Quantcast
Channel: அ.ராமசாமி எழுத்துகள்
Viewing all 58 articles
Browse latest View live

வரலாற்றிலிருந்து நிகழ்காலத்தை நோக்கி: பாலாவின் பரதேசி

$
0
0

பாலாவின் பரதேசி படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. கணிணியின் குறுந்திரையில் பார்க்கத்தக்க இணைப்புக்காகக் குறைந்தது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  காத்திருந்து பார்த்தவுடன் கட்டுரையொன்றை எழுதி தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது, அதே நேரத்தில் பரதேசி போன்ற திரைப்படத்தைக் கணிணியில் பார்த்து விட்டு விமரிசனம் செய்வது, அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பு, அக்கறை, திரைமொழி சார்ந்த நுட்பங்கள் போன்றவற்றிற்கு நியாயம் செய்வதாக அமையுமா?
என்ற கேள்வி தயக்கத்தையும் உண்டாக்கியது. ஆனால் அந்தப் படத்தைச் சுற்றி நடந்த புலம்பல்களும் புழுதி வாரித் தூற்றல்களும் எனது பார்வையையும் கருத்துக்களையும் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டன.

அழகியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் நமது காலத்தில் கவனத்திற்குள்ளாகும் ஒரு திரைப்படத்தை விமரிசனம் செய்யாமல் தவிர்ப்பது குற்றவுணர்வை உண்டாக்கக் கூடிய ஒன்று. பரதேசி போன்ற முக்கியமான படத்தைப் பற்றி உடனடியாக இல்லையென்றாலும் காலம் தாழ்த்தியாவது பேசித்தான் ஆகவேண்டும். படத்தைப் பற்றி மட்டுமல்ல;அதனைச் சுற்றி நடக்கும் சொல்லாடல்கள் பற்றிப் பேசுவதும் கூட நிகழ்காலத்தின் தேவையாகவே இருக்கிறது. உள்வட்டத்தில் இருந்து படத்தைப் பற்றிப் பேசாமல் வெளி வட்டத்தில் நின்று இயக்குநர் பாலாவுக்கு எதிராகவும், படத்தை வரவேற்பவர்களுக்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கும் குறிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன; இருக்கின்றன.. சமூக வலைத் தளங்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவு இது. திரைக்கு வந்தவுடன் ஒரு படத்தைப் பற்றி விமரிசனம் எழுதி அதை வெற்றிப்படமாக ஆக்க வேண்டும் என்ற விருப்பத்துடனோ, அந்தப் படத்தைத் தியேட்டரை விட்டு ஓடும்படி ஆக்க வேண்டும், என்ற ஆசையுடனோ எழுதப்படும், விமரிசனக் குறிப்புகளோடு எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் பார்வையாளர்களின் இடத்திலிருந்து திரைப்படத்தை அணுகும் காரணத்தினால், எழுதுவதற்கு முன்னால் ஒரு படத்தை சில  தடவையாவது பார்க்க வேண்டும் என நினைப்பவன்.. விமரிசனம் எழுதுவதற்காக ஒரு படத்தின் வெவ்வேறு காட்சிகளை, வெவ்வேறு திரை அரங்குகளில், வேறுவேறு ஊர்களில் எல்லாம் பார்த்தபின்பே எழுதியிருக்கிறேன். அந்த வாய்ப்புகள் இல்லாத குறையுடன் தான் இந்த விமரிசனக் கட்டுரையை எழுதுகிறேன்.  
பாலாவின் முதலிரண்டு படங்களைப் பற்றியும் கூட உடனடியாக எழுதவில்லை. ஆனால் பிதாமகன் வந்த உடனே விரிவான விமரிசனக் கட்டுரை ஒன்றை தீம்தரிகிடவில் எழுதினேன். ”நம்பிக்கையேற்படுத்துதலின்மறுபக்கம்:பாலாவின்சேதுமுதல்பிதாமகன்வரைஎன்பது நான் கொடுத்த தலைப்பு. நான் கொடுத்த தலைப்பு. தனக்கு உவப்பானதாக இல்லை எனக் கருதிய தீம்தரிகிடவின் ஆசிரியர் ஞாநி, பாலாவின் வித்தியாசமானவணிகம்என்ற தலைப்பையும் வழங்கியிருந்தார். அடுத்து வந்த ‘நான் கடவுள்’ பற்றிய கட்டுரைக்கு பாலா:அழிப்புக் கடவுளின் ஆதரவாளன்,(காலச்சுவடு,மார்ச்,2009) எனவும், அவன் –இவன் படத்தைப் பற்றிய கட்டுரைக்கு.எழுத்தாளர்களின் இரட்டைக் குதிரைப் பயணம்: பாலாவின் அவன் இவனுக்குப் பின் (அம்ருதா,,ஜூலை, 2011) எனவும் தலைப்புகள் தந்திருந்தேன். காலச்சுவடு, அம்ருதா இதழ்களின் ஆசிரியர்கள் இந்தத் தலைப்புகளை மாற்றவில்லை. ஆனால் ஞாநி பாலாவை வியாபார சினிமாவை இயக்குபவர் தான் எனச் சொல்ல விரும்பி எனது கட்டுரைத் தலைப்போடு துணைத் தலைப்பையும் தந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. பாலா வியாபார சினிமாவை இயக்க விரும்புபவர் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை.  


 பரதேசி:வெளிவட்டப் பேச்சுகள்
  பரதேசியை கணிணியின் சின்னத் திரையில் பார்த்தது போலவே அதன் மீது வைக்கப்பட்ட விமரிசனங் களையும் இணையம் வழி வாசிக்க முடிந்தது. எல்லா விமரிசனங் களையும் வாசித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. இணையம் ஒரு பெருங்கடல்; நம் கரையில் ஒதுங்கும் மீன்களை மட்டுமே நாம் பார்க்க முடியும்; படிக்க முடியும். முகநூல் என்னும் கரையில் இருந்து கொண்டு வீசிய வலைக்குள் வந்து விழும் நண்பர்களின் விமரிசனக் குறிப்புகளையும் அவர்கள் தொடுத்துத் தரும் விமரிசனக் கட்டுரைகளையும் வாசித்து வாசித்துக் களைத்துப் போனேன். பரதேசியை நிராகரித்து விடத் துடித்த பல கட்டுரைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அத்தகைய கட்டுரைகளின் மையப்புள்ளிகளாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.
1.    பாலா தான் உருவாக்கியிருக்கும் பரதேசி படத்துக்கான உந்துதலைப் பெற்ற பி.எச்.டேனியலின் ரெட் டீ(தமிழில் எரியும் பனிக்காடு,இரா.முருகவேள், விடியல் வெளியீடு) நாவலுக்கு நியாயம் செய்யவில்லை.
2.    படத்தைப் பேச வைப்பதற்காக உருவாக்கப் பெற்ற முன்னோட்டத் துண்டுப் படக் காட்சிகளுக்காகப் பாலாவை சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்த வேண்டும்
3.    நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் தராமல் தனது பெயரை மட்டுமே முன் நிறுத்திய பாலாவின் அதிகாரம் ஆபத்தானது; கண்டிக்க வேண்டியது.
4.    யதார்த்தவாத அழகியலின் நுட்பங்களைக் கூட்டுவதற்கான எத்தணிப்பே பாலாவிடம் வெளிப்படவில்லை
5.    டாக்டர் பாத்திரத்தைக் கிறித்தவ மதமாற்றப் பாத்திரமாக்கியதன் மூலம் டானியலுக்குத் துரோகம் செய்ததோடு தனக்குள் இருந்த இந்துத்துவபூனைக்குட்டியை வெளியே இறக்கி மியாவ் எனக் கத்தும்படி செய்து விட்டார் பாலா
***************  ***************                                                              .                                                                                                         தொகுத்துக் கொண்ட இந்த ஐந்து புள்ளிகளில் முதல் மூன்றும் ஒரு திரைப்படத்தைப் பற்றிய சொல்லாடலில் உள்வட்டச் சொல்லாடல் அல்ல. பந்தயத்தில் ஈடுபடும் நோக்கமின்றி உடல் எடைக் குறைப்பிற்காக மைதானத்தின் வெளிவட்டப் பாதையில் ஓடும் நபர்கள் எதிர்ப்படும் மனிதர்களை நிறுத்தித் துண்டு துண்டாகப் பேசிக் கொள்ளும் ஆசுவாசத் துணுக்குகள் போன்றன இம்மூன்றும். இப்படிச் சொல்வதால் இவையெல்லாம் விமரிசன எல்லைக்குள் வராது எனக் கருதுவதாக நினைக்க வேண்டியதில்லை. விமரிசனச் சொல்லாடல்கள் எனும் தகுதி பெறும் வாய்ப்பு அவைகளுக்கும் உண்டு. அதைவிடவும் கூடுதல் தகுதி, பார்வையாளர்கள் முன் விரிந்து மறையும் பிம்பங்களையும், அவற்றிற்கு உயிரூட்டும் திரைமொழியின் கூறுகளையும் பேசும் பேச்சுக்கே உண்டு என்பது என் கட்சி.. இவற்றைப் பற்றிய பேச்சை - அவற்றின் மீது விமரிசனப் பார்வையைச் செலுத்துவதை உள்வட்டப் பேச்சு என நினைப்பதால், மற்றவையெல்லாம் வெளிவட்டப் பேச்சுகள் எனச் சொல்கிறேன். தமிழில் அச்சிலும் இணையத்திலும் வெளிவட்டப் பேச்சுகள் தான் அதிகம். முதலில் படத்தைப் பற்றி – படம் எனக்குள்- என்னைப் போன்ற பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளை- உள்வட்டப் பேச்சாகப் பேசலாம்.  
பிரதி <=> வாசகன்
ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடன் அதன் அடிப்படைக் கூறுகள், பார்வையாளர்களோடு எவ்வாறு உறவு கொள்ளப் பார்க்கின்றன என்ற கேள்வியிலிருந்து தொடங்குவது பிரதிசார்ந்த விமரிசன முறை. ஒரு திரைப்படத்தின் அடிப்படைக் கூறுகள் அல்லது திரைமொழி என்பது அடுக்கப்படும் பிம்பங்களிலிருந்து தொடங்குகிறது, நகரும் பிம்பங்களாகவும் நகர்த்தப்படும் பிம்பங்களாகவும் செவ்வக வடிவச் சட்டகத்திற்குள் அலைவதே சலனப் படத்தின் அடிப்படை அலகு. சலனப் படத்தின் சட்டகம் நகர முடியாத பொருட்களின் அண்மை மற்றும் சேய்மை நிலைகளைக் காமிராவின் நகர்த்துதல் மூலம் அசையச் செய்வதாகவும் காட்டும். அதற்கும் மேலாக பிம்பங்கள் எழுப்பும் வார்த்தை சார்ந்த மற்றும் சாராத ஒலிகளும், பொருட்களின் இருப்பை உணர்த்தும் பொருட்டு உருவாக்கப்படும் ஒலிச்சேர்க்கைகளும் கூட திரைப்பட மொழியமைப்பின் பகுதிகளாக இருக்கின்றன. அதே போல் பிம்பங்களின் மீது கவியும் வெளிச்சம் மற்றும் நிழல்கள், இணையும் சப்தம் மற்றும் மௌனம் போன்றன திரைமொழியின் அழகியலை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
அழகியலின் எல்லைகளை உள்வாங்கிக் கொண்ட இயல்புக்கேற்ப ஒரு பிரதி (எழுத்துப் பிரதி, நிகழ்த்துப் பிரதி அல்லது சலனப் பிரதியென எதுவாகவும் இருக்கலாம்). வாசகர்கள் அல்லது பார்வையாளர்களோடு உறவு கொள்ள எந்தக் கூறுகளை முதன்மையாகக் கருதுகிறது எனப் பார்ப்பது விமரிசன முறையியலில் முக்கியமான ஒருமுறை. பிரதிக்குள் இருக்கும் கூறுகள் பார்வையாளர்களது வாழ்க்கை சார்ந்த அனுபவத்தோடு உறவு கொள்ளும் கூறுகளை அதிகம் கொண்டுள்ளனவா? அல்லது அவர்களுக்குள் இருக்கும் கருத்துகள் மற்றும் எண்ணங்களோடு உறவு கொண்டு தூண்ட முயலும் கூறுகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதா? அல்லது இவை இரண்டையும் தவிர்த்துவிட்டு அவர்களுக்குள் மேலெழும்பாமல் உள்ளுறையும் ஆசைகளையும் இச்சைகளையும் அந்த நேரத்தில் தட்டி எழுப்பிக் குதூகலிக்கத் தூண்டும் நிகழ்வுகளையும் காட்சிகளையும் தன்னுள் கொண்டுள்ளதா? எனப் பகுத்துக் கொண்டு மேலே மேலே பயணம் செய்வது அம்முறையியல் சார்ந்த விமரிசனம் செல்லும் திசைவழி.  இத்தகைய விமரிசன முறையியலில் விவாதங்களோடு விடைகளும் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த விமரிசன முறை திரள் மக்களைப் பார்வையாளர்களாகக் கொண்டிருக்கும் திரைப்படம், ஊடகம் மற்றும் அரங்கியல் சார்ந்த கலைகளைப் பற்றிப் பேசுவதற்குரிய முறை. அது எப்படி என்பதை இங்கே நான் விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதை விளக்கிக் கொண்டிருந்தால் பரதேசி படத்தைப் பற்றிய பேச்சு காணாமல் போய்விடும்.


