால் தனியொரு மனிதனாக - பிறப்பு அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் எதுவுமில்லை என நம்பும் அறிவைப் பெற்ற ஒருவனால் அங்கீகரிக்க முடியாது. தன் காலத்தின் மீது தொடர்ந்து கேள்விகளையும் விமரிசனங்களையும் வைக்கும் எழுத்தாளன் நிச்சயம் அங்கீகரிக்கவே மாட்டான். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ளாமல் தவித்த இமையத்தின் மனம்- அடியாழத்தில் போட்டுக் கொதிநிலையில் வைத்திருந்த அந்நிகழ்வையொத்த நிகழ்வுகள் பலப்பலவாய் நிகழ்வதைப் பார்த்தபின் அதனைக் கதையின் கருவாக ஆக்கி எழுதிப் பார்த்தது. பெத்தவன் போன்ற ஆகச் சிறந்த கதையின் உருவாக்கம் இப்படித்தான் நிகழ்கிறது. நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது நடப்பியலின் வேலை அல்ல; நடப்புகளில் எவை தொன்மங்களாக ஆகின்றன என்பதைத் தேடிப் பிடித்துப் பிரித்துக் காட்டுவதே ஆகச் சிறந்த நடப்பியல் எழுத்தின் அடையாளம்.
இமையத்தின் கதையில் கண்ணகி- முருகேசன் கொலை நிகழ்வு அப்படியே பதிவு செய்யப்படவில்லை என்பதைவிடக்  கொலை செய்யப்பட்டவர்களின் குரலாகப் பதிவு செய்யவில்லை என்பதை முக்கியமாக நினைக்கிறேன். தன் மகளைக் கொல்லும்படி தூண்டிய ஆதிக்கசாதிப் பெருமைக்கெதிராகத் தன்னைக் கொலை செய்து கொண்ட தந்தையின் கோணத்தில் எழுதப் பெற்றிருந்தது. சாதி அமைப்பு தனது இருப்புக்காகக் கொலைகளைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் கொலை அதனை மீறுபவர்களை நோக்கியது மட்டுமல்ல; அதனை ஏற்றுக் கொண்டவர்களையும் பழிவாங்கும் குருட்டுத்தனம் கொண்டது என்பதை இமையத்தின் கதை உணர்த்தியது. அந்தக் கதை உருவாக்கிய குற்றவுணர்வுத் தூண்டலில் உயிர்மைக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு அமைதியானேன். வாசகனாக அதைத் தானே செய்ய முடியும் எனச் சமாதானமும் செய்து கொண்டேன்.
அந்தச் சமாதானம் ஆழ்ந்து அமுங்கிப் போவதற்குள் தர்மபுரி மாவட்டத்தில் தலைவிரித்தாடியுள்ள வன்முறை பற்றிய செய்திகளும், உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளும் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறைகளுக்கான தொடக்கப்புள்ளியாகச் சொல்லப்படுவது காதலும் கல்வியும் தான்.  இமையத்தின் கதையில் இடம் பெற்றுள்ளதைப் போன்றதொரு காதல் நிகழ்வு தான். நாயக்கன் கொட்டாய்க் கிராமம்நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துக் குடும்பத்தினர் மற்றும் ஊராரின் தடைகளை மீறித் திருமணம் செய்துள்ளனர். தங்கள் சாதியைச் சேர்ந்த திவ்யா, தங்களைவிடக் கீழான படிநிலையில் இருக்கும் சாதியைச் சேர்ந்த ஆணுடன் நடத்தப் போகும் திருமண வாழ்க்கையைத் தொடர விடக்கூடாது எனக் கருதிய ஆதிக்க சாதியினரின் மனம், அமைப்பாகத் திரண்டு எல்லாவகை நெருக்கடிகளையும் கொடுத்துள்ளது. அந்த நெருக்கடியின் முதல் பலியாகத் தங்கள் சாதியைச் சேர்ந்த பெண்ணின் தந்தையான நாகராஜைக் கொன்றுள்ளது. அந்தப் பிணத்தையே மூலதனமாக்கிச் சாதி ஆதிக்க வெறியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.  
நாயக்கன் கொட்டாய் என்னும் கிராமத்தை மையப் படுத்திய அந்த வன்முறை அதன் அருகில் இருக்கும் அண்ணாநகர், கொண்டாம்பள்ளி போன்ற கிராமங்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களையும் பதம் பார்த்திருக்கிறது. அரசு அமைத்த குழுவின் அறிக்கையின் மதிப்பே 4 கோடி ரூபாய் எனப் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. 268 வீடுகள் நாசமாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சிப் பெட்டிகள், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள், தகவல் தொடர்புக் கருவிகள் எனக் குறி வைத்து நொறுக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகளை விட்டு விட்டு காங்கிரீட் வீடுகளை நொறுக்குவதும் வசதியான வாழ்க்கையின் அடையாளங்களாகக் கருதப்படும் பொருட்களைச் சிதைப்பதும் காதலுக்கு எதிரான வெளிப்பாடுகள் மட்டுமல்ல; அடிமைகளாய் இருந்தவர்கள் அந்த அடையாளங்களைத் துறந்து புதுவகை அடையாளத்தோடு உரிமைகள் பெற்றவர்களாக வலம் வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆதிக்க மனத்தின் வெளிப்பாடு என்பதை இந்த அறிக்கைகள் காட்டுகின்றன.  
தமிழகப் பரப்பில் அட்டவணைச் சாதியினர் மீது வன்முறையைச் செலுத்தும் பல்வேறு ஆதிக்க சாதியினரும் பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஒத்தவர்களாகவே வாழ்கின்றனர். சொந்தமாக நிலபுலன்கள் இல்லாமல், மழைக்கும் காற்றுக்கும் ஒண்டிக் கொள்ளத் தேவையான காங்கிரீட் வீடுகள் இல்லாமல் ஓலைக்குடிசைகளில் வாழ்பவர்களாகவே உள்ளனர். ஆனாலும் அவர்களின் மனத்தில் சாதியடுக்கில் மேல்தட்டில் இருப்பதாக நம்பும் மனநிலை இருக்கிறது. தங்களைக் கண்டால் ஒதுங்கி நின்று வணக்கம் சொல்லி அடிமையாகப் பாவனை செய்ய வேண்டும் என நினைக்கிறது. செய்யும் வேலைக்கு அப்போதே சம்பளத்தைப் பெற்றுவிடும் சூழலுக்கு மாறாகச் சமூகக் கடமைகளை ஆற்ற வேண்டியவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை இப்போதைய தலைமுறை தரத் தயாரில்லை என்பதுதான் முரண்பாட்டின் தொடக்கம். அந்தத் தொடக்கத்தை –எதிர்ப்பு மனநிலையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என நினைக்கிறது ஆதிக்க மனம். அந்த மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இனியும் இருக்க முடியாது; இருக்க வேண்டிய அவசியமில்லை; இருக்கவே கூடாது என்ற முடிவுடன் புதிய தடங்களில் பயணிக்கிறது விடுதலை மனம். ஆதிக்க மனத்திற்கும் விடுதலை மனத்திற்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் வெல்ல வேண்டியது எது? என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய சமூகம். 
ஒடுக்கப்படுதலுக்கெதிராக விடுதலையை முன் வைக்கும் புதுவகைநம்பிக்கையைஉருவாக்கித்தரும்என்றநம்பிக்கையில்தான்இங்குமேற்கத்தியக்கல்விமுறைஅறிமுகம்ஆனது. மேற்கத்தியக்கல்விமுறையின்வடிவத்தைமட்டும்உள்வாங்கிக்கொண்டு, அதன்உள்ளடக்கத்தைத்தள்ளிவைத்தஇந்தியசமூகம்இங்கும்இல்லாமல்அங்குமில்லாமல்தவித்துக்கொண்டிருப்பதின்வெளிப்பாடுகள்தான்இந்தசாதிய வன்முறைகள்.  சட்டத்தின் முன் – அரசு அதிகாரத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆதரவைப் பெற வேண்டியவர்கள் என்பதுதான் மேற்கத்தியக் கல்விமுறையின்- அதன் அரசு வடிவமான ஜனநாயகத்தின் உள்ளடக்கம். பொதுவெளிக்கான இந்த உள்ளடக்கத்தோடு, தனிமனிதர்களின் குடும்ப வெளிக்கு அது தந்த உள்ளடக்கம் தான் காதல் திருமணங்கள்  என்பதையும் நமது சமூகம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் வெற்றுக் கூச்சலாகக் காதலையும் ஜனநாயகத்தையும் பாராட்டிப் பேசிக் கொண்டே அவற்றுக்கு எதிரான இயக்கத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது  நமது சமூகம் .
இந்த இடத்தில் வேறொன்றைச் சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. காதல் என்ற வார்த்தையும், அதன் உணர்வுகள் சார்ந்த துணை வார்த்தைகளும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஆகப்பழையவை என்றாலும், இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் அர்த்தத்தில் அவை அதற்கு முன்பு இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. சாதிய சமூகமாகக் கட்டமைக்கப்பட்ட இந்திய சமூக வாழ்க்கையை எழுதிக் காட்டிய நமது இலக்கியங்களும் உரைகளும் அது தந்த எல்லைக்குள்ளான மன ஈர்ப்புகளையே சரியான காதல் எனப் பேசின. அவ்வாறில்லாதனவற்றைப் பெருந்திணையாகவும் கைக்கிளையாகவும் தான் பேசிப் புறக்கணித்தன. ஒத்த கிழவனும் கிழத்தியுமான என்பதில் குடிமையில் ஒத்திருப்பதையே முதன்மைக் கட்டுப்பாடாக நினைத்திருந்தன. அத்தோடு இந்திய மொழிகளில் இடம் பெற்ற காதல் என்பது ஓர் ஆணும் பெண்ணும் இணைவதற்கான முதல் படி  மட்டுமே.
இதற்கு முற்றிலும் எதிரானது  ஐரோப்பிய அறிவின் வழி அறிமுகமான காதல் என்பதை நாம் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. ஐரோப்பிய வாழ்க்கையில் –ஐரோப்பிய மொழிகளில் காதல் என்ற பதத்தின் இயக்கம் சேர்தல் மட்டுமல்ல; அதாவது திருமணத்திற்கான முதல்படி மட்டுமல்ல; பிரிந்து வாழ்வதற்கும் அதுதான் முதல் படி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கடந்த ஓராண்டாக நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது முகநூல் வட்டத்தில் இருக்கும் எனது மாணவிகளின் புகைப்படங்களையும் தன் விவரங்களையும் பார்க்கும்போது இந்திய மனிதனாகக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. பதினெட்டு வயதைத் தாண்டிய ஒவ்வொருத்தியும் ஒரு ஆணுடன் காதலில் இருப்பதை மறைக்காமல்  குறிப்பிட்டிருக்கிறாள். பல்கலைக்கழகத்திற்கு வெளியே சந்திக்கும்போது அந்த ஆடவனைத் தனது காதலனாக அறிமுகம் செய்யவும் தயங்குவதில்லை. அப்படி அறிமுகம் செய்தவுடன் தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவன் அளிக்கும் முத்தத்தை என் முன்னால் ஏற்றுக் கொள்ளவும் மறுப்பதில்லை. தன் காதலைக் குடும்பத்தாருக்கும் ஆசிரியருக்கும் மறைக்காமல் சொல்லி வாழும் சமூகத்தில் காதல் சேர்வதற்கான முதல் படியாக இருக்கிறது என்பதோடு தேவைப்பட்டால் பிரிந்து விடும் வாய்ப்பையும் வழங்கவே செய்கிறது. ஒரே வீட்டிற்குள் இருக்கும் தனித்தனி அறைகளில் தங்களின் உடைமைகளோடு வசிக்கும் அவர்கள் சேர்ந்திருக்கிறார்களா? தனித்தனியாக வாழ்கிறார்களா? என்பதை மற்றவர்கள் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த வீட்டின் வாடகையை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அடுப்படி, குளியலறை என ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கி வந்து அங்கிருக்கும் ஒரெ அடுப்பில் சூடு செய்து தனித்தனியாகச் சாப்பிடுகிறார்கள். சில நேரம் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அதே போல் தனித்தனி அறையில் இருக்கும் இருவரும் தேவைப்பட்டால் ஒரே படுக்கையில் சேர்ந்தும் படுத்தும் கொள்கிறார்கள்.
இப்படிச் சொன்னவுடன் ஆண்- பெண் உறவை ஐரோப்பிய சமூகம் துடைத்துப் போடும் காகிதமாக நினைக்கிறது எனத் தூற்றும் வேலையில் பலர் இறங்கி விடும் வாய்ப்புகள் உண்டு. சேர்ந்ததற்காகக் குதூகலம் கொள்வதும் பிரிந்ததற்காகத் துயரம் கொள்வதும் அவர்களிடம் இருக்கவே செய்கிறது. ஆனால் சேர்தலின் குதூகலமும் பிரிவின் துயரமும் நிரந்தரமாக கருதப்படுவதில்லை என்பதுதான் மிக முக்கியம். அதன் காரணமாக வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து விடுவதில்லை, ஒன்றின் முடிவில் இன்னொன்று இருப்பதாக நினைக்கும் ஐரோப்பிய மனம், ஒரு காதல் வாழ்வின் சேர்மானம்,விலகலைச் சந்திக்கும்போது, அது அடுத்த சேர்தலுக்கான ஆரம்பம் என நினைக்கவும் செய்கிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இல்லாத இந்தியர்கள் காதலை ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொண்டு அதற்குள் மாட்டிக் கொண்டதாக நினைத்து அல்லாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இது நிற்க.
காதல் வழியாக உருவாக்கப்படும் புதுவகைக் குடும்ப அமைப்புகளுக்கான சட்டப்பாதுகாப்பையும் தனி மனிதர்களுக்கான உரிமைகளையும் உத்தாரம் செய்ய வேண்டிய இந்திய அரசும் அதன் அமைப்புகளான மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்களும், துணை அமைப்புகளான காவல்துறை, நீதிமன்றம் போன்றனவும் பொறுப்பிலிருந்து தவறி பெருங்கூட்டத்தைக் கூட்டிப் பயமுறுத்தும் மூடர்களைக் கண்டு அச்சம் கொண்டு நிற்கின்றன. இவற்றைக் கண்காணிப்பு செய்ய வேண்டிய ஊடகங்களோ பெரும் முதலாளிகளின் வணிகப் பண்டங்களாகக் கருத்துக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. இருப்பைத் தக்க வைக்கும் பண்டங்களே விலைபோகும் சரக்குகள் என்பதால் அவற்றை உற்பத்தி செய்வதில் கவனம் கொள்கின்றன.  மாற்றம் பெற்ற சமூகத்தில் இந்திய மனிதர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துத் தோற்றுப் போன தனிமனிதர்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.  திகைப்பின் முடிவில் தங்களுக்கான பாதுகாப்பை சாதி அமைப்புகளே வழங்கும் என்ற நம்பிக்கையில் முன்னோக்கி ஓரடி எடுத்து வைத்தவர்கள் திரும்பவும் இரண்டு அடிகளைப் பின்னோக்கி நகர்த்த வேண்டியவர்களாக  ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பின்னோக்கிய நகர்வுகள் எல்லாவகைச் சீர்திருத்தங்களுக்கும்- குறிப்பாகப் பொருளாதாரத் தளத்தில் நடத்த நினைக்கும் பாய்ச்சலுக்குப் பெருந்தடை என்பதைக் கூட நமது அரசுகளும் ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்.
 அந்தவன்முறைஏதோஇங்குமங்குமாகநடந்துகொண்டிருக்கும்கவனப்படுத்தத்தேவையில்லாதஒன்றுஎன்றநிலையிலிருந்துமாறிக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியக்கல்வியும்ஜனநாயகநடைமுறைகளும்தந்தஅறிவுவெளிச்சத்தில்பிறப்புஅடிப்படையில்மனிதர்களைப்பிரித்துப்பார்ப்பதும், கீழானவர்கள் x மேலானவர்கள்எனஅடையாளப்படுத்துவதும்அறியாமையின்வெளிப்பாடுஎனஓரடிமுன்னோக்கிநகர்ந்திருந்ததுஇந்தியச்சமூகம். தீண்டாமைஒருபெரும்பாவம்எனப்பாடமாகஅல்லாமல்பக்குவப்படவேண்டியமனங்களில்பதித்துக்கொள்ளவேண்டியஒன்றாகவேபாடப்புத்தகங்களில்அச்சிடப்பட்டுள்ளனஆனால்நடக்கும்இந்தச்சம்பவங்கள்தமிழ்ச்சமூகத்தில்புரையோடிக்கொண்டிருக்கும்தீமையின்குறியீடாகவும், மனதில்உறைந்துவிரியும்தொன்மமாகவும்சாதிஆதிக்கம்இருக்கிறதுஎன்பதைத்திரும்பத்திரும்பஉறுதிசெய்துகொண்டேஇருக்கின்றன.  
நன்றி:அம்ருதா/ டிசம்பர், 2012

ஜோடிப் பொருத்தம்

$
0
0
எளிய வரவேற்பறை.
பேராசிரியர் சர்மாவும் திருமதி சர்மாவும் யாருடைய வரவுக்காகவோ காத்துள்ளனர். பேராசிரியர் செய்தித்தாள் வாசிப்பதிலும், திருமதி சர்மா பின்னல் வேலையிலும் கவனமாக உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்க, தேவதத்தன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான். அவன் அவர்கள் முன் சென்று, கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறான்.

தேவதத்தன்
திரும்பவும் சொல்கிறேன். இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
(அவனது கோரிக்கையைப் பொருட்படுத்தாதவர்களாய் சர்மாவும் அவரது மனைவியும் பார்த்துக் கொள்கின்றனர்).
பேராசிரியர்
திரும்பவும் எண்ணத் தொடங்குகிறார்) பதினைந்து.. (தேவதத்தன் பதினைந்திலிருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுகிறான்) அவர் படித்துக் கொண்டிருக்கிறார். அவள் பின்னல் வேலையில் இருக்கிறாள். தேவதத்தன் இங்குமங்கும் உலாவுகின்றான். கார் ஒன்று நிறுத்தப்படும் சத்தம் கேட்கிறது. பேராசிரியர் கடிகாரத்தைப் பார்க்கிறார்)
பேராசிரியர்
கணம் நீதிபதி அவர்கள் வந்து விட்டார் என நினைக்கிறேன். தேவதத் போய்ப் பார்.. அவர் தானா..? ( போய்த் திரும்புகிறான்)
தேவதத்தன்
இல்லை. அவர் இன்னும் வரவில்லை. (சொல்லிய அதே மூச்சில்)இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
பேராசிரியர்
ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறதே..
திருமதி
எனக்கும் தான் உண்டு.
பேராசிரியர்
ஏன்..இந்த ஏற்பாட்டை மறுக்கிறாய். உன்னோட திருமணத்திற்கான ஏற்பாடு தானே.. அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகிறாய். பிடித்தால் சம்மதம் சொல்.. அதற்காகத் தான் கணம் நீதிபதி அவர்களைத் தன் மகளோடு வரச் சொல்லியிருக்கிறேன். அவளைப் பாரு.. அவளோடு பேசு. உனக்கு விருப்பம் என்றால் நாங்கள் யார் மறுத்துப் பேச.
திருமதி
ஆம்.. அதுதான் சரி.. நாங்கள் யார்? ( இன்னொரு கார் நிற்கும் சத்தம். பேராசிரியர் தேவதத்தனை பார்க்கிறார். அவன் வேகமாகச் சென்று திரும்புகிறான்)
பேராசிரியர்
(உறுதி தொனிக்க)தேவதத்..
(அவன் மறுபடியும் பதினைந்திலிருந்து ஒன்று வரை எண்ணுகிறான்)
(கடிகாரத்தைப் பார்க்கிறார்.)மணி ஐந்து. கணம் நீதிபதி அவர்கள் இப்பொழுது வந்துவிடுகிறார்கள். (ஒரு பெண் பின் தொடர, நீதிபதி உள்ளே வருகிறார்)
நீதிபதி
பாருங்கள். சரியாக ஐந்து மணிக்கு வந்து விட்டேன். நேரந்தவறாமையில் குறியாக இருப்பவன் நான். பங்க்சுவாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டூ மீ..
(பேராசிரியர் தம்பதிகள் அவர்களை எதிர்கொண்டு அழைக்கின்றனர். உட்காரும்படி கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நின்றபடியே உள்ளனர்)
இல்லை.. இப்பொழுது உட்கார்ந்து பேச நேரம் கிடையாது. ஐந்து ஐந்துக்குத் தலைமை நீதிபதியைச் சந்தித்தாக வேண்டும். நேரந்தவறாமை எனது லட்சியம். என்னுடைய மகள் இங்கே இருப்பாள். அவளை அழைத்துச் செல்ல காரை அனுப்புகிறேன். நாளை இரவு தேவதத் எங்கள் வீட்டிற்கு விருந்துண்ண வர வேண்டும். நாளை இரவு எட்டு மணிக்கு.. மிகச் சரியாக எட்டு மணிக்கு..
(அவர் வெளியேறுகிறார். திரும்பி) அதேதான்எட்டு மணி. பங்க்சுவாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டூ மீ.. ( போய்விடுகிறார்)
(அனைவரும் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றனர். அவள் ஒரு ஓரத்தில் மருட்சியுடன் நிற்கிறாள்)
பேராசிரியர்
பெண்ணே!.. இங்கே வந்து உட்கார்.
திருமதி
வா.. வந்து உட்கார்.. ( அவள் அதைக் கேட்டவள் போல் இல்லை. பறக்க பறக்க முழிக்கிறாள்)
அவள்
நீங்கள் ஏதாவது சொன்னீர்களா..?
பேராசிரியர்
(சத்தமாக) தயவு செய்து உட்கார்.
திருமதி
(சத்தமாகவே) உட்கார்.
(கேட்டவளாக, சோபாவை நோக்கிச் செல்கிறாள். ஆனால் உட்காரவில்லை. நடுவில் உள்ள டீப்பாவில் முட்டிக் கொள்கிறாள்)
பேராசிரியர்
தேவதத்.. நீயும் உட்கார் (அவளிடம்) இவன் தான் எங்கள் மகன் தேவதத்.. (அவளுக்கு எதுவும் கேட்கவில்லை)
திருமதி
(சத்தமாக) இது எங்கள் மகன் தேவதத்.
(இப்பொழுது காது கேட்டதால், தேவதத்துக்கு வணக்கம். சொல்வதற்குப் பதிலாக, பேராசிரியருக்கு வணக்கம் செலுத்துகிறாள்)
பேராசிரியர்
தேவதத்.. அந்தப் பக்கம் இருக்கிறான். ( சத்தமாக)உன் பெயர் என்ன..?
அவள்
த்தீபா..
பேராசிரியர்
த்தீபா.. வித்தியாசமான பெயர்.  (அவள் திடீரென்று எழுந்து எதையோ தேடுகிறாள். எல்லோரும் அவள் பார்வை செல்லும் இடங்களில் தேடுகின்றனர்)
அவள்
என்னுடைய கண்ணாடி – க்கிளாஸ்- நான் உள்ளே நுழையும்போது இங்கே விழுந்து விட்டது என்று நினைக்கிறேன். அதை எடுப்பதற்கு நீங்கள் உதவ வேண்டும். ( தம்பதிகளும் அவளது கண்ணாடியைத் தேடுகின்றனர்)
பேராசிரியர்
கண்ணாடி எதுவுமே காணவில்லையே..
திருமதி
கண்ணாடியெல்லாம் எதுவும் கிடையாது.
தேவதத்தன்
ஆமாம்.. அதுதான் உண்மை. ஏனெனில் அவள் வரும்போது கண்ணாடி எதுவும் அணிந்து வரவில்லை.
பேராசிரியர்
நீ சொல்வது சரிதான்.
திருமதி
ஆம். அதுதான் சரி..
பேராசிரியர்
கவலைப் படாதே. நீ உன்னுடைய கண்ணாடியை உங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம். சரி.. நீ .. என்ன படிக்கிறாய்?
(அவளிடமிருந்து பதில் இல்லை. எனவே சத்தமாகக் கேட்கிறார்)
அவள்
(அதேவித சத்தத்துடன்)முதல் வருடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஆனால் என்னோட க்ளாஸுக்கு- கண்ணாடிக்கு – என்ன ஆச்சு? நான் வரும்போது நான் கண்ணாடி அணிந்திருக்கவில்லை என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா..?
பேராசிரியர்
இல்லை.. உன்னிடம் இல்லை.. ( எல்லோரும் கொஞ்ச நேரம் அமைதியாக உள்ளனர்)
நீ எந்தக் கல்லூரியில் படிக்கிறாய்..?
அவள்
ஆமாம்.. பர்ஸ்ட் இயர் பார் தி லாஸ்ட் டூ இயர்ஸ் ( திடீரென்று) ஆங்..
பேராசிரியர்
நீ வரும்போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
திருமதி
உன்னிடம் க்ளாஸ் இல்லை.
அவள்
இல்லை.. அது இல்லை.. இது ஆரம்பித்து விட்டது.
பேராசிரியர்
என்ன ஆரம்பித்து விட்டது.
அவள்
எனது இடதுகாலில் வலி.. ( அவள் முணக ஆரம்பித்து)நான் என்னோட வீட்டிற்கு போகலாமா..? இப்பொழுதே..
பேராசிரியர்
(எரிச்சலுடன்)சரி .. நல்லது.. நீ உன் வீட்டுக்குப் போகலாம்.
அவள்
நான் என்னுடைய கண்ணாடியை இங்கே தொலைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா..?
பேராசிரியர்
இல்லை. இல்லை..
திருமதி
ஆமாம்.. ஆமாம்..
அவள்
நான் போகிறேன்… அப்புறம்..
(வெளியேறுகிறாள். .மரச் சாமான்களிடையில் தட்டுத் தடுமாறியபடி)
பேராசிரியர்
நீதிபதி, அவரது மகள் ரொம்பவும் புத்திசாலின்னு சொன்னாரே.
திருமதி
அற்புதமாகப் பாடுவாள் என்றும் ..
பேராசிரியர்
கண் தெரியாதவர் என்றும் இப்போதுதான் தெரிகிறது..
திருமதி
டமாரச் செவிடு வேற..
தேவதத்தன்
ஆனால் ஊமை இல்லை.
திருமதி
பேராப் பாரு.. த்தீபா.. கேணத்தனமான பேரு..
பேராசிரியர்
இந்தப் பெண்.. இந்த ஏற்பாட்டில் எனக்குச் சம்மதம் இல்லை..
திருமதி
நான் மட்டும் சம்மதிக்கிறேன்.. நாளை இரவு கணம் நீதிபதி அவர்கள் வீட்டுக்கு விருந்துண்ணச் செல்வேன்.
பேராசிரியர்
இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை
திருமதி
எனக்கு மட்டும் உண்டா என்ன?
தேவதத்தன்
ஆனால் எனக்கு உண்டு. (தேவதத், அங்கிருந்து வெளியேறுகிறான். வெளியேற்றம் கலகலப்புடன் இருக்கிறது)


(நீதிபதியின் வீட்டுச் சாப்பாட்டு அறை. அந்தப் பெண் தனியாக மேசையருகில் அமர்ந்து கடிகாரத்தைப் பார்த்தபடி உள்ளாள். மணி எட்டு அடித்தவுடன் அவள் நிமிர்கிறாள். நீதிபதி உள்ளே நுழைகிறார்.)
நீதிபதி
தேவதத் எங்கே..? ப்ரதிபா.. ? மணி எட்டு ஆகிவிட்டதே.. நேரம் தவறுகின்றவனை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.  ( ஒருவேலையாள் வந்து சிறிய தாள் ஒன்றை அவரிடம் தந்துவிட்டு, ப்ரதீபாவிடம் நகர்கிறான்.)
ப்ரதீபா
(படிக்கிறாள்) இத்தகைய விருந்துக்கு ஏற்பாடு செய்ததற்காக தேவதத் நன்றி செலுத்தியுள்ளார். (தேவதத் நுழைகிறான். கையில் ஒரு தடி.. குடித்திருக்கிறான்.)
தேவதத்தன்
அந்த நன்றியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(அவன் சிரிப்புடன் குனிந்து நீதிபதியை வணங்குகிறான். அவனை வரவேற்க எழுந்து நிற்கிறாள். ஆனால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.)
கணம் நீதிபதி அவர்களே.. வணக்கம்.. எப்படி? இருக்கிறீர்கள்.. நலமாக இருக்கிறீர்களா/
(அவன் அவளை நோக்கிக் கைகளை நீட்டுகிறான். அவள் தயாராக இல்லை. அவன் தனது மேல் கோட்டைச் சுழற்றி மேசையில் குறுக்காகப் போட்டு விட்டு வசதியாக உட்காருகிறான்)
பேராசிரியர்
ஏன் நீங்கள் நிற்கிறீர்கள்? உட்காருங்கள். வசதியாக அமருங்கள். என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததற்கு உங்களுக்கு நன்றி. மிகுந்த அன்புடன் உங்களை வரவேற்கிறேன். ஏன் உட்காராமல் நிற்கிறீர்கள்.
(அவர்கள் உட்காரவில்லை. தேவதத் அவனது தடியை எடுத்து விட்டு இடம் தருகிறான். அவர்கள் உட்கார்கிறார்கள்)
தேவதத்தன்
(சிரிக்கிறான்) இதுதான் நல்லது. நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்… வேண்டியதைக் கேளுங்கள்.. விஸ்கியா..? ஜின்னா,,? ஸாம்பைன். மாம்செல்லி ஸாம்பைன்.? வேண்டாமா..? அப்புறம் என்னதான் வேண்டும்? ஒரு டம்ளர் தண்ணீர்..? கொதிக்க வைத்த தண்ணீர்.? பையா மூன்று டம்ளர் தண்ணீர் கொண்டு வா. கனம் நீதிபதி அவர்கள் மதுவிலக்கில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்.
(திரும்பவும் சிரிக்கிறான்)
நீதிபதி
நான் உன்னைப் பற்றிச் சொல்லி விடுவேன்
தேவதத்தன்
எனக்குத் தெரியும்… அமைதியாகக் குடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.. பையா.. (வேலையாள் வருகிறார்) முகம் கழுவும் இடத்தைக் காண்பி.. தயவுசெய்து.. (வேலையாள் செல்ல.. அவன் தொடர்கிறான்)
நீதிபதி
நேரம் பற்றிய அறிவே இவனுக்கு இல்லையே..? ஒருவேளை பைத்தியமா..? இவன்..
ப்ரதீபா
அவன் ஒரு குடிகாரன்.
நீதிபதி
வலிப்பு வியாதிக்காரன். ஒரு மனிதனை ஒரு தடவை பார்த்தால் போதும் ஒரு முடிவுக்கு வந்து விடுவேன். குற்றவாளைகளை முதல் தடவையிலேயே பார்த்து தீர்ப்பு எழுதுபவன் நான். இந்த மனிதனை எனக்குத் தெரியும். இவன் தூக்கில் தொங்க வேண்டிய ஆள்.
ப்ரதீபா
ரொம்ப ஆபத்தான ஆள்
நீதிபதி
நான் சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. எனக்கு நேரம் மிக முக்கியம். பையா என்னுடைய  உணவை படுக்கை அறைக்குக் கொண்டு வா..
ப்ரதீபா
எனக்கும்தான். அந்த ஆள் வந்தவுடன் சொல்லிவிடு. அவர்கள் படுக்கப் போய்விட்டார்கள் என்று
தேவதத்தன்
(தேவதத் வந்து அவனது கோட்டையும் கைத்தடியையும் தேடுகிறான்) உட்காருங்கள்.. கழிப்பறையிலிருந்து வரும்போதே பாதை தப்பி விட்டது.
(எல்லோரும் உட்காருகிறார்கள். தேவதத் அவர்களிடம் தண்ணீர் டம்ளரைத் தருகிறான்.’ச்சியர்ஸ்’ என்று சொல்லி உயர்த்தி விட்டுக் குடிக்கின்றனர். தேவதத் குடிக்காத போது கைத்தடியை உயர்த்தி குடிக்கும்படி பயமுறுத்துகிறான். தேவதத் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான் )
தேவதத்தன்
நல்லது.. ரொம்ப நல்லது. நீங்கள் இப்பொழுது போகலாம்.. நான் படுக்கைக்குப் போகும் நேரம் வந்து விட்டது. சரியாக எட்டு முடிந்து பதிமூணு நிமிஷம் ஆகி விட்டது. நேரந்தவறாமையில் கண்டிப்பாக இருப்பவன் நான். பங்ச்வாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டு மீ..
(அவன் நீதிபதியின் கையைப் பிடித்துக் குலுக்குகிறான். அவர்கள் வெளியேறத் தயாராகின்றனர்)
இந்த விருந்துக்காக நீங்கள் நன்றி சொல்லக் கூடாதா..?
நீதிபதி
ஏய்.. ஆம்.. நன்றி சொல்ல வேண்டும்.. நன்றி.. மிக்க நன்றி..
தேவதத்தன்
(எரிச்சலுடன்)தயவு செய்து அதைச் சொல்ல வேண்டாம். நீங்கள் இங்கே வந்ததே போதும். உங்கள் வருகை எனக்கு சந்தோஷம் தந்தது. குட்நைட் .. (கடிகாரத்தைப் பார்த்தபடி) ஓ..மைகாட்.. எட்டு பதினைந்தாகி விட்டது. நான் உடனே படுத்தாக வேண்டும். ( தேவதத் சாப்பாட்டு மேசையிலேயே கையை வைத்து படுத்து விடுகிறான். நீதிபதி உள்ளே போகிறார். ப்ரதிபா தடியை எடுத்து அவனை அடிக்கிறாள்)
ப்ரதீபா
ஏய்.. மிஸ்டர்.. கனவானே..!
தேவதத்தன்
(எழுந்தவுடன் சொல்கிறான்)என்னிடம் உனது கண்ணாடி இல்லை.
ப்ரதீபா
ரொம்பவும் நன்றி. நான் கண்ணாடி அணிவதே இல்லை. எனக்குப் பார்வைக் கோளாறு எதுவும் இல்லை.
தேவதத்தன்
அப்படியானால் உனது காது.
ப்ரதீபா
நான் செவிடும் கிடையாது.
தேவதத்தன்
உன் மூட்டு வலி
ப்ரதீபா
அதுவும் இல்லை
தேவதத்தன்
அப்படியானால் நீ ஒரு முட்டாள். உன்னுடைய பொது அறிவு பூஜ்யம் தான்.
ப்ரதீபா
இல்லை..
தேவதத்தன்
அப்புறம்..
ப்ரதீபா
நான் நடித்தேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை. சந்தோசமான அந்த வாழ்க்கையை கல்யாணமானால் போய்விடுமே.. அதே நேரத்தில் எனது அப்பாவின் சந்தோஷத்தையும் கெடுக்க விரும்பவில்லை
தேவதத்தன்
உனக்கு நல்லதே நடக்கும். இப்பொழுது நீ போகலாம். நான் தூங்கப் போகிறேன். குட்நைட்.. (அவன் தூங்குகிறான் அவள் திரும்பவும் அடிக்கிறாள். இந்த முறை கொஞ்சம் அடி பலமாக விழுகிறது. அவன் எழுகிறான்.)
ப்ரதீபா
உன்னோட கோட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போ.. நீயொரு குடிகாரன்
தேவதத்தன்
(அவன் டையைச் சரி செய்தபடி கோட்டை மாட்டுகிறான்)இல்லை நான் குடிகாரனில்லை
ப்ரதீபா
அப்படியானால் நீயொரு பைத்தியம்.. உன்னோட தலை முழுக்க கிரிமினல்தனம்தான் நிரம்பியுள்ளது. உன்னைத் தூக்கில் தான் போட வேண்டும்.
தேவதத்தன்
அதற்கு வாய்ப்பே இல்லை
ப்ரதீபா
உன்னோட வலிப்பு..
தேவதத்தன்
அதுவும் இல்லை
ப்ரதீபா
அதனால்..
தேவதத்தன்
வேறு ஒரு பெண்ணை மணப்பதென்று ஏற்கெனவே முடிவு செய்து விட்டேன். அதனால் உனது அப்பா – கனம் நீதிபதி அவர்கள் என்னை வெறுக்கும்படியாக நடந்து நானே கொண்டே கொண்டேன்
ப்ரதீபா
(தடியை அவனிடம் கொடுத்து) இது ரொம்பவும் புதுமையானதுதான்
தேவதத்தன்
இல்லை.. இல்லை.. இதில் புதுமை ஒன்றும் இல்லை. நீ பதினைந்து வரை எண்ணத் தொடங்கு எல்லாம் சரியாகவே இருக்கும்.. ஓ மைகாட்.. என்னோட காதலியைச் சந்திக்க வேண்டும். நேரந்தவறாமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. பங்ச்வாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்டு டு மீ..