பரதேசியைப் பார்த்து முடித்தவுடன் நேரடியாகப் பார்த்த தேயிலைத் தோட்டங்கள் கண் முன் விரிந்தன. பரதேசியில் வரும் சாலூரைப் போன்றதொரு புஞ்சைக் காட்டுக் கிராமத்தில் பிறந்த நான், பள்ளிப்பருவம் தொடங்கிப் பல நேரங்களில் தேயிலைத் தோட்டங்களினூடாகப் பயணித்திருக்கிறேன். கொடைக்கானல் (தாண்டிக்குடி) மலைச்சரிவிலும் நீலகிரி மலைப் பாதையிலும் பச்சைப் பசேலென விரியும் தேயிலைச் செடிகளை ஒரு பயணியின் அகண்ட கண்களால் கண்டும், பனிதங்கிய இலைகளைத் தடவியும் கிள்ளியும் ரசித்திருக்கிறேன். கேரளத்தின் நெடுக்கும், குறுக்குமான பல பயணங்களில் இடுக்கி, தலைச்சேரி, கண்ணனூர்ப் பகுதித் தேயிலைக் காடுகளையும் ஒரு பயணியாகப் பாவித்தே ரசித்திருக்கிறேன். குளிர்ச்சியின் சுகத்தோடு பச்சைப் பசும் இலைகளின் அசையும் மென்மைகள் அவை ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் மூணார் மலையின் உச்சியில் இருக்கும் தேயிலை எஸ்டேட்டுகளில் தங்கி இருந்ததைப் பயணியின் பார்வை எனச் சொல்ல முடியாது. சுற்றுலாப் பயணி என்ற நிலையைத் தாண்டிய அனுபவம் அது.
தென்மேற்குப் பருவக்காற்று கேரளத்தில் கொட்டித் தீர்க்கும் ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கே தங்கியிருந்தேன்.அதற்கு முன்பு டி. செல்வராஜின் தேநீர்நாவலில் வாசித்த காட்சிகளும் எனக்குள் இருந்தன. உசிலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் என் கிராமத்தில் மலைக்காரவீடு என்றொரு குடும்பம் உண்டு. வெள்ளைக்காரன் காலத்தில் மூணாறு தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குப் போய் அங்கேயேயும் இங்கேயுமாக அலைந்து கொண்டிருந்த குடும்பம். அது. ”அப்பனோட ஊருக்குத் திரும்பிப் போயி கடை கண்ணி வச்ச பொழச்சுக்கலாம்” என்று அந்தக் குடும்பத்தின் ஒரு வாரிசு ஊருக்குத் திரும்பியிருந்தார். மற்றவர்கள் எஸ்டேட்டிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு விசேசம் என்பதால் அதற்காக மூணார் மலைக்குப் போனவன் நான்.. படிப்பு முடிந்த கையோடு போயிருந்ததால் அங்கேயே கொஞ்ச காலம் தங்கி எஸ்டேட்டுகளின் ஊடாக நடந்தும், தேயிலையை வகை பிரித்துத் தூளாக்கித் தள்ளும் தொழிற்சாலைகளைப் பார்த்தும் திரிந்தேன். தேயிலைத் தோட்டங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல் அம்மலையின் உள்காட்டில் வாழ்ந்த முதுவர் பழங்குடிகளின் வசிப்பிடங்களைப் பார்ப்பதும் எனது வேலைகளாகவும் விருப்பங்களாகவும் இருந்தன. அப்போது பார்த்த முதுவர் பழங்குடிகளின் வாழ்க்கை முறைகூட என் நினைவுகளை விட்டு மறைந்து போய்விட்டன. ஆனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கைப்பாடுகள் மனதிற்குள் தங்கித் திரும்பத் திரும்பப் பலமுறை மேலெழும்பிக் கொண்டிருந்தன.
எங்கள் ஊரில் இருந்து மலைக்குப் போன ஒற்றைக்குடும்பம் போலவே எங்களூர்ப் பக்கம் இருக்கும் பல கிராமங்களிலிருந்தும் அங்கு வந்துவிட்ட குடும்பங்கள் இருந்தன. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதிகளைச் சுற்றிச் சின்னச்சின்ன மலைகள் இருந்தாலும், மலைக்குப் போதல்என்ற வழக்கே, பிழைப்புக்காக மூணார் மலையிலிருந்த தேயிலைத் தோட்டங்களுக்குப் போனதைக் குறித்த வழக்காகவே இருந்தது. மலைக்குப் பிழைக்கப் போனவர்களில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதும், இடைநிலைச் சாதிக்காரர்கள் குறைவானவர்கள் என்பதும் அங்கே போய்ப் பார்த்த போது தெரிந்தது. பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் கிறித்தவப் பெயர்களோடு மாதா கோயிலுக்குப் போனதோடு திரும்பவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மனநிலையில் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஆனால் மற்றவர்கள் கல்யாணம், காது குத்து  என்று சொந்த ஊரோடு தொடர்பில் இருக்க ஆசைப்பட்டவர்களாக இருந்தார்கள். பரதேசி படம் அதையெல்லாம் திரும்பவும் நினைவுக்கு கொண்டு வந்தது. இவற்றையெல்லாம் விடவும் எனக்குள் ஆழமாகப் பதிந்து கிடக்கும் மாஞ்சோலை எஸ்டேட் காட்சிகளைக் கூடுதலாக விரித்துக் காட்டி விட்டது என்பதையே விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
மாஞ்சோலைதேயிலைத் தோட்டங்கள்திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள் இருப்பன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின் அந்த எஸ்டேட்டுகளுக்குள் இருக்கும் கிராமங்களுக்குள் தொழிலாளர்களோடு தங்க வேண்டும்; அவர்களின் வாழ்க்கையைப் புகைப்படங்களோடு எழுதிக் காட்ட வேண்டும் என நினைத்ததெல்லாம் நடக்கவே இல்லை. இத்தனைக்கும் திருநெல்வேலியிலிருந்து காலையில் கிளம்பிப் போய், மாலையில் திரும்பும் தூரம் தான். மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்குள் அந்நியர்கள் போய் இப்போதும் தங்கி விட முடியாது. சுதந்திரம் வாங்கி 66 ஆண்டுகள் ஆன பின்பும் இந்திய அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், வசதிகள் எல்லாம் செல்லுபடியாகாத பிரதேசமாகவே இருக்கிறது. பாம்பே பர்மா டிரேடிங்க் கார்ப்பரேஷன்என்னும் நிறுவனம் தமிழக அரசிடம் குத்தகைக்கு வாங்கித் தேயிலை பயிரிட்டு வருகிறது. அந்தக் கார்ப்பரேஷனுக்குக் கங்காணி வேலை பார்க்கத் திருநெல்வேலி மாவட்டக் குட்டி ஜமீன்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் அதற்குள் இருக்கும் சாலைகளையும் போக்குவரத்தையும் மக்கள் (தொழிலாளர்) கூட்டத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
மூன்று மணி நேரப் பயண தூரமே என்றாலும் திருநெல்வேலிக்காரர்களுக்கே அதிகம் தெரியாத இடம் மாஞ்சோலை. கோடை விடுமுறைக்குக் கொடைக்கானலுக்கும் ஊட்டிக்கும் போகும் திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் மாஞ்சோலையிலோ, ஊத்திலோ போய் ஒரு வாரம் தங்கலாம் என நினைக்க முடியாது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லாத பிரதேசம். வனத்துறையின் கட்டுப்பாட்டை விடவும் கூடுதலான கட்டுப்பாடுகளை அந்தத் தேயிலைத் தோட்ட முதலாளிகள் கடைப்பிடிக்கிறார்கள். தங்க வேண்டும் என்றால் தொழிலாளர்களின் வீடுகளில் தான் தங்க வேண்டும். அல்லது முதலாளிகளின் விருந்தினர் இல்லங்களில் தங்க வேண்டும். இரண்டு தரப்பாருமே அந்நியர்கள் தங்க அனுமதி தருவதில்லை. முதலாளிகளுக்கு ஏவல் செய்யும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விருந்தினர் மாளிகையில் தங்க அனுமதி கிடைக்கும். அந்த அனுமதியைப் பெறும் பாதை ரகசியப்பாதை. மும்பை வழியாக வந்திறங்கும் வழி.
மலையடிவாரத்தில் இருக்கும் மணிமுத்தாறு அணை வரைக்கும் அனுமதியில்லாமல் போகலாம். அதற்கு மேல் வனப் பகுதிக்குள் இருக்கும் கோதையாறு அணைக்குச் செல்ல வன இலாகா அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரெவெட்டிபோன்ற எஸ்டேட் கிராமங்களுக்குச் செல்ல வன இலாகாவோடு எஸ்டேட் நிர்வாகமும் அனுமதித்தால் தான் செல்ல முடியும். பேருந்தில் அல்லாமல் காரில் சென்று வர ஒரு நாளைக்குக் குறைந்தது இவ்வளவு வாகனங்களுக்குத் தான் அனுமதி என்று கணக்கிட்டு அனுமதி வழங்குகிறார்கள். எஸ்டேட்டுகளோடு தொடர்பில்லாதவர்கள் அன்றே போய் அன்றே திரும்பியாக வேண்டும். கையில் சாப்பாடு எடுத்துப் போகவில்லை என்றால் பட்டினி தான். உணவு விடுதிகள் கிடையாது. மலைக்கிராமங்களிலும் பெட்டிக் கடைகளும் தேநீர்க் கடைகளும் இருக்கின்றன. ஆனால் காலையிலும் மாலையிலும் தான் வியாபாரம் நடக்கும்.கடலைமிட்டாய், காரசேவு, பன் போன்றன கிடைக்கும்
தேயிலைத் தோட்டங்களுக்குள் போன பாதையிலேயே திரும்பி வரலாம். போகும்போதும் வரும்போதும் பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் தேயிலைக் கொழுந்துகளையும், உயர்ந்து நிற்கும் மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். எப்போதாவது வரும் முதலாளிகளும் அதிகாரிகளும் விளையாடும் கோல்ப் மைதானத்தில் இறங்கிப் புகைப் படம் எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் வீட்டில் யாராவது தங்கினால் கங்காணிகளால் தண்டிக்கப்படும் வாய்ப்புண்டு. என்பதால் அவர்கள் யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. புதிதாகத் தங்குபவர்களுக்கு வசதிகள் செய்து தரும் நிலையிலும் அவர்களின் வீடுகளும் இல்லை; வாழ்வாதாரமும் இல்லை. யானைக்கூட்டங்களுக்கும் அட்டைக் கடிகளுக்கும் பயந்து கிடக்கும் அவர்களின் உடல் பயத்தை விடவும் கங்காணிகளால் உண்டாகும் பயம் தான் மனம் முழுக்க நிரப்பியிருக்கிறது. நான் நான்கு முறை போய் வந்திருக்கிறேன் இரண்டு தடவை பேருந்திலும் இரண்டு தடவை காரிலுமான பயணங்கள் அவை.  எல்லாத் தடவையும் காலையில் போய் மாலையில் திரும்பிய உன்னால் இதையெல்லாம் எப்படிச் சொல்ல முடிகிறது என இதை வாசிப்பவர்களுக்குக் கேள்விகள் எழலாம்.
நான் பார்த்த பச்சைப் பசேல் காட்சிகளுக்கும் ஓட்டு வீடுகளுக்கும் பின்னால் இருந்த பயத்தையும் வாழ்க்கையையும் எனக்குச் சொன்னவள் என்னிடம் பயின்ற மாணவி. தன் தாய்மாமனின் உதவியோடு திருநெல்வேலி அரசாங்க விடுதியில் தங்கிப் படித்த அவளிடம் பல முறை”உன் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்ன போதெல்லாம் பயத்தில் உறைந்து நிற்பாள்; வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லும் ஆசிரியரை வேண்டாம் எனச் சொல்வதெப்படி” என்ற தவிப்பு எப்போதும் வெளிப்படும். அவ்வப்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்படும் தனது உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களைப் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லும் செய்திகளைப் பகிரும்போது மாறும் முகபாவனை களுக்குப் பின்னாலும் அச்சரேகைகள் ஓடிக்கொண்டே இருக்கும். படிப்பு முடிந்த பின் எஸ்டேட் கிராமத்திற்குப் போய்த் தங்க வேண்டும் என்பதை நினைத்து அவள் பட்ட வேதனைகளும் பல செய்திகளைச் சொன்னது. படித்த ஒருத்திக்குப் பின்னிருந்த அச்சமும் தவிப்பும் எஸ்டேட் தொழிலாளர்களின் அச்சம் மற்றும் இயலாமையின் ஒருசிறு துளிதான். இதுதான் .மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களின் நிகழ்கால இருப்பு.
தூண்டப்படும் கடந்தகாலம்
வாசிப்பவனின்– பார்வையாளனின் -சொந்த அனுபவங்களைத் தூண்டி நினைக்கச் செய்வதும், செயல்படத்தூண்டுவதும் ஒரு பிரதியின் முக்கியமான வேலை. மாஞ்சோலைதேயிலைத் தோட்டங்களில் நான் பார்த்த காட்சிகளும் என் மாணவி எனக்குச் சொன்ன நிகழ்வுகளும் பரதேசிபடத்தின் நிகழ்வுகளாக இருக்கின்றன. காட்சிகளாகப் பாலாவால் விரிக்கப் பட்டுள்ளன. அவரது நடிகர்களும் நடிகைகளும் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் அசல் வாழ்க்கையை முடிந்த அளவு நகலெடுக்கவே செய்துள்ளனர். அந்தப் படம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இருப்பையும் வரலாற்றையும் கண் முன்னே விரித்துக் காட்டியதன் மூலம். இன்றைய தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கிராமங்களிலிருந்து மாஞ்சோலை எஸ்டேட்டுக்குக் குடிபெயர்ந்த மனிதர்களை எனக்கு நினைவூட்டியது. இதே படம், இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களைஅறிந்தவர்களுக்கு அவர்களின் இருப்பையும் கடந்த காலத்தையும் நினைவூட்டலாம். மூணார் மலைக்குத் தங்கள் மூதாதையரை அனுப்பி விட்டுத் தவித்த பழைய மதுரை, ராமநாதபுர மாவட்டக்காரர்களின் வாரிசுகளுக்கு அவர்களது முன்னோர்களின் வலியையும் துயரத்தையும் நிச்சயம் நினைவு படுத்தும். தமிழக எல்லை தாண்டி இந்தியாவெங்கும் பரவிக் கிடக்கும் தேயிலைத் தோட்டங்களின் ஒட்டுமொத்தக் கதையும் இதுதான் எனப் பேச வைக்கலாம்..

தேயிலைத் தோட்டங்களையே பார்க்காதவர்களிடமும் கூட,”நாம் குடிக்கும் தேநீருக்கும்  அதனை விளைவித்துக் கொடுக்கும் தேயிலைத் தோட்ட உருவாக்கத்திற்கும் பின்னணியில் இத்தகையதொரு வரலாறும், அடிமைத்தனமான வாழ்க்கையும், அந்நியர்களின் சுரண்டலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மனிதர்கள் மற்றும் சமய நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பும் இருந்ததனவா?” என்ற கேள்விகள் நிச்சயம் எழும். படம் பார்ப்பவர்களிடம் நேரடி அனுபவம் சார்ந்து நினைவலைகளை எழுப்புவதன் மூலம், சொல்லப்பட்ட முன் வரலாறுகளுக்குப் பின் இருந்த வலிகளைத் தூண்டியிருக்கிறது இந்தப் படம். அதையெல்லாம் விட வரலாற்றிலிருந்த முரண்பாட்டை விரித்துக் காட்டியதன் மூலம் மாபெரும் விவாதத்தை எழுப்பவும் முனைந்துள்ளது. அந்த விமரிசனங்களையும் விவாதங் களையும் மனங்கொள்ளாமல் புறங்கையால் ஒதுக்கி விட முயலும் விமரிசன எத்தணிப்பைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.  
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில். இந்தியர்களின்/ இலங்கையர்களின் தினசரி வாழ்க்கைக்குள் தேநீர் நுழைக்கப்பெற்ற கதையையும், விரிக்கப் பெற்ற வலையில் இலகுவாக மாட்டிய முறைகளையும் நமது நாட்டார் வழக்காறுகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இங்கேயே உற்பத்தி செய்த தேநீரை இறக்குமதிச் சரக்காகக் காட்டிக் கொழுத்த காலனிய அதிகாரத்தின் வரலாற்றை அப்படியே காட்டுவதாகப் படம் எடுக்காமல், அதன் மீது காத்திரமான விமரிசனங்களை வைத்துச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என நினைத்துப் படம் எடுத்துள்ளார் பாலா. அவர் வைத்துள்ள விமரிசனமும், அதனால் எழ வேண்டிய விவாதங்களுமே பரதேசியைத் தமிழ்ப் பட வரலாற்றில் முக்கியமான படமாக ஆக்கியுள்ளது. காலனி ஆதிக்கத்தை விமரிசனம் செய்த உலக சினிமாக்களோடு சேர்த்து வைத்துப் பேச வேண்டிய நெருக்கடியையும் தருகிறது.  
யதார்த்தமல்ல; வரலாறு
படத்தின் தொடக்கத்தில் வளைந்தும் நெளிந்தும் திரும்பியும் பயணிக்கும் காமிராவின் ஒற்றைப் பயணத்தின் வழியாகப் பனை ஓலைகளால் வேயப் பெற்ற குடிசைகளின் தொகுதி நமக்கு அறிமுகமாகிறது ஒளிப்பதிவாளர் செழியன்தொடக்கத்திலேயே தனது இருப்பைக் காட்டும் காட்சி அது. அதனைச் சாலூர் கிராமம், 1939என எழுதிக் காட்டிக் கதை சொல்லத் தொடங்கும் பரதேசியை ஒரு வரலாற்றுப் படமாகப் பார்ப்பதை விட, வரலாற்றை முன் வைத்து காலனிய ஆட்சியின் மீதான விமரிசனத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ள படமாகப் பார்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல; . அப்படிப் பார்க்கத் தூண்டும் விதத்தில் தான் பரதேசியின் வடிவத்தை அதன் இயக்குநர் உருவாக்கியுள்ளார். பின் காலனிய நோக்கிலிருந்து காலனியக் கால அதிகாரத்தின் கண்ணிகள் செயல்பட்ட விதத்தை தொட்டுக் காட்டியுள்ள முதல் தமிழ்ச் சினிமா பரதேசி. அது தீவிரமாகவே கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதற்காகப் பாலாவைப் பாராட்ட வேண்டும் சென்ற ஆண்டு மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழுக்கு மாற்றப்பட்ட உறுமி, சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திவந்தலகான் போன்ற படங்களும் இந்த நோக்கத்தில் எடுக்கப் பெற்ற குறிப்பிடத்தக்க  சினிமாக்கள் என்பது  நினைவுக்கு வருகிறது.
******************* *******************  *******************