தேவதத் ப்ரதீபாவிடம் தடியைக் கொடுத்துவிட்டு வெளியே ஓடுகிறான். அதை அவள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒன்று.. இரண்டு.. மூன்று ..  நான்கு என எண்ணத் தொடங்குகிறாள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

$
0
0

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கேலியும் கிண்டலுமாகப் பதிவு செய்யும் நபர்கள் தான் எனது முகநூல் வட்டத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தங்களை இடதுசாரிகள் அல்லது இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் எனக் கருதிக் கொள்பவர்கள்.  நானும் கூட என்னை இடதுசாரிக் கருத்தியலிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் நம்பிக்கை கொண்டவ னாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மற்றவர் களுக்குத் தோன்றுவது போல போகிற போக்கில் புறங்கையால் ஒரு பதிவைப் போட்டுக் கேலியாக ஒதுங்கிப் போக மனம் தயாராக இல்லை.
ஐரோப்பாவில் இருப்பதால் இப்படித் தோன்றுகிறது என என்னை அறிந்த நண்பர்கள் நினைக்கக் கூடும். 
இடதுசாரிக்கருத்தியல் அல்லது பொருளாதாரக் கொள்கை என்ற நோக்கத்திலிருந்து பார்க்கும்போது இந்த அரசின் கொள்கை முடிவுகள் மக்களை மையப்படுத்தாத – பெருமுதலாளிகளை மையப் படுத்திய கொள்கை முடிவுகளாகத் தோன்றுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஒருபடி மேலாகப் போய் ஏகாதிபத்தியச் சார்பு அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவுகள் எனவும்,  இந்திய மக்களுக்கு எதிராக அந்நிய தேசத்துப் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கும்பல் போலவும் மன்மோகன்சிங் தலைமையில் செயல்படும் அரசை விமரிசனம் செய்யவும் தோன்றுவது வெளிப்படையானது.அந்த எண்ணத்தில் தான் இணையதளங்களில் எழுதும் –குறிப்பாக முகநூலில் உடனுக்குடன் பதிவுகளைப் போட்டு விடும் நண்பர்கள் பதிவுகளைத் தட்டுகிறார்கள்.
 இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கை என்பது எப்போதும் ஒரு தொடர்புக் கண்ணியில் கடைசியில் இருக்கும் பெருங்கூட்டத்தின் நலனை மையப்படுத்தியதாக இருக்கும் எனப் புரிந்து வைத்துள்ளேன். அந்தப் புரிதலின் படி பார்த்தால் வர்த்தகத்தில் – அது சில்லறையாகப் பொருட்களை விற்கும் சிற்றங்காடி வர்த்தகமோ, பேரங்காடி வர்த்தகமோ அதில் ஏமாற்றப்படாமல்- சுரண்டப்படாமல் இருக்க வேண்டிய பெருங்கூட்டம் அங்கிருந்து பொருட்களை வாங்கும் பயனாளிகள் தான். அவர்களுக்கு நியாயமான விலையில்- தரமான பொருட்கள்- கிடைக்க வேண்டும் என நினைப்பது ஓரளவு சரியான பார்வை. அத்தோடு அந்தப் பொருட்களை உற்பத்தி செய்தவனுக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் என நினைப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு மாறாக உற்பத்தியாளனுக்கும், பயனாளிக்கும் இடையில் இருக்கும் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பது எந்த வகையான இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கை எனத் தெரியவில்லை.
நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களைத் தர முடியும் என்பதோடு கூடுதலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனச் சொல்லித் தான் மன்மோகன் அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்திற்கு அனுமதி என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் உறுதியாகப் பலன் அடைவார்களா என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்டால் முழுமையான உத்தரவாதத்தை அவர் சொல்ல மாட்டார். எதையும் உறுதியாகக் கூறும் இடதுசாரிகளைப் போலப் பேசிப் பழக்கமில்லாத அவர்,  சொல்லும் பதில்கள் மழுப்பலான பதில்கள் போலவே தோன்றும். அவருக்குப் பதிலாக அவரது அரசில் இருக்கும் இன்னொரு நபர் உறுதியான பதிலைச் சொன்னாலும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை. ஆனால் அவருக்கும், அவரது ஆலோசனையைக் கேட்டு நடக்கும் அரசு அமைப்புக்கும் அப்படியொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைப் பொய்யான நம்பிக்கை எனச் சொல்ல என் மனம் ஒப்பவில்லை.
இதே போல் தான் இந்திய விவசாயத்தை இப்போது இருக்கும் நிலையிலேயே நீண்ட காலத்துக்கு வைத்திருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு ’இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளதையும் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகச் சிறுவிவசாயிகளும், குறுவிவசாயிகளும் லாபகரமான தொழிலாக விவசாயத்தைக் கருதவில்லை; அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பதால் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். எதுவும் தெரியாது என்றாலும் கைகளால் ஆன தொழிலைச் செய்ய முடியும் என நினைப்பவர்கள் உள்ளூரிலேயே வேறு தொழிலுக்கு மாறி விட்டார்கள், உள்ளூரில் அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறுநகரங்களுக்குச் சென்று அன்றாடக் கூலிகளாக வேலை செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படிச் சென்று திரும்பும் வாய்ப்பும் மனமும் இல்லாதவர்கள் தொழில் நகரங்களில் குடியேறி வாரக் கூலிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நகர்வுகள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன என்றாலும் பொதுவான போக்கு விவசாயத்தை நம்பிக்கையோடு பார்க்கும் மனநிலை முடிந்து விட்டது. விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்தின் இடத்தை கருமருந்து சார்ந்த தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலும் நுழைந்து இடப் பெயர்ச்சியைக் குறைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பீடித் தொழில் அந்த இடத்தில் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் அப்படியொரு தொழில் இல்லாததால் மதுரை மாவட்டக் கிராமங்களில் ஒவ்வொன்றிலு மிருந்தும் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இங்கெல்லாம் நானே நேரடியாகப் பார்க்கவும் பழகவுமான வாய்ப்புள்ள கிராமங்கள் இருக்கின்றன என்பதால் இம்மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். இதைப் போல வேறு இடங்களில் வேறு வகையான வாய்ப்புகள் விவசாயத்தை ஒதுக்கி விடக் காரணிகளாக இருக்கலாம். 
இம்மூன்று மாவட்டங்களிலும் கூட தலித்துகள் சொந்தக்குடிகளையும் சேரிகளையும் விட்டு வெளியேறுவது குறைவுதான். அதே நேரத்தில் கிராமங்களிலேயே தங்கி விவசாயக் கூலிகளாக ஆசைப்படுகிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம். விவசாயத்தோடு இருந்த தொடர்பை மனரீதியாக முறித்துக் கொள்ள முன் வந்தவர்கள் அவர்கள் தான். விவசாயம் சார்ந்த இடைநிலைச் சாதிக் குழுக்களிடம் இருக்கும் ஆதிக்க மனோபாவம், அடிமைகளாகக் கருதியதால் இயல்பாகவே விவசாயம் சார்ந்த வெளிகள் அவர்களுக்குத் துயரம் பரவிய களன்களாகவே இருந்தன. அதிலிருந்து விடுபட நினைத்தவர்களுக்கு நகரங்களில் வளர்ந்து ஓங்கிய கட்டுமானத் தொழில்கள் காட்சியில் பட்டன. சித்தாளாகவும் கொத்தனாராகவும் உருமாறி நகரங்களுக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு கழனிகளில் வேளாண் கூலிகளாக இருந்தவர்கள்.  விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு நகரங்களுக்குப் போய் வரும் அவர்களின் மாற்றத்தைப் பொறுக்க முடியாத ஆதிக்கசாதியினரின் மனம் – பேருந்தில் இடம் இருக்கிறது என்பதால் என் பக்கத்தில்யே உட்கார்கிறார்கள் என்ற ஆற்றாமையும் அடாவடித் தனங்களும் தான் தென்மாவட்டங்களில் கலவரமாக இப்போதும் வெடிக்கின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளைச் சொந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி அனுப்பாமல் பெண்ணடிமைத் தனம் பேணும் இவர்கள், தங்களிடம் அடிமைகளாக இருந்தவர்களின் பிள்ளைகள் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்து பட்டங்கள் பெற்றுப் பதவிகளை பெறுவதைக் கண்டு பதற்றம் கொள்வது கூடுதல் நிகழ்வுகள் தான்.  
சோசலிசத்தின் பேரில்- பொதுத் துறைகளின் பேரில் வைத்த நம்பிக்கை தான் கனரகத் தொழில்கள் தொடங்கி ஜவுளி ஆலை, கரும்பாலை, காகித ஆலை, கல்லுடைக்கும் தொழில் என எல்லாவற்றையும் அரசின் தொழில்களாக ஆக்கச் செய்தது. வங்கிகளைத் தேசிய உடைமையாக ஆக்கச் சொன்னது. போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கித் தனியார் முதலாளிகளைத் துரத்தி அடித்தது. பெரும்பெரும் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைத்துப் பாசன வசதியைப் பெருக்கித் தந்ததோடு நேருவின் அரசாங்கம் விவசாயத்திலிருந்து விலகிக் கொண்டது. அரசுப் பண்ணைகளை உருவாக்கவில்லை. பொதுத்துறையின் கீழ் ஒரு தொழிலாக விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைத்துப் பார்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும்  பெரும் பண்ணையார்களிடமிருந்து நிலத்தை வாங்கி நிலமில்லா விவசாயிகளுக்குக் கொடுத்ததற்குப் பதிலாக விவசாயத்தைத் தொழிலாகக் கணித்து அதில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை –மாதச் சம்பளத்தை உறுதி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கும் சுவாரசியம் பலப்பலவாய் விரிகிறது. கிராமங்களில் நிலவிய சாதி ஏற்றுத்தாழ்வுகளுக்கு நிச்சயமாக அது நெருக்கடியாகவே இருந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் காரணத்தினாலேயே அப்படியொரு எண்ணம் தோன்றாமலமேயே போயிருக்கலாம். நேருவுக்குத் தோன்றியிருந்தாலும் மற்றவர்கள் தடுத்திருக்கலாம்.
 நேருவின் பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாங்க நடைமுறைகளையும் நிராகரிப்பதற்கான  காரணங்கள் எதையும் சொல்லாமல் கை விட்டுவிட்டுப் போகும் மன்மோகன்சிங்கும் அவரது கூட்டாளிகளும் இந்த இடத்தில் முக்கியமான மாறுபாடு ஒன்றைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய வேளாண்மையை அதன் பாரம்பரியமான பிடியிலிருந்து நகர்த்தித் தொழில் கட்டமைக்குள் கொண்டுவரும் திட்டத்தை இப்போது முன் வைக்கிறார்கள். அந்நிய மூலதனத்தை அறிமுகம் செய்யும் கொள்கை முடிவின் போது சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கூச்சல் கேட்டதுபோல். “ இந்திய விவசாயம் முற்றிலும் அழிந்து விடும்” என்ற கூச்சல் அதைவிடக் கூடுதலாகக் கேட்கத்தான் போகிறது.  ஆனால் இந்திய விவசாயத்தின் மாறாத அம்சங்கள் தான் – நிலப்பிரபுத்துவப் பண்பாட்டையும், சாதி ஆதிக்கத் துயரத்தையும் இந்தியாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது; மறுத்துவிட முடியாது. தொழில் கட்டமைப்பின் கீழ் இந்திய விவசாயம் வரும்போது அதில் ஈடுபடுபவர்கள் லாபகரமான உற்பத்திக்காகச் சிந்திப்பார்கள். வேளாண்மைக்குச் சிந்தனையே தேவையில்லை என நினைக்கும் பாரம்பரிய மனம் கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்யும். ஆனால் வேறு வழியில்லை.
 இந்த இடத்தில் எனக்கு ஒரேயொரு வேண்டுகோள் இருக்கிறது. மன்மோகன் சிங் நினைத்திருந்தாலும் அதைச் சொல்லியிருக்க  முடியாது என்பதும் உண்மைதான். அப்படிச் சொல்வது காங்கிரஸுக்குள்ளேயே கூடக் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கும் என நினைத்துக்கூடச் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் இனியும் அதைத் தள்ளிப்போட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மன்மோகன் சிங்குக்கு அடுத்துக் காங்கிரசின் பிரதம வேட்பாளரான ராகுல் காந்தி, நேரு–இந்திரா ஆகியோரின்  குடும்ப வாரிசாக மட்டும் தான் இருக்கப் போகிறார்.. நிச்சயமாக அவர்களின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்கான வாரிசாக இருக்கப் போவதில்லை. அப்புறம் ஏன் தயக்கம். நேருவின் பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் தவறானவை என வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். 1990 இலேயே சொல்லி இருந்தால், அந்தக் கொந்தளைப்பு கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போயிருக்கும். இப்போதாவது தைரியமாகச் சொல்லி விட்டு அடியை எடுத்து வைக்கலாம் தயக்கம் எதுவுமின்றைப் பன்னாட்டு மூலதனத்திற்கும் சந்தைக்கும் தனியார் மயத்திற்கும் தாராளமாகக் கதவுகளைத் திறந்திருக்கலாம்.
உள்நாட்டு மூலதனமோ, பன்னாட்டு மூலதனமோ இந்தியாவில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கினால் சரி என நினைக்கும் நிகழ்காலக் காங்கிரஸ் அரசாங்கம் அரசின் வேலைகளைச் சுலபமாக்கிக் கொள்ளும் மறைமுகத் திட்டத்தையும் வைத்திருக்கிறது. எல்லா வற்றையும் அரசுத் துறை அல்லது பொதுத்துறையாகக் கையாண்ட நேருவியப் பார்வை ஒருவிதத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்புடையதுதான். ஆனால் அதன் மூலம் பலனடைந்த வர்க்கம் எதுவெனக் கவனித்தோடு நினைத்துப் பார்க்கும்போது சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் உழைக்கும் மனிதர்கள் அல்ல என்பதும் புரிகிறது. உழைக்கும் மனிதர்களின் குடும்பங்களிலிருந்து சிலரைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கமாக ஆக்கிச் சொந்தக் குடும்பத்தாரிடமிருந்து அந்நியமாக்கிப் பிரித்தெடுத்து நகரவாசிகளாக ஆக்கிய வேலையைத் தான் நேருவின் திட்டங்கள் செய்தன,  நகரவாசியாகி விட்ட நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு வாழ்வளிக்கும் அமைப்புகளில் இருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதன் நலன்களுக்கு எதிராகப் போய்த் தங்களுக்குக் கிடைத்த சலுகைகள் தங்களின் வாரிசுகளுக்குக் கூடக் கிடைக்காத நிலைமைக்குத் தள்ளி விட்டார்கள். சீர்கெட்டுக் கிடக்கும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் வேலையை இருபதாண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன என்றால் அதனைத் தூண்டித் துரிதப் படுத்தும் வேலையைச் செய்ததில் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கும் பங்குண்டு; நிர்வாகம் செய்த நிர்வாகிகளுக்கும் பங்குண்டு. தொழிலாளர் நலன்களை மட்டும் கவனத்தில் கொண்டு போராட்டங்கள் நடத்திய தொழிற்சங்கங்களுக்கும் பங்குண்டு. இவர்களின் முகங்களும் அடையாளங்களும் எதுவெனக் கேட்டால் நேருவின் சாயல் என்று தான் சொல்ல வேண்டும் இவர்களின் பங்களிப்புகளையும் பாதகச் செயல்களையும் பேசாமல் அரசமைப்பின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்கை மட்டும் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும் ?
பன்னாட்டு மூலதனத்தை அனுமதித்து, உலகமயப் பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவின் முகத்தை – அதன் பொருளாதார அடித்தளத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் – மேல்கட்டுமானங்களான பண்பாடு, கருத்தியல், வாழ்க்கை முறை, சிந்தனைத் தளம் என எல்லாவற்றிலும் மாற்றத்தை – கொண்டு வந்து விட முடியும் என வெளிப்படையாகச் சொல்லாமல் ஆனால் பிடிவாதத்தோடு நம்பிச் செயல்படும் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக் கோடுகள் என்னிடமும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது என்பதை மட்டும் இப்போது உணர்கிறேன். 

தோழர் ஜி.என்

$
0
0


ஒரு குறிப்பு:
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கான இடத்தை உருவாக்கியவர். நான் மாணவனாக இருந்த காலத்தில் மதுரைத் தெருக்களிலும் சில நண்பர்களோடும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவரது எந்த எழுத்தையும் வாசித்ததில்லை. அவரது எழுத்துக்களைப் படித்து முடித்தபோது அவரது வாழ்க்கையைப் பார்க்க அவர் இல்லை. அவரது அலைவு வாழ்க்கைப் பின்னர் வந்த எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று.அதனைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் புனைவுகளாக்கிப் பதிந்தும் வைத்துள்ளனர். அவையெல்லாமே நியாயமான பதிவுகளாகவே படுகின்றன என்றாலும், திலீப்குமாரின் இந்தக் கதை கச்சிதமான ஓரங்க நாடகமாக எனக்குத் தோன்றியது. கதையை நாடகமாக ஆக்கியபோது கதைசொல்லியை திலீப்குமாராகவே வாசித்தேன். அதனால் அவரது பெயரையே பாத்திரத்தின் பெயராக ஆக்கியிருக்கிறென். கதையின் தலைப்பு: ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்.(மூங்கில் குருத்து,க்ரியா,1985). இனிக் கதையை நாடகமாக வாசிக்கலாம்.


பாத்திரங்கள்:
திலீப் - புத்தக விற்பனையகத்தில் வேலை செய்யும் இளைஞன். இன்னும் அதிகம்
அறியப்படாத எழுத்தாளனும் கூட
ஜி.என். – உண்மையில் அவருடைய வயது ஐம்பதுக்கும் குறைவு ஆனால் தோற்றம்
அறுபதுக்கும் மேல்.

வெளிச்சம். மேசையில் உட்கார்ந்து வேலை செய்யும் அந்த இளைஞன் மீது கவிழ்ந்துள்ளது.  மற்ற இடங்களில் பரவியுள்ள மென் வெளிச்சத்தில்
அது ஒரு புத்தகக் கடை என்பது வெளிப்பட வேண்டும்.
கடிகாரத்தின் பெண்டுலம் நிதானமாக அசைந்து ஓசை எழுப்புகிறது.
அந்த ஓசைக்குத் திரும்பிக் காது கொடுத்த அந்த இளைஞன் ஓசை முடியும்போது
திரும்பி தனது கையில் உள்ள கடிகாரத்தில் நேரம் பார்க்கிறான்.

மணி ஆறு.
நாட்காட்டியில் 10-02-1981.

எழுந்து சென்று உள் அறையின் விளக்குகளையும், வெளிப்புற
அலுவலகத்தின் விளக்குகளையும் போடுகிறான்.
ஜன்னலின் அருகில் சென்று, கையை வெளியே நீட்டி எடுக்கிறான்.
மழைத்தூறல் கையில் ஒட்டியிருக்கிறது.
கர்சீப்பை எடுத்துத் துடைத்து விட்டு மேசையின் முன் அமர்ந்து,
ரசீது புத்தகத்தையும் நாள் விற்பனைக் கணக்கையும் சரி பார்க்கிறான்.