இந்திய சமூகத்தில் காலனிய ஆட்சியின் விளைவுகள் முழுமையும் பாதகமானவை என நினைப்பவன் அல்ல நான். நமது சமூகப் பொருளாதார அரசியல் வாழ்க்கையில் காலனிய ஆட்சி எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியதை விடக் கூடுதலாக நேர்மறை அம்சங்களை உருவாக்கி இருக்கிறது என்பதில் இன்னும் கூட நம்பிக்கை உண்டு. மேற்கத்தியக் கல்வி, மேற்கத்திய அறிதல் முறை, அவற்றோடு தொடர்புடைய நவீனத்துவம், அதன் தொடர்ச்சியாக நமக்கு அறிமுகமான ஜனநாயகம் என்பன காலனியத்தின் கொடைகள். இதையெல்லாம் தந்த காலனிய ஆட்சி அதற்கு விலையாக எடுத்துக் கொண்டனவும் பற்பல. இந்தியாவின் இயற்கை வளத்தையும் மனித உழைப்பையும் பருண்மையாக உறிஞ்சிக் கடத்தியதாக வரலாற்று நூல்கள் சொல்கின்றன. நமது அடையாளங்கள் காணாமல் போயிருக்கின்றன. நமது சிந்தனை முறை திசை திருப்பப் பெற்றுள்ளது. நமது பண்பாட்டின் கசடுகள் மீது விமரிசனங்களைத் தூண்டிய மேற்கத்திய அறிவு மேன்மைகளையும் தூக்கி எறியத் தூண்டி விட்டது என்பதான குரல்கள் கடந்த கால் நூற்றாண்டாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியலும் இங்கே இருக்கிறது. அந்த அரசியலை விமரிசனம் செய்பவர்கள் பழையனவற்றைத் திரும்பக் கொண்டுவரத் தயாராகும் போது காலனியத்திற்கு முந்திய கசடுகளும் திரும்ப வந்து விடும் ஆபத்துகள் இருப்பதை எச்சரிக்கையோடு அணுக வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். நானும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
இத்தகைய அரசியல் பார்வையும் புரிதலும் இயக்குநர் பாலாவுக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் பின் காலனிய நோக்கிலிருந்து காலனிய காலத்தைப் பார்க்க வேண்டிய ஒரு பார்வையைத் தான் இயங்கும் திரைப்படத்துறையில் செய்து காட்டியுள்ளார். காலனிய காலத்தை ஒரு திரைப்பட வடிவத்திற்கான கருப்பொருளாகவும், அதனைத் தாங்கிய திரைக்கதையாகவும் ஆக்கியுள்ளதன் மூலம் பரதேசி, வரலாற்று ஆய்வு நூல்களின் பல நூறு பக்கங்களில் படிக்க வேண்டியனவற்றை எளிமையாக மாற்றியுள்ளது. திரள் மக்களின் ஊடகமான சினிமாவுக்குள் இதனைச் சாதித்துள்ள பாலாவின் பரதேசியை முன் வைத்து –மைய விவாதத்திற்குள் செல்லாமல் நிராகரித்து ஒதுக்கும் விமரிசனச் சொல்லாடல்களையே நமது விமரிசகர்கள் உருவாக்குகிறார்கள். அவரும் அவரையொத்த திரைப்பட இயக்குநர்களும் புரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பார்வையையும் அரசியல் நோக்கையும் நட்புமுரணுடன் எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டுப் பகைமுரணுடன் ஒதுக்கிவிடத் துடிக்கும் இந்தப் போக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் போக்கு.
பாலாவின் படைப்பாக்கச் சூத்திரங்கள்:
பாத்திரங்கள் சார்ந்த எதிர்வுகள் வழியே தனக்கான வடிவத்தை உருவாக்குவது வணிக சினிமாவின் பொதுப் போக்கு. இப்பொதுப்போக்கு தமிழின் வடிவம் மட்டுமல்ல. எல்லா மொழிகளிலும் அவ்வடிவமே வணிக வெற்றியின் சூத்திரமாக இருக்கிறது. எதிர்நிலை மையங்களின் ஆதிக்கம், சமகால வாழ்நிலையின் பொது நம்பிக்கைகளின் மீதும், அதன் பிரதிநிதியாக இருக்கும் ஒரு தனிமனிதனின் மீதும் செலுத்தும் வன்முறையைத் தட்டிக் கேட்கும் நாயக மையம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காட்டும் வடிவமாகவே பொதுப்போக்குச் சூத்திரம் வடிவம் கொண்டுள்ளது. இச்சூத்திரம் அறிவுபூர்வமான சிந்தனைக்கு உதவாது என நம்புபவர்கள் அதிலிருந்து விலகிச் சென்று மாற்று வடிவங்களைத் தேடுகிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வடிவம், ஒரு சொல்முறை, கதைப் பின்னல், நிலவெளி, அவற்றில் வாழும் மனிதர்கள், எனத் தொடர்ச்சியாகத் தேடுகிறார்கள். அதனாலேயே மாற்று முயற்சியாளர்கள் எனவும் அறியப்படுகின்றனர். தமிழ்ச் சினிமாவுக்குள் அத்தகைய முயற்சியாளர்கள் (ருத்ரய்யா,-அவள் அப்படித்தான்,ஜெயபாரதி-குடிசை, ஸ்ரீதர் ராஜன்-கண் சிவந்தால் மண் சிவக்கும்) ஒன்றிரண்டு படங்களோடு காணாமல் போனார்கள் என்பதும் இயக்குநர் மகேந்திரனும் (முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், மெட்டி, நண்டு கைகொடுக்கும் கை, சாசனம்) இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவும் (அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டைவால் குருவி, சதி லீலாவதி, அது ஒரு கனாக்காலம்) மட்டும் ஓரளவு வெற்றி பெற்றவர்கள் என்பதும் வரலாறு..
இயக்குநர் பாலாவுக்கு இந்த வரிசையில் சேரும் ஆசை இல்லை என்பதையே அவரது முந்திய படங்களின் கட்டமைப்புகள் காட்டுகின்றன. நாயகன் x வில்லன்என்று நபர் சார்ந்த எதிர்வுகளைப் பாலா உருவாக்குவதில்லை என்றாலும் மையக் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் திட்டமிட்ட ஒரு சூத்திரத்தையே அவர் எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளார். அவரது மையப் பாத்திரங்கள் அறியப்பட்ட வரையறைகளின் படி உருவாக்கப்படும் நாயகப் பாத்திரங்களின் குணங்களால் ஆக்கப் படுபவர்கள் அல்ல. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட சூழலில் – சமூக நடைமுறையால் அல்லது நம்பிக்கையால்- அநீதியாகக் கருதப்படும் தீமையின் வடிவமான நபர்களைப் பலி வாங்கும் வன்மம் கொண்டவர்கள் அவர்கள். மற்றவர்களுக்குச் சுலபமாகக் கிடைக்கக் கூடிய ஒன்று தனக்கு மட்டும் கிடைப்பதில்லை என நினைத்துக் கொண்டு புழுங்கும் மனிதர்களின் சாயலில் இருப்பவர்களின் வகைமாதிரிகள். இத்தகைய நபர்கள் மைய நீரோட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. அமைப்புகளாலும் அமைப்பற்றவர்களாலும் ஒதுக்கப்படும் இத்தகைய விளிம்பு மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமே பாலாவின் நாயகப் பாத்திரத்தின் தன்னிலை.

விலகி இணையும் சூத்திரம்
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்த அந்தத் தன்னிலை உருவாக்கத்திலிருந்து பரதேசியில் விலகி யிருக்கிறார் பாலா. அந்த விலகலுக்கான உந்துதலை அவருக்குத் தந்தது ரெட் டீ நாவலை எழுதிய டேனியல்என்றாலும் பக்கத்தில் இருந்து முழுமையாகப் பயன்பட்டவர் நாஞ்சில் நாடனே. அவரது இடலாக்குடி ராஜாஎன்னும் சிறுகதையே மையப் பாத்திரத்தின் முன்பாதியை உருவாக்கித் தந்துள்ளது. அவனது பெயரில் ராஜாஇருக்கிறது; ஆனால் ராஜா இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் சொன்ன வேலையைச் செய்து விட்டுத் தரும் உணவைச் சாப்பிடும் ஒட்டுப் பொறுக்கி அவன். அப்படித் தொடர்ந்து செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு இல்லை. அவனை யாரும் வலியுறுத்துவதும் இல்லை; இவன் விரும்புவதும் இல்லை. விரும்பினால் செய்வான். விரும்பாவிட்டால் வேறு ஊருக்குப் போய்விடுவான். எங்கு போகிறான்; ஏன் வந்தான் என்று யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இல்லாத ராஜா (மாதிரியான) ஒட்டுப் பொறுக்கி அவன். அவனது இயல்பை அடிப்படையாக வைத்து மையப் பாத்திரத்தின் வளர்ச்சி அடுக்குகளுக்கான காட்சிகளைத் தொகுத்துத் தரும் பாலா, அவன் தான் அந்த ஊரில் கங்காணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த முதல் ஆள் எனத் திருப்பத்தை உண்டாக்கியுள்ளார். ஒட்டுப்பொறுக்கி என்னும் ராசாவை மையப் பாத்திரம் என நினைக்கத் தூண்டினாலும், அவரது முந்திய படங்களில் வன்மத்தோடு வளர்ந்து பழிவாங்கும் நாயகப்பாத்திரம் அல்ல. தன்னையும் தனது ஊர்க்காரர்களையும், அவர்களையொத்த பெருங்கூட்டத்தையும் அடிமைத் தளையில் மாட்டி விட்ட கங்காணியோடு மோதிப் பார்க்கும் கோபமும் வன்மமும் அவனுக்குக் கிடையாது.  மாட்டிக் கொண்ட அடிமைத்தளையிலிருந்து தான் மட்டுமாவது தப்பி விட வேண்டும்; தனக்காகக் காத்திருக்கும் காதலியைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என நினைக்கும் ஒரு அப்பாவித்தனி மனிதன் அவன்.
அந்த அப்பாவித்தனம் ஒரு தனிமனிதனின் அப்பாவித்தனமாக இல்லாமல், சொந்த பூமியை விட்டுப் பிறதேசம் போய்ப் பரதேசியாய் ஆன மனிதர்களின் குறியீடாக ஆகி இருக்க வேண்டும். அப்படி ஆக்கும் வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யாமல் தனி மனிதனின் தன்னிலையாக மட்டுமே படத்தில் நிறுத்தி இருக்கிறார் இயக்குநர். அது பாலாவின் பாத்திர வார்ப்பில் ஏற்பட்டுள்ள போதாமை. அப்படியான தனி மனிதர்களை முன் நிறுத்துவது தான் பாலாவின் இதுவரையிலான படங்களின் நோக்கமாக இருந்துள்ளது. வரலாற்றை விமரிசிக்கும் இந்தப் படத்திலும் அதையே கைக்கொண்டால் முழுமையான பலன் கிடைக்காது என்பதைப் பாலா அறிவாரா என்பது எனக்குத் தெரியாது. வெற்றிகரமான சினிமா மட்டும் போதும் என்றால் அதையே பின்பற்றலாம். வெற்றிகரமான சினிமாவோடு விமரிசன யதார்த்தத்தை விரும்பும் இயக்குநருக்கு அது போதாது.
தனது படத்தில் குறியீட்டுப் பாத்திரங்களையும் வகைமாதிரிப் பாத்திரங்களையும் உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான கவனம் பாலாவின் முந்திய படங்களிலும் வெளிப்பட்டதில்லை; பரதேசியிலும் வெளிப்படவில்லை. இந்தப் படத்தில் அவ்வாறான குறியீட்டுப் பாத்திரங்களுக்கும் வகைமாதிரிகளுக்கும் வாய்ப்பிருந்தும் அதை நோக்கிக் கவனம் செலுத்தவில்லை. சாலூர் கிராமத்தில் வேறுபட்ட சமூகக் குழுக்கள் இருந்தன என்பதைக் கூடக் காட்டவில்லை. அதை உணர்ந்து அங்கிருந்தே உருவாக்கியிருந்தால், வளர்ச்சி நிலையில் தனித்துவம் கொண்ட பாத்திரங்களாக மாற்றிக் காட்டியிருக்க முடியும். அப்படிச் செய்யாமல் மொத்தமாகச் சந்தோசமாக இருந்தார்கள்; ஒட்டுமொத்தமாகக் கிளம்பினார்கள்; கஷ்டப்பட்டார்கள்; நோய் வாய்ப்பட்டார்கள்; ஏமாற்றப்பட்டார்கள்; சுரண்டப் பட்டார்கள்; மதம் மாற்றப்பட்டார்கள்; அடிமைகளாக ஆனார்கள் எனச் சாராம்சத் தன்மையோடு பொதுநிலையிலேயே படம் முடிகிறது. ஆனால் தனக்கான கட்டுப்பாடுகளே இல்லாமல் திரிந்த ஒருவனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பெற்ற முதல் ஆள் எனக் காட்டி, அவனை மையப் படுத்தித் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் என்பதும்  கவனிக்க வேண்டிய ஒன்று
இதற்கு முந்திய படங்களில் ”அப்படங்களின் நிகழ்வுகள் நிகழ்காலத்தில் நடக்கின்றன” என்பதைக் காட்டும்  கூறுகளைக் கவனமாக செருகிக் காட்டியவர் பாலா. அவன் இவனில்சூர்யா, நடிகர் சூர்யாவாக வந்து வாழ்த்தியும் பாராட்டியும் பேசுவது; நான் கடவுளில்நடிகர்களாக வேஷம் கட்டித் திரியும் பிச்சைக்காரர்கள்: பிதாமகனில்சிம்ரன், சிம்ரனாகவே வந்து கதம்பப் பாடலுக்குக் குத்து நடனம் ஆடுவது போன்றன அத்தகைய கூறுகள். மெல்லிய நகைச்சுவை வெளிப்படும் அக்காட்சிகளைத் தான் இயங்கும் திரைப்படத்துறையை விமரிசிக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார்.  மையக் கதையின் நிகழ்வுகளால் தீவிரமான ஒன்றிப்பை உருவாக்கும் பாலா, அதிலிருந்து கொஞ்சம் விலக்கி ஆசுவாசம் கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கும் உத்தியாகவும் அவற்றைச் செருகித் தருகிறார். பெரும்பாலும் படத்தின் உச்சநிலை (Climax) க்கு முன்னால் பார்வையாளர்களை விலக்கி வைத்துத் திரும்பவும் ஒன்றச் செய்யும் கட்டமைப்பு அந்த உத்திக்கு உண்டு. முக்கால் நூற்றுக் காலத்திற்கு முந்திய வரலாற்றுக்குள் நுழையும் பரதேசியிலும் அந்த உத்தியைப் பயன்படுத்தக் கூடாது என்ற புரிதலுடன் இந்தப் படத்தில் தொடக்கத்திலேயே நகைச்சுவை உணர்வைத் தரும் விதமாகக் காட்சித் தொகுப்புகளை அடுக்கியுள்ளார்.  வறுமையிலும் ஏழ்மையிலும் சாலூர் கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் இருந்தனர் எனக் காட்டும் போது வெளிப்படும் நகைச்சுவை உணர்வு படத்தின் பின் பாதியில் உருவாகப் போகும் சோகத்தின் – வலியின் எதிர்வாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. அதற்கு உதவும் விதமாக நாஞ்சில் நாடனின் வசனங்களும் இடலாக்குடி ராஜா கதையின் நிகழ்வெளியும் பாத்திரங்களும் பயன்பட்டுள்ளன.  வரலாற்றுக் கதை என்னும் நிலையில் பரதேசி படத்தின் கட்டமைப்பு காலம் சார்ந்த எதிர்வையும்,வெளி சார்ந்த எதிர்வையும் துல்லியமாகப் பிரித்துக் காட்டவும் செய்துள்ளது.படத்தின் கட்டமைப்பை மூன்று காட்சித் தொகுப்புகளைக் கொண்டிருக்கிறது. மூன்றும் மூன்று வண்ணங்களால் ஆக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல,. மூன்று வெளிகளால் ஆனவைகளாகவும் கூட.
ஒட்டுப் பொறுக்கியை மையமாக்கிக் கிராமத்தின் நிகழ்வுகளைத் தொகுத்து அடுக்கும் முதல் தொகுப்பு ஒருவிதக் கறுப்பு வெள்ளையில் பரவும் சாலூர் கிராமம். புஞ்சைக் காட்டு சமவெளி. எதிர்பார்ப்புகளற்றவர்களாய் வாழும் மனிதர்களால் நிரம்பியது வெம்மை விரவும் புஞ்சைக்காட்டிற்குள் பனை ஓலைகளால் வேயப்பெற்ற குடிசைகளில் வசிக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைப் பெரிதாக நினைக்காமல், சந்தோசங்கள் நிரம்பிய வாழ்க்கை அந்த இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி நகர்த்தும் நபராக நுழைபவன் கங்காணி.
கங்காணியின் வரவு வறுமை நிரம்பிய சமவெளி வாழ்க்கையை இல்லாமலாக்கி  வளர்ச்சியை- மேட்டை நோக்கி நகர்த்தும் புதிய வெளியைத் திறக்கிறது கிராம வெளியை விட்டு மலையே நோக்கிய அந்தப் பயணம், சமவெளியிலிருந்து மேடு நோக்கிய பயணமாக அவர்கள் வாழ்க்கையில் மாற்றமும் வளர்ச்சியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினூடான பயணமாக புதிய வண்ணத்தோடு நீள்கிறது. வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தரும் பச்சை வண்ணம் தேயிலைத் தோட்டங்களாக மேடுகளில் விரிந்து கிடைக்கின்றன. பச்சையும் இருண்மையும் கலந்த மேடு என்னும் வெளி நோக்கிய பயணம் ஒரு புறம் நம்பிக்கையையும் இன்னொரு புறம் அச்சத்தையும் தருவதாக இருந்தது என்பதற்கான வண்ணக் கலவையை அந்தக் காட்சிகளில் படர விட்டுள்ளனர் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். சாம்பல் வண்ணத்திலிருந்து பச்சையை நோக்கி நீளும் மக்கள் கூட்டத்தின் பயணம் பசுமையாக ஆகாமல் கரும்பச்சையாக ஆகிப் போனது என்பதுதான் படம் முன் வைக்கும் விமரிசனம். இனிக்க இனிக்கப் பேசிய கங்காணி, பேசவே வராது என்பது போலக் கண்களால் மிரட்டும் கங்காணியின் கையாட்கள், கண்ணுக்கு மட்டுமே காட்டப்படும் பணப்பெட்டி, கணக்குப் புத்தகத்தில் எண்களாக மாறி இடம் மாறிச் செல்லும் கூலித்தொகை, கூலித் தொகையைச் சுருட்டி எடுத்துச் செல்லும் மருத்துவர், கடைக்காரர், சாமியார் எனச் சுழற்றடிக்கும் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணரும்போது இயற்கையும் அவர்களுக்கு எதிராக இருக்கிறது/  அடைமழையாகவும், அட்டைக்கடியாகவும் இறங்கும் துயரமும் சேர்ந்து பச்சை நிறத்தைக் கறுப்பாக மாற்றி விடுகிறது. அதிலிருந்து தப்பி விடத் துடிக்கும் ஒவ்வொருவரின் கண்டைக்கால் நரம்பும் நறுக்கப் படுகின்றன. துயரம், துயரம் மேலும் துயரம் என புதை சேற்றில் சிக்கிய அடிமை வாழ்க்கைக்குள் இன்னும் பல கிராமத்தவர்களைக் கங்காணி கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறான். அந்தக் கூட்டத்தில் ஒட்டுப் பொறுக்கியின் காதலியும் இன்னொரு அடிமையாக வந்து சேர்ந்தாள் என்பதோடு படம் முடிகிறது.
வெள்ளையர்களின் வரவால் இந்தியாவில் ஏற்பட்டது வளர்ச்சி அல்ல; அடிமை நிலையே எனப் பொது விமரிசனத்தை முன் வைக்கும் பரதேசி, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித் திளைக்கும் வெள்ளையர்களின் விசுவாசமான அடிமைகளாக இருந்த கங்காணிகள் , தாங்களும் ஒரு அடிமைகளாக  இருக்கிறோம் என்பதை உணராமலேயே சொந்த நாட்டு மக்களை அடிமைகளாக்கி அடிமை சேவகம் செய்தார்கள் என்ற விமரிசனத்தையும் வைத்துள்ளது. அதே நேரத்தில் கங்காணிகள்  உழைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் காட்டத் தவறவில்லை. இந்த விமரிசனத்தோடு, விவாதத்திற்குரிய. இன்னொரு விமரிசனமாக, ”நோய் நீக்கும் மருத்துவத்தொழிலை மதமாற்றத்துக்கு உதவும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்” வெள்ளையர்கள் என்பதையும் பரதேசி முன் வைத்துள்ளது..
பரதேசியில் எழுப்பப்பட்டுள்ள இந்த விமரிசனங்கள் சரியா? தவறா? என்பது பற்றி படம் பார்த்தவர்கள் விவாதிக்கலாம்.  அப்படி விவாதிக்கும்போது பாலாவின் பார்வை எவ்வளவு தூரம் சரியானது? அல்லது தவறானது? என்ற கேள்விகளை எழுப்ப முடியும். அப்படிச் செய்யாமல் நாவல் எழுதிய டேனியலைக் கொச்சைப் படுத்தி விட்டார் என்ற கோணத்திலிருந்து மட்டும் விமரிசனங்களை முன் வைப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. மதமாற்றம் பற்றிப் பேசும் போது கிறித்தவ மதத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை முன் வைத்துக் கருத்துகளை முன் வைப்பது ஓரளவு சரியானது தான். ஆனால் அது ஓரளவு தான் சரி. ஏனென்றால் தங்களின் வியாபாரத்திற்கான வெளிகளைத் தேடித் தான் ஐரோப்பியர்கள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிய புதிய பயணங்களை மேற்கொண்டார்கள் என்று வரலாற்றில் படிப்பது முழுமையான உண்மையல்ல. காலனிய நாடுகளின் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைப்பதிலும்,மத நம்பிக்கைகளைக் குலைப்பதிலும் அதே அளவு கவனமும் செலுத்தினார்கள் என்பதையும் வரலாறு மறைக்கவில்லை. வியாபாரக் குழுமங்கள் வந்திறங்கிய கப்பல்களிலேயே மதம் பரப்பும் மிஷினரிகளும் வந்திறங்கினார்கள் என்பதுதான் வரலாறு. வியாபாரக் குழுமங்கள், அடிமையாக்க வேண்டிய நாடுகளின் அதிகாரத்தின் உச்சியைக் குறி வைத்த போது, மிஷினரிகள் சமூகத்தின் ஓரங்களிலும் விளிம்புகளிலும் வலை விரித்தார்கள். அப்போதும் மதமாற்றம் அதிகாரத்தோடு தொடர்பு கொண்டதாகவே இருந்தது. இப்போதும்.கூட அப்படித்தான் இருக்கிறது. இந்திய சமூகத்தில் இருக்கும் சாதிய அடிமைத்தளையின் குரூரம் மதமாற்றச் செயல்பாடுகளை  விரைவுபடுத்த உதவிக் கொண்டிருக்கிறது என்பது கடந்த கால உண்மை மட்டுமல்ல; நிகழ்கால நடப்பும் கூட.
படத்தோடு தொடர்புடைய இன்னும் சில குறிப்புகள்
குறிப்பு-1
பரதேசி என்ற சொல், பஞ்சம் பிழைப்பதற்காக வேற்றிடம் தேடிப் போகிறவர்களை மட்டும் குறிப்பதல்ல. தங்கள் நாட்டை விட்டுப் பிற தேசங்களுக்குப் போகும் (காரணங்கள் என்னவாகவும் இருக்கலாம்) எல்லாரும் பரதேசிகளே. பண்டாரங்களும் பரதேசிகளும் ஆன்மீகத்தைத் தேடி நாடுவிட்டு நாடு போகிறார்கள் தானே.
குறிப்பு-2
இந்தியா விடுதலையாகி அரை நூற்றாண்டுகள் கடந்த பின் உருவாகிப் பரவும் பின் காலனிய மனநிலையிலிருந்து காலனிய கால வரலாற்றின் பல்வேறு இந்திய மொழிப் படைப்பாளிகளும், வரலாற்றாய்வாளர்களும் எழுப்பும் விமரிசனத்தின் நீட்சியாகவே பாலாவின் படம் விரிந்துள்ளது எனப் புரிந்து கொண்டால்” நாவலுக்கு நியாயம் செய்யவில்லை; ரெட் டீ நாவலின் ஆன்மாவைச் சிதைத்துவிட்டார்” என்பதான புலம்பல்கள் அர்த்தமிழந்து விடும் என நினைக்கிறேன். எழுதப் பெற்ற பிரதியிலிருந்து உந்துதல் பெற்ற திரைப்பட இயக்குநர் அந்தப் பிரதிக்கு முழுமையாக நியாயம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறவர்களின் தர்க்கம் அர்த்தமற்றது. “எரியும் பனிக்காடு” என மொழிபெயர்க்கப் பெற்றுள்ள ”ரெட் டீ”நாவலை அப்படியே திரைப்படமாக்கித் தரவேண்டும் எனப் பாலாவிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? தான் வாசித்த நாவலிலிருந்து தனக்கான வாசிப்புப் பிரதியை உருவாக்கிக் கொள்ள வாசகனுக்கே உரிமையுண்டு எனப் பேசிக் கடந்து வந்தபின், தான் இயங்கும் சினிமாவுக்கான கருப்பொருளையும் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொள்ளும் உரிமை ஒரு திரைப்பட இயக்குநருக்கு இல்லை என வாதிடுவதன் தர்க்கம் என்ன? அத்தோடு நாவலின் வெளிப்பாட்டு முறையும் சினிமாவின் சொல் முறையும் வேறானவை என்பதையாவது நாம் உணர்ந்தாக வேண்டும். அப்படி உணரா விட்டால் “தான் எடுத்துக் கொண்ட நாவலுக்கு இயக்குநர் நியாயம் செய்யவில்லை” என்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பதிலிருந்து தப்ப முடியாது. இப்படிச் சொல்வதால் அதன் தொடர்ச்சியாக எழுப்பபடும் இன்னொரு விமரிசனத்தைக் கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என நான் சொல்வதாக ஆகாது.
குறிப்பு-3
பரதேசியின் ட்ரெய்லர் என்பதாக விகடன் வீடியோ வெளியிட்ட துண்டுக்காட்சிகளின் முதன்மையான நோக்கம் படத்தைப் பற்றிப் பேச வைப்பது மட்டும் தான் என்றால் அதைப் பற்றி விமரிசிக்கலாம். ஆம் விமரிசிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். அதற்கும் மேலே போய்’மனித உரிமை மீறல்’என்றும் கண்டன அறிக்கை தயாரித்துக் கையொப்பம் வாங்கி மனித உரிமை மீறலைத் தடுக்கும் ஆணையத்தில் முறையிடுவோம் என்றெல்லாம் முனைந்தால், அது அறியாமையின் வெளிப்பாடு.
கற்றல் – கற்பித்தல் முறைகளின் சாதகங்கள் – பாதகங்கள் சார்ந்த ஒன்றில் வெளியாரின் இடம் எப்போதும் கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. போட்டி உலகத்தில் தங்கள் பிள்ளைகள் முந்த வேண்டும் எனக் கருதும் மெத்தப் படித்த நடுத்தர வர்க்கத்தினர் அண்மைக்காலப் போக்கு வெளிப்படையான உதாரணம்.கேட்ட பணத்தையும் கொடுத்துத் தங்கள் குழந்தை களைப் பள்ளிக் கூடங்கள் என்னும் கொட்டடிகளில் கட்டி விட்டு வருகிறார்கள். கோழிக்குஞ்சுகளை வளர்த்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாமக்கல் பகுதிப் பள்ளிக்கூடங்கள் குரூரமான பயிற்சிகள் மூலம் பிள்ளைகளையும் கூடுதல் மதிப்பெண்கள் வாங்க வைத்து – வீங்க வைத்து- தொழில் கல்லூரிகளுக்கான போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன, அதையெல்லாம் மனித உரிமைக்கெதிரான நடவடிக்கை என விவாதிக்கவும் விமரிசிக்கவும் மட்டும் தான் முடிகிறது. அத்தகைய பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசின் கவனத்தைத் திசை திருப்பவோ, சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே கூட முடியவில்லை. கூட்டம் கூட்டமாக அவதிப்படும் அடுத்த தலைமுறையைப் பற்றி அக்கறை கொள்ளாமல், திரைப்பட நடிப்புப் பயிற்சியில் வெளிப்படும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ள நினைப்பது உண்மையான அக்கறையின் மீது சந்தேகத்தை உண்டு பண்ணத் தூண்டிவிடும்.
பத்துப் பதினைந்து ஆண்டுகள் நாடகத்துறையில் செயல்பட்டவன் என்ற நிலையில் “ஒரு காட்சியை விளக்கிச் சொல்லி நடிக்க வைப்பது இயக்குநரின் வேலை” என்பதாகவே நான் நினைக்கிறேன்.முரண்படும் பாத்திரங்கள் அடித்துக் கொள்கின்றன; மோதிக் கொள்கின்றன; எத்துகின்றன என்றால் அதனைச் சரியாக உருவாக்க நினைக்கும் இயக்குநர், அதனைச் செய்து காட்டித் தனது எதிர்பார்ப்பு இப்படிப் பட்டது எனக் கேட்டுக் கொள்வதை எப்படித் தவறு எனச் சொல்ல முடியும்? நடிக உடல்களுக்கு வலிக்காத வகையில் பயிற்சிகளைத் தர வேண்டும் என திரைப்படத்தயாரிப்புக்கு வெளியே இருப்பவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? குரல் மற்றும் உடல் மொழியைப் பயன்படுத்தும் நிகழ்த்துக் கலைகளுக்கான பயிற்சிகள் பலவிதமாக இருக்கின்றன. குளிர்ந்த ஆற்றுநீரில் அதிகாலையில் சாதகம் செய்வதைத் தேர்ந்த பயிற்சி முறையாகக் கொண்டாடும் ஆசிரியர்களும் மாணவர்களும் இசைத்துறையில் இருக்கிறார்கள். அதைக் குரூரமான வதை எனச் சொல்வது போலவே மனப்பாட முறை தவறு என்றே சொல்லி வருகிறோம். மனப்பாட முறை தேவையில்லை என நம்பிய நானெல்லாம், அதனால் ஏற்பட்ட இழப்பை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிகிறது. கணியன் பூங்குன்றன் தொடங்கி வளமான தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நூறு கவிதைகள் கூட எனக்கு மனப்பாடமாக இல்லையே என்ற ஆதங்கம் அதன் பின்னால் இருக்கிறது.
நடிப்புக்கலையோடு தொடர்புடைய அரங்கியல் மற்றும் திரைப்படத்துறையில் செயல்படும் இயக்குநர்களில் படைப்பாக்க இயக்குநர் என்றொரு வகையினர் உண்டு. அவர்கள் தான் உருவாக்கும் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக் காட்டி, அதைப் போலவே செய் எனச் சொல்லி உருவாக்குவதில்லை. தனது பாத்திரத்தின் சகல பரிமாணங்களையும் நடிகை/ நடிகனுக்கு விளக்கிச் சொல்லிச் சொல்லிப் புரிய வைத்து, ஒத்திகைகள் பல நடத்தி, அவர்களையே உருவாக்கச் செய்வார்கள். படைப்பாக்கத் தன்மையுள்ள நடிப்புக் கலைஞர்கள் இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு அவர்களே அந்தப் பாத்திரத்தை உருவாக்குவார்கள். இந்த முறையை ஆகச் சிறந்த முறை எனச் சொல்வதும் உண்டு. ஆனால் இந்த முறையில் இரண்டு பேரும் - இயக்குநரும், நடிப்புக்கலைஞரும்- படைப்பாக்க முறைமைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் பாத்திர உருவாக்கம் எளிதில் வசப்படாது. கால விரயம் அதிகம் ஆகும், இந்த முறையில் நம்பிக்கையில்லாத – அனுபவம் இல்லாத இயக்குநர்கள் எப்போதும் புதுமுகங்களை அறிமுகம் செய்து, நடித்துக் காட்டித் தங்களின் பாத்திரங்களை உருவாக்கிக் கொள்வார்கள். நவீன நாடக இயக்குநர்களில் மு.ராமசுவாமி எப்போதும் நடித்துக்காட்டுவார்; ஞாநி நடித்துக் காட்ட மாட்டார். திரைப்படத்துறையில் பாரதிராஜா, பாலாபோன்ற இயக்குநர்களிடமிருந்து புதிய புதிய நடிகர்களும், நடிகைகளும் நடிப்புக் கற்று வந்தோம் என்று சொல்லும் பின்னணியில் இந்த முறையியல் தான் செயல்படுகிறது. பாலாவையும் பாரதிராஜாவையும் படைப்பாக்க இயக்குநர்கள் (Creative Directors )இல்லை என நாம் விமரிசனம் செய்யலாம். ஆனால் அவர்கள் தான் புதிய புதிய நடிகை/ நடிகர்களை உருவாக்கும் இயக்குநர்களாக அறியப்படுகிறார்கள் என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.
நடிகனுக்கான பயிற்சிகளைப் பரிந்துரை செய்தும், பயிற்சி அளித்தும் பங்களிப்பு செய்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, மேயர்கோல்டு, க்ரோட்டோவ்ஸ்கி, பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், அண்டனின் அர்த்தோ போன்றோரின் பயிற்சி முறைகளில் கூட நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. உடலின் எந்திரவியல் இணைப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்துவதைப் பற்றிப் பேசிய க்ரோட்டோவ்ஸ்கியின் மீது வைக்கப்பெற்ற முக்கிய விமரிசனம் நடிகனை எந்திரமாகக் கணிக்கிறார் என்பது. நடிகர்களை அடர் வனங்களுக்குள் அழைத்துச் சென்று தனிமைப் படுத்திப் பயிற்சி அளித்த மேயர்ஹோல்டு, அர்த்தோ போன்றோர் அந்தச் செயல்பாடுகளுக்காகக் கடும் விமரிசனங்களை எதிர்கொண்டார்கள். சுதந்திர நடிகனை உருவாக்குவதைப் பற்றிப் பேசிய ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முக்கியமான பயிற்சி முறை உள்ளுறை நினைவை மேலெழுப்புதல் (EMOTIONAL MEMORY) என்பது. ஒரு பாத்திரத்தோடு நடிகரை ஒன்றச் செய்வதற்கு, அவனுக்குள் – சொந்த வாழ்க்கை சார்ந்து உறைந்து கிடக்கும் நினைவைக் கிளறி மேலெழுப்பிக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான பயிற்சி முறை அது. மரணத்தின் வலியை நடித்துக் காட்ட, தனது குடும்பத்தில் நடந்த மரணத்தை நினைத்துக் கொள்ளத் தூண்டுதல் போன்று பயிற்சி அளிப்பது. இத்தகைய பயிற்சிகள் நேர்மறைப் பலனை அளிப்பதைவிட எதிர்மறைப் பலனையே அதிகம் அளித்தன என்ற குற்றச்சாட்டோடு, நடிகர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கச் செய்யும் ஆபத்துக் கொண்ட பயிற்சிகள் என்ற குற்றச் சாட்டும் உள்ளன. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தரும் தண்டனை எனச் சொல்லும் பயிற்சி முறைகளை அதைப் பெறும் மாணாக்கர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆக கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் அதில் ஈடுபடும் இருவர் சார்ந்துதான் ஏற்புடையது; ஏற்பில்லாதது என்பதை முடிவு செய்ய முடியுமே ஒழிய, உலகப் பொதுவான முறை ஒன்று இருப்பதாகச் சொல்வது ஏற்கத் தக்கதல்ல.
குறிப்பு-4

ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற வலதுசாரிகளின் கருத்தியலோடு ஏற்புக் கொண்டு அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் பாலாவும் ஒரு வலதுசாரி தான். அவருக்குள்ளும் இந்துத்துவம் தான் செயல்படுகிறது என்று விமரிசிப்பவர்கள், நேர்மையான இடதுசாரிப் படம் எது என்பதையும், இடதுசாரி இயக்குநர் யார் என்பதையும் அடையாளம் காட்டினால் நல்லது. கலை இலக்கியங்களில் இடதுசாரிகள் மட்டுமே செயல்பட வேண்டும்; கருத்தியல்களைக் கலையாக்க வேண்டும்; பிரசாரம் செய்ய வேண்டும் எனத் தடைகளும் விதிகளும் இருக்கின்றனவா என்ன? வலதுசாரிகளும் அவர்களது கருத்துக்களையும் கருத்தியலையும் கலை இலக்கியங்களாக ஆக்கிக் காட்டட்டுமே. அவற்றை விமரிசனங்களால் எதிர்கொள்ளும் பணியையாவது முற்போக்காளர்களும், இடதுசாரிகளும் செய்யத் தயாராகலாம். அதை விட்டு விட்டு வெறும் முத்திரையை மட்டும் குத்தி ஒதுக்கி விடுவது –நிராகரிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