திலீப்
முப்பது எழுபத்தி ஐந்து ; அறுபது, நூற்று இருபத்தியேழு; இருபத்தி ஐந்து; பதினெட்டு முப்பது
                        [மெதுவாக வாய்க்குள் சொல்லிக் கொண்டே வருகிறான். ஒவ்வொரு   
                        முறையும் சொல்லும்போதும் பென்சிலால் நாள் கணக்கில் டிக் செய்து
                        கொள்கிறான். கூட்டி முடித்து]
தொளாயிரத்து முப்பத்தி ஏழு
[சொல்லி விட்டு உள்ளேயிருந்து பணத்தை எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி எண்ணுகிறான். பணம் நூறு, ஐம்பது, பத்து, ஐந்து ரூபாய் களாகவும் ஒன்று இரண்டு ரூபாயாகவும் இருக்கிறது. இவையில் எப்படியான மாற்றங்களும் இருக்கலாம். எண்ணி முடிக்கும் பொழுது தொள்ளாயிரத்து முப்பத்தி இரண்டு இருக்க வேண்டும்]
”அஞ்சு ரூபாய் குறையுதே”
                         [திரும்பவும் எண்ணுகிறான். தலையில் கைவைத்து யோசித்து]
”அஞ்சு ரூபா எங்கேயோ தவறுதே..”
[அவனது கவனம் சிதைக்கப்படுவது போல கதவு தட்டப்படுகிறது.     
பணத்தை உள்ளே வைத்து எழுந்து வர முயல்கிறான். அந்த மனிதர் ஜி.என். நுழைந்து விடுகிறார். வெள்ளை வேஷ்டி, ஜிப்பா, அழுக்குடன் –காலில் செருப்பு இல்லை. நுழைந்தவுடன் இருமுகிறார். கோழையை துப்ப இடம் பார்த்து விட்டு விழுங்கி விடுகிறார். தலை அசைப்பின் மூலம் அவரது வருகையை ஏற்றுக் கொள்கிறான். அவர் நின்று எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கிறார்]
ப்ளீஸ்.. உட்காருங்க..     [அவனுக்கு இடது புறத்தில் இருக்கும் சோபாவில் சென்று அமர்கிறார்]
ஜி.என்
தம்பி ஒன்னோட பாஸைப் பார்க்கணும்.. வருவாரில்ல..?
திலீப்
அவர் வெளியூர் போயிருக்காரே.. நாளைக்கு சாயந்தரம் வந்துடுவார். ஆனா கடைக்கு வர இரண்டு நாள் ஆகும். நாளை மறுநாள் கடைக்கு வார விடுமுறை. ஆக நீங்க அவரை திங்கள் காலையில தான் பார்க்க முடியும்.
                  [ஜி.என். கண்களைத் துடைத்து விட்டு, கண்களை விரித்து அவனைப் பார்க்க]
நீங்க யாருங்கிற விவரத்தையும், என்ன விசயமா அவரைப் பார்க்க வந்தீங்க என்பதையும் என்னிடம் சொன்னா.. நான் அவரிடம் சொல்ல முடியும்.
                   [அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. பதிலுக்குப் பதிலாக இருமலே
                   வருகிறது. சுற்றுமுற்றும் தயக்கத்துடன் பார்க்கிறார்.]
ஒங்களோட உடல்நிலை சரியில்லைன்னு நினைக்கிறேன். நீங்க யாருன்னு.. நான் தெரிஞ்சுக்கலாமா..?
ஜி.என்
(களைப்புடன்) நான் நாகராஜன்.. மதுரையிலிருந்து..
திலீப்
தோழர் ஜி.என்..ங்கிறது நீங்க தானே..?
ஜி.என்
தோழர் ஜி.என் (சொல்லும்பொழுது நளினமான சிரிப்பு) ஆம்.. நான் தோழர் ஜி.என். கம்யூனிஸ்ட் மூவ்மெண்ட்ல இருந்து வெளியேறி பல வருஷங்கள் ஓடிப் போய்ச்சு. ஆனாலும் என்னைத் தோழர் ஜி.என். என்றே சொல்றாங்க. ( சிரிப்பு பலமாக வருகிறது)
திலீப்
உங்களைச் சந்தித்ததில் ரொம்பச் சந்தோசம். பல தடவை உங்களை சந்திக்க நினைத்ததுண்டு. (அவரிடமிருந்து சிரிப்பு மட்டுமே.. வருகிறது
அவன் அவரோடு உரையாடத் தயாராகின்றவன் போல் மேசையில் இருப்பவற்றை ஒழுங்குபடுத்துகிறான். ரசீது புத்தகங்களை மேசைப் பெட்டியைத் திறந்து உள்ளே வைக்கிறான்)
ஜி.என்
உன் பெயர் என்ன?
திலீப்
திலீப்குமார்.. திலிப்ன்னு கூப்பிடுவாங்க
ஜி.என்
என்னைத் தெரியுமா.. உனக்கு.. ?
திலீப்
தோழர் ஜி.என்.ங்கிற முகாந்திரம் இல்லாமலேயே உங்களைத் தெரியும்.
ஜி.என்
ஓ.. அப்படியா.. எப்படி?
திலீப்
உங்க திருமணத்துக்கு வந்திருந்தேன்..
ஜி.என்
நீ கோயம்புத்தூர் ஆளா..?
திலீப்
ஆமா.. உங்க மைத்துனன் ராகவனைச் சின்ன வயசில இருந்தே தெரியும். உங்க மனைவியையும் கூடச் சின்ன வயசில இருந்தே தெரியும்.
ஜி.என்
ஓ.. ம்..
திலீப்
நானும் ராகவனும் ஒரே ஸ்கூல்.. உங்க மனைவி அப்ப காலேஜில படிச்சிக்கிட்டு இருந்தாங்க.. அவங்ககிட்ட எல்லாம் நிறைய பேசியிருக்கேன்.. ராகவனை ரொம்ப நாளா பாக்கலை… அவங்க அப்பா இறந்தத விசாரிக்கிறதுக்கு போன மாசம் போயிட்டு வந்தேன்.
ஜி.என்
ராகவனோட அப்பா இறந்துட்டாரா..?  ( கொஞ்சம் அதிர்ச்சியுடன்)
திலீப்
உங்க மாமனார் இறந்தது உங்களுக்குத் தெரியாதா? ..
ஜி.என்
உண்மையாகவா..? எனக்குத் தெரியாது.. என் மனைவி செத்துப் போனப்பறம் அவங்களோட தொடர்பு எதுவும் இல்லை. ( பெருமூச்சுடன்) அவர் மிக நல்ல மனிதர்.
திலீப்
அப்படியா.. அவரோட நான் அதிகம் பழகுனது கிடையாது.
ஜி.என்
அது சாத்தியமில்லை தான்.(அமைதி… அதை குழைப்பவன் போல அவன் டிராயரைத் திறந்து சிகரெட் பெட்டியை எடுத்து ஒன்றைப் பற்ற வைக்கிறான். அவர் அருகில் சென்று நீட்ட பௌவியமாக ஒன்றை எடுத்துக்கொள்கிறார். சிகரெட் பற்ற வைக்கும் அவர் கைகளைக் கவனிக்கிறான். அவன் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, அவரும் அவரது கைகளைத் திருப்பிப் பார்த்துக் கொள்கிறார்… கைகள் முடிச்சுகளோடும் விரல்கள் வளைந்தும் நடுக்கம் கொண்டனவாகவும் உள்ளன. சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்தவரை.. 
திலீப்
என்னோட முதல் சிறுகதை நீங்க ஆசிரியர் குழுவில் இருந்த பத்திரிகையில் தான் வெளி வந்தது. அதில்லாம பல்வேறு தருணங்கள்ல உங்களுக்குக் கடிதங்களும் எழுதியிருக்கிறேன்.
ஜி.என்
ஸாரி.. எனக்கு நினைவு இல்லை.. யாரோட கடிதத்தொடர்பும் எனக்கு நினைவில் இருக்கிறது இல்ல.. நானே ஒவ்வொரு ஊராப் போயி நண்பர்களை எல்லாம் சந்திச்சு விடுகிறேனே அதனாலெ இப்ப எல்லாம் யாரும் எனக்குக் கடிதங்கள் எழுதுறதும் இல்ல. என்னை மன்னிச்சுடு. நீ எதைப் பத்தி கடிதம் எழுதி இருந்தெ.
திலீப்
முன்னெல்லாம் உங்க கதைகளைப் பற்றி எழுதினேன். அப்புறம் ஒரு தடவை, ”ஒருவன் எத்தனை வயதில் நாவல் எழுதலாம்” என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதிலே எழுதவில்லை. நான் நாவலே எழுத வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். (சிரித்துக் கொள்கிறான்)
ஜி.என்
(அவரும் சிரித்துவிட்டு) ஓ.. அப்படியா.. நான் எழுதாதற்கு அது காரணம் இல்லை. பொதுவா நான் கடிதங்களுக்குப் பதில் எழுதுறது இல்ல. ( அங்கிருந்த நவீன ஓவியத்தைப் பார்த்துவிட்டு) என்ன சொல்ல வருகிறான் இந்தக் கலைஞன்? ஒன்னுமே புரியவில்லை.
எனக்கு இலக்கியத்தில் இருக்கும் பரிச்சயம் இதில் இல்லை. நவீன ஓவியம் எப்பொழுதுமே என் தலைக்கு மீறியே போய்க் கொண்டிருக்கிறது.
திலீப்
( அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி) இன்னொரு கடிதத்தில், “நீங்கள் அதிகம் குடிப்பதாகக் கேள்விப் படுகிறேன்; போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும் பலரும் சொல்கிறார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் கருதியாவது நீங்கள் விட்டு விட வேண்டும்” என்று எழுதியிருந்தேன்.
ஜி.என்
நீயும் எழுதியிருந்தாயா..? என் மீது அன்பும் பாசமும் கொண்ட பல நண்பர்கள் நான் குடிப்பதை நிறுத்துமாறு சொல்கிறார்கள். ஆனால் .. என்னால் அதை நிறுத்தத்தான் முடியவில்லை. ( திரும்பிப் பார்த்து) சிறிது தண்ணீர் கிடைக்குமா..? ( தண்ணீரை வாங்கி அண்ணாந்து குடிக்கிறார். மூச்சை இழுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்)
திலீப்
உங்களின் ஆரம்பகாலக் கதைகளைத் திரும்பவும் படித்தேன். அவற்றை எழுதும்பொழுது இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றிருந்தீர்கள். ஆனால் கதைகளில் வெளிப்படையான சித்தாந்தச் சார்பு எதுவும் புலப்படவில்லை. கம்யூனிஸ்டுகள் எப்படி உங்களை ஏற்றுக் கொண்டார்கள். (அவனது அனுமதியுடன் ஒரு சிகரெட்டைப் பெற்று பற்ற வைத்துக் கொள்கிறார்)
ஜி.என்
அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகளில் பலபேர் நல்ல படிப்பாளிகள்; பரந்த இலக்கிய அறிவின் காரணமாக என் இலக்கியப் போக்கைச் சந்தேகித்ததில்லை. ஆனால் நான் இயக்கத்தை விட்டு வெளியேறிய உடனே கடுமையாக விமரிசித்தார்கள். “ அதைக் கூட அவர்கள் சுயமாகச் செய்தார்களா? என்பது சந்தேகம் தான்.”
திலீப்
அவர்களுக்கும் உங்களுக்கும் இருந்த அடிப்படையான முரண்பாடுகள் – சித்தாந்த முரண்பாடுகள் தானே..
ஜி.என்
இயக்கத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் பலருக்கும் பிடித்தது மார்க்சியத்தின் மனிதாபிமான உள்ளடக்கம் தான். ஆனால் எனக்கு அப்படியல்ல; என்னைக் கவர்ந்தது அதன் தர்க்க நுட்பமும் பரந்த அணுகலும் தான். மார்க்சியத்தின் இலக்கியக் கோட்பாடு என்னை ரொம்பவும் ஈடுபட வைத்தது. ஆனால் அதன் அழகியல் கோட்பாடு என்னை ஈர்த்ததே இல்லை. அது என்னவென்று எனக்கே விளங்கியதே இல்லை. (சிரித்துவிட்டு.. புகையை இழுத்து சிகரெட்டை அணைக்கிறார்)
திலீப்
ஆமாம்.. நீங்கள் ஒரு கட்டுரையில் ”தத்துவத்தின் துணைகொண்டு அணுகப்படும் அனுபவத்தைவிடவும் அனுபவத்தால் பெறப்படும் தத்துவம் செறிவானது. தத்துவச்சாரலில் மிகவும் இளகிப் போனதாய் இருந்தாலும் கூட தன்னளவில் அசலானது என்ற சிறப்புடையது” என்று எழுதியிருந்தீர்கள். அந்தக் கருத்து எனக்கு ரொம்பப் பொருத்தமானது என்று தோன்றியது.
ஜி.என்
அதை எழுதினப்போ பொறுமையான சிந்தனையோ தெளிவான கருத்துகளோ இருக்கவில்லை.
திலீப்
அப்படியானால் அந்தக் கருத்துக்களை எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டீர்களா..?
ஜி.என்
( மூக்கை விரலால் தடவிக் கொண்டே) இப்பொழுதெல்லாம் எதையும் தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. கேள்விகளின் எளிமை எனக்கு அச்சத்தைத் தருகிறது. (அமைதி) தத்துவம், இலக்கியம் இவை இரண்டும் தம் தம் தளங்களில் வாழ்க்கையைப் பரிசீலிக்கும் இருவேறு அரூபமான சக்திகள். இவற்றுக்கு ஸ்தூலமான ஜீவிதமோ, விளைவுகளோ இல்லை. அவை ஒன்றுக்கொன்று துணைபுரியும் சாத்தியக்கூறுகளை விடவும் ஏதோ ஒரு மட்டத்தில் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன.
திலீப்
அப்படியானால் உங்களோட இலக்கியக் கொள்கைதான் என்ன?
ஜி.என்
எனக்கு அப்படி ஒரு கொள்கை இருக்கும் என்று நினைக்கிறாயா..? (நீண்ட அமைதி. திலீப் எதுவும் கேட்கத்தோன்றாதவனாக கண்களை மூடி இருக்கிறான்.) ஆமா .. நீ எதாவது எழுதியது உண்டா..?
திலீப்
எப்போதாவது கதைகள் எழுதுவது உண்டு
ஜி.என்
உன் தொகுப்பு ஒன்று இருந்தால் கொடு. நான் படிக்க விரும்புகிறேன்.
திலீப்
என் கதைகளின் அச்சுப் பிரதிகள் கூட என்னிடம் இல்லை
ஜி.என்
அவற்றை எல்லாம் சேகரித்த பின்பு தொகுப்பு கொண்டு வர வேண்டும்.
திலீப்
நானும் கூட என் கதைகளின் பிரதிகளைப் பாதுகாத்தது இல்லை.
ஜி.என்
இப்போ தமிழ்ல உன்னைப் போல நல்ல சில எழுத்தாளர்கள் வந்துக் கிட்டு இருக்காங்க. நீங்கள்லாம் பலதையும் படிக்கணும். ரஷ்ய எழுத்தாளர்கள், பிரெஞ்சு எழுத்தாளர்கள், அமெரிக்க எழுத்தாளர்கள் என்று சில பேரை செலக்ட் பண்ணி படிக்கணும். தமிழ்லேயும் சில பேரையும் விரும்பி நான் படிக்கிறதுண்டு. (அமைதி) ஆமா.. ஒன்னோட ஊர் கோயம்புத்தூர்னு சொன்னயே. இங்கே எங்கே தங்கி இருக்கிற.
திலீப்
குடும்பம் எல்லாம் கோவையில் தான். நான் திருவல்லிக்கேணியில் லாட்ஜில் மாத வாடகைக்கு ரூம் எடுத்திருக்கேன். மெஸ்ஸில் சாப்பாடு.
ஜி.என்
கல்யாணம்..
திலீப்
இன்னும் இல்ல..
ஜி.என்
மெஸ்சில சாப்பிடுறது கஷ்டமாச்சே….. ம்.. பாலுணர்வு பிரச்சினைய எப்படி சமாளிக்கிற. ( இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவனாக அவன் நிற்க) பாலுணர்வு ஒரு பிரச்சினையா இல்லையா..? ( அவன் தலையை ஆம் என்பது போல ஆட்டுகிறான்) வேசைகளைத் தேடி நீ போவதில்லையா..? ( இல்லை என்பதாகத் தலையை ஆட்டுகிறான்) அப்படியானால் …….. ……. …நீ…. ( சொல்லிவிட்டுப் பலமாகச் சிரிக்கிறார்)
திலீப்
இல்லை.. அது வந்து.. அடுத்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம்னு இருக்கிறேன்.
ஜி.என்
(ஓ என்பது போலத் தலையை ஆட்டி விட்டு) ஆஹா.. நீ கோயம்புத்தூர் ஆளு.. கோயம்புத்தூர் ஒரு நல்ல ஊர் தான். அங்க உள்ள தேவடியாத் தெருவெல்லாம் எனக்குத் தெரியும். அற்புதமான பெண்களின் சுகம் எனக்கு அந்த ஊர்ல கிடைச்சதுண்டு. உனக்கு அனுபவம் இல்லை. உடலுறவுக்குப் பின் திடீரென்று கருங்கலில் விழிக்கும்போது அருகே வெற்றுடம்போடு கிடக்கும் பெண்ணிடமிருந்து வரும் அபூர்வமான மணம்.. ரொம்பவும் சுவாரசியமானது.. அதைச் சொன்னால் தெரியாது. அதைத் துய்த்துணர வேண்டும்.
( நினைவுகளில் லயித்தவராகக் குரல் வருகிறது.
அவன் ஜன்னல் வழியே கைகளை மழை விழவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள் அறையின் ஜன்னல்களை மூடுகிறான். விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கிறான். அவர், அவனது அனுமதி இன்றியே சிகரெட் ஒன்றை எடுத்துச் சிகரெட் துகள்களை வெளியேற்றி விட்டுப் பையிலிருந்த கஞ்சாப் பொட்டலத்தை அதில் செலுத்திக் கொள்கிறார். அவன் வந்து அதிர்ச்சியோடு நிற்கிறான்)
நீ கஞ்சா உபயோகிப்பது உண்டா..?
திலீப்
இல்லை. ( அவர் விடும் புகையை சுவாசிக்க விரும்பாதவனாய் தூரத்தில் நின்று கொண்டு) உங்கள் வாழ்க்கையை ஏன் இப்படித் தாறுமாறாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜி.என்
ஆம்.. நீ சொல்வது சரிதான். நான் என் வாழ்க்கையை ரொம்பவும் தாறுமாறாக ஆக்கிக் கொண்டு விட்டேன். (உடலை இன்னும் தளர்வாகச் சரித்துக் கொண்டு கண்களை மூடி வைத்து ..)
மனம் எப்போதும் உழைப்பின் பயனையே யாசிக்கிறது. உடலோ உழைப்பை அறவே மறுக்கிறது. மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல், லட்சியம் எல்லாவற்றையும் நான் கைவிட்டு விட்டேன். இப்போது உலகத்தின் கண்களில் நான் ஒரு முறிந்து போன மனிதன். உண்மையில் என்னைப் போன்றே உள்ளுக்குள் எல்லோரும் முறிந்துதான் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாமர்த்தியசாலிகள். தங்கள் முறிவுகளை அவர்கள் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகையாக சிரிக்கிறார்கள். மிகையாக அழுகிறார்கள். நான் மட்டும் வெகுளியாகி எல்லோராலும் வெறுக்கப் படுகிறேன். என் மனைவி என்னை வெறுத்தாள். என் மகள் வெறுக்கிறாள்; என் மகன் வெறுக்கிறான். என் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். என் வயதான தாயும் கூட இன்று திடீரென்று..  ரொம்பவும் திடீரென்று எவருடைய அன்புக்கும் தகுதி அற்றவன் என்று உணர்த்தப்படுகிறேன். இது கொடுமையானது. வெறுக்கப்படுவதை விடவும் மிகவும் கொடூரமானது.
திலீப்
இலக்குகளும் நம்பிக்கைகளும் தேவையற்றவைகள் என நீங்கள் நினைப்பதாக நான் எடுத்துக் கொள்ளலாமா…?
ஜி.என்
நாம் மனிதர்கள். நாம் கள்ளமற்றவர்கள். உழைப்பு, செயல், லட்சியம், இலக்கு போன்ற வார்த்தைகள் நம்மை மிகவும் வசீகரிக்கின்றன. இந்த வசீகரம், இந்தக் கவர்ச்சி, இந்த மாயை நமக்குத் தேவையாக இருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை வழங்கி இவ்வாழ்க்கைக்கு வழங்கிவிட  நாம் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறோம். அதற்காக கோபப்படுகிறோம்; போராடுகிறோம். கொலை செய்கிறோம். மடிந்து போகிறோம். நமக்கு எப்போதும் பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நிலத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து .. இல்லாத இலக்குகளுக்கு இரையாகிப் போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான மூளையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள். மீண்டும் புதிதான கோபங்கள், புதிதான கொலைகள், புதிதான சாவுகள், ஏமாற்றங்கள் நம்மை ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை. அவை தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய நம்பிக்கையைத் தன் மடியில் சுமந்தே வருகிறது. அதைப் போன்றே ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு புதிய ஏமாற்றத்தை…
திலீப்
உங்கள் விரக்தியின் உச்சபட்சமான வார்த்தைகளாக எனக்குப் படுகிறது.
ஜி.என்
எனக்கு வியப்பற்றுப் போய்விட்டது. எல்லாம் ! நான் குடிக்கிறேன். நான் வேசைகளிடம் போகிறேன்… ஏன்? ஒரு கொலையை கூடச் செய்து விட்டேன் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். நான் குரூரமானவன் என்று அவர்களே நினைக்கிறார்கள். அது உண்மையாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது. மனிதன் எப்போதும் குரூரத்துக்கும் அன்புக்கும் இடையே திகைத்துக் கொண்டே நிற்கிறான். ஒரு கொலையை , தற்கொலை, சாவை, பெண்ணை, அவளது நிர்வாணத்தை, குழந்தையை ஒரு மலரை,  எல்லாவற்றையும் அவனால் ஏற்கவும் ரசிக்கவும் முடிந்து கொண்டு இருக்கிறது.
திலீப்
அறிவின் தர்க்கங்களை முற்றிலுமாக ஒதுக்கி விடச் சொல்கிறீர்கள். சகலமானவர்களுக்கும் இது சாத்தியமாகின்ற காரியமா? என்ன?
ஜி.என்
மனிதன் தீயாலும் பனிக்கட்டியாலும் ஆனவனாக இருக்க வேண்டும். இந்தத் தீயிக்கும் பனிக்கும் இடையே அறிவே வதைபட்டுப் பிளிருகிறது. ஒன்றுக்குள் மற்றதை இழைத்து விடத் துடிக்கிறது. ஆனால் என்றுமே அதனால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. அறிவின் இந்த தரகு அபத்தமானது. “ நல்லது – கெட்டது” என்ற பரமான இருநிலைகளை முதலில் மறுப்பது போல் தோன்றினாலும் முடிவில் அவற்றிடமே சரண் அடைந்து சுருங்கிப் போகிறது. மேலும் நுட்பமான சோகங்களை விளிப்பதைத் தவிர வேறெதையும் அதனால் சாதிக்க முடியாது. இன்று என் நண்பரகளின் அறிவு என் கைகளுக்குச் செம்மை பூசி மகிழ்கிறது.
( தண்ணீர் குடித்து ஆசுவாசம் செய்து கொள்கிறார். பெருமூச்சுடன்)
நான் ரொம்பவும் சோர்ந்து விட்டேன். ஆம் எதையும் சாதிக்காமலேயே நான் ரொம்பவும் சோர்ந்து விட்டேன். இப்போது எல்லாம் முடிந்து விட்டது. நான் செய்ய நினைத்ததைத் துவங்கும் முன்பே மிச்சமின்றி எல்லாம் முடிந்து விட்டது. கதைகள் என்று நான் கறைபடித்திய காகிதங்கள் மட்டுமே இனி மிச்சம்.
திலீப்
நிதானமாகப் பேசுங்கள்…. மூச்சு அதிகம் இரைக்கிறது.
(அவர் அருகில் சென்று நிதானத்துக்குக் கொண்டுவர நினைக்கிறான்..டம்ளரில் நீர் நிரப்பித் தருகிறான்)
ஜி.என்
இல்லை.. இனி எனக்காக மரணம் மட்டுமே காத்திருக்கிறது. மனிதனுக்கு நிச்சயமானது மரணம் ஒன்று தான்.
(சொன்னவர் சரிந்து தரையில் விழுந்து விடுகிறார். அவன் பதற்றத்துடன் அவர் அருகில் சென்று தூக்க முயல்கிறான். ஆனால் அவரே எழுந்து தரையில் கைகளை அறைந்து ஓங்கி அழுகிறார்)
எல்லாம் முடிந்து விட்டது: மிச்சமின்றி எல்லாம் முடிந்து விட்டது. மனிதனுக்கு நிச்சயமானது மரணம் மட்டும் தான்.
(பின்புறமாக அவன், தோள்களைப் பற்றுகிறான். அசைவற்று, கேவல் ஒலிக்கிறது)
திலீப்
ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள். கொஞ்சம் எழுந்திருங்கள்… முகத்தைக் கழுவிக் கொண்டு வாருங்கள்..
(அவர் கழிப்பறைப் பக்கமாகப் போய் விடுகின்றார். அவன் மேசைப் பெட்டியினைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொள்கிறான். அவர் திரும்பி வரும்போது டம்ளர் நிறைய தண்ணீர் தருகிறான். பையில் இருந்து மூன்று புத்தகங்களை எடுத்து அவரிடம் தர முயல்கிறான்)
ஜி.என்
எனக்கொரு சிகரெட் வேண்டும்.
(அவன் நீட்டிய சிகரெட் பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டு) தேங்க்.. யூ.. ( அவன் தரும் புத்தகங்களில் ஒன்றை வாங்கிப் பார்க்கிறார்)
திலீப்
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வு நூல்.. (புரட்டிய அவர் கூர்ந்து பார்க்கிறார்.) இந்திய விடுதலைக்கு உதவும் வகையில் வெகுஜனக் கலாசாரத்துறைகள் எவ்வாறு இயங்கின என்பதைப் பற்றிய ஆய்வு நூல்.. இத்தகைய ஆய்வு முதல் முறையாக இப்போது தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜி.என்
அப்படியா..? ரொம்பச் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்த சமூகவியல் ஆய்வுகளைப் படிக்க முடிவதில்லை. அவற்றில் தரப்படும் தகவல்கள் மனதில் நிற்பதே இல்லை..
(அடுத்து ஒரு கவிதைநூலை அவன் தர அதை வாங்கி) இந்தக் கவிஞன் என்னுடைய நண்பர் தான். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட உடனேயே வாசித்தவன் நான். என் கதைகளை அவரும் உடனே வாசித்து விடுவார். ந.பிச்சமூர்த்தியின் அழுத்தமான பாதிப்பு இவரிடம் உண்டு.
திலீப்
இது மொழிபெயர்ப்பு நாவல். ஆல்பெர்ட் காம்யுவின் ஸ்றேஞ்சர் – அந்நியன்..
ஜி.என்
ஓ.. என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது முப்பது நாற்பது முறை வாசித்திருப்பேன். இரு.. இரு.. அந்த நாவல் எப்படித் தொடங்கும் எனச் சொல்கிறேன். ( ஏற்ற இறக்கத்துடன் ஆங்கிலத்தில் சொல்கிறார்)  மொழிபெயர்ப்பும் அச்சாக்கமும்  நன்றாக உள்ளது. கம்யூ இந்த நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன். அவனது படைப்புச் சக்தியைக் கொண்டு வந்த நாவல் இந்த ஸ்றேஞ்சர். (சிகரெட் முடிந்திருந்தது)
திலீப்
தோழர் ஜி.என். கிளம்பலாமா?
ஜி.என்
(முன் அறையின் கதவுகளை மூடி விட்டுத் திரும்பும்பொழுது அவர் வெளியேறும் வாசலை மறிப்பவர் போல நின்றிருக்கிறார்.) திலீப்.. எனக்கொரு உதவி செய்ய வேண்டும் நீ..
திலீப்
சொல்லுங்கள்..
ஜி.என்
எனக்கு மிகவும் பசிக்கிறது; தாகமாகவும் இருக்கிறது. (அமைதி) எனக்கு உடனடியாக ஒரு 25 ரூபாய் வேண்டும்.
திலீப்
(யோசிக்கிறான்.). வந்து.. தேதி 25. மாதக் கடைசி..உங்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் தான்… ஆனால் என் வசம் பணம் எதுவும் இல்லை. உங்களுக்கு உதவ முடியாமல் போவதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
ஜி.என்
ஒன்னோட பாஸ் கணக்கில் கொடு…
திலீப்
அப்படியெல்லாம் கொடுக்கிற வழக்கம் இல்லை. அவர் அனுமதி இல்லாமல் கம்பெனி பணத்தைக் கையாள்வது சரியல்ல…
ஜி.என்
இல்லை… ஒன் பாஸ் என்னுடைய நண்பர் தான்.. நான் சொல்லிக் கொள்கிறேன்.
திலீப்
எனக்குத் தெரியும். ஆனாலும் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை. அது எனக்கும் என் பாஸுக்குமான உறவில் சங்கடத்தை உண்டாக்கி விடும்.
ஜி.என்
நீ அதைப் பத்தியெல்லாம் கவலைப் படாதே. அவரைப் பார்க்கும்பொழுது நான் எல்லாவற்றையும் விலக்கி விடுகிறேன். உனக்கு ஒரு பிரச்னையும் வராது.
திலீப்
என் பொஷிசனில் இருந்தால் நீங்கள் அப்படிச் செய்வீர்களா..?  யோசித்துப் பாருங்கள்.. (அவர் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டிருக்கிறார்.)
ஜி.என்
(சலிப்புடன் இப்படிச் சொன்னால் எப்படி? எனக்கு உதவக் கூடியவர்களை இந்த சமயத்தில் என்னால் சந்திக்க முடியாதே. மழை வேறு பெய்கிறது.. நான் எங்கே போவேன்.. ? நீ தான் எப்படியாவது முயன்று எனக்குப் பணம் தர வேண்டும்.
திலீப்
ம்.. ஒன்று செய்யலாம். இன்று இரவு என்னோடு சாப்பிடுங்கள்.. நாளையும் கூட என் கணக்கில் மூன்று வேளையும் சாப்பிடலாம்
(தூரமாக இருக்குமோ என்று யோசிக்கிறார் என நினைத்து)
விடுதி கூட அருகில் தான் உள்ளது. என்னோடு வாருங்கள். உங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
ஜி.என்
அது வந்து.. நான் காரமான எதையுமே சாப்பிட முடியாதவனாக இருக்கிறேன். டீயும் பன்னும் மட்டுமே என்னுடைய ஆகாரங்கள்.. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவை தான் உணவு.
திலீப்
மெஸ்சில் தயிர் சாதம் சாப்பிடலாமே..
ஜி.என்
தயிர் சாதத்தை என் வயிறு ஜீரணிக்க மறுக்கிறது. உன்னிடம் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். உடனடியாக நான் குடிக்க வேண்டும். குடிக்காவிட்டால் என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. குடிக்காவிட்டால் என்னால் நடக்க முடிவதில்லை. கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கி விடுகின்றன. தயவு செய்து.. அதற்கான பணத்தை நீதான் தர வேண்டும்.
திலீப்
என்னைப் போன்ற ஒரு நபரிடம் மாசக் கடைசியில் இந்த அளவுக்குப் பணம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல..
ஜி.என்
நீ விரும்பினால் எனக்கு உதவ முடியும்.
திலீப்
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம். என் நிலையை நான் முழுமையாக விளக்கி விட்டேன். ( பையை எடுத்துத் தோளில் போட்டபடி கிளம்பத் தயாராகிறான்)
ஜி.என்
(அறிவிப்புப் போல) எனக்கு 25 ரூபாய் கிடைக்காத பட்சத்தில் நான் இங்கிருந்து கிளம்பப் போவதில்லை. (சொன்னவர் மேசை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார்)
திலீப்
(எல்லா விளக்குகள், விசிறிகள் நிறுத்தியாகி விட்டது. ஒரேயொரு குவிவிளக்கு – அது அறை விளக்கு அல்ல: அது அவர் மேல் விழுகிறது) நான் செய்வதாகச் சொன்ன உதவிகளை எல்லாம் மறுதலித்து விட்டு, ஒரு குழந்தையைப் போல அடம் பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. (கதவருகில் சென்று) சரி.. வாருங்கள் போகலாம்.
ஜி.என்
(கடுமையுடன்) டேய்.. தாயோளி.. இப்ப நீ பணம் தர்றயா..? இல்லையா..?
திலீப்
( இதை எதிர்பாராதவனாய்) என்ன ஆகி விட்டது உங்களுக்கு..? ஏன் இப்படி பிதற்றுகிறீர்கள்..?
ஜி.என்
(இன்னும் கூடுதலான குரலில்) டே.. தாயோளி..
திலீப்
நீங்கள் ரொம்பவும் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள். மீண்டும் இவ்வாறு பேசினால் உங்களை வெளியே தள்ளி விடுவேன்..
ஜி.என்
( அவனை நேரடியாகப் பார்க்காமல்) தாயோளி.. (அவன் அவரது கையைப் பிடித்து இழுக்க, அவர் பளாரென்று அறைந்து விடுகிறார்) கூதி மவன்..
திலீப்
(அவன் கைவிரல்களை மடக்கி, அவரது மார்பில் குத்திவிட, கைகளைக் குறுக்கே வைத்து, குனிந்து கொள்கிறார், அவரிடமிருந்து முணங்கலாக வார்த்தைகள் வருகின்றன)
ஜி.என்
தேவடியா மவனே..! (அவன் அவரது பிடறியைப் பிடித்து இழுத்து விடுகிறான். சட்டை கிழிந்து தொங்குகிறது. உள்ளே அவசரமாகத் திரும்பிக் கதவைப் பூட்டுவிட்டுக் கிளம்புகிறான். அவர் மார்பைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்திருக்கிறார்.)
திலீப்
வாட்ச்மேன்.. இந்த ஆளை உடனடியாக வெளியேத்து..   (அவன் படபடப்புடன் வெளியேறுகிறான்)
இடம்: மெஸ்ஸின் ஒரு பகுதி
திலீப்
(சாப்பிட்டு விட்டுக் கை அலம்பி, தன் கணக்கில் எழுதி விட்டுத் தலை நிமிரும்பொழுது அவன் அருகில் நிற்கிறார். அவன் நகரும்பொழுது)
ஜி.என்
திலீப்.. ..(அவன் நின்று நிமிர்கிறான்) திலீப்.. உன்னிடம் அப்படிப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
திலீப்
அதற்கு ஒன்றும் அவசியம் இல்லை.
ஜி.என்
(உற்றுப் பார்த்து) நீ உன்னோட சிறுகதைத் தொகுதியெ எப்போது வெளியிடப் போறெ..
திலீப்
(கேலியோ என நினைத்து ஒன்றும் சொல்லாமல் பார்க்கிறான்)
ஜி.என்
உன்னைத் தான்.. எப்போது உன்னோட சிறுகதைத் தொகுதி வரப் போகுது. .
திலீப்
அதைப் பற்றி இப்பொழுது யோசனை எதுவும் இல்லை. (அமைதி) சரி நான் போக வேண்டும்.
ஜி.என்
(நகர விடாமல் அவனது கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவராய்) திலீப்.. நீ எனக்கு இரண்டு ரூபாய் தர முடியுமா..?
திலீப்
(அவன் எதுவும் பேசாமல் சட்டைப் பையில் கையை விட்டு எடுக்கிறான்.
இரண்டு ரூபாய் ஒன்று வருகிறது. அவரிடம் தருகிறான்)
ஜி.என்
ரொம்ப நன்றி
திலீப் அவரை விட்டு விலகி கர்சிப்பால் தலையை மூடியபடி நகர்கிறான்.
அவர் தன் கைகளைத் தூக்கி தலையை மூடியபடி எதிர்த்திசையில் நடக்கிறார்.
மேடை இருளில் மூழ்கி ஒளிவரும்பொழுது முதலில் இருந்த புத்தகக் கடையில் இருக்கிறான்.
காலண்டரில் தேதி பிப்ரவரி 19, 1981 என இருக்கிறது.
கடிதங்களைக் கத்தரியால் வெட்டி எடுத்து வைக்கிறான்.
ஒரு கடிதத்தைச் சற்று உரக்கப் படிக்கிறான்.
தோழர் ஜி.என்.நேற்று மதுரையில் இறந்து விட்டாராம்.
அவரது இறுதிச் சடங்கின்போது உறவினர்களோ குடும்பத்தினரோ யாரும் வரவில்லையாம்.
அவரது நண்பர்களும் எழுத்தாளர்கள் சிலரும் மட்டுமே கலந்து கொண்டனராம். ..
தொடர்ந்து படிக்கிறான்..வார்த்தைகள் வரவில்லை..
கடிதத்தை மடித்து ஒரு புத்தகத்தில் வைக்கிறான்.
அந்தப் புத்தகம் அவரிடம் காட்டிய அந்நியன்.
ஒளி அதன் மீது கவிழ்ந்து மறைகிறது.
மேடையில் இருள்






செல்லப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்காத சிவசங்கரி

$
0
0


1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள்கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை.
உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான். நான் பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னைப் பார்த்தது அவருக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவருக்குத் துறையிலிருந்து அழைப்பிதழ் போயிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ’படைப்பாளிகள் கருத்தரங்கம்’ என்பதற்கான முகவரிக் கோப்பில் இருப்பவர்களுக்கெல்லாம் கடிதங்கள் போயிருக்க வாய்ப்பும் உண்டு. அரசு நிர்வாகத்தில் வகைப்பாடுகள் முக்கியம். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பார்வையாளர்கள் எனப் பகுத்துப் படம் காட்டுவதுதான் அதன் இயல்பு. பொதுவான பார்வையாளர்கள் அந்நிறுவனத்தின் பணியாளர்கள். இங்கே மாணவர்கள். அவர்கள் கட்டாயம் பங்கேற்றாக வேண்டும். வராவிட்டால் தண்டனைகள் கிடைக்கக் கூடும்.
முறையாக அனுப்பப் பட்டஅழைப்பிதழ் கிடைத்தாலும் வரக்கூடிய ஆள் கிடையாதே சி.சு. செல்லப்பா. ! அப்புறம் எப்படி? ந.பிச்சமூர்த்தி, மௌனி, அகிலன், நீல. பத்மநாபன். நா.பார்த்தசாரதி, மு.வரதராசன் வரிசையில் சிவசங்கரி வரைக்கும் வந்து விட்டீர்களா? எனத் திட்டுவதற்கு வருகிறாரோ என்று பதற்றமாக இருந்தது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் இக்கால இலக்கியம் பற்றிய ஆய்வுகளையும் படிப்புகளையும் ஆரம்பித்து வைத்துக் கருத்தரங்குகளையும் நடத்தியவர் முத்துச் சண்முகன் என அழைக்கப்பட்ட சண்முகம் பிள்ளை. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பித்ததோடு மொழியியல் பாடத்தையும் கற்றுத் திரும்பிய அவர் துறைத் தலைவராக இருந்த காலத்தில் தான் சி.கனகசபாபதி, தி.சு.நடராசன் போன்றவர்கள் துறையின் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அகிலன் படைப்புகள் பற்றி ஆய்வு செய்த சு.வேங்கடராமனும், பாவைக்கூத்து பற்றி ஆய்வு செய்த மு.ராமசுவாமியையும் துறையின் ஆசிரியர்களாக ஆக்கி துறையின் வெளியை அகலப்படுத்தியிருந்தார். நிகழ்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் படைப்புகளை விரிவாகப் பேசும் கருத்தரங்குகளை நடத்திக் கட்டுரைக் கோவைகளை அச்சிட்டு வெளியிடும் பணியையும் செய்தவர் அவர் தான். அதல்லாமல் நாட்டுப் புற இலக்கியங்களைத் தொகுப்பது, பதிப்பிப்பது, ஆய்வு செய்வது என்பதான பணிகளையும் பல்கலைக்கழக ஆய்வுப் பணிகளுள் ஒன்றாக ஆக்கியவரும் அவர் தான். அவர் துறையின் தலைவராக இருந்த காலத்தில் இக்கால இலக்கியப் படைப்பாளிகள் துறைக்கு வருவதும் மாணாக்கர்களோடு உரையாடுவதும் சிக்கல் இல்லாமல் இருந்ததாகச் சொல்வார்கள். நான் மாணவனாகச் சேர்ந்த போது அவர் ஓய்வு பெற்று விட்டார். அவரைத் தொடர்ந்து தமிழண்ணல் என்ற பெயரில் அறியப்பெற்ற இராம. பெரியகருப்பன் துறையின் தலைவராக ஆகியிருந்தார். படைப்பாளிகளோடு மாணாக்கர்கள் கொண்டிருந்த உறவும் அறுபட்டுப் போயிருந்தது.
 அறுபட்ட கயிறைத் திரும்பக் கட்டித் தொடர்ச்சியை ஏற்படுத்தத் துறையில் எந்த முயற்சியும் எடுக்காத போது புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற டாக்டர் எஸ்.கே., அதை நினைவூட்டியதோடு நிறுத்தியிருந்தால் அவர் தமிழுக்கும் தமிழ்த் துறைக்கும் உதவி செய்த துணைவேந்தராக, மதுரைப் பல்கலைக்கழக தமிழியல் துறை வரலாற்றில் எழுதப் பட்டிருப்பார். சிவசங்கரியை அழைக்க வேண்டும் எனச் சொன்னதன் வழியாக அவருக்கு இலக்கியத்துறையின் மீதான ஆர்வமோ இந்திய / உலக இலக்கியப் பார்வையோ இல்லை. உள்ளூர் பண்பாட்டு அரசியல் பார்வை கூடக் கிடையாது.  சிவசங்கரி என்ற நபர் மீது ஏதோ ஒரு காரணம் பற்றிக் கரிசனமான பார்வை இருந்தது என்பதை வெளிப்படுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார். அந்தக் கதை தனிக்கதை இங்கே வேண்டாம்.  
சி.சு.செல்லப்பா, சிவசங்கரி படைப்புகள்பற்றிய கருத்தரங்கிற்கு வரவில்லை; எங்கள் துறையில் பேராசிரியராக இருக்கும் அவரது நண்பர் சி.கனகசபாபதியைப் பார்க்கவே வருகிறார் என்பது அவருக்கு வணக்கம் சொன்னவுடனேயே தெரிந்து விட்டது. பக்கத்தில் போய் வணக்கம் சொன்ன என்னிடம் சி.க(னகசபாபதி). இருக்காரா? என்று கேட்டார். இருக்கிறார்; வாருங்கள் போகலாம் என அழைத்துச் சென்றேன். போகும்போது மதுரை மேலக்கோபுர வீதியில் முதல் முதலாக அவரைப் பார்த்ததை நினைவுபடுத்தினேன். வணக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் என்னைப் பார்த்தது அவருக்கு நினைவில் இல்லை. அவரை அப்போது பார்க்க மட்டுமே செய்தேன். சந்திக்கவில்லை. முதல் தடவை மட்டுமல்ல இரண்டாவது முறையும் அவரை ரயில் நிலையத்தில்.பார்க்க மட்டுமே செய்தேன்
முதல் தடவை பார்த்த போது  அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அவரையும் அவரது எழுத்துப் பத்திரிகையையும் பற்றித் தெரியும். ஆனால் அவரது எழுத்துகளை வாசித்திருக்கவில்லை.  இரண்டாவது தடவை பார்த்த போது பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அவரது ஜீவனாம்சம் பாடமாகவே இருந்தது. வாடிவாசலையும் வாசித்திருந்தேன். இரண்டு தொகுதி சிறுகதைகளையும் கூட வாசித்திருந்தேன். நாவல்கள் தந்த கவனக் குவிப்பை அவரது சிறுகதைகள் தரவில்லை.  ரயில் நிலைய வாசலில் அவை பற்றி பேசிக் கொள்ளும் வாய்ப்பு அங்கு உருவாகவில்லை. அந்த இரண்டு நாட்களும் எனக்கு நினைவில் இருக்கிறது; அவருக்கு நினைவில் இருக்கும் என நினைப்பது சரியில்லை தான்.  
மேலக்கோபுர வாசலில் சந்தித்த போது கொஞ்சம் பேசினேன் என்பதால் தான் அதை நினைவூட்டினேன். மதுரைக் காரர்களுக்கு மதுரையின் மற்ற வீதிகளை விட டவுன் ஹால் ரோட்என்று அழைக்கப்பட்ட வீதி மீது கொஞ்சம் கூடுதல் பற்று இருக்க வாய்ப்பு உண்டு. மாலை நேரங்களில் எதிரில் வருபவரை உரசிக் கொள்ளாமல் விலக முடியாது என நினைக்கும் அளவுக்கும் கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கும் வீதி. மிகக் குறுகலான வீதி என்றாலும் ரோட்டோரக் கடைகளின் வரிசையைத் தாண்டித் தான் பெரிய கடைகளுக்குள் செல்ல முடியும். மற்றவர்களைப் போலவே எனக்கும் டவுன் ஹால் ரோட்டின் பல நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன.  டவுன்ஹால் ரோட்டின் முடிவில் தொடங்கும் மேலக்கோபுர வாசலில் தான் சி.செல்லப்பாவை முதன் முதலில் பார்த்தேன் என்றால் அதன் தொடக்கத்தில் இருக்கும் காலேஜ் ஹவுஸ் வாசலில் தான் ஜி.நாகராஜனைப் பார்த்தேன். 80 களில் மதுரையின் அடையாளமாக இருந்த வளாகம்  காலேஜ் ஹவுஸ் விடுதி வளாகம்.. கல்யாண விருந்து போல பெருங்கூட்டம் அமர்ந்து சாப்பிடக்கூடைய உணவு விடுதி அங்குண்டு. குறிப்பிட்ட தொகைக்கான சீட்டை வாங்கி விட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற வசதிக்காகவே கூட்டம் அலைமோதும். காலையில் சாப்பிடாமல் வயிறைக் காயப்போட்டு விட்டு மதிய உணவுக்கு காலேஜ் ஹவுஸ் போகும் மதுரை ஆசாமிகள் பலருண்டு. உள்ளேயே புத்தகக்  கடை, வாகன நிறுத்தம், செருப்புக் கடை, துணிக்கடை என அந்தக் காலத்திலேயே ஒரு பெரும் வணிக வளாகமாக இருந்தது. வாடகைக்கார்கள் இருபுறமும் சாலையில் நிற்கும். அங்கே கருத்தரங்கம் நடத்தும் மேடை வசதி கொண்ட கூடமும் உண்டு. கி.ராஜநாராயணனின் மணிவிழா அங்கு தான் நடந்தது.
 காலேஜ் ஹவுஸில் இருந்த கூட்ட அரங்கில் நடந்த கருத்தரங்குக்குப் பின் இலக்கியவாதிகளும் இலக்கியவாசகர்களுமாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களில் ஒருவனாக வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தொ.மு.சி.ரகுநாதனோடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த பலரும் உரசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். கிழிந்து தொங்கும் வெள்ளை ஜிப்பாவோடு நின்ற அந்த மனிதரைப் பலரும் நின்று பார்த்து விட்டு விலகிச் சென்றார்கள். நின்று பார்ப்பது ஏன் என முதலில் தெரியவில்லை. கடந்து சென்றவர்கள் பிறகு அவரைக் காட்டிப் பேசியதும் எனக்குப் புரியவில்லை. அவரும் ஒருவரைக் கூட கையைப் பிடித்து நிறுத்தவில்லை. ஆனால் அவரைப் பார்க்காமலேயே -யாருடனோ பேசிக் கொண்டு- கடந்து போன தொ.மு.சி. ரகுநாதனை மட்டும் பின்னால் இருந்து தட்டித் திரும்பச் செய்தார் அந்த மனிதர். திரும்பிப் பார்த்த தொ.மு.சி. அதிர்ச்சிக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கலக்கத்தோடு அந்த மனிதரைக் கையைப் பிடித்துக் கொண்டார். ரகுநாதன். ரகுநாதன்  என்று அந்த மனிதர் சொல்லும் அதே நேரத்தில் இவரும் ”நாகராஜன்” என்று சொல்லி அணைத்துக் கொண்டனர். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் வருவதற்கான எத்தணிப்பு தெரிந்தது. வார்த்தைகள் எதுவும் வரவில்லை. வணக்கம் சொல்கிறாரா? போய்ட்டு வா என்று சொல்கிறாரா? என்று புரியாத வகையில் கையைத் தூக்கிக் காண்பித்து விட்டுக் கையைத் தொங்கவிட்டுக் கொண்டார். அதன் அர்த்தம் புரிந்த ரகுநாதன் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். எவ்வளவு என்று இவரும் பார்த்துக் கொடுக்கவில்லை; அவரும் பார்த்து வாங்கவில்லை. ஜி. நாகராஜன் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பலவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த எனக்கு, என் கண் முன்னே நிகழ்ந்த அந்தக் காட்சி “கேள்விப்பட்டதெல்லாம் உண்மை” என உணர்த்தின.  அவரை மதுரையின் இலக்கிய அடையாளமாகப் பலரும் சொன்ன பிறகு ஜி.நாகராஜனை வாசிக்கத் தொடங்கினேன். ஜி. நாகராஜனின் மதுரை பகல் நேரத்து மதுரை அல்ல; இரவு நேரத்து மதுரை. கவியும் இருளும் விலகும் இருளுமாக அவரது கதைகளில் மதுரையின் தெருக்கள் தான் எழுதப்பெற்றிருக்கின்றன. நாசுக்கான மதுரை வீடுகள் ஒன்று கூட அவரது கதைகளில் எழுதப் படவில்லை. அப்படியான வீடுகள் மதுரையில் அந்தக் காலத்தில் இருந்ததில்லையோ என்னவோ. இன்றும் கூட மதுரை இருளும் நிழலுமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றும். சி.சு. செல்லப்பாவைப் பற்றிச் சொல்ல வந்த நான் ஜி.நாகராஜனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 டவுன் ஹால் சாலையில் நுழைந்தவுடன் எனக்குப் பாரதி புத்தகப் பண்ணை கண்ணில் படுவது போல அதன் முடிவில்  வலது கைப்பக்கம் திரும்பி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்குக் கோபுரத்தை பார்த்துத் திரும்பினால் எனக்கு முதலில் தெரிவது நியூசெஞ்சுரி புத்தக நிலையம் தான். வழுவழுப்பான தாள்களில் மாஸ்கோ பதிப்பக வெளியீடுகளை வாங்கி வைத்துக் கொள்வதற்காக அந்தக் கடைக்கு அடிக்கடி போவதுண்டு. அப்படிப் போன ஒருநாள் தான் செல்லப்பாவைப் பார்த்தேன். சி.கனகசபாபதியுடன் துணிப்பையைக் கக்கத்தில் இடுக்கியபடி அதன் வாசலில் நின்றிருந்தார்.
 நியூசெஞ்சுரி புத்தகக் கடையிலிருந்து வெளியில் வந்த என்னைத் தோளில் கை வைத்து அழுத்தி நிறுத்தி இவரைத் தெரியுமா? என்று கேட்டார் சி.க., ’ தெரியாது’ என்றேன்.. “இவர் தான் செல்லப்பா; வாடிவாசல்  செல்லப்பா” என்று அறிமுகம் செய்தார். ”எழுத்து செல்லப்பா தானே” என்றேன். நான் வாடிவாசலையோ, அவரது கதைகளையோ அப்போது படித்திருக்க வில்லை. என்றாலும் எழுத்து ஆசிரியர் செல்லப்பாவை எனக்கு அறிமுகம் உண்டு. நின்று திரும்பிய அந்த மனிதரை அப்போது முழுவதும் பார்த்தேன். அழுக்கேறிய வேட்டியும் கதர்ச் சட்டையுமாக இருந்தார். ஒல்லியான அந்த உடம்புக்கு இவ்வளவு பெரிய சட்டை எதுக்கு என்று கேட்கத் தோன்றியது. முகமும் கூட அழுக்காகத்தான் இருந்தது. ”எழுத்துப் பத்திரிகையைப் பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டார். கேட்டதில் கொஞ்சம் ஆர்வம் இருந்திருக்க வேண்டும்.”இல்லை; தீபம் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் எழுதும் தொடரில், புதுக்கவிதைக்கு எழுத்து பத்திரிகையின் பங்களிப்பு பற்றி  எழுதியதை வாசித்திருக்கிறேன்” என்றேன். ”எழுத்துவோடு நேரடித் தொடர்பு இல்லாதவனோடு என்ன பேச்சு” என்று நினைத்தாரோ என்னவோ அதற்கு மேல் அவர் என்னிடம் பேசவில்லை. அவர்கள் இருவரோடும் சேர்ந்து நானும் செண்ட்ரல் சினிமா அரங்கைத் தாண்டி இருக்கும் மீனாட்சி புத்தகநிலையம் நோக்கிக் கூடவே தான் போனேன். மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்த அதன் உரிமையாளர் செல்லப்பன் அவர்களை வரவேற்ற விதத்தைக் கண்டு நான் ஒதுங்கி நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துச் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டேன். ஒற்றை வாக்கியம் மட்டுமே பேசிய செல்லப்பாவை முதன் முதலில் டவுன்ஹால் ரோட்டில் பார்த்ததைச் சந்திப்பு எனச் சொல்ல மனம் விரும்பவில்லை. அவர் அதை நினைவில் வைத்திருப்பார் என நினைக்கவுமில்லை
 முதல் இரண்டு தடவைகளையும் சி.சு. செல்லப்பாவைப் பார்த்தேன் எனக் குறிப்பிடவே விரும்புகிறேன் என்றால்  மூன்றாவது தடவை நிகழ்ந்ததை நிச்சயம் சந்திப்பு எனக் குறிப்பிடவே விரும்புகிறேன். இப்போதும் அவர் சி,கனகசபாபதியைப் பார்க்கத்தான் வந்திருந்தார். அதே அழுக்கேறிய வேட்டி; சட்டை. கூடுதல் சுருக்கங்கள் கொண்ட முகம், வாராத தலைமுடி. கையில் ஒரு பச்சை வண்ணத் துணிப்பை. அதை வைத்துக் கண்ணை மறைத்தபடி வந்தார். பையில் கணமாக எதுவும் இல்லை. புத்தகங்கள் இல்லாமல் வரும் செல்லப்பாவை நான் எதிர்பார்க்கவில்லை. புத்தகக் கட்டுகளோடு அலைவார் எனப் படித்திருந்ததால் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. நிழலுக்குள் வந்த பிறகுதான் கண்ணில் எதோ கோளாறு; வெயில் கூச்சத்தை மறைக்கத் துணிகட்டித் தொங்க விட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. பேரா. சி.கனகசபாபதி இருக்கும் அறைக்கு அழைத்துப் போய் விட்டுவிட்டுப் பக்கத்தில் நின்றேன். ” ஒக்காருங்க ராமசாமி; துறையிலெ இன்னக்கி என்ன நடக்கப் போகுதுன்னு இவருட்ட சொல்லுங்க. என்றார் சி.க.
சிவசங்கரியின் படைப்புகள் பற்றி மூன்று நாள் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. இன்று தான் அதன் தொடக்கவிழா என்றும் சொல்லி விட்டு நீங்களும் வரவேண்டும் என்றேன். ” எல்லாம் அரசியல் தான்; இது திராவிட அரசியல் இல்ல; தேசிய அரசியல்” என்று சொல்லிவிட்டு சி.க. சிரித்தார். செல்லப்பா சிரிக்கவில்லை. பேசினால் கண்ணில் வலி அதிகமாகும் என நினைத்துப் பேசாமல் இருக்கிறாரோ எனக் கருதினேன். ”நீங்கள்லாம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க. எல்லாம் அரசியல்லு சொன்னா போதுமா. ஒங்க எதிர்ப்பெக் காட்ட வேண்டியதுதானே. கோபமாகச் சி.க.வைப் பார்த்துச் சொன்னார்.என் பக்கம் திரும்பினார். அந்தப் பார்வையில் இருந்த கோபம் எனக்கும் சேர்த்துத் தான் என்று தோன்றியது, என்னை ஏன் இந்த எழவுக்கெல்லாம் கூப்பிடுறீங்க என்று சொல்லி விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார். சி.க.வுக்கு அவரை எப்படிச் சமாதானப் படுத்துவது எனத் தெரிந்திருந்தது. பத்துப் பதினைந்து நிமிடத்தில் கோபமெல்லாம் காணாமல் போய்விட்டது. காலையில் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு விட்டு உடனே அவரோடு கிளம்பி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வருவதாக அவர் சொன்னவுடன் சமாதானம் அடைந்ததோடு தொடக்கவிழா நடக்கும் இடத்துக்கும் வரச் சம்மதித்தார்.
தொடக்க விழா நடக்கும் அரங்குக்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரை கிலோ மீட்டர் தூரம். நடந்தே போகலாம் என்று சொல்லி விட்டார் சி.சு. செல்லப்பா. இடையில் ஒரு காபி குடித்து விட்டு நடந்தால் தொடக்க விழா நேரத்துக்குப் போய் விடலாம் என்பதால் நடந்தே போனோம். போகும் வழியெல்லாம் அவரது சாவித்திரியைப் பற்றிப் பேசிக் கொண்டே போனேன். ஜீவனாம்சம் நாவலில் வரும் சாவித்திரியைப் பற்றிக் கற்பனையாகச் சில காட்சிகள் என்னிடத்தில் இருந்தது. அக்கிரகாரத்தில் இருந்து கிளம்பிச் செல்லும் இந்தி டீச்சர் சாயலில் தான் சாவித்திரி என்னிடம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவரிடம் சொல்லவில்லை. கணவன் இல்லாத இந்தி டீச்சர் சாவித்திரியைப் போலக் கட்டுபெட்டியானவர் இல்லையென்றாலும் அவரது நடை, சிரிப்பு, இழுத்து வைத்துப் பேசும் பாங்கு போன்றன ஒத்துப் போய்க் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனக்கு அவர் இந்தி சொல்லித் தரவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பள்ளிகளிலிருந்து இந்தி வெளியேறிய போது இந்தி டீச்சரும் அவரது அண்ணன் இருந்த மதுரைக்கே போய்விட்டார் என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.
மேடையில் சிவசங்கரி, துணைவேந்தர், துறைத்தலைவர் என மேடையேற வேண்டியவர்கள் வருவதற்கு முன்பே அரங்குக்குள் நுழைந்து விட்டோம். ஏறத்தாழ நடுவரிசை அது. அதிலிருந்து வலது புறமாக நகர்ந்தால் நேராக இருக்கும் வாசல் வழியாக வெளியேற முடியும் என்பதால் அந்த வரிசையை நான் தேர்ந்தெடுத்திருந்தேன். நடந்து வரும்போதே முழுக் கூட்டத்திலும் இருக்க முடியவில்லை என்றால் நான் வெளியே வந்து விடுவேன் என்று அவர் சொல்லியிருந்ததால் தான் அந்த இடத்தைத் தேர்வு செய்தேன். உட்கார்ந்த பின்னும் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். சி.க. இடையிடையே ஒற்றைச் சொல்லில் எதோ சொல்லி விட்டு மேடையைக் கவனித்துக் கொண்டிருந்தார். துறையின் வேலைகளில் தனது பங்கு எதுவும் இல்லை என்று யாராவது சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் அவரிடத்தில் இருந்தது. எனக்கு அந்தப் பதற்றம் இல்லை. துறையின் தலைவருக்கும் ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி இருந்த அபிப்பிராயமும் எனக்குத் தெரியும். துறையின் போக்கோடு ஒத்துப் போகாத ஆய்வாளர்களில் ஒருவன் என்ற அபிப்பிராயம் என்னைப் பற்றி இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் உறுதிப் படுத்துவதில் கவனமாக இருப்பேன். சி.சு.செல்லப்பாவை அழைத்துக் கொண்டு வந்து நடுவரிசையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கூட விலகல் போக்காகத் தான் நினைப்பார்கள் என்பதும் தெரியும். நினைப்பவர்கள் நினைக்கட்டும் என்ற தெனாவட்டும் கூடவே இருக்கும்.
மேடையில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். பளபளக்கும் சேலையில் சிவப்புச் சாயம் பூசிய உதடுகளின் மேல் கைகளைக் குவித்து வணக்கம் சொல்லிப் பார்வையாளர்களை நோக்கிச் சிரித்தார் சிவசங்கரி. பக்கத்தில் துறைத்தலைவர் தமிழண்ணல் மகிழ்ச்சியோடு நின்று பார்த்தார். எல்லோரும் நின்றிருந்தார்கள். செல்லப்பாவுக்குத் துணையாக நானும் உட்கார்ந்து குனிந்து பேசிக் கொண்டிருந்தோம்.  துறைத்தலைவர் கைகாட்ட அனைவரும் உட்கார்ந்த போது சி.சு.செல்லப்பாவைப் பார்த்து விட்டார் சிவசங்கரி. தன்னுடைய இருக்கையில் அமரப் போனவர்  உட்காரவே இல்லை. மேடையை விட்டு இறங்கி நாங்கள் இருந்த வரிசைக்குள் நுழைந்து விட்டார். மொத்தக் கூட்டமும் அவரோடு சேர்ந்து எங்கள் மீது குவிந்தது. வந்தவர் அவரது காலைத் தொட்டு வணங்குவது போலப் பாவனை செய்து விட்டு, “பெரியவா.. உங்க ஆசீர்வாதம் வேணும்” என்று சொல்லி நின்றார். நின்றவரை செல்லப்பா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. எழுந்திருக்கவுமில்லை. “ யார் பெரியவா? நீங்கள் தான் இப்போ பெரியவா? ஒங்களுக்கெதுக்கு என்னோட ஆசிர்வாதம்? என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானார். சி.க. தான் தடுத்து நிறுத்தி அமரச் செய்தார். ஆசீர்வாதம் கிடைக்காத வருத்தத்தை மறைக்க முடியாதபடி சிவசங்கரி மேடையேறிக் கைகுட்டையால் முகத்தைத் துடைத்து கொண்டார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்- விமரிசனம் அல்ல; விவாதம்