கல்வியின் மொழி

$
0
0
ஒரு மனிதன் எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குத் தாய்மொழியின் வழியாகக் கல்வி கற்பதே சிறந்த கல்வி எனப் பலரும் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். மொழிகளின் இயல்புகள், மாற்றங்கள், வளர்ந்த வரலாறு, தேய்ந்து காணாமல் போனதன் காரணங்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும் மொழியியல் (Linguistics) துறையைச் சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தாய்மொழியின் வழியாகக் கற்றலே இயல்பானது; எளிமையானது; சரியானது எனச் சொல்கின்றனர்.
இந்தக் கூற்றில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் ஒவ்வொருவரும் தாய்மொழி வழியாகக் கற்க வேண்டும்; கற்பிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன் என்றாலும் எனக்குக் கொஞ்சம் தயக்கமும் இருக்கிறது. அந்தத் தயக்கத்திற்கு நான் படித்த நூல்கள் காரணம் என்று சொல்வதைவிட எனது சொந்த அனுபவங்களே அதிகக் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் எனது பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியிலேயே கற்றேன். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பட்டங்களில் தமிழ் இலக்கியத்தைப் படித்தேன். எனது முழுக்கல்வியும் தமிழ் தான். தமிழ் இலக்கியம் கற்றேன் என்றாலும் என் தாய்மொழியில் கற்றேனா என்று கேட்டால் சரியான பதிலைச் சொல்ல என்னால் முடியாது. இன்று தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும் வாய்ச் சவடால் வீரர்களும் சொல்லும் வாதப்படி எனது தாய்மொழி தமிழ் அல்ல; தெலுங்கு. எனது குழந்தைமைப் பருவத்தில் எனது குடும்பம் மற்றும் உறவினர்களில் மூத்தவர்கள் தெலுங்கிலேயே பேசுவதைக் கேட்டிருக்கிறேன். திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தெலுங்குமொழி புழங்கு மொழியாக –பயன்பாட்டு மொழியாக இருந்தது என்பதும் எனக்குத் தெரியும். தெலுங்குச் சொற்கள் எனது பேச்சுகளில் பல நேரங்களில் இடம் பெற்றிருந்தது என்றாலும், என் வாழ்நாளில் ஒரு வாக்கியத்தைக் கூடத் தெலுங்கில் முழுமையாகச் சொன்னவன் இல்லை. அதேபோல் தெலுங்கைப் பயன்பாட்டு மொழியாகக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் ஒருவருக்கும் தெலுங்கு வரிவடிவத்தில் எழுதவோ பேசவோ தெரியாது என்றே நினைக்கிறேன்.