$
0
0

லண்டனிலிருந்து வெளிவரும் இணைய இதழ்எதுவரை?. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து வினாக்களை அனுப்பி பதில்களைப் பெற்று வெளியிட்டது. அந்த வினாக்களும் விடைகளும் இங்கே தரப்படுகிறது. என்னைப்போலவே திரைப்படங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறும் ஜமாலன், கலைஅரசன், ராஜன்குறை ஆகியோரும் இந்த வினாக்களுக்கு விடைகள் சொல்லி இருந்தார்கள். மொத்த விவாதத்தையும் படிக்க அங்கே செல்லலாம். அதற்கான இணைப்பு:  http://eathuvarai.net/?p=2776                 இங்கே எனது விடைகள் மட்டும்





01."விஸ்வரூபம்" திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
ஏற்கெனவே பலரும் பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை முன் வைத்து விவாதிக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. கலையின் அடிப்படைக் கூறுகள் எதனையும் கொண்டிருக்காத வியாபாரச் சினிமாவை முன் வைத்து இதையெல்லாம் தமிழ்ச் சமூகம் விவாதிக்க நேர்வதை எப்படி விளங்கிக் கொள்வது?  என்றாலும் திரும்பவும் விவாதிக்கலாம். ’கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு’என்று கடைசியாகக் குறிப்பிட்ட வார்த்தைக் கூட்டத்திலிருந்தே அதற்கு முன்பிருக்கும் சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். கலைஞன்என்ற சொல்லுக்குள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அற்ற மனிதனின் இருப்பு இருப்பதாக நான் நம்புவது இல்லை. அதனால் அப்படி நம்புகிறவர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகள் தான் சரியானவை என நினைப்பவர்களோடு எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை. இப்படிச் சொல்வதால் அத்தகைய கலை இலக்கிய வெளிப்பாடுகளைத் தடை செய்ய வேண்டும்; ஒதுக்க வேண்டும் என்று வாதிடுபவன் என நினைக்கவும் வேண்டாம். அத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் எதிர்மறைக் கூறுகள் இருப்பதைவிட நேர்மறைக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதால் அவற்றால் ஆபத்துகள் அதிகம் இல்லை என்றும் கூடச் சொல்வேன்.
சமூகத்தின் தாக்கம் இன்றிச் சுயாதீனமாகப் படைப்பு உருவாகிறது என்ற அடிப்படையற்ற சொல்லாடலோடு எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்பவர்கள் கலையின் தோற்றம், கலைக்கும் கலைஞனுக்கும் உள்ள உறவு, கலைப்படைப்புக்கும் அதன் நுகர்வோர்களுக்கும் உள்ள தொடர்புநிலை, அதனால் விளையும் தாக்கம் பற்றியெல்லாம் புரியாமல் இருக்கிறார்கள். அதையெல்லாம் புரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல மாட்டார்கள். புரியாமல் பேசுகிறவர்களோடு பேசிப் பயன் எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கலைஞனின் உரிமைக்கும் சாதாரண மனிதர்களின் உரிமைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. அதுவும் இந்தியா போன்ற பன்மைத்துவ சமூகத்தில் ஒவ்வொரு மனிதர்களும் பொறுப்போடு இயங்க வேண்டியதை வலியுறுத்துவதைப் போலக் கலைஞன் எனக் கருதிக் கொள்பவனுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. பொறுப்பை உணராத நிலையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் இருக்கிறது. அந்தக் கடமையை தடைகளின் வழியாக உருவாக்க முடியாது..
பொறுப்புடனோ, பொறுப்பின்றியோ வெளிப்படும் கலைப் படைப்பை அல்லது ஊடகச் செயல்பாட்டை அல்லது கருத்தைத் தடுத்து விடுவதன் மூலம் அதைப் பற்றிய விமரிசனத்தை –விவாதத்தைத் தடுத்துவிடும் வேலையைச் செய்யக் கூடாது. வெளிப்பாட்டுக்குப் பின்பு தான் அந்த வெளிப்பாடு ஏற்படுத்தக் கூடிய சாதக – பாதகங்களைப் பேச முடியும். வெளிப் படுவதற்கு முன்பே தடுத்து விட்டால், உருவாக்கியவனுக்குச் சாதகமான கருத்துக்களே இங்கு உருவாகும். கமல்ஹாசனின் விஸ்வரூபத்தைத் தடை செய்ததின் தொடர்ச்சியாக அதுதான் நடந்துள்ளது. அந்தப் படத்தின் உள்ளடக்கம், முன் வைத்த மையக்கருத்தின் நோக்கம், அதன் சார்புநிலை, நிகழ்கால இந்தியா மற்றும் உலக நிகழ்வுகளின் மீதான கமல்ஹாசனின் பார்வை ஆகியன முழுமையாக விவாதிக்கப் படக்கூடிய வாய்ப்பை இந்தத் தடையும் தொடர்ச்சியான எதிர்ப்பும் திசைமாற்றியிருக்கின்றன. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையாமல் ஒதுக்கப்படும் வாய்ப்புடைய ஒரு சினிமாவை பெரும்பான்மையான பார்வையாளர்களும் பார்த்தே ஆக வேண்டிய படமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
02. முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டும் அல்ல. தவறான பாதையும் கூட. அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளுக்கு எதிரான விளைவுகளை இந்த முன்னெடுப்பு தந்திருக்கிறது. எதிர்பாராத நிலையில் திடீர்த் தாக்குதல் நடத்தும் தீவிரவாதம் போலவே விஸ்வரூபத்திற்குத் தடை வாங்கிய நிகழ்வு பார்க்கப்படும்; பார்க்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில்.  இப்படியொரு கடுமையான போக்கை எந்த ஒரு அமைப்பும் எடுக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ அவர்களுக்குள் இருக்கும் பன்முகத்தன்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் எத்தகைய அடையாளங்கள் நிகழ்காலத்தின் தேவை எனக் கருதி அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத் தன்மைக்குள் ஐக்கியமாகி விடும் ஆபத்தைச் செய்துவிடக் கூடாது.;
அடிப்படைவாதக் கருத்தியல்கள் எல்லாச் சமய நம்பிக்கைகளுக்குள்ளும் இருக்கவே செய்கின்றன. அடிப்படை வாதம் முற்றித் தீவிரவாதமாக மாறும் போக்கை விமரிசனம் செய்வதை சமயத்தை விமரிசனம் செய்வதாகப் பார்ப்பது சரியான பார்வை ஆகாது.  இசுலாமியர்கள் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று படம் பேசும் கருத்தியலை மேலும் உறுதி செய்யும் விதமாக அதனைத் தடுக்க முயன்ற இச்சூழலும் ஆகி விட்டது.
03. இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில், அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?
முகநூல், தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவற்றில் நடக்கும் உரையாடல்களையும் கருத்துப் பதிவுகளையும் பார்த்தால் பாரதூரமான பிளவுகளை உருவாக்கி விடுமோ என அச்சமாக இருக்கிறது. 1990 களுக்குப் பின் எழுந்த தலித்  எழுச்சியின் விளைவைத் தங்களுக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கும் ஆதிக்கச் சாதிக் கருத்தியலாளர்களைப் போல இசுலாமிய வெறுப்பை விதைக்கும் நபர்களும் இயக்கங்களும் இந்த நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நிகழ்காலக் கருத்தியல்களை விவாதிக்கும் கட்டுரைகளைச் சிறுபத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளனாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பல்கலைக்கழக ஆசிரியனாகவும் சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன்.
1990 களில் பேசப்பட்ட தலித் கருத்தியல்களை 2000 –க்குப் பின் பேச முடியாத –விவாதிக்க முடியாத சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன்.கோட்பாட்டளவிலும், சிந்தனைத் தளத்திலும் விளக்கக் கூடியனவற்றை நடப்பு நிலைமைகள் சிதைத்துவிடும் ஆபத்தை நேரடியாக உணர்ந்தவன் நான். தங்களுக்குக் கிடைத்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளையே அதிகம் கைக்கொள்ளும்போது எதிர் விளைவுகளே உண்டாகும் என்பதைத் தலித்துகளும் அவர்களை வழி நடத்திய இயக்கங்களும் உணராதபோது எதிர்விளைவுகளைச் சந்தித்தனர். அதன் ஆகப் பெரும் வெளிப்பாடு தான் மருத்துவரால் ராமதாஸால். ஒன்றிணைக்கப்படும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பின் எதிர்வாக இருப்பவர்கள் தலித்துகள் என்பதை மறந்து விடக்கூடாது. பிராமணர்கள் – பிராமணரல்லாதார் என ஆதிக்கத்திற்கெதிராக ஒன்றிணைக்கப்பட்டதற்கு மாறாக இன்று தலித்துகள்- தலித் அல்லாதார் என ஒன்றிணைக்கப்படும் சூழல் தோன்றிவிட்டது. ஆனால் இன்றைக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுபவர்கள் தான். சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாக தலித் இயக்கங்கள் தொடங்கி வைத்த விடுதலையை நோக்கிய பயணம், அராஜகம் நோக்கிய பின்னடைவாக ஆனதின் பின் விளைவுகள் என்ற உண்மையைச் சொல்லவும் எனக்குத் தயக்கம் இல்லை. சட்டம் தரும் பாதுகாப்பை எதிர்நிலையில் பயன்படுத்தும்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தலித் இயக்கங்கள் உணர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன.  அதேபோல் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலையில் கிடைத்துள்ள உரிமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டால் சாதகங்களைவிடப் பாதகங்களே அதிகம் உண்டாகும். விஸ்வரூபத்தால் உண்டாகியுள்ள பாதகம் தொடர்ச்சியான எதிர்நிலைகளையே உருவாக்கும். வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக சிக்கல்களைச் சந்திக்க இருந்த விஸ்வரூபம் படத்திற்குத் தடை கோரியதன் மூலம் மாநில அரசின் கையாட்களாக இசுலாமியர்கள் கருதப்படும் சூழலுக்கும் இடம் தந்து விட்டனர்.  விஸ்வரூபம் அப்படியொரு நிலையை நோக்கி இசுலாமியர்களைத் தள்ளிவிட்டுள்ளது. அதிலிருந்து மீண்ட வர வேண்டும்; அதற்கான உரையாடல்களை இசுலாமியச் சிந்தனையாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

04. இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
விஸ்வரூபம் பிரச்சினை இவ்வளவு விரிவாக விவாதிக்கப்படாத தொடக்க நிலையில் – ஜனவரி 24ஆம் தேதியில் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவொன்றையே இதற்குப் பதிலாகச் சொல்ல விரும்புகிறேன். அந்தப் பதிவின் வரிகள் இவை:
வன்கொடுமைச் சட்டத்திற்காகச் சாதிக்குழுக்களை ஒன்றிணைக்கும் மருத்துவர் ராமதாஸின் போக்கு, இசுலாமியர்களுக்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவதில் இந்திய சினிமாத்துறையினரின் போக்கு போன்றவை தடுக்கப் பட வேண்டியவை. ஆனால் இவற்றைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றிக் கட்டமைக்க முயலும் அரசின் போக்கும் ஏற்கத் தக்கதல்ல. ஒவ்வொன்றையும் அதனதன் வழியாகவே அணுக வேண்டும்; தடுக்க வேண்டும். அதுதான் பொறுப்பான அரசு நிர்வாகத்தின் நிலைபாடாக இருக்க முடியும். அப்படிச் செய்யாமல் தடை செய்வதன் மூலம் பொதுச் சமூகத்தின் மன உருவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கப் பார்க்கிறது அரசு
இந்த முகநூல் குறிப்பை அப்போதும் யாரும் கவனிக்கவில்லை; இப்போதும் கவனிக்கவில்லை. எப்போதும் எதிரெதிர் நிலைப்பாடுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவான கருத்தை மட்டுமே எதிர்பார்க்கும் நிலையில் பாசிசத் தன்மை கொண்ட அரசுகளின் நுண்ணிய நோக்கத்தை முன் வைக்கும் குறிப்புகளை முகநூல் போன்ற சமூகத் தளச் செயல்பாட்டாளர்கள் கவனப்படுத்த மாட்டார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். முகநூல் கட்சி கட்டி சண்டை போடும் இடமாக இருப்பது வருத்தமாகவே இருக்கிறது.
தமிழக அரசு பற்றி மட்டுமல்லாமல், மைய அரசு பற்றியும் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவில் செயல்படும் அரசுகள் – மைய, மாநில அரசுகள் சுதந்திரமானப் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்குவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளப்பார்க்கின்றன. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளைக் குலைத்து விட்டால் அதன் பங்களிப்பு அர்த்தமற்றதாகி விடும். அரசின் கொள்கை முடிவு எனச் சொல்லி விட்டால் நீதிமன்றம், வாயைத் திறக்க முடியாமல் ஆகிவிடும். மக்களின் பணத்தை விரயமாக்க முடியாது எனச் சொல்லி கலை இலக்கிய அமைப்புகள், நூலகச் செயல்பாடு போன்றவற்றை நிறுத்தி விட முடியும் என்றெல்லாம் நினைப்பது அரசுகள் வரம்பற்ற அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கின்றன என்பதைத் தான் காட்டுகின்றன. தணிக்கைக் குழு அனுமதித்த படத்தை மாநில அரசு தடை செய்து விட்டது எனக் காரணம் காட்டி மைய அரசு மாநில அரசின் எல்லைக்குள் நுழையப் பார்க்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த எல்லைகள் காக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லை தாண்ட நினைப்பது நுண்ணிலைத் தீவிரவாதம் தான்.

05.இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இசுலாமிய அமைப்புகள் எதிர் நிலை எடுத்துத் தடை கோரியதைத் தவறு எனச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் அவர்களின் எதிர்ப்புணர்வின் நியாயம் பற்றியும் சொல்ல வேண்டும். இந்தியச் சினிமா தொடர்ந்து முஸ்லீம்களை இந்த நாட்டின் இரண்டாம் நிலைக் குடிமக்களாகக் காட்டுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. தமிழ்ச் சினிமாவும் விலக்கல்ல. இசுலாமியக் கதாபாத்திரங்களை அதிகமும் எதிர்நிலையில் நிறுத்தும் போக்கு சுதந்திரத்துக்குப் பிந்திய இந்திய சினிமாவின் மையமான போக்கு.. தமிழ் சினிமாவில் முஸ்லீம்கள் ஒன்றும் தெரியாத அப்பாவியாகச் சித்திரிக்கப் பட்டதைச் சில படங்களில் பார்த்துள்ளேன் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு மட்டுமல்ல. அந்தப் படத்தின் மையமாக இல்லாத பாத்திரமாக அது வந்து போயிருக்கும், ஆனால் பொதுச் சமூகம் வெறுத்து ஒதுக்கும் குற்றச் செயல்பாடுகளோடு தொடர்புடையவர்களாகக் காட்டப்பட்ட இசுலாமியப் பாத்திரங்கள் ஏராளம்..  இந்தியா –பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியவர்கள் எனப் பேசப்பட்ட அரசியலின் தொடர்ச்சியாகவே இத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ”நாங்கள் பாகிஸ்தானிற்குச் செல்ல வேண்டியவர்கள் அல்ல; இந்தியா தான் எங்கள் நாடு; இந்தியர்களாகவே பிறந்தோம்; வளர்ந்தோம்; எங்கள் முன்னோர்களும் அப்படித்தான் இருந்தார்கள். இசுலாமியர்களாக ஆனதற்கு இன்றுள்ள தனியொரு முஸ்லீம் காரணமல்ல; சமூக நெருக்கடிகளும் வரலாற்றுக் காரணிகளும் இருக்கின்றன” என விளக்கிச் சொன்னாலும்  புரியாதவர்கள் – புரிந்து கொள்ள மறுப்பவர்கள் அந்தக் கருத்தை ஆழமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு புரிதலை உடைய இசுலாமியர்கள் இந்தியாவை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியொரு நிர்ப்பந்தத்தை இந்த நாட்டில் செயல்படும் பல ஊடகங்கள் உருவாக்க முனைப்புக் காட்டுகின்றன. அத்தகைய முனைப்பில், வெகுமக்களின் மனக்கட்டமைப்பை உருவாக்கும் வணிக சினிமாவில் செயல்படுகிறவர்கள் அறிந்தும் அறியாமலும் ஈடுபடுகின்றனர். அறியாதவர்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும். அறிந்தவர்களுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும்.  நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வரும் இத்தீவினையை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தடைகளை உருவாக்கலாம் என நினைத்தால் உடனடியாகப் பலன் கிடைப்பது போலத் தோன்றலாம். ஆனால் அப்பலன் நீண்ட காலப் பலனாக இருக்காது.
இந்திய சினிமாவில் ஏற்கெனவே ஆழமாகப் புரையோடிப் போயிருந்த இந்த நிலைப்பாட்டை- இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்தும் இந்தப் போக்கை - உலக அளவில் வளர்த்தெடுக்கப்படும் இசுலாமிய வெறுப்பு நிலைபாடு கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகமெங்கும் தீவிரவாதிகள் இசுலாமிய அடையாளங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் எனத் திரைப்படங்களின் வழியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிச வெறுப்பின் காலம் முடிந்த போன நிலையில் இசுலாமிய வெறுப்பு, காசு பார்க்கும் ஒன்றாக உலகசினிமாவில் வளர்த்தெடுக்கப்படுகிறது.
கமல்ஹாசன் தன்னை எப்போதும் கலைஞன் என்றோ, சுயாதீனமாகப் படைப்பை உருவாக்குகிறேன் என்றோ, கலைஞனுக்கு உரிய உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறவரோ அல்ல. அவர் நடிகராக நடித்த படங்கள் முழுமையும் பொழுது போக்கு வகைப்பட்டவை. நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பட உருவாக்கத்தில் அவரும் பங்கேற்றுச் செய்த பேசும்படம், தேவர் மகன், மகாநதி, ஹேராம், குருதிப் புனல், உன்னைப் போல் ஒருவன், தசாவதாரம்போன்றன சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் பொதுப்புத்தி நிலையிலும், அறிவார்ந்த தளங்களிலும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை விவாதப் பொருளாக்கிய படங்கள். அப்படங்கள் வழியாக வெளிப்பட்ட கருத்துக்களும், தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய- ஏற்படுத்தக் கூடிய –விளைவுகள் பற்றி நானே பல தடவை எழுதியிருக்கிறேன். மைய நீரோட்டக் கருத்தோடு ஒத்துப் போகும் நிலைபாட்டை முன் வைப்பவர் என்பதைத் தீவிரமாகச் சினிமாவை அணுகும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளோம். அதற்கெல்லாம் அவரது ஒப்புதல்களோ, மறுப்புகளோ கிடைத்ததில்லை. அவரது போக்கில் நடித்துக் கொண்டும், படங்களைத் தயாரித்துக் கொண்டும் நகர்ந்து கொண்டே இருந்துள்ளனர். உலக நாயகன், உலகப் படம் எடுக்கும் திறமையுள்ள நபர் என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்ளும் கமல்ஹாசனும் அந்த வியாபாரத்தில் இந்தப் படம் மூலம் இறங்க நினைத்தார். அதனைத் தடுத்து நிறுத்தப் போவதாகக் கருதி இசுலாமிய அமைப்புகள் அவருக்கு உதவி செய்து விட்டார்கள். இந்த எதிர்ப்பின் விளைவாக அவருக்கு ஏற்பட்டது நட்டத்தைவிட லாபமே அதிகம் .
இப்போது அவரது நோக்கம் உலகச் சந்தையில் நுழைவது. அதற்கேற்ற களமாகவும் கருத்தாகவும் நினைத்தது தான் விஸ்வரூபம். படத்தை ஆப்கனிஸ்தான் பின்னணியில் இசுலாமியத் தீவிரவாத உள்ளடக்கத்தோடு எடுத்துள்ளார். முழுமையாக உலகச் சந்தைக்குள் நுழைவதற்கான முயற்சியில் திட்டமிட்டுத் தேர்வு செய்து தொடங்கிய வியாபாரத் திட்டம். இதுவரைத் தமிழக எல்லைக்குள் இயங்கிய அவரது கருத்து நிலையின் நீட்சியாகவே இந்தப் படம் இருக்கும் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. தமிழில் தொழில் நுட்ப ரீதியாகத் திறமைபெற்றுள்ள இயக்குநர்களாலும், பெருஞ்செலவில் வெற்றிப் படங்களுக்கான பங்கீடுகளைக் கலந்து படங்கள் தயாரிக்கிறவர்களாலும் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் பாதங்கங்கள் தான் உருவாக்கப்படுகின்றன. ஜனநாயகப் பாதையிலிருந்து விலகியவர்களாகத் தமிழர்களை ஆக்கும் ஆபத்தான நோக்கங்களை அப்படங்கள் கொண்டிருந்தன. விஸ்வரூபம் அதன் இப்போதைய வரவு என்று சொல்வதோடு தமிழகம் உலக வரைப்படத்திற்குள் நுழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். உலகத் தீவிரவாதத்தோடு தொடர்புடைய பூமியாக தமிழகத்தை ஆக்கிக் காட்டியிருப்பதை வேதனையோடு ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு கமல்ஹாசன் வழியாகக் கிடைத்துள்ள பெருமையெனத் தமிழர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். எல்லாவற்றையும் மார்தட்டிக் கொண்டாடுவதில் தமிழர்கள் சளைப்பதில்லை தானே. 

செவ்வியல் : ஒரு விவாதம்

$
0
0

முகநூலில் எப்போதாவது தொடர் விவாதம் நடப்பதுண்டு. அண்மையில் நான் போட்ட ஒரு முகநூல் பதிவைத் தொடர்ந்து பலரும் பங்கேற்று விவாதித்தனர். அந்த விவாதத்தை  செவ்வியல்: ஒரு விவாதம்எனத் தொகுத்துச் சொல்லலாம் எனத்தோன்றுகிறது. முகநூல் பக்கம் வராதவர்களுக்காக இங்கே தருகிறேன்.
 நான் இரண்டு நாட்களுக்கு முன் படித்த கட்டுரை குறிப்பு ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் தான் வசனம் எழுதிய கடல் படத்தைகாட்சிப்படிமங்கள் வழியாகவே ஆன்மீகமான சிக்கல்களையும் மீட்பையும் சொல்லும் ஒரு செவ்வியல் ஆக்கம்எனக் குறிப்பிட்டிருந்தார். இப்போது பார்த்த முகநூல் குறிப்பொன்றில் தமிழ் ஸ்டுடியோ அருண், ”பருத்திவீரன் போன்ற ஒரு மாபெரும் செவ்வியல் தன்மை வாய்ந்த கலைப்படைப்பை கொடுத்த அமீரிடமிருந்துஎன்று எழுதியிருக்கிறார். பலரும் பட இடங்களில் செவ்வியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்மொழி செவ்வியல் மொழிகளில் ஒன்று என்று குறிப்பிடும் போது இருக்கும் அதே அர்த்தத்தில் தான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களா? என்று கேட்டுக் கொண்டேன். அந்தக் கேள்விக்கு என் மனம் சொன்ன பதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பதாக இருந்தது. குறிப்பான கலைச்சொல்லை அதன் குறிப்பான அர்த்தத்தை விட்டு விட்டு வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தும்போது மொழிக்கு ஊறு விளைவிக்கிறோம் என்ப்து புரியாமல் இருக்கலாம். நமக்கு நமது மொழியைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அக்கறையாவது இருக்க வேண்டாமா? CLASSICISAM - என்ற கலைச்சொல்லின் தமிழ்ச் சொல்லான செவ்வியல் என்பதை ஆகச் சிறந்த, நுட்பமான, செய்நேர்த்தியான, தரமான போன்ற அர்த்தங்களில் பயன்படுத்த விரும்புபவர்களைத் தண்டிக்கச் சட்டமா கொண்டு வரமுடியும்? வருத்தம் தான் பட முடியும்.

Shoba Sakthi இதுக்கே வருத்தப்பட்டால் எப்படி? 23ம் புலிகேசி படத்தை பின்நவீனத்துவ கூறுகள் உள்ள படம் என்று எழுதிய கொடுமையை எல்லாம் அனுபவித்துவிட்டோம். புதுப்பேட்டையைக் கூட யாரோ அவன்கார்ட் சினிமா என்று கிளப்பிவிட்டிருந்தார்கள்.

Leena Manimekalai தமிழ் சினிமா விமர்சனம் எனப்படுவது அபத்தவாதத்தின் அதிகபட்ச அரங்கேற்றம். யாரோ அட்டக்கத்தியையெல்லாம், மாற்று தமிழ் சினிமா, உலக சினிமா, புதிய அலை சினிமா என்றெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்ல, அது முகநூலில் வலம் வந்த கொடுமை நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இப்படி பிதற்றிக்கொண்டிருக்கும் யாரும் தமிழுக்கு வெளியே மாற்று சினிமாவையும் பார்த்ததில்லை, இந்திய சினிமாவின் வரலாறையோ, அதன் மாஸ்டர் ஃபிலிம் மேக்கர்ஸ் பற்றிய அடிப்படை அறிவும் இல்லை, அல்லது சர்வதேச அளவில் புதிய அலை, மூன்றாம் சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூட வாசித்ததுமில்லை.

Mukunthan Kandiah Mukilan தமிழ் மொழியின் சொற்பயன்பாட்டை அதன் தார்ப்பரியத் தன்மையுடன் பேண வழிவகுக்கும் முறைசார் கட்டமைப்பின்மையால் சில காத்திரமான சொற்களைத் திட்டமிட்டே சில அறிவுகச் சிந்தனையாளர்கள் சிதைத்து மலினப்படுத்துகறார்கள். அந்தக் காலத்தில் தமிழில் 'புரட்சி' என்ற சொல் பட்டிருக்கும்பாட்டை தனியாகவே ஆய்வு செய்து பட்டமெடுக்கலாம். தற்போது பொதுப் புத்தியில் புத்தம் புதியதாக அறிமுகமாகியுள்ள 'செவ்வியல்' சொல் அதேவகையில் மலினமாக்கப்படுவதை திட்டமிட்ட செயலாக ஏன் கருத முடியாது?

Ravi Shankar சிலர் தமிழ் மொழியின் மேன்மையை அறியாமல் திரைப்பட விமர்சனங்களில் சிலவற்றை குறிப்பிட்டு இருக்கலாம். அவர்களை மன்னித்து விடலாம். ஆனால் தங்களது தமிழ் ஆற்றலையும், இலக்கிய நாட்டத்தையும் காட்ட பாமரனுக்குப் புரியாத தமிழ் சொல்லாடல்களையும் பயன் படுத்துவோருக்கு கமர்ஷியல் சமாச்சாரங்கள் எல்லாமுமே சோரம் போனவையாகவே தெரிகின்றன என்பதும் உண்மை

Firthouse Rajakumaaren இப்படியான சொல்லாடல்களை பயன்படுத்தி தங்கள் மேதாவித்தனத்தை கட்ட நினைப்பது அது .வேறொன்றும் இல்லை .
Lakshmi Saravanakumar தமிழ் சினிமாவுக்கும் செவ்வியலுக்கும் அல்லது எந்த இயலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் துளியும் தொடர்பில்லை.... தமிழ் சினிமா தொடர்ந்து முன்னிறுத்துவது திருமணம் என்னும் சடங்கை நோக்கின சில சம்பவங்களை மட்டுமே...

Mehala Dharma sevviyal enbathu tamilnatil eppothum arasiyalagave matum parkapattum seyalpaduthapaTUM VARUKIRATHU ELLA IDANGALILUM. CINEMA VILUM KODA.
Athisha Vino செவ்வியல்னுலாம் போட்டு எழுதினாதான் சார் சாதாரண சினிமா விமர்சனமும் இலக்கிய கட்டுரையா மாறும்!
Athisha Vino ”பருத்திவீரன் போன்ற ஒரு மாபெரும் செவ்வியல் தன்மை வாய்ந்த கலைப்படைப்பை கொடுத்த அமீரிடமிருந்து” - இது இலக்கிய கட்டுரை

''
பருத்திவீரன் போன்ற ஒரு சிறந்த திரைப்படத்தை எடுத்த அமீரிடமிருந்து'' - இது சாதா கட்டுரை. 
Athisha Vino - நமக்கு சாதாவே போதுமுங்க....
Subramanian Ravikumar அப்படியெல்லாம் செவ்வியலான பில்டப் கொடுத்தால்தான்... அவரவர் தலைக்கான ஒளிவட்டத் தகடுகளைத் தலைக்குப் பின் செவ்வியலாகப் பொருத்திக் கொள்ளலாம் இல்லையா?

பவணந்தி தேவராசன் · செவ்வியல்,விளிம்பு,யதார்த்தம்,போன்ற சொற்களைப் பயன் படுத்துவோர் ,அறிவாளி போல் நடிப்பவர்கள்.
Nellai Xavier காவல் கோட்டம் என்கிற ஆகப் பெரிய திருட்டு நாவலை, அட்டையிலேயே செவ்வியல் என்று அச்சடித்து தான் வியாபாரம் செய்கிறார்கள்.

Ariara Velan //குறிப்பான கலைச்சொல்லை அதன் குறிப்பான அர்த்தத்தை விட்டு விட்டு வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தும்போது மொழிக்கு ஊறு விளைவிக்கிறோம் என்ப்து புரியாமல் இருக்கலாம். நமக்கு நமது மொழியைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அக்கறையாவது இருக்க வேண்டாமா?// சரியாகச் சொன்னீர்கள் அ.ரா. ஒவ்வொரு சொல்லிற்கும் வரலாறு நுடபமான பொருளும் இருக்கின்றன என்பதனை பலரும் அறிவதும் இல்லை; உணர்வதும் இல்லை. அது சரி, "ஆகப் பெரிய". "ஆகச் சிறந்த" என்பதில் வரும் ஆக என்னும் சொல்லின் பயன்பாட்டு நுட்பம் என்ன?

Siva Sankar ஜெயமோகன் செவ்வியல் என்ற தன்மையை மிகச் சரியாகவே தனது எழுத்துக்களில் (பல பழைய கட்டுரைகளில்) பயன்படுத்தி உள்ளார். தொடர்ந்து செவ்வியல் என்ற தன்மையை குறிப்பதற்கு நமதுசிற்பங்களையும் மாபெரும் கோவில்களின் கட்டிட கலையினையும் சான்றாக கூறுகிறார். எனவே அவர் அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தையும் தெரிந்தே பயன்படுத்துகிறார். எனினும் இங்கு அது எழுதப்படும்போது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற அர்த்தத்திற்கேற்ப தனது படைப்பு எனவே அது செவ்வியல் தன்மையாக தானே இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுதியுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்.

Singaram Swaminathan · this is included in the harms list of jeyamohan because in his case it is a willfull abuse.in the case of tamilstudio arunit could be aoversight.
அருண் தமிழ் ஸ்டுடியோ ராமசாமி சார், நான் செவ்வியல் என்பதன் பொருள் புரிந்தே அதை பயன்படுத்தி இருக்கிறேன். ஒருவர் தன்னுடைய படைப்பையே செவ்வியல் என்று விளிப்பதற்கும், நான் இன்னொருவரின் படைப்பை செவ்வியல் என்று விளிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. செவ்வியல் என்பதன் பொருளை நான் எங்கனம் சிதைத்துள்ளேன், அதை எப்படி தவறாக பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும். இங்கே கருத்து பதிவு செய்திருப்பவர்கள் குறித்து எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை. யார், என்ன என்று எதுவும் தெரியாமல், போகிற போக்கில் தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் எங்கேயும் இருக்கிறது. ஆனால் உங்களைப் பற்றி எனக்கு தெரியும். உங்கள் ஆளுமை எனக்கு தெரியும். செவ்வியல் என்கிற பொருள் சிதைப்பு எப்படி நடந்திருக்கிறது என்று நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

Murugesa Pandian Natarajan ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொல்லைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.என் தமிழ் மொழி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன் என நினைப்பவர்களை விட்டு விடலாம்.செவ்வியல் என்ற சொல் சிலவேளைகளில் செவ்வியலையும் குறிக்கலாம்.அதுதான் மொழி விளையாட்டு.

Ramasamy Alagarsamy அருண் தமிழ் ஸ்டுடியோ - நான் செவ்வியல் என்ற சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் என்று விளக்கிக் காட்டிவிட்டு, “அது எப்படி தவறு அல்லது மொழியைச் சிதைத்தல் ஆகும் எனக் கேட்டிருந்தால் எனக்குப் பதில் எழுதுவது எளிமையாக இருந்திருக்கும். அப்படிச் செய்யாமல் நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டு விட்டதால் விரிவாகத் தான் எழுத வேண்டும். முகநூல் பின்னூட்டமாக அதை எழுதிக் காட்டிவிட முடியுமா எனத் தெரியவில்லை. என்றாலும் பதிலளிக்க முயல்கிறேன். உடனடியாக எழுதிக் காட்ட முடியாது. கொஞ்சம் நேரம் வேண்டும்.நாளை ...

Ramasamy Alagarsamy Ariyara Velan தமிழ் இலக்கணம் ஆக என்பதை இடைச்சொல் என்கிறது. ஆனால் பேச்சு மொழியில் ஆக என்பது அசைநிலையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் good,very good எனச் சொன்னவுடன் எதிரே இருப்பவர் -yes. very very good - எனச் சொல்லிக் கைகுலுக்குவதைப் பார்த்திருக்கலாம். good என்பதே பெயரடை (Adjective) தான். அதற்கு இன்னொரு அடையாக very என்பதை ஒருவர் இட்டுப் பாராட்டும்போது அதனை ஏற்றுக் கொள்பவர், ஆம் very very good என்று சொல்லி ஏற்றுக் கொள்வார். மொழியைப் பேச்சுமொழியாகப் பயன்படுத்தும் போது இப்படிச் சொல்வது அதற்கு மேலும் அழகூட்டுவதாக ஆகிறது. தமிழில் அதைப் போன்றதொரு பயன்பாட்டில் தான் - ஆக என்பதும் இருக்கிறது. சிறந்த என்பது தமிழில் இருக்கும் பெயரடை. அந்தப் பெயரடைக்கே இன்னொரு அடையாக -ஆக- என்பது நிற்கிறது. முழுமையும் சிறந்த, 100 சதவீதமும் சிறந்த என்பதாக அங்கே பொருள் கொள்கிறோம்.

மணி மு. மணிவண்ணன் There is a difference between "classical" and "classic." (using dictionary definition)

Classical refers to "relating to the most artistically developed stage of a civilization". Tamil as a Classical language fits this definition.
தமிழ் ஒரு செம்மொழி என்று சொன்னால் இந்தப் பொருள் வரும்.

Classic refers to "work generally considered to be of the highest rank or excellence, especially one of enduring significance."

சத்யஜித்ரேயின் படங்கள் செவ்வியல் தன்மை வாய்ந்தவை என்றால் இந்தப் பொருள் வரும்.

தற்காலப் படைப்புகள் எவற்றிற்கும் இந்த இரண்டு பொருளில் ஏதும் எப்படிப் பொருந்தும் என்று புரியவில்லை. காலத்தால் நிலைத்து நிற்கும் என்று தற்போது வந்த படைப்பைப் பற்றிச் சொல்வது விளம்பரம். வேறேதும் இல்லை.

Ramasamy Alagarsamy செவ்வியல் (CLASSICISM )தன்மை என்பது அதன் பழைமையிலும் உருவாக்கிக் கொண்ட வரையறைகள் அல்லது அடிப்படைகளைப் பின்பற்றுவதிலும் இருக்கிறது. செவ்வியல் பண்பு அல்லது தன்மை என்பது கலை, இலக்கியத் துறைகளில் அதிகம் உச்சரிக்கப்படும் கலைச்சொல்லாக இருந்தாலும் பல்வேறு அறிவுத் துறைகளுக்கும் பொருந்தக் கூடிய கலைச்சொல்லாகவே இருக்கிறது. தங்கள் துறைகளில் செவ்வியல் பண்பு அல்லது தன்மை செயல்படுவதை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் கண்டுணர்ந்து விவாதித்துள்ளனர்.
ஒன்றை நாம் செவ்வியல் தன்மை கொண்டது எனச் சொல்ல வேண்டும் என்றால், அதன்காலப் பழைமை முக்கியம் என்றாலும் அதிலிருந்து விலகிய பார்வைகளும் உண்டு. அப்படி விலகிய பார்வைகளைப் புதுச் செவ்வியல்களாக (NEW CLASSICISM) வரையறை செய்து விளக்குவதையும் மறுப்பதற்கில்லை. அப்படி உருவாகும் புதுச் செவ்வியல் என்பது உருவாகும் ஒன்றின் வகைமாதிரியாகவும் பின்வருவனவற்றில் மாறாத தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்திருக்க வேண்டும் என வரையறைகள் சொல்கின்றன. இப்படிப் பட்ட வரையறைகளை நான் சொல்லவில்லை. உலக அளவில் கலை இலக்கியங்களைப் பற்றிய சொல்லாடல்களை நிகழ்த்துபவர்கள் சொல்கிறார்கள். நாமும் நமது சொல்லாடல்களும் தமிழுக்குள் இருந்தாலும் உலகப் பொதுநிலைப் போக்கிலிருந்து விலகி நின்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைத்ததால் தான் முகநூலில் இந்தப் பதிவினைப் போட்டேன்.
பழைமையைப் பேணுதல், வரையறைகளைப் பின்பற்றிப் படைப்பை உருவாக்குதல் என்பது செவ்வியல் கலையின் அடிப்படை என்றாகிற போது உடனடி மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் போக்கும் செவ்வியல் படைப்பின் சிறப்பான குணமாக ஆகி விடுகிறது. இந்தக் கூறுகளைக் கவனத்தில் கொண்டு யோசிக்கும்போது கடலும், பருத்தி வீரனும் செவ்வியல் சினிமாக்களாகத் தோன்றவில்லை. கடல் திரைப்படம் நிச்சயம் செவ்வியல் சினிமாவாக ஆக முடியாது. ஏனென்றால் இப்போதுதான் அது உருவாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது. இதன் ஆக்கமுறை, உள்ளடக்கம், அதன் வழியாக உருவாக்கிக் கடத்தப்பட்ட உணர்வுகள், அதன் வழியாகப் பார்வையாளர்களுக்குக் கிடைத்த அனுபவம், வாழ்க்கை விழியங்கள் போன்றனவற்றை உள்வாங்கிக் கொண்ட சில பல சினிமாக்கள் வர வேண்டும். அப்படி வரும்போது கடல் செவ்வியல் படமாக ஆகலாம். கடல் படத்திற்குக் திரைக்கதை- வசனம் உருவாக்கியவர் என்ற வகையில் அதன் சொல்லாடல் விவாதப் பொருள் ஒரு வகையான செவ்வியல் சொல்லாடல் என நினைக்கிறார் என்பதை ஓரளவு விளங்கிக் கொள்கிறேன்.
தீய காரியங்களை அவை தீமையானவைஎன்று தெரிந்தே செய்வதே தீமையின் சாத்தானின் அடையாளம். அத்தீமையை வெற்றி கொள்வது என்பது அது இல்லாமல் அழித்தொழிப்பதில் அடையக்கூடியது இல்லை; மன்னித்து ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது. மன்னிக்கத் தெரிந்த மனிதத்துவம் கடவுளின் பிரதிபிம்பம். அப்பிரதிபிம்பம் அம்மனிதனுக்குப் பின்வரும் மனிதர்களால் பின்பற்றக் கூடிய கடவுளாக ஆகும் சாத்தியங்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லாடலைத் தான் கடல் படத்தின் சொல்லாடலாக ஆக்கியிருக்கிறார் ஜெயமோகன். இச்சொல்லாடல் ஒருவகையில் செவ்வியல் தன்மை கொண்டதுதான். ஆனால் பட உருவாக்கத்திலும் சொல்முறையிலும் பார்வையாளர்களோடு உறவு கொள்ளும் முறையிலும் செவ்வியல் சினிமாக்கள் பின்பற்றிய கூறுகளைப் பின்பற்றாமல் விலகிச் செல்வதோடு, பாத்திர உருவாக்கத்திலும் கூட செவ்வியல் தன்மைகளிலிருந்து விலகியே இருக்கிறது. ஒரு செவ்வியல் சினிமாவில் காட்சித் திளைப்பை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் பாடல் காட்சிகளுக்காக மைய ஓட்டத்திலிருந்து விலகிச் சென்று திரும்பவும் வந்து ஒன்றிணைவதற்கு இடம் ஏது? அப்படி விலக வைத்து வெளியே கொண்டு போய்த் திரும்பவும் கதைப்போக்கோடு இணைக்கும் மணிரத்னத்தின் பொது அடையாளம் இதிலும் இடம் பெற்றுத்தானே உள்ளது.
கடல் படத்தைப் பற்றிய பேச்சு போதும். பருத்தி வீரனுக்கு வருவோம். ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்த பருத்தி வீரன் முன் வைத்த செவ்வியல் விழுமியம் என்ன? தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட வட்டாரக் கிராம வாழ்க்கையின் ஒரு வகை யதார்த்தத்தை கொஞ்சம் குரூரமாகக் காட்சிப் படுத்திய படம் பருத்தி வீரன். அந்த வகையில் கவனம் பெற்ற படம். ஆனால் அதனை வகைமாதிரியாகக் கொண்டு எத்தனை தமிழ்ச் சினிமாக்கள் வந்துள்ளன?.. தமிழ்ச் சினிமாவில் ஒரு இயக்குநரின் படத்திற்கு அவரது அடுத்த படம் தான் நீட்சி. பின்னோடிகளின் படங்களில் தாக்கம் செய்த தமிழ் இயக்குநர் என யாராவது தென்படுகிறார்களா? என்று தேடத்தான் வேண்டியுள்ளது. பாலு மகேந்திரா கூட அவரது உதவி இயக்குநர்களுக்கு பாடங்கற்றுத் தந்த ஆசிரியராக மட்டுமே அறியப்படுகிறார். அவரது ஏதாவது ஒரு படத்தினை வகை மாதிரியாகக் கொண்டு இவர் படம் இயக்கியுள்ளார் எனச் சுட்டிக் காட்ட முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஏனென்றால் நமது காலம். தனித்துவத்தின் காலம். ஒரு படைப்பாளி தனது முந்திய படைப்பில் உருவாக்கிய அடையாளத்தை அடுத்த படைப்பில் அழிக்க வேண்டும் என நினைக்கும் காலத்தில் வாழ்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செவ்வியல் படைப்பை உருவாக்க முனைகிறான் என்றால் மாற்றத்தை மறுதலிக்க நினைக்கிறான் என்று அர்த்தம். எனவே செவ்வியல் கலைச்சொல்லை இந்தக் காலகட்டத்துப் படைப்புகளோடு சேர்த்துச் சொல்வதற்குக் கொஞ்சம் தயக்கம் வேண்டும் என நினைக்கிறேன்.
 இன்னும் சில குறிப்புகள்:
1.உலகத்தில் உள்ள மொழிகளின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் இருப்பு, பற்றிய ஆய்வுகளைச் செய்யும் மொழிகள் பற்றிய உயராய்வு நிறுவனங்கள் தமிழைச் செவ்வியல் மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளன. பழைமையையும் தரநிலையையும் தாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட செவ்வியல் மொழிகள் மொத்தம் 9. அவை. 1. சுமேரியன், 2, எகிப்தியன், 3. பாபிலோனியன். 4.ஹீப்ரு,5.சீனம்,6. கிரேக்கம் 7.லத்தீன் 8.சமஸ்கிருதம். 9. தமிழ். இவற்றுள் முதல் மூன்றும் வழக்கில் இல்லை. சீனமும் தமிழும் மட்டுமே இன்றும் மக்களின் மொழியாக பேச்சு மொழியாக இருக்கின்றன. இச்செவ்வியல் மொழிகளின் இலக்கணக் கட்டமைப்பையும் சொல் தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு பல மொழிகள் தோன்றின. அப்படித் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன என்பதாலேயே அவை ஒவ்வொன்றும் செவ்வியல் மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

2.
மொழியியல் அறிஞர்கள் உரிய காரணங்களுக்காகச் செவ்வியல் மொழி எனத் தமிழைச் சொன்னால், நமது அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எல்லா வரையறைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டுசெம்மொழிஎன எளிமைப் படுத்தி பெயர் சூட்டி மகிழ்கின்றனர். செவ்வியல் மொழி என்ற கலைச்சொல் தரும் அர்த்தத்தைசெம்மொழிஎன்ற பயன்பாட்டு வாதச் சொல்லாட்சி தராது என்பதைச் சொல்லி ஏற்கச் செய்யும் வல்லமையோடு அறிஞர்கள் குழாம் இல்லை என்பது அண்மைக்கால வரலாறு.
தமிழின் செவ்வியல் இலக்கியங்கள் என்பன சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் மட்டுமே. ஆனால் அறிஞர்கள் கூடி அமர்ந்த எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் 15 ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களைச் செம்மொழி இலக்கியங்கள் என ஏற்றுக் கொண்டு செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் நமது ரத்தத்திலேயே இல்லை.
சங்க இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக நிறுவி ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டுள்ளது போல, பாரதிதாசனை முன்னத்தி ஏராகக் கொண்டு உருவான தமிழியக்கக் கவிதைப் போக்கைப் புதுச் செவ்வியல் இலக்கியங்களாகச் சொல்ல முடியும். பிறிதொரு முறை அதைப் பற்றிப் பேசலாம்.

Perumal Murugan புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது அவற்றிற்குப் பொருளை நாம்தானே ஏற்றுகிறோம். செவ்வியல் மொழி என்றால் இரண்டு சொற்கள் வருகின்றன. செம்மொழி என்பது பண்புத்தொகை. ஒருசொல் நீர்மைத்து. இப்படிப்பட்டவையே கலைச்சொல்லாக அமைவது நல்லது.

Subramanian Ravikumar செவ்வியல் என்பது பற்றிய விவாதத்தை வெறும் இலக்கணவாதமாக்க வேண்டாம். மேலும் செவ்வியல் என்பதைத் தொழில் நுட்பம் சார்ந்த சொல்லாடலாக்குகிறோமா அல்லது, செவ்வியல் என்று கூறப்படும் மக்களின் பண்பாடு சார்ந்த சொல்லாடலாக்குகிறோமா? செவ்வியல் என்பது குறிப்பாக நிலப்பிரபுத்துவக்காலத்துப் பண்பாட்டைக் கொண்டது என்பது எனது கருத்து. அந்தக் காலகட்டத்தின் கலைகளில், 

எதிரெதிர் சமன்பாட்டுக்கூறுகள் அதிகம். அது கட்டிடம் சிற்பம் ஓவியம் 

இலக்கியம் எதுவானாலும். ஆனால் உள்ளடக்கம் என்பதோ, நிலப்பிரபுத்துவ 

விழுமியங்களின் விதவிதமான வெளிப்பாடாக இருக்கும். இது உலகம் 

முழுக்கப் பொதுவான நடைமுறை... செவ்வியல் பற்றிய விவாதத்தை அந்த 

அர்த்தத்தில் நகர்த்தினால் நன்றாக இருக்கும். அல்லது அர்த்தமுள்ளதாக 

இருக்கும்....

Ramasamy Alagarsamy Perumal Murugan புதிதாக உருவாக்கும்போது பொருளை நாம் தான் ஏற்றுகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ச் செவ்வியல் மொழிகளில் ஒன்றாகக் கருதத் தக்கது என்பது நாம் கண்டுபிடித்து முன் வைத்ததல்ல. தமிழ் செம்மொழியாக ஆக்கப்படுவதில்லை. அது செவ்வியல் மொழியாக இருந்தது...See More
Ramasamy Alagarsamy Subramanian Ravikumarஎனது பதிவைக் கலைச்சொல் பயன்பாடு என்பதாகத் தான் தொடங்கினேன். அதன் நீட்சியாகக் கேட்கப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது எனது கடமையும் கூட.என்றாலும் என்னால் முடிந்த அளவுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளக்கங்களையும் தந்துள்ளேன். நீங்கள் அதன் எல்லையை விரிவாக்கலாம் என்பது எனது வேண்டுகோள்

வார்சாவில் இந்தியக் கொண்டாட்டங்கள்

$
0
0



இந்தியக் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போவதாக முகநூல் குழுமம் சொல்லியது. போலந்தில் நான் உறுப்பினராக இருக்கும் ஒருசில முகநூல் குழுமங்களில் ஒன்று. “ வார்சாவில் வாழும் இந்தியர்கள்” என்னும் அந்தக் குழுமத்தில் வார்சாவுக்கு வருவதற்கு முன்பே உறுப்பினராக ஆகி விட்டுத்தான் வந்தேன். இந்தியாவிலிருந்து போலந்துக்குக் கிளம்பும் நாள் குறிக்கப் பட்டவுடன் போலந்து, வார்சாஎனப் பெயரிட்டு கூகுள், முகநூல் எனத் தேடிய போது கிடைத்த பல விவரங்களில் இந்தக் குழுவும் ஒன்று.
தமிழ் மொழி கற்பிக்கும் பேராசிரியராக வார்சாவுக்கு வரப்போகிறேன் என்ற தகவலைச் சொல்லி அந்தக் குழுவில் என்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட போது சென்னையைச் சேர்ந்த பிரஜித் ராதாகிருஷ்ணன் என்னும் இளைஞர் உடனடியாகத் தொடர்பில் வந்து இணைந்து கொண்டார். அவர் சிட்டி வங்கியின் ஊழியர். இங்குள்ள சிட்டி வங்கியின் பல்வேறு கிளைகளில் இந்தியர்கள் பலரும் வேலை செய்கிறார்கள். வங்கியில் வேலை என்றாலும் மக்களைச் சந்திக்கும் பகுதியில் பணியாற்றாமல் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிரிவுகளில் தான் அவர்கள் பணி. பிரஜித் முதலில் தொடர்பு கொண்டார் என்றாலும் வார்சாவில் அவரை நேரில் சந்தித்தது  ஒரு வருடத்துக்குப் பிறகுதான். அவரைச் சந்திப்பதற்கு முன்பே அவரோடு சிட்டி வங்கியில் பணியாற்றும் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வார்சாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் இந்தியர்கள் என்ற பொது அடையாளத்தில் சந்திக்கும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை. இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம் வழியாக வரும் நடனக்குழு, திரைப்பட விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என கிடைக்கும் வாய்ப்பில் தகவல் தெரிவித்துச் சந்தித்துக் கொள்வோம். இந்திய போலந்து நட்புறவுக் கழகம் நடத்தப் போகும் இந்தியக் கொண்டாட்டம் பற்றிய தகவலைச் சொன்னது பாலாஜி ராம் என்னும் இன்னொரு சிட்டி வங்கிப் பணியாளர்.. தமிழ் நாட்டில் இருந்தவரை கொண்டாட்டங்கள் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கு ஆர்வத்தோடு போனதில்லை. ஆனால் வெளிநாட்டில் வாழும்போது நமது தேச அடையாளமும், மொழி அடையாளமும் நெருக்கமாகி விடுகின்றன. முழுமையாக நம் கருத்தோடு ஒத்துப் போகாத பலரும் நட்பு வட்டத்திற்குள் வருவதைத் தடுக்க நினைப்பதில்லை. பார்ப்பவர்களிடமெல்லாம் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதும் வாங்குவதும் உடனடியாக நடந்து விடும். அதே போல நடக்கப் போகும் கொண்டாட்ட நிகழ்வுகளை மனம் ஒப்பவில்லை என்றாலும் பார்த்துக் கொண்டிருப்பதும் ரசிக்கத் தொடங்குவதும் நிகழ்ந்து விடுகிறது.
அப்படித்தான் மூன்று மாதங்களுக்கு முன்னாள் வந்த நடனக்குழுவின் நடனத்தைப் பார்த்து முடித்தேன். வார்சா நகரத்தின் மைய இடமான பண்பாட்டு மாளிகையின் முக்கிய அரங்கில் அந்த நடன நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இந்திய அரசின் கலை பண்பாட்டுப் பரிவர்த்தனைப் பிரிவு. போலந்துக்கான இந்திய தூதர் அரங்கில் நின்று ஒவ்வொரு வரையும் வரவேற்றுப் பேசி உட்கார வைத்துக் கொண்டிருந்தார். அதன் ஒருங்கிணைப்பாளராக வந்திருந்தவர் இந்திய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த பிரணாப் முகர்ஜியின் உறவுப் பெண். மருமகளா? மகளா? என்பது நினைவில் இல்லை. நேர்த்தியற்ற நடனம் என்றாலும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பு நடந்த அற்புதமான செனாய் இசைக் கச்சேரி நகரின் முக்கிய இடத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் போல்ஸ்கி ரேடியோவின் அரங்கில் போதுமான அரங்கக் கட்டுமானங்கள் கூடச் செய்யப்படாமல் நடந்தது. அதையும் முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்லதோ கெட்டதோ நமது நாட்டுக் கலைகள் என மனம் சமாதானம் செய்து கொள்கிறது.
மனம் விரும்பிப் பார்த்த நிகழ்வும் உண்டு.  2012 நவம்பர், 5 முதல் 10 வரை நடத்தப் பெற்ற இந்தியத்திரைப்பட விழா கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப் பெற்றது. குழந்தைகள் படங்கள், ஸ்மீதா படேலை நினைத்துக் கொள்ளும் படங்கள் என சிறப்பு நிகழ்வுகளும் இடம் பிடித்திருந்தன. நடக்க இருந்த  இடம் கினா குல்சரா. போலந்து அதிபரின் மாளிக்கைக்கு நேர் எதிரே இருக்கும் அந்த இடத்தைப் பலதடவை நடந்து கடந்திருக்கிறேன். பல்கலைக்கழகத்திலிருந்து அரைகிலோ மீட்டார் தான் இருக்கும். தொடக்க விழா மாலை ஏழு மணி என்றிருந்தது. ஆனால் இந்திப் பேராசிரியர் 5 மணி எனச் சொல்ல 4.30க்கே போய் விட்டோம். இரண்டு மணி நேரத்தைக் கழிப்பதற்காக இண்ட்ரகோ, ஷ்லாட் தெரசா எனச் சுற்றி வந்தோம். தொடக்கவிழாவிற்கு இந்தியச் சினிமாவுக்கு அடையாளங்கள் உருவாக்கிய இயக்குநர்களில் ஒருவரான கோவிந்த் நிஹாலனி வந்திருந்தார். தமிழ்ப் பேராசிரியர் ஆனால் சினிமாவைப் பற்றி நான்கு நூல்கள் எழுதி இருக்கிறேன் எனச் சொன்ன போது கைகளைப் பற்றிக் கொண்டார். ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்களா? எனக் கேட்ட போது கொஞ்சம் கூச்சமாகப் போய் விட்டது. இல்லை என்று சொல்லி விட்டு அவரது படங்களில் நான் பார்த்த படங்களுக்குள் இழுத்துக் கொண்டேன். ஸ்மிதா படேலின் அச்சு அசலாக இருந்த அவரது தங்கை மணிஷா படேல் வந்திருந்தாள். அவளது இழப்பையும் தனது குடும்பம் இந்திய சினிமாவுக்குள் இருப்பதையும் சிறிய உரையில் சொல்லி முடித்தாள். ஐந்து நாள் திரையிடல்களில் ஐந்து படங்கள் தான் பார்க்க முடிந்தது. பகலில் வகுப்புகள் இருந்ததால் இரவுக் காட்சிகள் மட்டுமே வாய்த்தது.
இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போகும் இந்திய நாள் நிகழ்வில் என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற விவரம் எதுவும் இல்லை. இந்திய தூதரகத்திற்கு இந்நிகழ்வோடு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது. தனியார் நிறுவனங்கள் நிதியளிப்புகள் செய்வதாக விளம்பரங்கள் சொல்லின. இங்குள்ள இந்தியர்கள் சிலரிடம் சொன்ன போது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் நான் போய்ப் பார்க்க வேண்டும் என நினத்தேன். அரசாங்கம் இந்தியாவை எப்படிக் காட்டுகிறது என்பதைவிட இந்தியர்கள் இங்கு என்ன மாதிரி தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள் எனப் பார்க்கும் ஆசை தான் காரணம். முந்தின நாள் வரை பனிப்பொழிவு இருந்தது. அன்று பனியோ மழையோ இல்லை; ஆனால் காற்று இருந்தது.  தகவல் குறிப்பில் இருந்த நிதி நல்கைக் குழுமங்களின் விளம்பரச் சின்னங்களைக் கொண்டு மனம் ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொண்டது. நம்மூரில் நடக்கும் ஒரு கண்காட்சி போல இருக்கலாம். அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் அதன் சாரமான, விற்பனை, உணவு, கொண்டாட்டங்கள் இருக்கலாம் என அந்தக் கற்பிதம் சொன்னது. அதில் கலந்து கொள்வதோடு ஒரு நேர உணவை   இந்திய ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவது என முடிவும் செய்தும் விட்டோம். ஒருவேளை அங்கேயே இந்திய உணவகங்கள் கடை விரித்திருந்தால் அவற்றில் சாப்பிடலாம் அல்லது வழக்கமாகப் போகும் இந்திய உணவகம் ஒன்றுக்குப் போகலாம் என முடிவு செய்து முதலில் விழா இடத்துக்குப் பயணமானோம்.
கையில் 20 உல்-ரொகித்னிக்கா,போல் மொக்கோட்டோவிஸ்கிஎன்ற முகவரி இருந்தது. போல் மொக்கோட்டோவிஸ்கிக்கு மெட்ரோவில் போய் இறங்கத் தெரியும். பல தடவை மெட்ரோவில் போயிருக்கிறேன். போல் மொகட்டோவிலும் இறங்கியிருக்கிறேன் என்பதால் சிக்கல் எதுவும் இருக்காது. கிளம்பியபோது பிற்பகல் 4 மணி. மொகட்டொவிஸ்கியில் இறங்கி உல்-ரொகித்னிக்காதெருவுக்கு வழி கேட்ட போது நான்கு பேர் தெரியாது எனச் சொல்லி விட்டனர். என்றார். வார்சாவில் முப்பது வயதுக்கு மேலே இருப்பவர்கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலத்தில் விசாரிப்பவர்களுக்கு தோள்பட்டையைக் குலுக்குவார்கள். அதை “ எனக்கு எதுவும் தெரியாது” எனப் புரிந்து கொள்ள வேண்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்வார்கள். தெரியவில்லை என்றால் தயங்காமல் தெரியாது என்று சொல்லி விலகிக் கொள்வார்கள். ஐந்தாவதாக ஒருவர் நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்த்திசையில் போக வேண்டும் என்றார்
பெருஞ்சாலையைத் தாண்டி ஒரு பெரிய கட்டடத்தின் முன்னால் நின்று இருசக்கர வாகனத்தில் கிளம்ப இருந்தவரை அணுகி விசாரித்தேன். அவர் வாகனத்தில் வார்சாவின் முக்கிய கூரியர் நிறுவனத்தின் பெயர் இருந்தது. அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் பதிலை எதிர்பார்த்தேன். பதில் தெரிந்திருந்தது; ஆனால் சொல்ல முடியவில்லை. மொழிப்பிரச்சினை. ”என் நண்பர் வருவார். ஓரிரண்டு நிமிடம் காத்திரு” என்பதான பதிலைப் போல்ஸ்கியில் சொல்லிக் காக்கச் சொன்னதாகப் புரிந்து கொண்டேன். . எனது புரிதல் சரியாகவே இருந்தது. இரண்டு நிமிடத்தில் வந்தவர் போல்ஸ்கியும் ஆங்கிலமும் கலந்து பேசினார். தொடர்ந்து முன்னே போங்கள். ஐந்து குறுக்குச் சாலைகளுக்குப் பின் இடது பக்கம் இருக்கிறது எனச் சொன்னதாகப் புரிந்து கொண்டு முன்னேறினோம். அவர் சொல்லியபடி போன போது ஐந்து குறுக்குச் சாலைகளுக்குப் பின் ஒரு பெருஞ்சாலை வந்தது.  அந்தச் சாலையின் பெயர் உல்-ரொகித்னிக்காஅல்ல.  உல்என்றால் குறுக்குச் சாலை அல்லது சின்னத் தெரு என்பதும். அல்என்றால் பெரிய அல்லது நெடுஞ்சாலை என்பதும் தெரியும். அந்தச் சாலையின் பெயர் அல் எனத் தொடங்கி நீண்டது
இடது புறத்தில்  ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. அதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். அங்கு பேருந்து ஏறி குறிப்பிட்ட இடத்துக்குப் போகலாம் எனச் சொல்லியிருப்பார் என ஊகித்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்குப் போனேன். போல்ஸ்கியும் ஆங்கிலமும் கலந்த சொன்னதைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று இப்போது புரிந்தது. திரும்பவும் அந்த நிறுத்தத்தில் இருப்பவர்களிடம் முகவரியைக் காட்டி விசாரிக்கத் தொடங்கினேன். இரண்டு பேர் தோள்பட்டையைக் குலுக்கி விட்டனர்.  இன்னொருவர் எனக்குத் தெரியாது என்றார். பிறகு அவரே பக்கத்தில் இருந்த பேரிளம்பெண்ணிடம் அழைத்துச் சென்று காட்டிக் கேட்டார். மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசித்துப் பார்த்த அந்தப் பேரிளம்பெண், ”இந்த இடம் இந்தப் பகுதியில் தான் இருக்கிறது, ஆனால் அந்த குறுக்குச் சாலை எங்கே இருக்கிறது எனச் சொல்ல முடியவில்லை என்றார். கொஞ்சம் தேடிப் பாருங்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
தேடுவதற்கு எந்தப் பக்கம் செல்லலாம்? எதிரிலா? இடது புறமா? வலது புறமா? என யோசிக்காமல் முன்னோக்கிப் போனோம். அங்கே குடியிருப்புகள் தான் இருந்தன. பொதுவழிகள் இல்லை என்பதன் அடையாளமாகத் தடுப்புகள் நின்றன. வலது புறம் திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் பனிக்கட்டிக்குள் மரங்கள் மட்டுமே தெரிந்தன. பெரிய மைதானம் போலத் தென்பட்டது. தெருவிளக்குகளும் எரியத் தொடங்கி விட்டன.  திரும்பி வீட்டிற்குச் சென்று விடலாமா என யோசனை கிளம்பினாலும் தேடுவதை நிறுத்தவில்லை. குறுக்குச் சந்துகளின் முனைகளில் பெயர்களை வாசித்துப் பார்ப்பேன். கையில் இருக்கும் தகவலைப் பார்ப்பேன். தேடுவதற்குப் பலன் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. திரும்பவும் பேருந்து நிறுத்தம் நோக்கிச் செல்லும் வழியில் பக்கத்தில் இருந்த இளைஞரிடம் முகவரியைக் காட்டி விசாரித்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆனால் இடங்கள் பற்றிய அறிவு இல்லை. வேறு பகுதியிலிருந்து ஏதோ ஒரு வேலை காரணமாக போல் மொகட்ட்டோவுக்கு வந்தவர். ஆனால் புத்திசாலி. உடனடியாகத் தனது நவீன கைபேசியில் இருக்கும் வரைபடத்திற்குள் நுழைந்தார். முகவரியைத் தட்டினார். அது நின்ற இடத்திலிருந்து செல்ல வேண்டிய பாதையைக் காட்டியது. தூரத்தில் கார்கள் மட்டும் திரும்பும் சாலையைக் காட்டி அதில் செல்லுங்கள்; அதன் முடிவில் வலது புறம் திரும்புங்கள்.  அங்கே தான் அந்த இடம் இருக்கிறது என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நடக்கத் தொடங்கினோம்.
மணி ஐந்தைத் தாண்டி விட்டது.– 3 செண்டிக்ரேட் பனியில் அரைமணிநேரம் அலைந்ததின் களைப்பு. கன்னங்களும் கைகளும் பனியை உணர்ந்தாலும் அடுக்கடுக்காக அணிந்த ஆடைகளால் உடல் வியர்க்கிறது என்பதையும் உணர முடிந்தது. அவர் சொன்ன வழித்தடத்தில் கார்கள் மட்டும் போவதால் நடப்பதற்காகப் பனிக்கட்டிகளை விலக்கி நடைபாதை உருவாக்கப்படவில்லை. பனியின் மீதுதான் நடந்து போனோம். வலதுபுறம் திரும்பிப் பார்த்த போது கொடிகளுடனும் பலவித வண்ண விளக்குகளுடன் ஒரு நட்சத்திர விடுதி தனியாக இருந்தது. அதன் அருகில் பேருந்து நிறுத்தமும் இருந்தது. அந்த நட்சத்திர விடுதியில் ஒருவேளை நடக்குமோ எனப் பார்த்தால் இந்திய தேசியக் கொடியோ, இந்திய அடையாளங்களோ எதுவும் இல்லை. பேருந்து நிறுத்தத்தில் நின்று சிலரிடம் விசாரித்த போது ஒருவருக்கும் அந்தக் குறுக்குச் சாலை தெரிந்திருக்கவில்லை. நட்சத்திர விடுதிக்குப் பின்னால் பனியால் மூடப்பட்ட மைதானத்தின் நடுவில் ஒரு கூடாரம் போல ஒன்று தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கலாமா என்று தோன்றினாலும், அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒருவரும் பதில் சொல்லவில்லை
வீட்டுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. முடிவு செய்தபடி நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்திய உணவகம் போய் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பலாம் எனக் கிளம்பிப் பேருந்தில் ஏறி விட்டோம். போகும்போதே இன்னொரு யோசனையும் வந்து விட்டது. நகர் மையத்திலிருந்து வாடகைக்கார் பிடித்து முகவரியைக் கொடுத்தால் சரியான இடத்தில் இறக்கிவிடும் வாய்ப்பு உண்டு என்பதுதான் அந்த யோசனை. நகர் மையத்தில் இறங்கியவுடன் யோசனையை நடைமுறைப் படுத்தினேன். வாடகைக்கார் ஓட்டுநரிடம் முகவரியைக் காட்டியவுடன் அந்த இடம் ஒரு உணவு விடுதி என்று சொன்னார். இருக்கலாம்; அங்கே இந்திய விழா நடக்கிறது; அங்கே போகவேண்டும் என்றேன். காரைக் கிளப்புவதற்கு முன் என்னிடம் இருந்த முகவரியை வாங்கி அவரது காரில் இருக்கும் திசைகாட்டியில் பதிவு செய்து விட்டுக் கிளப்பினார். கார் நாங்கள் வந்த பேருந்து தடத்திலேயே எதிர்த்திசையில் போனது.  நாங்கள் ஏறிய பேருந்து நிறுத்தத்துக்கும் வந்து விட்டது. அதைத் தாண்டியது. அதிகம் போகவில்லை. 100 மீட்டர் தூரம் தாண்டி இடது புறம் திரும்பி பனியால் மூடப்பட்ட மைதானத்திற்குள் நுழைந்தார். கூடாரம் போல மைதானத்தில் இருந்த அந்த இடம் நோக்கியே கார் போனது. 300 மீட்டர் தூரம் போன உடன் பெரிய யானை ஒன்று விளக்குகளால் உருவாக்கப்பட்டு வரவேற்புக் காட்டியது. அதன் கீழே இந்திய போலந்து நட்புறக் கழகம் என்பது ஆங்கிலத்தில் எழுதப் பெற்றிருந்தது.. அங்கேயே இறங்கிக் கொள்ளச் சொன்னார். 500 மீட்டர் தூரத்தை நடந்து கடக்காமல் பத்துக்கிலோ மீட்டர் பேருந்திலும் அதே தூரத்தைக் காரிலும் பயணம் செய்து வந்து சேர்ந்த போது சிரிப்புத் தான் வந்தது. ஆங்கிலம் உபயோகப்படாத நாடுகளில் இதுதான் பிரச்சினை. எங்கும் ஆங்கில வார்த்தைகளை எழுத மாட்டார்கள். ஐரோப்பிய மொழிகள் ரோமானிய லிபியையே பயன்படுத்துகின்றன என்றாலும் உச்சரிப்பு முழுமையும் வேறாக இருக்கும். ஆங்கிலத்தில் அடுத்தடுத்து இடம் பெறும் உயிரும் மெய்யும் போல அல்லாமல் விதம் விதமாக மெய்கள் இணைந்து நிற்கும் சொற்களைச் சொல்வது தமிழர்களுக்குக் கடினம். தமிழில் உயிருக்கு அடுத்து மெய், மெய்யிக்கு அடுத்த உயிர் என அமையும் சொற்களே அதிகம். மெய்கள் இரட்டிக்குமே ஒழிய உயிர்கள் இரட்டிக்காது. அங்கிருந்து கூடாரம் போல உள்ள அந்த இடத்திற்கு நடந்து தான் போகவேண்டும். கார் வாடகையாக 25 ஜுலாட்டி கொடுத்து அனுப்பி விட்டு நடந்தோம். என்னிடமும் மனைவியிடமும் நகரத்தில் எங்கும் செல்ல வாகன அனுமதி அட்டை இருந்த போதிலும் கூடுதல் செலவாக கார் வாடகை தர வேண்டியதாகி விட்டது.
கூடாரமிட்ட அந்த இடம் போல் லோலக் என்பதாக எழுதப்பெற்றிருந்தது. நெருங்கிச் செல்லச் செல்ல இந்திய அடையாளங்கள் தெரிந்தன. வாசலில் வட இந்திய ஆண் முகங்கள். உள்ளே நுழைந்த போது இந்திப் பாடலின் ஓசைகள் கேட்டன. மையமாக உயர்த்தப் பெற்ற கூடாரத்தின் நடுவில் மேடை அமைக்கப்பெற்று இடதுபுறமும் வலதுபுறமும் நாற்காலிகள் விரிந்திருந்தன. மேசைகளில் மது ஊற்றிய குடுவைகளும் காலி செய்த பாட்டில்களும் சிற்றுண்டிகளும். கூட்டம் நெருக்கமாக மேடையின் முன்னால் நின்றபடி அசைந்து கொண்டிருந்தது. மேடையில் ஒருத்தி இந்தி சினிமா பாடல் ஒன்றுக்கு ஆடிக் கொண்டிருந்தாள். வாளிப்பான உடல். அவள் இந்தியப் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. தோலின் நிறம் போலந்தாகவும் கூந்தலின் நிறம் இந்தியாவாகவும் இருந்தது. ஆடையணிகள் இந்திப் படத்தில் நடனக் காட்சிக்கான ஆடைகள்.  லாவகமாக ஆடினாள். துடிக்கும் உடலின் அசைவுகள். அசையும் மெல்லிய துகில் மூடிய கரங்கள் அழைத்து அழைத்துத் திரும்பின. அவள் ஆடி முடித்தபோது கரவொலிகள் எழுந்தன.
அடுத்து நடக்கப் போகும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு இந்தியிலும் போல்ஸ்கியிலுமாக ஒலித்தது. மேசைகள் எல்லாம் உணவு விடுதியின் கண்ணியத்தோடு இருந்தன. பக்கத்தில் இருந்த மதுக் கூடத்திலிருந்து வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்து சாப்பிடும் வகையான ஏற்பாடு. நாற்காலிகளுக்குப் பின்னால் இந்தியப் பொருட்கள் விற்கும் சிறுசிறு கடைகள். வண்ணவண்ணமாக ஜொலிக்கும் இந்தியப் பொம்மைகள்; பைகள்; வளையல்கள்;பெண்களின் ஆடைகளுக்கான துணிகள் என விரிக்கப் பெற்றிந்தன. உடம்பில் ஹென்னா எழுதிக் கொள்ள பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேல் போலந்துக்காரர்கள் தான். அடுத்து ஒரு பாடலுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் ஆடினர். ஆடியவர்கள் இருவரும் போலந்துப் பெண்கள் தான். அடுத்தொரு செவ்வியல் நடனம். அதற்குப் பின் ஒரு பேச்சு. இந்தி, ஆங்கிலம், போல்ஸ்கி எனத் தாவிக் கொண்டிருந்த பேச்சு. அந்த முகம் கராத்தே ஹுசைனியின் சாயலில் இருந்தது. அவரது சகோதரனே தான். அவர் இங்கே முக்கியப் பிரமுகர் என்றும் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நடத்துகிறார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.  ஹுசைனி எனது கல்லூரிக்கால நண்பர். நண்பர் என்பதை விட இணைந்து வேலை செய்தவர்கள் என்பதுதான் சரியானது. அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் இதழான குரலின் ஆங்கிலப் பகுதி ஆசிரியர் அவர். நான் தமிழ்ப் பகுதி ஆசிரியர். அவ்வளவு தான் எங்கள் பழக்கம். அவர் பேச்சு முடிந்ததும் நட்புக்கு அடையாளமாகக் கயிறு கட்டும் அறிவிப்பு. கொஞ்சம் இந்தி. அதிகம் போல்ஸ்கி என பேச்சுச் சத்தம். இங்கும் அங்கும் அலையும் பெண்களும் ஆண்களும் உரசும் மதுக் கோப்பைகளுக்குள் வெளிப்பனியை விரட்டிக் கொண்டனர். உயர்த்தப் பெற்ற கூடாரத்திற்குள் இந்திய விழா இந்திப் படப் பாடல்களுக்கான ஆடல் பாடல் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டிருந்தன. இசை மட்டுமே இந்தியச் சினிமாக்களின் இசை. தமிழ்ச் சினிமாவில் கேட்ட இசையும் பிரபுதேவாவின் நடனக் கோர்வையும் இந்திச் சினிமாவின் அடையாளத்தோடு உட்கார வைத்தன.
.வார்சா நகரத்துக் கேளிக்கை விடுதிகளில் நடக்கும் நடனத்திலிருந்து பெரிதும் வேறுபடவில்லை. வார இறுதி நாட்களில் நடனக் கேளிக்கையோடு இயங்கும் மதுக்கூடங்களுக்குப் பணம் கொடுத்துப் போவது போலத்தான் இங்கும் வந்து குழுமியிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அலுப்பு உண்டாகி விட்டது என்றாலும் இந்திய முகங்களைப் பார்க்கும் ஆசையில் இரண்டு மணி நேரத்தைக் கடந்திருந்தோம். சொந்த நாட்டில் ஒதுக்கி வைத்தன எல்லாம் அந்நிய தேசத்தில் நம்முடையதாகத் தோன்றும் மாயம் கொஞ்சம் புரியவில்லை

தேடுதல்…

$
0
0

இசையை நகர்வுப்படங்களாக மாற்றுவதையே
முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்நாடகம்,
சூழல் சார்ந்த உயர்வை உண்டாக்கவே விரும்புகிறது.
இதில் இடம்பெறும் நடிப்புச் செயல்களோ வார்த்தைகளோ இசையை
மீறியதாக இல்லாமல் ஒத்திசைந்தனவாக அமைய வேண்டும்.
இதற்காகத் தடித்த கம்பி வாத்தியங்களின் –சரோட்அல்லது
தில்ரூபாவின் ராகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அந்த ராகங்களும் பல்தள வெளிப்பாட்டு முறையிலான
ஸ்டீரியோ மூலம் வெளிவர வேண்டும்.
மற்ற நாடகங்களில் பின்னணியுணர்வை உண்டாக்க
இசை பயன்படுவது போல இதில் இல்லை

ராகம்: தர்பாரி கனடா
தாளம்: திரி தாளம்
கருவிகள்: சரோட், தபேலா

தேடுதல்
பாத்திரங்கள்:
முதியவன்      – நாற்பத்தி ஐந்தினைக் கடந்தவன். ஆனால்   
                  முதியவனாகத் தோற்றம் தருகிறான்
இளையவன்    – இருபத்தியிரண்டையொட்டிய வயது
பெண்          - முப்பதினையொட்டியவள்
குழுவினர்      - ஐந்துபேர் கொண்ட இக்குழுவில் இரண்டு பெண்கள்,  
                 மூன்று ஆண்கள். தீர்மானிக்க முடியாத வயதினர்.   
                 இளமையானவர்கள். முதல் மூன்று பேரைவிட உயரம்    
                குறைந்தவர்கள்.

 ============================================================================== 
வெற்று மேடையில்  பலிபீடம் மையத்தில் உள்ளது. இரண்டு ஏட்டுச் சுவடிக் கட்டுகள்,
கண்ணிகள் கொண்ட கயிற்றில் கட்டி பீடத்திற்குப் பின்புறத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட படங்கள் விளக்குகளின் உதவியால் பின் திரையில் படங்களாகின்றன.
கலைடாஸ்கோப் உதவியால் கூட மாறும் சித்திரங்களை உருவாக்கலாம்.

மேடையில் மங்கலான ஒளி, சிதறலான வெளிச்சம். செம்மை படர்ந்த சிதறல்.
பீடத்தின் பின்புறம் இரண்டு மனிதர்கள் முழங்காலிட்டுள்ளனர்.
அவர்களது முகங்கள் மட்டும் பீடத்திற்கு மேல் தெரிகின்றன.
அவர்களது நிலை தேவாலயத் தொழுகை போலவோ, வெட்டப்படுவதற்குக் காத்திருக்கும் குற்றவாளிகளுக்குரியதாகவோ இருக்கலாம்.

இருவரும் நல்ல உயரம். சதைப் பிடிப்பற்றவர்கள். கருப்பு உடையின் மீதான கயிறுகள் ஒரு கரடு ம்முரடானதாக – சாமியார்களின் கழுத்து மாலைகளைப் போல இருக்க வேண்டும்.
முதியவன் ஒழுங்கற்ற தாடியுடன் – இளையவன் சுத்தமாக மழிக்கப்பட்ட முகத்துடன் – முதியவனிடம் மதபோதகனின் தோற்றம்.
இளையவனிடம் திக்குத்தெரியாத குழந்தைத் தனமான வெளிப்பாடு.

பீடத்தில் கிடக்கும் முதியவனிடம் கத்தி உள்ளது.
அவன் எழும்போது வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகிறது.
====================================================================
முதியவன்:      சகோதரனே எழுக! எழுக! 
நேரம் வந்து விட்டது.
இளைஞனின் கையைப் பிடித்துத் தூக்குகிறான். இன்னும் இளைஞன் திக்குத் தெரியாத நிலையில் இருக்கிறான்.
முதியவன் இளைஞனை ஏடுகள் கட்டியுள்ள கயிற்றுக் கண்ணிகளின் அருகில் இட்டுச் சென்று கைகளில் கண்ணிகளை மாட்டி விடுகிறான். அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளியைப் போல – உடல் விறைப்பாக – நிற்கிறான். முதியவன், அவன் எப்படி நிற்கிறான் என்பதைப் பார்வையிடுபவனாகச் சுற்றி வந்து, கைகளை உயர்த்தி நீட்டி, இளைஞனின் தோள்களில் வைத்து, வாழ்த்திப் போற்றுவதுபோல நிற்கிறான். இளைஞனின் உடலில் பரவும் அவன் கைகளால் கூச்ச உணர்வும், சுணக்கங்களும் உண்டாகும் நிலை: என்றாலும் அவன் விறைப்பாகவே நிற்கிறான். உடல் முழுவதும் தடம் பதித்துவிட்டு மெல்லியதாய் ஒரு புன்னகை. ஒருவிதக் கோணல் தனமான புன்னகை – வனதேவதையின் புன்னகை போல … சிலம்பை உடைக்கும் சடங்கை நினைவூட்டும் ஓவியக் காட்சி போல முதியவன் மண்டியிட்டுள்ளான்.
திடீரென்று கடமையை உணர்ந்தவனாய் கைகளால் கால்களைத் தடவிவிட்டு எழுந்து, பீடத்திலிருந்து கத்தியை எடுத்து இளைஞன் மீது காயங்களை உண்டாக்குகின்றான்.
இளைஞனின் உடல் சற்று உயர்ந்து, தலை மட்டும் தோள்களுக்கிடையில் தொங்குகிறது.
ஒளி மங்கலான நிலை. முதியவன் கள்ளப்பார்வையுடன் கத்தியைப் பீடத்திற்குள் மறைத்து விட்டுக் கன்றுக் குட்டியைப் போல துள்ளியோடி தொங்கு திரைக்குள் மறைகின்றான்.
நிசப்தம். மெல்லிய வெளிச்சத்தில் இளைஞனின் நிழலுருவம். அவனது நிழல் பெரிதாகப் பின் திரையில் தெரிவதென ஒளியமைப்பு. இந்தப் பின்னணியில் பல தள ஒளிக்கருவிகளின் வழியே ஆலாபனை வரத் தொடங்குகிறது.

[மீதமுள்ள நிகழ்வு ராகத்தின் இயல்புக்கேற்ப ஒத்திசைந்து நகர்ந்து.
உச்சத்தின் முடிவில் நிறைவு பெற வேண்டும் ]

இசையின் ஒலி கூடும்போது வெளிச்சம் கூடுகிறது. நிழலற்ற வெண்மையான வெளிச்சத்தின் விரல்களில் இளைஞன் நிற்கிறான்.
மெதுவாக ஊர்வலக் கூட்டம் நுழைகிறது. உயரமான நீண்டு விரிந்த கூந்தலோடு கூடிய பெண்ணால் தலைமை ஏற்கப்பட்டு வரும் ஊர்வலம் அது. அவளது அங்க அசைவுகளின் வளைவுகளை ஒளி அமைப்பு துல்லியமாக வெளிக்கொணர வேண்டும். தனது முலைகளைப் பெருமையுடன் தாங்கி வருபவளாக – நிமிர்ந்த நடை- அவளோடு ஐந்து பேர் –கறுப்பான –கயிறுகள் ஓடிய, முரட்டுத்தனம் வெளிப்படும் உடை அணிந்தவர்கள். அவர்களது கயிறுகள் தரையில் புரள்வனவாக உள்ளன.
தலைமையேற்று வந்த அவள், இளைஞனைப் பார்த்து, உயரத்தைக் குறைத்து நிற்கிறாள். நின்று நோக்க, அவனிடத்தில் அசைவுகள் இல்லை. அப்படியே உயர்ந்து நிற்கிறான்.
பீடத்தின் மறுபக்கம் போய் நின்று அவனைத் திகைப்புடன் பார்க்கிறாள். ஐந்து பேரும் குழுமி நின்று இளைஞனை நோக்குகின்றனர். அப்போதைக்கப்போது பெண் பக்கம் திரும்புகின்றனர். அவள் எதுவும் செய்வாளோ என்ற எதிர்பார்ப்பு.
அவளுக்கு ஐந்து பேர் தன்னைப் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞை வர, சுற்றிலும் பார்த்து விட்டு, பீடத்தில் இருந்து கத்தியை எடுக்கிறாள். ஒரே வீச்சாக அவனைக் கட்டியுள்ள கயிற்றை வெட்டி விடுகிறாள். நிற்பதற்கான ஆதாரம் இல்லாததால் இளைஞன் உடல் தரையில் குலைந்து விழுகிறது.
எதிர்பாராத இந்த வினையால், பெண் பின்புறம் நகர்கிறாள். அவனையையும் கத்தியையும் மாறிமாறிப் பார்க்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.
கத்தியைப் பீடத்தில் மறைத்துவிட்டுக் குனிந்து அவனைத் தொட முயன்று, மனம் மாறியதால் பின் வாங்குகின்றாள்.
பெண்  ; ஓஓ… அம்ரத்ஸ்ய புத்திரனே! எழுக!!
                [அவள் அவனை எதிர்பார்ப்பவன் போல் நோக்க, 
         மற்றவர்களிடமும் அத்தகைய எதிர்பார்ப்பு.  மெதுவாகத்   
          தரையில் ஒரு கலக்கம். ஒரு வேதனையொலி வருகிறது.
இளைஞன் கால்களுக்குள் பதுங்கி, நகர்ந்து பீடத்தைப் பிடித்து முழங்காலிடுகிறான். கண்களைத் தேய்த்துக் கொள்கிறான். அவன் தொடக்க நிலையில் முழங்காலிட்டது போல முழங்காலிட்டுள்ளான். பார்வையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளான்.

இளைஞன் : (மெல்லிய தனிக்குரலில்) இதுவும் அதுவே.. எல்லா நேரமும்…  நான்…. நான் என்பது என்ன?
மெதுவாக மற்ற உருவங்கள் இருப்பதை உணர்ந்தவனாய், மெதுவாய் எழுந்து பின் திரையருகில் பதுங்கிப் பாதுகாப்புத் தேடுகின்றவனாய் நிற்கிறான்.
முதலில் தனியாய் நிற்பவனைப் பார்க்கிறான். பின்னர் குழுவினரைப் பார்க்கிறான். குழப்பம் போகவில்லை. பெண் பக்கம் திரும்பி, அவளை நோக்கி, கனவில் நடப்பவன் போல முன்னேறுகிறான்.
பெண்ணிடம் ஒரு பின்னடைவு. முகத்தில் ஒருவித பயம். பீடத்தின் இடதுபுறத்தில் அவர்களது வினைகள், பார்வையாளர்களுக்குத் தெரியும்படி நடக்கிறது. அவன் திடீரென்று அவள் முன்பாக மண்டியிடுகிறான். அவள் பின்னால் நகர்வதை நிறுத்திக் கொண்டு முன்னோக்கி நகர்கிறாள். ஒரு தேவதையிடம் வாஞ்சையோடு மண்டியிடுபவன் போல் மண்டியிட்டு நோக்குகிறான்.
பெண்          : பயப்படாதே… நீ ..
பயப்பட எதுவும் இல்லை.
நான் .. நீ… என்ன…
ஓ.. அம்ரத்ஸ்ய புத்திரனே.
எழுக.!
அவள் அவன் மீது கைகளைப் பதிக்கிறாள். அவன் சில கணங்கள் சிலையாக நிற்கிறான். குழப்பம்
அவன் மெதுவாகக் கண்களை உயர்த்தி அவளைக் கூர்ந்து நோக்குகிறான். இரண்டு பேர்களுடைய கண்களும் சந்தித்துக் கொள்கின்றன. இதற்குமேல் என்ன இருக்கிறது என்பதான அந்த உணர்வை மேடையில் முழுவதும் பரப்புகின்றனர்.
நிசப்தம்.. உயரும் ராகத்தில் ஒலி மட்டும் வருகிறது. நடிகர்களின் ஆழமான மூச்சுவாங்கும் ஒலி. ஐந்துபேரும் செய்வதற்கென்ன இருக்கிறது என்பதான மனநிலையில்..
இளைஞன் நீட்டிய பெண்ணின் கையை இறுகப்பற்றி அதன் உதவியால் எழுகிறான். அவளை  நோக்கி நகர்கிறான். அவள் பின் வாங்கவில்லை. அவள் விறைப்பாக நிற்கிறான். கூடுதலான எதிர்ப்பு மனநிலை.
இளைஞன் நகர்விலிருந்து திடீரென்று நின்று விடுகிறான். உணர்வு வந்தவனாய் சுற்றிலும் பார்க்கிறான். அவனது  கைமுட்டி வாயருகில் செல்ல, உடனே பீடத்தைத் துணையாகப் பிடித்துக் கொள்கிறான். ஒரு வேதனைக்குரல் வெளிப்படுகிறது.
பீடத்தருகில் வேதனையுடன் நிற்கிறான். ஒருகை முகத்தை மறைக்க இன்னொன்றால் பீடத்தைப் பிடித்துள்ளான். அவனது தலை வாட்டத்தோடு தொங்குகிறது. புலம்பல் வெளிப்படுகிறது.
பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தில் நிற்கிறாள். என்ன செய்வதென்று தெரியாதநிலை. பின்னர் மெதுவாக அதிலிருந்து விடுபட்டு நிச்சயமற்ற பாவத்தோடு வானத்தைப் பார்த்து விட்டு இளைஞனை நோக்கி நடந்து, அவனது தோளில் தனது கைகளை வைக்கிறாள். அவன் அரைப்பார்வை பார்க்கிறான். முகத்தின் வலியின் துயரம்.
        இளைஞன்     : யதார்த்தம் என்பது என்ன..?
                        அது அல்ல… நீயும் அல்ல..!
                        என்னவாக இருந்தாய்…
                        நான்.. நான் என்னவாக இருப்பேன்.
இது ஒன்றுமில்லை..
ஆனால் இது என்னவாக இருக்கும்?

இளைஞனுக்கு இன்னும் குழப்பம். ஆனால் மெதுவாக வளர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்க்கிறான். அவளை நோக்கி நகர்ந்து கைகளைப் பற்றுகிறான். உடையின் உச்சியைத் தொடும்வரை அவனது கரங்கள் நீள்கிறது. அவனது விரல்கள் அவளது உடையின் பொத்தான்களை அவிழ்ந்து விடுகிறது. வெண்மையான அவளது மார்பகம்.
[வெண்மையான உடலோடு ஒட்டிய உடையை அணிந்திருக்கலாம். கறுப்பு உடையை நீக்கும்போது நிர்வாணமாகிறாள் என்பது குறியீடாகும்]
மெதுவாக அடுத்த அடுக்கு ஆடையையும் களைகிறான். அவளது உடை இப்பொழுது இடுப்பில் தொங்குகிறது.. இடுப்பிற்கு மேல் திறந்து வெண்மையாக நிர்வாணமாக. ஐந்துபேர் கொண்ட குழு அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றனர். அவன் உடைகளைக் களையும் சடங்கில் இருக்கிறான். பெண் பெருமிதமாக – அவனது முயற்சியில் வெற்றியடைய உதவுவதுபோல நிற்கிறாள். அவன் தொடர்கிறான். முழங்காலிட்டுள்ளான். அவளது கீழ்ப்புற உடைகளை களைகிறான். ஐந்துபேரும் சுற்றியுள்ளனர். இப்பொழுது அவன் பார்வையாளர்களின் பார்வையில் இல்லை.
ஐவரும் வட்டமாக நிற்க, பெண்ணின் தலைமட்டும் தெரிகிறது. அவள் நிர்வாணமாக நிற்கிறாள் என்பதான தோற்றம்.

(இப்பொழுது இளைஞன் எழுந்து, அவளது உடலைச் சுற்றி வந்து பார்க்கிறான். ஐந்து பேரும் சுற்றி வருவதை நிறுத்தி விடுகின்றனர். அவர்களது நீண்ட உடையில் உள்ளிருக்கும் இணை மறைந்திருக்கும் ஐந்துபேரின் தலைகளுக்கு மேலே இருவரின் தலைகள் மட்டும் தெரியும்)
இளைஞன் :    நேரம்வந்து விட்டது…

இப்படியே போகலாம்..
[பீடத்தை நோக்கி நகர்ந்து பார்வையாளர்களிடம் முகம் பார்த்து நிற்கிறான். ஐந்து பேரும் பெண்ணை பீடத்தை நோக்கி அழைத்து வருகின்றனர். அங்கே நிறுத்தப்படுகின்றாள். நிர்ச்சலனமான பார்வையுடன் பீடத்தின் மீது விழுகிறாள். ஐந்து பேரும் பீடத்தைச் சுற்றி மண்டியிடுகின்றனர். மூன்று ஆண்கள் பார்வையாளர்களுக்கு முதுகு காட்டியபடி இரண்டு பக்கத்திலும் இரண்டு பெண்கள்
இளைஞன் சிலைபோல பார்வையாளர்களைப் பார்த்தபடி வெள்ளை வெளிச்சத்தில் அவன் முகம் எரிகிறது. இசை முடிவை நோக்கி வந்து விட்டது.
இளைஞன் பார்வையாளர்களிடம் சொல்கிறான். அவனது குரல் சோர்வான தனிக்குரல், எதிரொலிப்பது போல.. இசை மேலும் மேலும் வெறியூட்டுவதாக அவனது குரல் உயர்ந்து, ஒருவித வலிப்பு நிலைபோல ராகம் உச்சத்தை அடைகிறது.]

இளைஞன் :
ஒரு வெள்ளை வெளிச்சம் கனலொளி…   வானமண்டலம்.. சிவப்பு நட்சத்திரங்கள்      
எரிகின்றன.. ஒரு எரிகல் .. முழுகுகிறது..  பூமியினுள் . நட்சத்திரங்கள்…

எரிகின்றன.. சப்தரிஷிமண்டலம்.. ஒரு வினாக்குறிபோல… சொர்க்கத்தில்.. எரிகின்றன.. இருட்டில் தீநாக்குகள்… ஜுவாலைகள்.. இருட்டில் மோதிரங்கள்.. சனியின் எரிகின்றன..
இருட்டில் வானமண்டலங்களில் வால் நட்சத்திரங்கள்.. நான் நினைக்கிறேன்.. எரிகின்றன..
இருட்டில் அப்புறம்.. முப்பத்து முக்கோடி தேவர்களும் வீண்..சூரியக்குவியல்கள்.. இருட்டு.. சொர்க்கத்தில் என்னால் முடியவில்லை.. போ..ஆஹ்..
இருட்டு.. இந்தபூமி.. மரங்களில் இருட்டு.. ஆன்மாக்கள்.. அமைதி.. எரிகின்றன..
       
கடந்த காலத்திற்காக… எதிர்காலத்திற்காக.. இருட்டு .. உலர்ந்த.. இந்தப் புல் புதர்கள்.. எரிகின்றன.. மரங்கள்.. புதர்கள்.. ஜுவாலைகள்.. வசந்தத்தில் எரிகின்றன.. பூக்கள் எரிகின்றன.. மரிக்கின்றன.. சருகாகின்றன. நினைவுகளைப் போல.. அப்புறம்..மரங்கள்.. கவனி.. மௌனவழியில்.. மூங்கில்கள். தேவதாரு மரங்கள்.. தேவதாரு…
[அவன் தொடர்ச்சி விடுபட்டவனாய்.. சுற்றிலும் பார்த்துவிட்டு புரியாதபடி…]
இருட்டில் தேவதாரு மரங்கள்.. இந்த பூமி வறண்டு.. கற்கள்.. கற்பாளங்கள்.. எரிமலைகள்.. குழாய்விளிம்புகள்.. எரியும் மரங்கள்..
[சுற்றிலும் பார்க்கிறான் தளர்வுடன்]
அழுகை.. அழுகை.. கண்ணீர் எரிகின்றன. குஞ்சுகள்.. சிவப்பு.. இருட்டில் பூமி எரிகிறது. மரங்கள்..எரிகின்றன. மலைகளின் ஓரங்களில் பாறைகள்..கற்கள் சிவப்பு.. ரத்தம் ஓடுகின்றது.. எனது சிவப்பு.. இருட்டில் காலுக்கு .. ஆகாஹ்.. (அவனது சுழல் உணர்வு குறைகிறது)
குரல்கள்.. பேசு.. மெதுவாக.. இருட்டில் பேசு.. என் ஆன்மா.. நண்பர்கள்.. சுற்றத்தார்.. உறவினர்கள்.. நான் இருப்பேன்.. ஏன். நீங்கள்.. பேசு.. ? நீங்கள்.. சொல்லு.. நீங்கள். செத்துவிடு.. இல்லை..

வருடங்கள் எரிகின்றன.. இருட்டுகளில்…  நினைவுகளில்… மழையைப்போல.. விழுந்து கொண்டிருக்கின்றன.. நிதானமாக.. வீட்டின் மேலே.. இரவில் உங்கள் குரல்.. அழைக்கின்றன.. இருட்டில் சாளரங்களினூடாக.. என்னால் முடியாது.. போ.. இரு..இரு.. போகாதே.. போகாதே.. தங்கு.. தங்கு.. குரல்கள்.. சாவுகள் பேசு.. அமைதி.. காத்திரு.. காத்திரு.. கண்கள் கனல்,, இருட்டில் மாலையில்.. அமைதி.. முனகல்,, நீர்க்குமிழிகள்.. மரங்களில் அழைக்கின்றன. நம்மை.. குரல்கள்.. சாவுக்காக.. சிவப்பு.. வீசுகின்றன. கடலுக்கு பெருங்கடலுக்கு சூழலுக்கு அலைகளுக்கு.. தடு.. தடு.. மலைப்பாறைகள் மீது.. சாவு மணல் பரப்பின் மீது.. கடற்கரையின் மீது.. கண்கள்.. கனல்.. என்னுடைய எரிகின்றன.. இருட்டில் .. கேள்விகள் எழுகின்றன.. குறைகின்றன.. எரிகின்றன.. தேவதாரு மரங்களுக்குள் .. மரங்களினூடாக கடற்கரையின் மேல்.. முனகல்கள்.. அமைதி.. இருட்டில் எரிகின்றன. கடந்த காலத்திற்காக சாவு.. நினைவுகள்.. சாவு இருட்டில்.. கண்கள்.. கனல்,, கடற்கரை.. மேல் எரிகின்றன. வெள்ளை.. ஒலி.. எனது சிந்தனையில் எரிகின்றன.. இருட்டில்..
[அவன் ஆச்சரியப்படும்படியாக உணர்கின்றான்]
கூழாங்கற்கள்.. மணியில் எரியும் ..இரவுக்காக.. இருட்டு.. கட்டப்பட்டு.. செதில்கள்.. சிப்பிகள்.. சாகின்றன. சிந்தனையில் எண்ணங்கள்.. அப்பா.. இல்லை.. போ.. இது.. இருட்டு.. தேவதாரு.. ஊசியில்லாத.. அப்புறம் குரல்கள்.. ஆழத்தில் அழைப்பு.. மெதுவாக.. மெதுவாக.. என் கண்களில் எரிகின்றன.. இருட்டில் கூழாங்கற்கள் சாகின்றன.. கடற்கரையின் மீது கனல்..இருட்டில் வெளிச்சம்.. (திடீரென்று உச்சத்தில்)
வீதிகளில் வெடிகுண்டுகள், சோடா பாட்டில்கள் உடைந்த செங்கல். சைக்கிள் செயினும் கத்திகளும் போலீஸ் வாகனங்களின் அணிவகுப்பு. என்னை ஆவென்று சொல்ல விடவில்லை. இரவின் மீது படையெடுப்பு. எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. உங்களுக்குப் பேராசை இல்லையா.. ஆகா.. வாகனத்திற்குள் தள்ளப்பட்டு.. மலத்துவாரத்திற்குள் குறுந்தடிகளை நுழைத்து கண்ணீர்புகை வீச்சில்.. அழுது.. அழுது.. இது இன்றும் கேளிக்கை அல்ல. வளர்ந்த மனிதர்கள் அழுகிறார்கள். ஆகா.. சிறைச்சாலையின் சாக்கடை நாற்றத்தில்.. சிலையுருவாய்.. மதிலில்.. சாய்ந்து.. ஒரு நாள்.. இரண்டு நாள்.. மூன்றுநாள்.. என்னால் சொல்ல முடியாது. என் மனைவி வீட்டில் தனியாக ..அடுத்த மாத வாடகைக்கு,, பள்ளிக்கூட கட்டணம்.. கட்ட என்னால்.. இயலாது.. தேவடியா.. பசங்க.. அவர்களை நான் கொல்ல முடியும். அப்புறம் பணம் எங்கே வைப்பேன். வேறு எங்கே வைப்பேன்..ஓ,, கடவுளே.. எப்படி அவர்கள் வாழ்வார்கள்? (கைகளை முகத்திலிருந்து எடுத்து விட்டு கத்தியை உயர்த்தி.. கைகளை நேராக நிறுத்தி வெளிச்சத்தில் கத்தி பளபளக்க]
ஓ கடவுளே எரிகின்றன.. இருட்டில்.. கடவுள் பேசு.. உதைக்க வேண்டும். பேசு கடந்த காலத்திற்காக.. பேசு.. பாசி படர்ந்ததற்காக அவர்களின் மேல் .. சூரியனுக்காகப் பேசு.. பேசு.. இரத்தத்திற்காக ஓடுகின்றன. என் கண்களில் சிவப்பு.. சிவப்பு.. ரத்தம்.. ரத்தம்..
[அவனது குரல் வலிப்பினால் .. வெறியூட்டப்பட்டதாய்… தடுமாறுகிறது.. கண்களில் பீதியூட்டும் தோற்றம்.. அவன் கத்தியை உயர்த்தி. பீடத்தில் பெண்ணைத் தள்ளி சொருகுகிறான். ராகம் அதன் உச்சத்தை அடைந்து சிதறுகிறது.
முழுவதும் நிசப்தம்.. வெளிச்சம் குறைகிறது. இளைஞன் நிற்கிறான். தலைகவிழ்ந்தபடி .. பெருமூச்சுடன்)
இளைஞன் : (மெதுவாக கேட்காத தொனியில்)
                 ரத்தம்.. ரத்தம் சிவப்பு..
                 கடவுளே.! ஓ... கடவுளே!!


               

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு விமரிசனம்

$
0
0

 அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை.
வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதைஎனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதைஎனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.
மூன்று வருடங்களாக (2008 ஜூன் மாதம் 19 ந்தேதி இணையத்தின் ஒளிக்காட்சி வடிவமான யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டுள்ளது).இது இணையத்தில் இருக்கிறது நான் முதன் முதலில் பார்த்த போது இருந்த எண்ணிக்கை 92 078 நீண்ட நாட்களாக மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் அதனைத் திறந்து பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கோயில்களுக்கு ஒரு தலபுராணம் எழுதிய இடைக்காலத்துப் புலவர்கள் அந்தக் கோயிலோடு சேர்த்து ஒரு மரத்தையும் இணைத்துக் கடவுளின் பகுதியாக எழுதிக்காட்டியிருப்பார்கள். தலபுராணத்தின் தொடர்ச்சியை எண்பதுகளின் தமிழ்க் கவிதைக்குள்ளும் வாசித்திருக்கிறேன். இழப்பின் துயரத்தை நினைவின் அடுக்குகளாகத் தொகுத்துச் சொல்லி கழிவிரக்கத்தை உண்டாக்கும் தொனியில் அமைந்த கவிதைகள் அவை. தமிழின் நவீன கவிகளாக அறியப்பட்ட கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன் போன்றவர்களிடம் தன்னிலை நோக்கிய கேள்வியாகவும், பழமலய்யிடம் புறநிலை நோக்கிய அரசியல் கேள்வியைத் தூண்டும் தொனிக்காக நகரும் வரிகளாகவும் வெளிப்பட்டன. பழமலய்யை நகலெடுத்த கரிகாலன் போன்றவர்களிடம் மட்டுமல்லாமல் தலித் கவிகள் சிலரிடமும் இந்தத் தன்மையை வாசிக்கலாம். வைரமுத்துவும் இவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டியவர் என்றாலும் அவரது வரிகள் உருவாக்குவன நடப்பியல் விரிவுகள் அல்ல; புனைவியலின் விரிவுகள். அந்தப் புனைவியலின் வட்டார வேறுபாட்டைத் தமிழச்சி தங்கபாண்டியனின் வரிகளாகவும் வாசிக்கலாம்..
இந்தக் கவிகளின் இளமைக்காலம் என்பது கால்நூற்றாண்டுக்கும் முந்தியது. அவர்களின் சிறுவயதுப் பருவத்தில் இருந்த உற்றார் உறவினரின் வெளித் தோற்றத்தையும் வெகுளித்தனத்தையும் மட்டும் அவர்களின் இயல்பாகவும் கள்ளங்கபடமற்ற மனமாகவும் இந்தக் கவிகள் அந்தப் பால்ய வயதில் நினைத்துக் கொண்டார்கள் என்பது ஆச்சரியமானது அல்ல; இன்றும் நினைத்துக் கொண்டு அதனைக் கொண்டாடும் மன நிலையில் அசை போடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். தங்கள் உற்றார் உறவினராகவும், அவர்களிடம் தங்கியிருந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அப்பாவி மக்களாகவும் இருந்த கிராமத்து மக்களைப் பற்றிய புனைவியல் சித்திரங்கள் முழுமையும் உண்மையானவை அல்ல. அச்சித்திரங்கள் கிராமத்து மனிதர்களை அவர்களின் உறவினர்களுக்குள் மட்டுமே நிறுத்திக் காட்டும் தன்மையிலானவை.பக்கத்து வீட்டுக்காரர்களோடும், பக்கத்துத் தெருக்காரர்களோடும், பக்கத்து ஊர்க்காரர் களோடும் மற்ற சாதி மனிதர்களோடும் கொண்ட பகைமுரண் சார்ந்த உறவுகளையும் வெளிப்படுத்திய வன்மங்களையும் காணத்தவறிய – காண மறுத்த - புனைவு வார்த்தைகளால் விரிந்து வைக்கப்பட்ட சித்திரங்கள் அவை.
வைரமுத்து வாசித்துக் காட்டும் இந்த நாட்டுப்பாட்டு எல்லாரையும் கடந்த காலத்திற்குள் இழுத்துச் செல்லும் என நான் நினைக்கவில்லை. வீழ்ந்து விட்ட புங்கமரத்தின் கதையை – இரண்டு தோழிகளின் கதையினூடாகச் சொல்ல வைரமுத்து தேடிப்பிடித்து அடுக்குத் தரும் இந்த வார்த்தைகளையும் அதன் வழி விரியும் காட்சிப்படிமங்களையும் எல்லாராலும் உள்வாங்கிக் கொள்ளவும் உருவாக்கிக் கொள்ளவும் இயலாது. ”பேண் பார்த்த சிறுவயசு, பாவாடை நாடா முடுச்சு அவிழ்வும் சிறுக்கி மகள்,  இறுக்கி முடி போடும் ஆத்தாக்கள், எண்ணெய் வைத்தும் மருதாணி தடவியும் சுருக்கா ஓடித் திரியும் தெருப்புழுதி, கருவாட்டுப்பானை, சிறுவாட்டுக்காசு, குச்சி ஐஸு, கண்ணாமூச்சி,, காணாமல் போன கால்கொலுசு, சூடு வைத்தும், நொக்கி எடுத்தும் மிரட்டும் ஆத்தாக்களால் வளர்க்கப்பட்டு, உலகம் என்னவென்றும், வாழ்க்கை என்னவென்றும் புரியாமல் வளர்ந்த இரண்டுபேர், நட்புக்காகச் சக்களத்தியாய் இருக்கத் திட்டமிட்ட அறியாமை, என விரியும் அந்தத் தோழிகள் நடப்பு வாழ்க்கைக்கான காரணங்களை அறியாமல் பிரிந்தவர்கள். தண்ணியில்லாக் காட்டுக்கும், வறட்டூருக்கும் தனித்தனியாய் வாக்கப்பட்டுப் போனவர்கள். திரும்பவும் சந்திக்கிறார்கள்; கடந்த போன தங்கள் இளம்பிராயத்தை அந்தப் புங்கமரத்தின் வீழ்ச்சியோடு இணைத்துப் பேசிக் கொள்கிறார்கள். இந்தக் காட்சிகளை நகரத்தில் பிறந்து நகரவாசியாகவே வளர்ந்துவிட்ட தமிழர்களால் உணர முடியாது. உணர வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் கிராமத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பெற்று நகரத்தில் பதியம் போட்டுக் கொண்டுள்ள பரதேசிகளுக்கு இந்த அனுபவம் திரும்ப வேண்டும் என்ற ஏக்கமாக இருப்பது ஆச்சரியமல்ல. அதுவும் கிராமத்தில் கொஞ்சம் உடையவர்களாக இருந்து நகரத்துக்கு வந்து நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட மனிதர்களுக்கு அந்தக் கிராமத்துக் காட்சிகள் கண்நிறையும் காட்சிகளாகவும், கண்களில் நீர்நிறைக்கும் காட்சிகளாகவும் விரியும் வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்பை உணர்ச்சிகரமான வைரமுத்துவின் குரலால் உருவாக்க முடியவில்லை என்பதும், இன்னொரு நிகழ்த்து முறை வடிவத்தால் அது சாத்தியமாகி இருக்கிறது என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. அதன் மூலம் எழுத்துப் பிரதி நிகழ்த்துப் பிரதியாக மாற்றப்படும் போது உருவாகும் வெகுமக்கள் பங்கேற்பு எத்தகையது வீரியம் உடையதாக ஆகிறது என்பதையும் நாம் உணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இப்போது இன்னொரு வடிவம் - அதே வரிகளின் வேறு வடிவத்தைக் கேளுங்கள். பாருங்கள்
வரிகள் இசைக்கருவிகளின் பின்னணியில் நாலுமடங்கு நேரம் கூடுதலாக ஒலிக்கின்றன. மகதியும் சின்மயியும் அதே வரிகளை மேடையில் பாடுகிறார்கள். மேடையின் முன்னால் சில ஆயிரம் பேர் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். பாட்டு வரிகள் பதிவு வைரமுத்துவின் குரலில் பதிவுசெய்து இணையத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து (25-04-2010) ] யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு இணையத்திற்குள் ஏற்றியுள்ளனர். இதுவரை 1,12,518 க்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சில நூறுபேர் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். பார்ப்போர் எண்ணிக்கை மாற்றத்தில் இரண்டுக்குமான எண்ணிக்கை வேறுபாடு கவனிக்க வேண்டிய ஒன்று.. வைரமுத்துவின் தோழிமார்கதைவைரமுத்துவின் துல்லியமான உச்சரிப்பில் கேட்கப்படுவதை விடவும் பாடலாக ஒலிக்கும்போது கேட்கும் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது. இசைக்கப்படும்போது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நானே பல தடவை கேட்டு விட்டேன். நான் கணிணியின் திரையில் கேட்பதை விடவும் கூடுதல் கவனத்தோடு அந்த மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கூட்டம் கட்டிப்போடப் பட்ட கூட்டமாக அமர்ந்திருக்கிறது. அப்படி அமரச் செய்வது எது? வைரமுத்து எழுதிய வரிகளா? அந்த வரிகளை முழுங்கிக் கொண்ட இசையா? இசையோடு இழையாடும் இரண்டு பாடகிகளின் குரலா? அந்தக் குரலில் குழைத்துத் தரப்படும் தாலாட்டும் ஒப்பாரியும் கலந்த பின்னோக்கிய நினைவுகளா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் ஒற்றைச் சொல் பதில் எதுவும் இல்லை. அதற்கு மாறாக ஒரு எழுத்துப் பிரதி நிகழ்த்துப் பிரதியாக ஆக்கப்படும்போது நடக்கும் மாற்றங்களின் விளைவுகள் தான் அதற்கான பதிலாக அமையக்கூடும்.
நிகழ்த்துப் பிரதியின் கலவை எப்போதும் வெகுமக்கள் திரள் பங்கேற்பதற்கான திறப்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன என்னும் அடிப்படை விதியை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது நிகழ்த்துப் பிரதியாக மாற்றும் நிகழ்த்துநர், பின்னணிக் கலைஞர்கள், மேடைத்தளம், முன்னே அமர்ந்திருக்கும் பார்வையாளத் திரள் என ஒவ்வொன்றிலும் உயிரூட்டம் பெற்றுக் கொண்டே இருக்கும் வாய்ப்பு கொண்டது. இங்கே வைரமுத்துவின் குரல் உண்டாக்காத மாயத்தை மகதியும் சின்மயியும் தங்கள் குரல் வழியே உருவாக்குகிறார்கள் என்று மட்டும் சொல்லி விட முடியாது. ஒருவர் உண்டாக்கும் ஏற்ற இறக்கத்தை இன்னொருவர் வாங்கி இன்னொரு தளத்திற்கு அல்லது வெளிக்குக் கொண்டு செல்வது மூலம் அது நடக்கிறது என்றும் சொல்லி விட முடியாது. அதேபோல் அவர்களின் குரலுக்குத் துணை நிற்கும் ஊதிசைக் கருவிகளும் தட்டொலிக் கருவிகளும் தான் இந்த மாயத்தைச் செய்கின்றன என்பதும் உண்மையாக இருக்க முடியாது. இவையெல்லாவற்றையும் தாண்டி மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கூட்டமும் கூட அந்தப் பங்கேற்பை முழுமையாக்கும் காரணியாக இருக்கலாம்.
எல்லாம் சேர்ந்த மாயமே நிகழ்த்துக்கலையின் மாய விளைவு. உங்களுக்கு அந்த வரிகள் தரும் அனுபவத்தோடு உங்கள் சொந்த வாழ்க்கை சார்ந்து எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற போதிலும் நிகழ்த்தப்படும் நிகழ்வின் ஏதோ ஒரு கூறு உங்களை உள்ளே உள்ளே இழுத்துக் கொண்டு போய்க் கட்டிப் போட்டு விடலாம். காணொளியில் கூட்டம் அசைவற்றுக் கிடப்பதை அதுதான் காட்டுகிறது.இல்லையென்றால் உங்கள் உடலை அங்கே கிடத்திக் கொண்டே நீங்கள் அலைபேசியில் உரையாடிக் கொண்டும் இருக்கலாம். தூரமாக விலக்கிக் கொண்டுபோய் நினைவைக் கொல்லும் மாயத்தையும் அது சாத்தியமாக்கும்..

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

$
0
0

காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை  அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.


திருப்பங்கள் ஏற்படுத்திய நிழற்படங்கள்.



அது பதுங்கு குளியா? ராணுவ முகாமா? என உறுதியாகச் சொல்ல முடியாத இடத்தில் அடுத்து நடக்கப் போவது என்னவென்றே தெரியாமல் கொறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அடுத்தடுத்த படங்களில் துப்பாக்கி ரவைகளைத் தாங்கி வீழ்ந்து கிடைக்கிறான். இந்தப் படங்கள் எல்லாமே அருகிலிருந்து எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தான் கொல்லப் படப் போகிறோம்  என்பதைக் கண்டு பய உணர்வே, அச்சத்தின் பீதியோ கூட அந்த முகத்தில் இல்லை. இந்தப் படங்கள் வரிசையாகத் தரப்பட்டு இதில் உள்ள சிறுவனின் பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன் எனச் சொல்லப்பட்டது. இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் பெரும்பான்மைச் சிங்கள-பௌத்தச் சமூகத்திடமிருந்து பிரிந்து ஈழத்தமிழ்தேசம் ஒன்றை உருவாக்கும் போராட்டத்தின் –யுத்தத்தின் – அடையாளமாக மாறிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் தான் இந்த பாலச்சந்திரன் என்ற தகவல் தமிழகத் தமிழர்களின் மனசாட்சியை- உள்ளுணர்வை தட்டி எழுப்பி விட்டது. இப்போது காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருக்கிறது.

 தமிழக எல்லையைத் தாண்டி எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் இலங்கையென்னும் நாட்டில் மட்டுமே மதிக்கப்படாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பது உண்மையில்லை; இந்திய எல்லைக்குள்ளும் மதிக்கப்படாத தேசிய இனமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட இந்தியாவைத் தக்க வைக்கும் நோக்கம் கொண்ட தேசியவாதிகளின் கொடுங்கனவாக மாறி விட்ட மாணவர்களின்  போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இந்தத் திசைமாற்றத்தை உருவாக்கிய பாலச்சந்திரன் பிரபாகரனின் நிழற்படத்தொகுப்பின் விளைவையொத்த விளைவை உருவாக்கும் சக்தி வாய்ந்த தொகுப்பு ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இன்று உருவாகியுள்ள மனவெழுச்சியும் தன்னெழுச்சியான போராட்டங்களும் அந்தப் படத்தை முன் வைத்தே உருவாகியிருக்கக் கூடும். ஆனால் அன்று அந்தத் தொகுப்பின் மீது பிரபாகரனின் ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொண்ட நபர்களும் இயக்கங்களும் ஏற்படுத்திய சந்தேக ரேகைகள்  பொதுப்புத்தியின்  மனவெழுச்சியைத் தணித்தன; திசை திருப்பின..
இந்தியாவின் மைய, மாநில அரசுகள் அடங்கிய உலக சமுதாயத்தின் நெருக்கடிகளால் முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் தள்ளப்பட்ட இலங்கைத் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் கடும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப் பெற்றனர். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்; எஞ்சியவர்கள் சரண் அடையத் தயாரானார்கள்; சரண் அடையும் அடையாளமாக வெள்ளைக் கொடிகளோடு வந்தவர்களும் கொல்லப்பட்டனர் என்ற உண்மை அல்லது பொய் இதுவரை மயக்கமாகவே இருக்கிறது.
அப்படி வந்த போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் நெற்றியில் துப்பாக்கி ரவை செலுத்தப் பெற்று கொல்லப்பெற்றார் என்பதும் மயக்கமாக ஆக்கப்பெற்றது. அவரை மையப்படுத்திய நிழற்படத் தொகுப்பை இலங்கை அரசே வெளியிட்டது. ஆனால்  மாவீரர்களுக்கு மரணம் இல்லை என்ற அரூப வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கப் பார்த்ததின் விளைவால், வீழ்த்தப் பெற்ற பிரபாகரனின் நிழற்படத் தொகுப்பு குறியீட்டுக் கதையின் கோடுகளாக மாறிப்போயின. அவரது படங்களின் விளைவுகள் திசைமாற்றம் செய்யப்பெற்ற பாதையை அவரது மகன் பாலச்சந்திரனின் படத்தொகுப்பு நேர்செய்து கொண்டிருக்கிறது.
இந்தப் படங்களின் விளைவுகளையும் திசைமாற்றங்களையும் போலத்தான் தமிழ்நாட்டில் அந்தப் படத்தொகுப்பு பெரும் விளைவை உருவாக்கியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 1991, மே மாதம் 21 இல், சென்னையை அடுத்த  ஸ்ரீ பெரும்புதூருக்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. ரகசியப் புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையினரும் கொடுத்திருந்த ஆபத்து எச்சரிக்கைகளையும் மீறி மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவர்கள் எனச் சொல்லப்பட்ட புலிகளுக்கு அவர் மீது நியாயமான கோபங்கள் இருந்தன. அந்தக் கோபத்துக்குக் காரணம் இலங்கைக்கு அவர் அனுப்பி வைத்த இந்திய ராணுவம். இலங்கையில் அமைதி காக்கச் சென்ற ராணுவம் எனச் சொல்லப்ப்ட்டாலும்,ராணுவம் ராணுவமாகவே இருக்கும்; இருந்தது என்பதை இந்திய ராணுவம் இலங்கையில் உறுதி செய்தது. போராட்டங்களை அடக்குவதாகச் சொல்லி சாதாரண குடிமக்களிடம் நடந்து கொண்ட செயல்கள், வன்முறைகள் பற்றி ஏராளமான புனைகதைகள் அதன் பின் வெளியாகின; எழுதப்பெற்றன. குறிப்பாகப் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் நடந்து கொண்ட விதம் கோபத்தின் உச்சத்தை அடைந்த போது பழிவாங்கும் எண்ணமும் உச்சத்தை அடைந்தது. உச்சத்தை அடைந்த அந்த எண்ணம் தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிரைப் பறிக்கும் கண்மூடித்தனமான காரியத்தைச் செய்ய வைத்தது என்பதையும் ஈழத்எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.
ராஜீவ்காந்தியின் உடல் தமிழ் மண்ணில் சிதறடிக்கப் பட்ட காட்சிகள் தான் இந்தியத் தமிழர்களின் மனவெளி யிலிருந்து இலங்கைத் தமிழர்களின் சோகத்தை விலக்கி வைத்தது. இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் இலங்கைத் தமிழர்களின் பால் தங்கள் உணர்வு பூர்வமான நேசத்தையும் உதவ வேண்டும் என்ற கரிசனத்தையும் காட்டி வந்த தமிழ் நாட்டுத் தமிழ் மனம் பொதுப் புத்தி-  தேசப் பற்று என்ற கருத்துருவின் பால் நகர்த்தப் பட்ட வரலாறு தொண்ணூறுகளின் வரலாறாக ஆகி விட்டது.அத்தகைய வரலாற்றை உருவாக்கிய அந்த நிழற்படத் தொகுப்பையும் இப்போது பாலச்சந்திரனின் நிழற்படத் தொகுப்பு இடம் பெயர்த்துவிட்டது.

ஈழத்தமிழர்களின்பிரச்சினைத் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உணர்வுடன் கலந்துள்ளஒன்றாகவே இருக்கிறது. அப்படித் தொடர்வதற்கு தமிழக அரசியல் தலைமைகள் பெரிதும் மாறிவிடவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்களை  மொழி ஒன்று மட்டுமே உறவுடையவர்களாக நினைத்துவிடச் செய்யாது. மொழியுணர்வைத் தாண்டியதாகச் சமயஞ்சார்ந்த பண்பாட்டு நடைமுறைகளும்  அன்றாட வாழ்க்கைப் போக்குகளுமே மனிதக் கூட்டத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது என்பது நிகழ்கால உண்மைகளாக இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வரலாற்று ரீதியாக சமய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனை முறைகள், மொழிப்பயன்பாடு என ஒற்றுமைப் பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்த ஒற்றுமைகளே இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் பால் திரும்பத் திரும்ப தமிழ் நாட்டுத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இருக்கும் இந்தப் பின்னணியை-  பண்பாட்டுத் தொடர்பை இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதைச் செய்யாவிட்டால், இந்திய அரசின் இலங்கை பற்றிய கருத்துருவை மாற்ற முடியாது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை அணுகிய காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பக்கத்து நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறது என்றும் கூடச் சொல்ல முடியாது. சமீப காலங்களில் வளர்ந்து வரும் உலகமயப் பொருளாதாரத்தின் வியாபாரப் பெருக்கத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சந்தையாக இந்திய அரசும் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளைத் தொடங்கியுள்ள இந்தியப் பெருமுதலாளிகளும் கருதுகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ராணுவத் தொழில் நுட்பம் சார்ந்த உதவிகளுக்கு அப்பால், இந்தியக் கம்பெனிகள் எண்ணெய் உற்பத்தி மின்சார உற்பத்தி, ஊடக வலைப்பின்னல்களை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழில் என இலங்கையில் தொழில் கூட்டுகளைத் தொடங்கியுள்ளன.
அந்தப் போக்கைப் பயன்படுத்தித் தமிழ்ப் பெருமுதலாளிகளும் தங்களின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சிந்தனையைச் செலுத்தி விடாமல் இலங்கைத் தமிழர்களோடு  இந்தியத் தமிழர்களுக்கு உள்ள தொப்புள் கொடி உறவு எனச் சொல்லத்தக்க உறவை இந்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்கும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும். மறக்கடித்து விடலாம் – அணைத்து விடலாம் என நம்பப்பெற்ற ஒரு ஆழ்மன நினைவுப்பொறியைத் திரும்பவும் மிதப்பு நிலைக்குக் கொண்டு வந்து கொதிநிலை ஆக்கியிருக்கிறது இந்தச் சிறுவனின் படத்தொகுப்பு. நினைவுகள் ஆழப் புதைவன மட்டுமல்ல; மிதக்கும் குமிழிகளும் கூட. தொட்டுப் பார்த்தால் குமிழிகள் உடைந்து போகும் என்ற மட்டும் நினைக்க வேண்டியதில்லை; கொப்புளங்களாக மாறவும் கூடும்.

 நன்றி: உயிர்மை,ஏப்ரல்,2013

வார்சாவில் ஒரு நேர்காணல்

$
0
0
போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. முதல் பகுதி இது .

http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/

அடுத்த பகுதி அப்புறம் வரும் .

வார்சாவில் ஒரு நேர்காணல்

$
0
0
போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள நேர்காணலைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்.  

http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/
http://gazeta-sedno.pl/3881/whats-up-uw-a-passage-to-india-part-2/

பாலாவின் பரதேசியைப் பற்றியும் சுற்றியும்

$
0
0
 படம் வருவதற்கு முன்பாகப் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டு படத்தை வெளியிடுவது இப்போது ஓர் வியாபார உத்தியாக இருக்கிறது. பாலாவின் பரதேசியும் அப்படியான உத்திக்குப் பிறகுதான் திரையரங்குகளுக்கு வந்தது. போலந்தின் தலைநகர் வார்சாவில் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இணையங்களில் கிடைக்கும் இணைப்புகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. நான் பார்த்து முடிப்பதற்குள் பலவிதமான விமரிசனங்கள் அந்தப் படத்தை நோக்கி எழுதப்பட்டன. நேர்மறையான விமரிசனங்களை விடவும் எதிர்மறை விமரிசனங்களே அதிகம் வந்தன.
கதை உருவாக்கம், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுபவரின் பின்னணி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பாடல் வெளியீட்டு நிகழ்வு எனப் படத்துக்கு வெளியே இருக்கும் பலவற்றைப் பற்றிய முன் அபிப்பிராயங்களோடு எழுப்பப்பட்ட விமரிசனங்களைத் தாண்டி அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டும் என்பதால் விரிவான விமரிசனம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் “எதுவரை- உரையாடலுக்கான வெளி ” என்னும் இணைய இதழில் எழுதியுள்ளேன். படத்தைப் பற்றியும் படத்தைச் சுற்றி எழுப்பப்பெற்ற விமரிசனங்கள் பற்றியும் அந்தக் கட்டுரை பேசுகிறது. இந்த இணைப்பில் போய் வாசித்துப் பாருங்கள்http           http://eathuvarai.net/?p=3437

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்

$
0
0

தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அப்படி வலியுறுத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய பட்டங்கள் பலவாக இருக்கும்என்பதும் எனக்கு தெரியும். நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிற்போக்குவாதி; மொழி வெறியன்; கிணற்றுத்தவளை என்பதான தூற்றல் வார்த்தைகளால் அர்ச்சனைகள் கிடைக்கலாம்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்கலைக்கழகங்களில் மட்டுமே பணியாற்றிய நான் பள்ளிக் கல்வியைப் பற்றி நேரடியாகப் பேசும் தகுதி இருக்கிறதா? என்பதையும் எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். ஆங்கிலவழிக் கல்வி மீது அளவிட முடியாத மோகம் கொண்டலையும் பெற்றோர்களே அரசுகளின் திட்டமிடலுக்கு நெருக்கடிகள் உருவாக்குகிறார் என்று தோன்றுகிறது. அந்த மோகத்தைக் கவனத்தில் கொள்ளும் நமது அரசாங்கங்களுக்கும், அதற்கான கல்விமுறையைத் திட்டமிட்டுக் கொடுக்கும் வல்லுநர்களும் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கே நமது உயர்கல்வியில் இருக்கும் மொழிப்பிரச்சினையை முதலில் சொல்லி விடுகிறேன். பிறகு பள்ளிக் கல்வியைப் பற்றிப் பேசலாம்.

தமிழ் நாட்டில் பள்ளிக் கல்விக்குப் பிந்திய பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்பட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப் பாடங்களாகவே உள்ளன. ஒரு சில கல்லூரிகளில் அதுவும் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழிக்கல்வியாகக்கலையியல் பட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. பட்டமேற்படிப்புக் கல்வி என்பது ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் ஆங்கில வழிக்கல்வி தான். மாணவர்களுக்குத் தரப்படும் சான்றிதழ்களில் படிப்பு மொழி என்ற இடத்தில் ஆங்கில வழி எனக் குறிக்கப்படுவதையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுதும் முறை ஆங்கில வழியாக இருப்பதில்லைஎன்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களில் பாதிப் பேர் தமிழில் தான் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி பயிலும் முதுநிலைப் பட்ட வகுப்புத் தாள்கள் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. சமூக அறிவியல் பாடங்களான வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், தொடர்பியல், வணிகவியல், போன்ற  பாடங்களைத்தமிழில் எழுதும்நிலை கால்நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.இப்போது கலைப் பாடங்கள் மட்டுமல்ல அறிவியல் பாடங்களும் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கில வழிக் கல்வி எனக் குறிக்கப்படுவதை விரும்பும் மாணாக்கர்கள் தேர்வுகளைத் தமிழில் எழுதும் நிலை தான் இருக்கிறது என்பது ஒருவித நகைமுரண் தான் என்றாலும் உண்மை நிலை அதுதான். ஒட்டு மொத்த வினாக்களுக்கும் முழுமையாகத் தமிழில் எழுதினால் கூடப் பரவாயில்லை. ஒரே கேள்வியில் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்த மொழி நடையில் இருக்கிறது என்பதைப் பல ஆசிரியர்கள் வேதனையுடன் பேசிக் கொள்வதைதேர்வுத் தாள் திருத்தும் பணியின்போது நானே கேட்டிருக்கிறேன். ஒரே வாக்கியத்திலேயே கூடப் பாதித் தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து எழுதும் நிலை இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சு நடை உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வுத்தாள்களின் மொழி நடையாகவும் இருக்கிறது.  என்றாலும் எந்தப் பல்கலைக் கழகமும் அதன் எதிர் மறை விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தும் விதிகள் இங்கு நடைமுறையில் இல்லை; இருந்தாலும் கறாராகப் பின்பற்றப்படுவதில்லை. கறாராகப் பின்பற்றினால் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது முன் வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.

தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது ஒருவிதத்தில் உண்மை தான். அதிகப்படியான சதவீதத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறாத நிலையில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்ற அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமூகத்தில் பிணக்குகளை உருவாக்கும் என்பதும் கூட உண்மை தான். ஆனால் தேர்ச்சி பெற்று வாங்கிய படிப்பின் சாரத்தை எந்த ஒரு மொழியிலும் வெளிப்படுத்த இயலாத மாணவராக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படி வெளியேறி வேலை தேடி அலையும் பட்டதாரிகளாலும் சமூகப் பிணக்குகள் உருவாகாது எனச் சொல்ல முடியுமா.? நிகழ்கால இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் இதுதானே தலையான பிரச்சினை.

ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லவோ அல்லது எழுதவோ இயலாதவராகவே  வெளியேறுகிறார்கள். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.

இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் நமது கல்விமுறையின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப்பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு பட்ட வகுப்பிற்கும் மூன்று பாடத்திட்டக் குழுக்கள் பாடங்களைத் தயார் செய்கின்றன.

பகுதி -I தமிழ் பாடத்திட்டக்குழு, பகுதி -II ஆங்கிலமொழிப் பாடத்திட்டக் குழு, அப்பட்டத்தின் முதன்மைப் பாடத்திட்டக்குழு என்பன தான் அவை. இம்மூன்று குழுக்களும் கூடும் நாட்களும் வேறு வேறு; பாடங்களைத் திட்டமிடும் நோக்கங்களும் வேறு வேறு. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் கூடித் தயாரிக்கப் படும் பாடத்திட்டங்கள் வேறு வேறு வகையான பாதையில் தான் செல்லும். அதற்குப் பதிலாக இம்மூன்று குழுக்களும் இணைந்து ஒற்றை நோக்கத்துடன் பாடத்திட்டத்தைத் தயாரித்தால் அடைய வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையும் வாய்ப்புக்கள் உண்டு.

மொழிக்கல்வியில்  ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில  மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு  ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில்  இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ; எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது.

அந்த மறைமுக நோக்கத்தை நமது கல்வி முறை இன்றும் ஒத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வேண்டும் என்பதில் இன்று மாற்றுக் கருத்துக் கூற முடியாது; ஆனால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் தேவை என்று சொன்னால் அதை அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத ஒரு மாணவர் உலக இலக்கியத்தைக் கற்க விரும்பினால் அவர் நாட வேண்டியது நூலகங்களாகத் தான் இருக்க வேண்டும்; வகுப்பறைகளாக இருக்க வேண்டியதில்லை.

இதே அணுகுமுறையைத் தான் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதிலும் பின்பற்ற வேண்டும்.ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- தமிழ் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் தமிழ் மொழிக்கல்வி அமைய வேண்டும். அவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில பகுதிகளையும் சிலப்பதிகாரத்தின் ஒரு காதையையும் தேவாரப் பதிகங்கள் சிலவற்றையும் கற்றுத் தருவதால் தமிழ் இலக்கிய ஆர்வம் எதுவும் வந்து விடாது. மொழிக் கல்வியை முழுமையாகக் கற்பிக்கும் நிலையில் - மாணாக்கர்களின் முதன்மைப் பாடங்களோடு தொடர்புடைய மொழிப் பாடங்களாகக் கற்பிக்கும் போது தான் இவற்றின் முழுப் பயனும் மாணாக்கர்களுக்குப் போய்ச் சேரும். அப்படியில்லாத மொழிப்பாடக் கல்வி தொடர்ந்து விழலுக்கு இறைக்கும் நீர்தான். பள்ளிக்கல்வியிலும் ஆங்கிலவழிப் பாடங்களை அறிமுகப்படுத்தும் இந்த உத்தரவுக்குப் பின் உயர்கல்வி சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிக்கலை பள்ளிக் கல்வியும் சந்திக்கப் போகிறது.

மொழிக்கல்வியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்வதைப் பற்றிச் சிந்திக்காத நமது அரசுகளும், அவற்றுக்கு ஆலோசனை சொல்லும் வல்லுநர்களும் கற்பிக்கும் மொழிவழியை (MEDIUM OF INSTRUCTION) மாற்றிப் பார்க்கிறார்கள். இந்த இடத்தில் நான் இப்போது இருக்கும் போலந்து அனுபவங்களைச் சொல்ல விரும்புகிறேன். போலந்து நாட்டில் பாலர் படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரை அதன் அலுவல் மொழியான போல்ஸ்கியில் தான் இருக்கிறது. ஆங்கில வழிப் படிப்பு என்பது பெருநகரங்களில் இருக்கும் சர்வதேசப் பள்ளி(INTERNATIONALSCHOOL)களில் மட்டுமே இருக்கின்றன. பலநாடுகளிலிருந்து இங்கே வேலை பார்க்கும் மனிதர்களுக்கானவை அவை. அவற்றில் சேர பெரும்பணம் செலவழிக்க வேண்டும்.  போலந்துப் பெற்றோர்கள் அவற்றில் சேர்த்துப் படிக்க வைக்கும் விருப்பம் உடையவர்களாகவும் இல்லை; வசதியுடையவர் களாகவும் இல்லை.

நான் வேலை பார்க்கும் இந்தியவியல் துறை மாணாக்கர்களின் கற்கும் மொழி என்பது போல்ஸ்கி தான். போல்ஸ்கி வழியாகவே தமிழ் இலக்கணத்தைக் கற்கிறார்கள். அதைக் கற்பிக்கத் தமிழும் போல்ஸ்கியும் நன்கு அறிந்து சொந்த நாட்டுப் பேராசிரியர்களைப் பல்கலைக்கழகம் உருவாக்கிப் பணியைக் கொடுத்திருக்கிறது. வருகைதரு பேராசிரியராக வந்துள்ள நான் அவர்களுக்குத் தமிழில் எப்படிப் பேசுவது என்பதற்கான பயிற்சியையே அளிக்கிறேன். இப்படித்தான்  சமஸ்கிருதத்துறையும் இந்தித்துறையும் இருக்கிறது. அவர்களின் மொழி வழியே முதலில் உலக மொழிகளின் இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தந்த நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் இலக்கிய வரலாற்றையும் போல்ஸ்கியின் வழியாகவே அனைவரும் படிக்கிறார்கள். அதன் பிறகு அந்தந்த மொழியையும் அவற்றில் உள்ள இலக்கியங்களையும் ஆழமாகப் படிக்கவும் ஆய்வுகள் செய்யவும் விரும்பினால் அந்தந்த நாடுகளுக்கு அரசாங்கச் செலவில் போய்ப் படித்து விட்டு வருகிறார்கள். இது போல்ஸ்கியில் கற்பிக்கும் போலந்து நாட்டு அனுபவம் மட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலும் இதுதான் நடைமுறை. அந்தந்த நாட்டு மொழிகளில் தான் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இருக்கிறது.

நம் நாட்டில் நிலை இதற்கு நேர் எதிரானது. ஆங்கில மொழி ஆசிரியருக்கு தமிழ் இலக்கணம் தெரியாது. தமிழ் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியருக்கு ஆங்கில இலக்கணம் தெரியாது. மொழி கற்பிப்பதில் எல்லா மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி நமக்கு அறிமுகம் இல்லை. அதனைக் கற்றால் ஒருவர் எத்தனை மொழியையும் கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அதன் பிறகு அதில் பேசவும் எழுதவும் வேண்டுமென்றால் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய அரசுகளும் பல்கலைக்கழகங்களும் உலகில் எந்த மொழியில் எழுதப்படும் புதிய விசயத்தையும் உடனடியாக அவர்கள் மொழிக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்வதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. அப்படிச் செய்யவில்லை என்றால் தங்கள் நாட்டு மாணாக்கர்கள் உலக ஓட்டத்திலிருந்து விலகி விடும் ஆபத்து உண்டு என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. வார்சா பல்கலைக்கழகத்தைச் சுற்றி நான்கைந்து புத்தகக் கடைகள் இருக்கின்றன. அவை இங்கிருக்கும் முக்கியமான புத்தகக் கடைகள். அவற்றில் இருக்கும் புத்தகங்களில் தொண்ணூறு சதவீதப் புத்தகங்கள் போல்ஸ்கி மொழியில் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பன ஆங்கில இலக்கியம் சார்ந்தவை மட்டும் தான். லத்தீன் அமெரிக்கப் படைப்பாளியையோ, ஆப்பிரிக்க எழுத்தாளரையோ ஆங்கிலம் வழி அவர்கள் படிப்பதில்லை. தங்கள் தாய்மொழி வழியாகவே படிக்கிறார்கள். உலகப் பொருளாதாரம், அறிவியல், அழகியல், தத்துவம், கோட்பாடு என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தைக் கற்பதில்லை. ஏனென்றால் எல்லாமே போல்ஸ்கியின் கிடைக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பல்வேறு மொழிகளைப் போல ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே. ஆம் ஒரு மொழி மட்டுமே.

ஆனால் இந்தியர்களுக்கு ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமாக இன்னும் இல்லையே. நம்மை ஆண்டவர்களின் திறமையையும் நுட்பத்தையும் தக்க வைத்திருக்கும் அறிவாக இருக்கிறது. அதிலும் தமிழர்களுக்கு ஆங்கிலம் அதை விடவும் கூடுதலான வஸ்து. உலக அறிவையும் இலக்கியங் களையும் தன் வழியாகத் தரமுடியாமல் தவிக்கும் தமிழை – தமிழின் பெயராலேயே ஆட்சியைப் பிடித்து விட்டு தமிழில் எல்லாவற்றையும் கொண்டு வருவதற்கான  முயற்சிகளைச் செய்யாத அரசுகள் தொடரும் தமிழ்நாட்டில்  தமிழிலேயே படியுங்கள் என்று சொல்லவும், தமிழ்வழியே மட்டும் கல்வி இருக்க வேண்டும் என்று சொல்லவும் துணிச்சல் இல்லை.

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

$
0
0
இப்படி இருக்கிறார்கள்என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்
     மூலம் தனது இலக்கு என்ன என்று அடையாளப்படுத்தி இருக்கிறார். அதைச்    
     செய்யும்போதே தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சரியானவர்கள்   
      வளையத்துக்குள் நிறுத்திக் கொண்டு தனது பயணம் சரியாக இருக்கிறது  
     எனக் காட்ட முயல்கிறார். ஆனால் தன்னைச் சுற்றி நிகழும் அற்பத் 
     தனங்களாலும் அறிவற்ற செயல்களாலும் தாண்ட முடியாத தடைகள் 
    தோன்றி  அப்பயணத்தைத் தடுத்துக் கொண்டே இருக்கின்றன எனச் 
     சலிப்படையவும் செய்கிறார்.
ஒரே கல்லில் மூன்று நான்கு காய்களை அடித்து விடும்-அதுவும் ஒரே மரத்திலிருந்து தேங்காய், மாங்காய், முருங்கைக்காய் என விதம்விதமான காய்களை அடித்துக் காட்டும் திட்டத்தோடு  செயல்படும் வல்லமை கொண்ட  ஜெயமோகனோடு அவரளவுக்கு லாவகமாகக் கல் வீசும் திராணியில்லாத மற்றவர்களுக்குச் சட்டென்று கோபம் தான் வரும். அப்படிக் கோபப்படும் நபர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட அப்பாவியின் பிரதிநிதிகளாக முன் நிறுத்திக் கத்தி வீசும் போது சுவாரசியம் கூடிவிடுகிறது. நடந்தது சண்டையா? குதியாட்டமா? கும்மியடிப்பா எனக் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் அதிகம் வெளிப்பட்டது கோபத்தின் கொப்பளங்கள் தான். அதன் மணம் எல்லாருடைய நாசிக்குள்ளும் நுழைந்து நிறைந்து விட்டது என்பதை முகநூல் காட்டியது. நுகர்ந்து பார்த்தால் அது சந்தன வாசனையா? ஜவ்வாது வாசனையா? அல்லது வழக்கமாக ஜீரணம் ஆகாததால் கிளம்பும் கற்பூரவாசனை(!)யா எனச் சொல்லவும் முடியவில்லை. இரண்டு நாள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு என் பங்குக்கு நானும் கொஞ்சம் ஊதிப் பார்க்கிறேன்.
இப்படிப் பட்டவர்என ஜெயமோகன் சுட்டிக் காட்டும் அந்த நபரை “சாதாரண மனிதர்களின் வகைமாதிரி”யாக எடுத்துக் கொள்ள முடியாது என் மனம் சொல்கிறது. அந்த மனிதர் -70 வயதைக் கடந்த அந்தப் பெரியவர் சாதாரண மனிதர் அல்ல. இலக்கியம் என்றால் என்ன என்று தனக்குத் தெரியும் என்று முழுமையாக நம்புபவர். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், தேவதேவன் போன்ற இலக்கியவாதிகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் அளவுக்குத் தனக்கு இலக்கியம் தெரியும் என நம்புபவர். தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ள வேண்டும்; இலக்கியம் தொடர்பாக நான் கேட்கும் வினாக்களுக்கு விடை சொல்ல வேண்டும்; தெரியவில்லை என்றால் யோசித்துச் சொல்ல வேண்டும்; அப்படியும் தெரியவில்லை என்றால், ‘தெரியவில்லை’ என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஒத்துக்கொண்டால் நான் அந்தப் பதிலைச் சொல்லிப் புரிய வைப்பேன். மொத்தத்தில், நான் வைக்கும் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் யாரையும் இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்வேன்; இல்லையென்றால் நீ இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் இல்லை என்று சான்றிதழ் கொடுத்து விட்டுச் செல்வேன் என்னும் திட்டத்தோடு வந்தவர்.
இவரின் சார்பாகப் பேசும் வேலை எனக்குக் கிடையாது. இவரின் சார்பாக நின்று பேசினால் ’என் சார்பில் பேச நீ யார்?’ என்று நம் மீதே பாயும் வல்லமை கொண்டவர் அந்தப் பெரியவர். ஆனால் அது தெரியாமல் ஜெயமோகனின் எதிராளிகள் பலரும் அவரைச் ’சாதாரண மனிதர்; அப்பாவி, பொதுமக்களில் ஒருவர்’ என உருவகித்துக் கொண்டு அவரை ஜெயமோகன் அவமதித்துவிட்டார் எனக் கோதாவில் இறங்கி விட்டார்கள். ஜெயமோகன் என்னும் அகம்பாவியால் அவமதிக்கப்பட்ட அந்த (அ)சாதாரண மனிதரின் சார்பில் களம் இறங்கி ஜெயமோகனை உண்டு- இல்லை என்று துவம்சம் செய்துவிட்டார்கள். எனக்கு அந்த வேலை இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  
*************
இலக்கியம் என்பது ஒற்றைப் பரிணாமம் கொண்டதா? எல்லாக் காலத்துக்கும் பொதுவான வெளிப்பாட்டு முறை களையும் நோக்கங்களையும் கொண்டதா?  தன்னோடு உரையாடும் இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் யார்? என்ன வகையான இலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ளவர்? அவரிடம் எது குறித்து உரையாடலாம் என்ற அறிதல் இன்றித் தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்ல வேண்டும்; தன் முன்னால் உள்ளவரை அடக்க வேண்டும்; மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உந்தித் தள்ளும் அகந்தை கொண்ட இந்தப் பெரியவரைப் போன்றவர்கள் இங்கே – தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியைப் பேசும் பாண்டிச்சேரியிலும் விரவிக் கிடக்கிறார்கள் எனச் சொல்ல வரும் ஜெயமோகன் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக அமெரிக்க,கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியத் தமிழர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை; எனக்கு நன்கு தெரிந்த -தமிழ்நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கேரளத்தில் –கர்நாடகத்தில் இப்படிப் பட்டவர்கள் இல்லை. ஒரு வெள்ளையரிடம் அல்லது மலையாளியிடம், கன்னடத்தானிடம் நான் ஒரு எழுத்தாளன்என அறிமுகம் செய்து கொண்டு அதற்கான முழு மரியாதையையும் அர்த்தத்தையும் பெற்று விட முடியும். அதைப் போல தமிழர்களிலேயே ஈழத்தமிழர்களிடம் தன்னை “எழுத்தாளன்” என்று அறிமுகம் செய்து கொள்ள முடியும். அவர்கள் ’எழுத்தாளனை’ உணர்ந்து கொள்ளக் கூடியவர்கள் என்று விதிவிலக்கைச் சுட்டிக் காட்டும் ஜெயமோகன் தான் ஒன்றிரண்டு தடவை சென்று வந்த மலேசிய,சிங்கப்பூர் தமிழர்கள் பொதுவிதிக்குள் இருக்கிறார்களா?விதிவிலக்குக்குள் வருவார்களா எனச் சொல்லவில்லை. விடுவதும் சேர்ப்பதும் ஜெயமோகனின் விருப்பம். விட்டு விடலாம்.
இந்தப் பொதுவிதி சரியானது தானா? என்று கேள்விக்கு எவரொருவரும் சரியான பதிலைச் சொல்ல முடியாது. வெள்ளைக்காரன் அல்லது இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் எல்லாரும் ஒவ்வொன்றையும் சரியாகவே புரிந்து கொள்கிறார்கள்; அதிலும் இலக்கியம் அல்லது எழுத்தாளன் என்று வரும் போது மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் (அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்) எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமலே தனக்கு ’எல்லாம் தெரியும்’ என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பொதுவிதிக்குப் புள்ளி விவர ஆதாரம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் இருக்கிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லது இலக்கியவாதி- தமிழ்நாட்டில் எல்லா வகையான தமிழர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பும் கிட்டுகிறது. இந்தியத் தமிழர்கள் வாழும் அந்நிய நாட்டிலும் இதே நெருக்கடி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் பிறமொழி பேசும் மனிதர்களுக்கிடையேயான சந்திப்பு அல்லது உரையாடல் என்பது தன்னையொத்த கருத்துடைய அல்லது தான் இயங்கும் தளங்களில் பரிச்சயமான மனிதர்களையே சந்திக்க நேரிடும்; உரையாடவும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் ஒரு எழுத்தாளராக- கலைஞனாக- பேராசிரியராக அழைக்கப்பட்டிருந்தால், அழைக்கப்பட்டவரின் அடையாளத்தோடு உங்களின் அடையாளத்தைப் பொருத்திக் கொண்டு தான் உங்களோடு உரையாடுவார்கள்; மதிப்பார்கள்; மரியாதை செய்வார்கள். அங்கு காட்டப்படும் எதிர்வினை அல்லது உறவுநிலை என்பது முழுமையும் உங்களுக்கானது அல்ல. உங்களை அழைத்து அறிமுகப்படுத்தும் நபர் அல்லது அமைப்புக்கான அடையாளத்தோடு தொடர்புடையது. அந்தச் சந்தர்ப்பங்களின் அனுபவங்களை மட்டும் வைத்து கொண்டு மற்ற மொழிக்காரர்கள் சரியாக இருக்கிறார்கள்; தமிழர்கள் தான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விட்டார்கள் எனச் சாபம் தருவது பொருத்தமாகத் தோன்றவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போலந்தில் வாழும் நான் மொழி, இலக்கியம் சார்ந்த நபர்களையே அதிகம் சந்திக்கிறேன். அவர்களோடு உரையாடுகிறேன். மற்றவர்களோடு உரையாடும் போது அவர்கள் இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி- பொதுவாழ்க்கை பற்றி- அரசியல் பற்றி- இந்திய உணவைப் பற்றிக் கேட்பார்கள். நானும் அவர்களிடம் அதே போன்ற கேள்விகளையே கேட்பேன். பதில் சொல்வார்கள். இந்த உரையாடலும் கூட ஆங்கிலம் தெரிந்த போலந்தியர்களோடு மட்டுமே சாத்தியம். 1980 –க்குப் பின் பள்ளியில் படிக்கப் போனவர்களுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். அதற்கு முன்பு கற்று முடித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. போல்ஸ்கி தான் தெரியும். ஆனால் ரஷ்யன் தெரியும். காரணம் அப்போது போலந்து சோசலிசக் கட்டமைப்புக்குள் – வளையத்துக்குள் இருந்தது.  சோவியத் யூனியனின் நட்பு வட்டத்தில் இருந்தபோது கொண்டாடப் பெற்ற பலவும் இப்போது மறக்கப்படும் நினைவுச் சின்னங்களாக ஆகிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் நாடகக்காரர்களால் நினைக்கப்படும் – படிக்கப்படும் குரோட்டோவ்ஸ்கியைத் தெரியாத பல்கலைக்கழக மாணவர்களே அதிகம் இருக்கிறார்கள். சோசலிசக் காலத்தில் சிறந்த படம் எடுத்த ஆந்த்ரே வெய்தாபோன்ற சினிமாக்காரர்கள் புதிய பொருளாதார மாற்றத்துக்குப் பின் நிகழ்காலச் சமூகத்தையும் மனப்போக்கையும் புரிந்து கொண்டு புதியவகைப் படங்களைக் கொடுப்பதால் நினைக்கப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். ஒரு நாட்டில் கலைஞர்கள் – எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் வெறும் புரிதலை மட்டும் சார்ந்ததோ மனப்பாங்கு சார்ந்ததோ மட்டும் அல்ல; அது ஓர் அரசியல் கேள்வியும் கூட என நினைக்கிறேன். தான் நம்பும் அரசியல் இயக்கம் முன் வைத்த இலக்கியப் போக்கை – பிரதிநிதிகளை- எழுத்தாளர்களை மட்டுமே ஏற்கும் மனநிலையோடு இருக்கிறது பொது மனம். பொதுமனம் மட்டுமல்ல ஓர் இலக்கிய இயக்கம் சார்ந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசிப்பு மனம் கூட அப்படித் தான் இருக்கிறது.
பாண்டிச்சேரியில் தங்கியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான அந்த நண்பர் ஓர் இலக்கிய வாசகர் என ஜெயமோகன் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவர் எப்படிப்பட்ட வாசகர் என்று தெரியாது. ஜெயமோகனின் புனைகதைகளுக்கு மட்டும் வாசகரா? விமரிசனங்களுக்கும் வாசகரா? நிகழ்காலச் சமூக முரண்பாடுகளை விளக்கிக் காட்டும் அரசியல் எழுத்துகளுக்கும் இந்தியத் தத்துவ ஞான மரபைப் பேசும் சொல்லாடல்களுக்கும் கூட அவர் வாசகர் தானா? என்ற கேள்விகளுக்கு ஜெயமோகனிடம் கூடப் பதில் இருக்குமா? என்று தெரியவில்லை. ஜெயமோகனின் வாசகராக இருப்பதாலேயே நாஞ்சில் நாடனுக்கும் அவர் வாசகராக இருக்கும் சாத்தியங்கள் உண்டா? தேவதேவனின் கவிதைகளுக்கும் நாடகங்களுக்கும் கூட வாசகராக இருக்கிறாரா? என்ற கேள்விகளுக்கு யாரிடம் பதிலைக் கேட்பது? ”அவர் நல்ல வாசகர்; இனியவர்; இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர் என்று ஜெயமோகன் சொல்லி விட்டதால் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவு தான். அதையெல்லாம் விட அவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜெயமோகனை மட்டுமல்ல; நாஞ்சில் நாடனையும், தேவதேவனையும் ஏற்றுக் கொண்டவர். அதனால் அவரை நல்ல வாசகர் என்று ஜெயமோகன் ஏற்றுக் கொண்டு அவர் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரும் இதே தமிழ்ச் சமூகத்தில் தான் இருக்கிறார் என்பதை ஜெயமோகன் எப்படி மறந்து விடுகிறார் என்பதுதான் தெரியவில்லை.
இன்று தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களில் ஒருவராக ஜெயமோகன் இருக்கிறார் தானே. அதனால் தானே அவரது வாசகர்களின் வீடுகளில், ஏற்பாடு செய்யும் தங்கும் விடுதிகளில் தங்க முடிகிறது. அவரது நூல்களை வாசித்த தமிழர்களின் அழைப்பின் பேரில் தானே அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் எனச் சுற்ற முடிகிறது. அவரை அழைப்பவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்கள் தானே? உங்களைக் கொண்டாடும் வாசகர்கள் இருக்கும் இதே பரப்பில் –வெளியில் தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகனையும் ஜெயமோகனுக்காக நாஞ்சில் நாடனையும் தேவதேவனையும் ஏற்றுக் கொண்டு அழைத்து மரியாதை செய்யும்- எல்லாவற்றையும் கேள்விகள் இல்லாமல் கேட்டுக் கொள்ளும். அந்த நல்ல வாசகருக்குப் பக்கத்து வீட்டுக்காரராக “இப்படி”ப்பட்டவரும் இருக்கவே செய்வார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே. சும்மா இருக்காமல் உங்கள் நண்பர் மூலம் வந்து உங்களுக்குத் தேர்வு வைக்கிறார் என்றால் “தேர்வை எழுத முடியாது” என்று சொல்லி அனுப்பி விடுவதே சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு அடிப்பேன்; உதைப்பேன் என்றால் அது சாதாரண மனிதர்களை விடக் கீழானவர்களாகப் படைப்பாளியைக் கீழே இறக்கி விடும் என்றே நினைக்கிறேன். இலக்கியம் படிக்க வந்த மாணவனின் அறியாமைக்காக ஒரு பேராசிரியர் கோபப்படக் கூட முடியாது நண்பர்களே.. அவர் அப்படி இருப்பதில் யாருக்கு என்ன வந்தது? அவருக்குப் பக்கத்து வீட்டில் தானே ஜெயமோகனின் வாசகரும் இருக்கிறார்.  
ஜெயமோகனின் வாசகருக்கு தனது பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நன்கு தெரிந்தே இருக்கிறது. என்ன வகையான நூல்களை வாசிப்பார் என்பதும் கூடத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவரிடம் ஜெயமோகனின் ‘சங்க சித்திரங்களை’ கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நல்ல வாசகருக்கு- இனியவருக்கு(!) ஜெயமோகன் உள்ளிட்ட இலக்கியவாதிகள் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? தன்னோடு உரையாட வரும் ஒருவரிடம் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதைப் பற்றித் தான் தெரியவில்லை. அதனால் தான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. தன் வீட்டில் வைத்து அவமானப் படுத்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரோடு அந்த நல்ல வாசகரின் பிந்திய உறவு எப்படி இருக்கும் என்பது பற்றி ஜெயமோகன் கவலைப்படவில்லை. அவரோடு சேர்ந்து தங்கியிருந்த நுட்பமான மன உணர்வும் அறிவுச் செருக்கும் கொண்ட இலக்கியவாதிகளும் வாசகர்களும் கவலைப்படவில்லை.
ஜெயமோகனின் கவலையும் கோபமும்” இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள்” என்பதைவிடவும், இப்படிப்பட்டவர்கள் உருவாகக் காரணமான தமிழக அரசியல் வரலாற்றின் மீதுதான் என்பதை நான் சுலபமாக உணர்ந்து கொள்கிறேன்... இப்படிப்பட்டவராக அறிமுகப்படுத்தப்படும் அந்தப் பெரியவர் சி.என்.அண்ணாதுரையைப் பெரிய அறிஞராகவும், அவரது பேச்சையே பேரிலக்கியமாகவும் கருதி வாசித்தவர். கண்ணதாசனின் திரைப்பாடல்களை ரசிப்பதையே இலக்கிய ஆராய்ச்சியாக நினைப்பவர்; தமிழின் தொன்மையை நிலைநாட்டுவதையே சமூகவரலாற்றாய்வின் உச்சமாகக் கருதுபவர். மொத்தத்தில் அவர் திராவிட இயக்கத்தால் காலியாக்கப் பட்ட மூளைக்கூட்டோடு அலைபவர். இவரைப் போன்றவர்களையே திராவிட இயக்கம் உருவாக்கி எங்கும் நிரப்பியிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் தான் சுந்தரராமசாமியைச் சந்தித்த பேராசிரியர். நாட்டுப்புற வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாளின் ஆராய்ச்சியைக் காது கொடுத்துக் கேட்காத ஆடிட்டர்; வேம்பூர் ராமசாமியை சுந்தர ராமசாமியாக நினைத்துக் கொண்ட கனடா வாழ் இந்தியத்தமிழர்கள். இத்தகையவர்களைத் திராவிட இயக்கத்தின் வார்ப்பு எனப் பொதுவாகச் சொல்வதைவிட தி.மு.க.வின் வார்ப்பு எனச் சொல்வதே சரியாக இருக்கும். இந்த இலக்கோடு எழுதப் பெற்ற அந்தக் கட்டுரை திமுகவினரைத் தலித்துகளுக்கு எதிரானவர்களாகவும் முன் நிறுத்துகிறது. அதேநேரத்தில் ஜெயமோகனும், ஜெயமோகனோடு சேர்ந்து இலக்கியப் பயணம் செய்து கொண்டு இயங்கும் நாஞ்சில் நாடனோ, தேவதேவனோ அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்களுக்காக இயங்குபவர்கள்; ஆதரவாளர்கள் எனக் காட்டவும் முயல்கிறது.
*************
அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளை முன் வைத்து வெகுமக்களைத் திரட்டாமல் பண்பாட்டுக் காரணங்களை – மொழி, இன அடையாளங்களுக்கு ஆபத்து என்னும் பண்பாட்டுச் சொல்லாடல்களை முன் வைத்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அது நிகழ்காலத்தை மறந்து கடந்த காலத்தின் பண்பாட்டு அடையாளங்களை திரும்பவும் நிலைநாட்டிவிடும் நோக்கம் கொண்டது. சமகால வாழ்வையும் முரண்பாடுகளையும், அதற்குள் தனிமனிதர்களின் இருப்பையும் அலைவையும் தவிப்பையும் நுட்பமாகப் பேசும் இலக்கியப் போக்கை உருவாக்காமல் புறநிலையில் தன்னைத் தனது படைப்புகளிலிருந்து விலக்கி வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும் தன்மை கொண்ட இலக்கிய வகைமைகளையும் எழுத்தாளர்களையுமே ஆதரிக்கும் கொண்டாடும் இயல்பு கொண்டது. அது தனது அரசியல் வெற்றிக்கு உதவும் பரப்பியல்வாத எழுத்துக்களை – ஊடகச் செயல்பாடுகளை- கேளிக்கை வடிவக் கலை வடிவங்களை மட்டுமே ஆதரித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது என்ற விமரிசனத்தை மறைமுகமாக முன் வைக்கிறார் ஜெயமோகன். அந்த விமரிசனத்தோடு முரண்படுகிறவர்களும் ஏற்காதவர்களும் உரிய பதில்களை எழுப்பியிருக்கலாம். அதற்கான முயற்சியை முன்னெடுக்க நினைத்த ராஜன்குறைஅடுத்த அடியை வைக்காமல் மலைத்து நின்று விட்டார். அப்படி மலைக்கச் செய்தது கலைஞர்கள் X சாதாரண மனிதர்கள்என்ற எதிர்வாக ஆக்கி திசை திருப்பியவர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் என நினைக்கிறேன். எண்ணிக்கைப் பெருக்கம் மட்டுமல்லாமல் முகநூல் பிரபலமான மனுஷ்யபுத்திரன்அதிரடியாகக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டிய கூச்சலுடன் வரிசையாகப் பதிவுகளை இறக்கி விட்ட வேகமும் இன்னொரு காரணமாக மாறி விட்டது. கவிதா முரளிதரன்போன்றவர்கள் நாஞ்சில் நாடனின் தலித் ஆதரவு கேள்விக்குரிய ஒன்று என இன்னொரு பக்கம் இழுத்தார்கள். கட்டுரையில் வெளிப்படும் ஈழ ஆதரவு முகம் கூட நேர்மையானது அல்ல; காரியார்த்தமானது எனச் சிலர் பின்னூட்டம் இட்டார்கள். மொத்தத்தில் ஜெயமோகனின் கட்டுரையை மையமாக்கி எழுப்பிய கும்மியொலி குதூகலமாக ஆகிக் கரைந்து கொண்டிருக்கிறது. 
கட்டுரை நீண்டு கொண்டே போகிறது என்பதால் விவாதப் புள்ளிகளை மட்டும் சுட்டிக் காட்ட முடிக்கலாம் என நினைக்கிறேன். 
·          பண்பாட்டுச் சொல்லாடல்களை முன் வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் எதிர்விளைவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து அரசியல் கட்சிகளாக இருந்து கொண்டிருப்பதற்கும், ஆட்சியை மாறிமாறிப் பிடிப்பதற்கும் அவை முன் வைக்கும் பரப்பியல் வாதச் சொல்லாடல்களே காரணங்கள். அவை சுலபமாகக் கைவிட்டு விட முடியாத இடஒதுக்கீடு, சமூகநீதி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்பனவற்றில் பற்றுக் கொண்டிருக்கின்றன. இவை தொடர வேண்டும் என்பதற்காகப் பண்பாட்டுக் கொள்கை எதுவும் இல்லாத அந்த இயக்கத்தை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருப்பதும் கல்வி, சுற்றுச்சூழல், அழகியல் வடிவங்கள் போன்றவற்றைத் தொலைத்துக் கொண்டிருப்பதும் சரியான திசைவழி தானா?  இந்தக் கேள்வியை ஜெயமோகன் நேரடியாகக் கேட்கவில்லை என்றாலும் அவர் உள்ளார்ந்து இந்தக் கேள்வியை எழுப்புவதாக நினைக்கிறேன். அந்தக் கேள்வி விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி என்பதை அவசியமானதாகவும், அவசரமானதாகவும் நினைக்கிறேன். பலரும் அப்படி நினைக்க வாய்ப்புண்டு என்பது என் கருத்து.   
·          இதேபோல் திராவிட இயக்கத்தை எப்போதும் எதிர்நிலையில் நிறுத்தி விமரிசனம் செய்த க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, சுந்தரராமசாமி போன்றவர்களிடம் எல்லாவற்றையும் ஏற்கும் மனநிலை இருந்ததில்லை என்பதையும் விவாதிக்க வேண்டும். திராவிட இயக்கத்தவர்கள் வாசிக்கிறார்கள்; பேசுகிறார்கள் என்பதானாலேயே சங்க இலக்கியங்களை ஒதுக்கி வைத்தவர்கள் தானே அவர்கள். ஜெயமோகன் கொண்டாடிய- கொற்றவை என்னும் நவீனக் காப்பியம் எழுத உந்துதல் தந்த மகாகாவியமான சிலப்பதிகாரம் பற்றிப் பேசாமல் கம்பராமாயணம் பற்றிப் பேசியதின் காரணங்களையும் விவாதிக்க வேண்டும். அவர்களிடம் செயல்பட்ட மனப் பாங்கு எத்தகையது? அவர்களின் வாரிசுகளாக – வாசகர்களாக நினைத்துக் கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் சொல்ல வேண்டும் தானே.? நவீன இலக்கியப் பிரதிகளை வாசிக்காத பேராசிரியர்களை விநோதமான பார்வையில் பார்த்துக் கேலி செய்யும் நபர்கள் தொல்காப்பியக் கவிதையியல் பற்றித் தெரியாது என வருத்தப்பட்டதுண்டா?  
·          திராவிட முன்னேற்றக் கழகம் இப்படிப் பட்டவர்களை உருவாக்கிப் பரப்பியிருக்கிறது என வருத்தப்படும் ஜெயமோகனால், அதற்கு மாற்றாக எல்லாவகைப் போக்குகளையும் அங்கீகரிக்கும் அரசியல் இயக்கம் ஒன்றைக் கைகாட்டினால் மகிழ்ச்சியடைவேன். அரசியல் இயக்கம் கூட வேண்டாம். இலக்கிய இயக்கங்களையாவது காட்டினால் போதும். அவரை மையப்படுத்தி இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்றவை அத்தகைய முயற்சி என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சுலபமாக என்னால் சொல்ல முடியும்.

·          இங்கே எல்லா அமைப்புகளும் இயக்கங்களும் மனிதர்களும் ஒதுக்குவது – ஒதுங்குவதுஎன்ற அடிப்படையிலிருந்தே தங்களின் நகர்தலைச் செய்கிறார்கள். ஒதுக்குவது –ஒதுங்குவது என்பது சாதியக் கட்டுமானத்தின் –தீண்டாமையின்  அடிப்படைக் கூறு. அதன் இயல்பான இருப்பே என்னை ஏற்றுக் கொள்; நான் உனக்கான அடையாளத்தை வழங்குவேன்என்பதாக இருக்கிறது. அதிலிருந்து விலகிய சொல்லாடல்களை எப்படி உருவாக்குவது என்பதைக் கண்டறியவே என் காலம் முடிந்து போகும் போலும். 
Viewing all 58 articles
Browse latest View live