பெரியவனான பின் தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது; கற்றுக் கொண்டேன். வாசிக்கவும் ’கொறச்சு’ பேசவும் தெரியும். ஆனால் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததே இல்லை. என்ற போதிலும் எனது தாய்மொழி தெலுங்கு எனப் பலரும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அரசாங்கப் பதிவுகள் அனைத்திலும் எனது தாய்மொழி தமிழ் என்றே பதிந்து வைத்துள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்றவர்கள் தமிழ் நாட்டில் குறைந்தது ஒரு கோடிப் பேராவது இருப்பார்கள் என நினைக்கிறேன். சில பத்தாண்டுகளுக்கு முன்பு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்ப் பேசும் நன்னிலத்தில் வந்து தங்கித் தொழில் செய்து, ஊர் உண்டாக்கி வாழும் மனிதர்கள் தங்களைத் தமிழர்கள் என்றே அடையாளப் படுத்திக் கொண்டாலும் மன அளவில் கன்னடம், தெலுங்கு, சௌராஷ்ட்ரம், மலையாளம், குஜராத்தி, இந்தி, போன்ற மொழிகள் தான் தங்கள் தாய்மொழி எனக் கருதிக் கொண்டும் இருக்கின்றனர். இப்படியாகத் தங்களின் மொழி அடையாளத்தில் இரட்டைநிலை இருக்கும் மனிதர்கள் எந்த மொழியில் கற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மனத்திற்கும் இருக்கும் தாய்மொழியிலா? புழக்கத்தில் –பயன்பாட்டில்- இருக்கும் தாய்மொழியான தமிழிலா? இந்தச் சிக்கலான கேள்விக்குச் சரியான பதிலாகச் சொல்வதென்றால், ஒவ்வொருவரும் அவர்களின் பெரும்பாலான நேரங்களில் பயன்படு மொழியாக எது இருக்கிறதோ அதன் வழியாகக் கற்றலே சரியானது எனச் சொல்லலாம். ஒருவரின் பயன்பாட்டு மொழியில் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்போது தான் எளிமையாகக் கற்கவும், கற்றதைப் பயன்படுத்தவும் முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து கற்க விரும்பும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து மட்டுமல்லாமல் எனது முந்தைய அனுபவங்களையும் சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன். போலந்தின் கற்றல் – கற்பித்தல் மொழி போல்ஸ்கி. ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் கற்றல் மொழி அல்லது கற்பிக்கும் மொழி என ஒன்று இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் அந்த நாடுகளில் கற்பிக்கும் மொழியாக இருக்கும் மொழி மட்டுமே எல்லாருக்கும் தாய்மொழியாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. போலந்தில் போல்ஸ்கியைத் தவிர இன்னும் இரண்டு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுபான்மையினர் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும் அவர்களும் போல்ஸ்கி மொழியையே கற்றல் மொழியாகக் கொண்டுள்ளனர். போல்ஸ்கி, போலந்தின் தேச மொழி. தேசத்தின் மொழியே பயன்பாட்டு மொழி. பயன்பாட்டு மொழியின் வழியாகக் கற்றலைத் தவிர வேறு வழியில்லை. முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு தேசம் ஏதாவது ஒரு மொழியை மட்டுமே முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் மொழியாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த முனைகின்றது. போலந்து அரசாங்கம் 7 வயது முதல் 30 வயது வரை- பாலர் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை= தொடர்ச்சியாகக் கற்கும் வாய்ப்பை ஒருவருக்கு வழங்குகிறது. அறிவியல், தொழில் நுட்பம், சமூக அறிவியல், கலையியல் என எந்தப் படிப்பையும் ஒருவர் போல்ஸ்கி மொழியின் வழியாகக் கற்றுத் தேர்ந்து விட முடியும். அதற்குத் தேவையான அடிப்படைப் பாட நூல்களும் பார்வை நூல்களும் போல்ஸ்கி மொழியில் கிடைப்பதைப் போலந்து அரசும், அரசுத்துறையாக இருக்கும் கல்வி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

போல்ஸ்கி மொழி வழியாகக் கற்றுக் கொண்ட தனது அறிவைத் தனது நாட்டில் மட்டுமே பயன்படுத்தாமல் உலகத்தில் உள்ள வேறு எதாவது நாட்டிலும் பயன்படுத்தும் வாய்ப்பு வேண்டும் என நினைத்தால், அதற்கான மொழி ஊடகமாக ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பையும் கல்வி முறைக்குள்ளேயே ஏற்படுத்தித் தந்துள்ளது போலந்து அரசாங்கம். தேச மொழிவழியில் பாடங்கள், தேச மொழி ஒரு பாடம், அந்நிய மொழியாக இன்னொரு மொழி என்ற பாடத்திட்டக் கட்டமைப்பில் முதல் இரண்டும் கட்டாயம். மூன்றாவது பகுதி மாணாக்கரின் விருப்பம் சார்ந்தது. அந்த விருப்பம் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தொடர்கிறது. ஆங்கிலம், ஜெர்மனி, ப்ரெஞ்சு என நிகழ்காலத்தில் பொருளாதார உறவுகளோடு தொடர்புடைய மொழிகள் மட்டுமல்லாமல், க்ரீக், லத்தீன், ஸ்பானிஷ் என இலக்கிய வளம் சார்ந்த மொழிகளும் அந்த விருப்பப் பட்டியலில் இருக்கின்றன. 1990-க்கு முன்னால் போலந்து சோசலிச நாடுகளில் ஒன்றாக இருந்த போது முதன்மை விருப்பமாக ரஷ்யன் இருந்தது. அதன் பயன்பாடு இப்போது இல்லை என்பதால் பின்வாங்கிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

போலந்தும் இந்தியாவைப் போலவே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடு. அதே நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வேறுவிதமான நிலைமைகள் இருக்கின்றன. உலகத்தின் பணக்கார நாடுகளுள் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்து நான்கு மொழிகளை அரசு மொழியாகக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் அரசாங்கம் நான்கு மொழிகளின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கிறது. மிகச் சிறுபான்மை மொழியாக இல்லாமல் ஒரு தேசத்திற்குள் எண்ணிக்கையில் சம அளவாக இரண்டு அல்லது மூன்று மொழி பேசுகிறவர்கள் இருக்க நேரிடும் போது அந்த தேசம் முக்கிய மொழிகள் எல்லாவற்றையும் வளர்த்தெடுக்கும் வேலைகளைச் செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதற்கு உதாரணம் செக்கோஸ்லாவோக்யா. வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொரு மொழியையும் முழுமையாக வளர்ச்சி அடைந்த மொழியாக வளர்த்தெடுக்க முயன்று வெற்றி பெற்றுள்ளன.
எந்த ஒரு தேசமும் தனது தேசத்தின் மொழியைக் கற்றல் மொழியாக ஆக்குவதை முதன்மை விருப்பமாக நினைக்க வேண்டும். அதற்கு முதலில் தேசத்தின் மொழியைக் கற்றலை நிறைவேற்றத் தக்க தகுதியுடைய மொழியாக ஆக்க வேண்டும். இந்தியா ஒற்றைத் தேசமாக இல்லாமல் மொழிசார்ந்த அடையாளங்களால் பல தேசங்களின் தொகுப்பாக இருப்பதால் அதன் கல்விமொழி பிரச்சினையும் அவிழ்க்க முடியாத சிக்கல்களோடு தொடர்கிறது. தேச அரசின் பிரச்சினையா? மாநில அரசின் பிரச்சினையா? என்ற கேள்விக்குள் நுழையாமல் மாநில அரசின் பிரச்சினையாகவே கவனப்படுத்துகிறோம்.

இப்போது எனது தமிழ் நாட்டு அனுபவங்களுக்கு வருகிறேன். போலந்துக்கு வருவதற்கு முன்பு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாரில் 14 ஆண்டுகள். தமிழ் மொழி, இலக்கியம் படிக்கவும் ஆய்வு செய்யவும் வந்தவர்களுக்குக் கற்பிக்கும் தமிழ்ப் பேராசிரியராக இருந்தேன். அதற்கு முன்பு 8 ஆண்டுக் காலம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியில் நாடகவியலைக் கற்பிக்கும் ஆசிரியனாக இருந்தேன். அதற்கும் முன்பு 2 ஆண்டுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர். இந்தக் கால் நூற்றாண்டுக் கால ஆசிரியப் பணியில் முழுமையான திருப்தியும் மனநிறைவும் எப்போதாவது இருந்ததா? எனக் கேட்டால் “ நிச்சயம் இல்லை” என்றே சொல்வேன். இந்தத் திருப்தி மற்றும் மனநிறைவின்மைக்குச் சொந்தப் பிரச்சினைகளோ உழைக்கத் தயாராக இல்லாத மனநிலையோ காரணமில்லை என்பதை நானறிவேன்; என்னைத் தெரிந்தவர்களும் இதை அறிவார்கள்.

தமிழைக் கற்பிக்கத் தேவையான அடிப்படை நூல்களே தமிழில் இல்லை என்பதே எனது திருப்தி இன்மைக்கு முதல் காரணம். மொழியைப் பற்றிய உலக ஆய்வுகளும் கோட்பாடுகளும் தமிழில் இல்லை. தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு பற்றி இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், உலகப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பெற்ற ஆய்வுகளும் கருத்துக்களும் கூடத் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. முதுகலைத் தமிழில் கற்பிக்கப்படும் திறனாய்வு போன்ற பாடங்களில் உலக அளவில் பேசப்படும் அதே தரத்தில் பேச வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை நூல்கள் தமிழில் இல்லை. இப்போது பயன்பாட்டில் இருப்பனவெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பெற்ற நூல்களே.
இலக்கியத் திறனாய்வு மாணவனாக முனைவர் பட்டம் பெற்ற நான் எனது விருப்பத்துறையாக நாடகத்தை மாற்றிக் கொண்டு புதுச்சேரி மையப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். சொந்த வாழ்க்கை மற்றும் நண்பர்கள் சூழலில் திருப்தியாக இருந்த பாண்டிச்சேரியை விட்டு வெளியேறித் திரும்பவும் தமிழியல் துறைக்குத் திரும்பியதற்கு முதன்மையான காரணமாகச் சொந்தப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. துறைசார்ந்த பிரச்சினையே என்னை அங்கிருந்து நகர்த்தியது. நாடகவியலைத் தமிழ் வழியாகப் படித்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் தேவையான அடிப்படைப் பாட விளக்க நூல்களும், நாடகப் பிரதிகளும் தமிழில் கிடைக்கவில்லை என்பது என்னைப் பெரும் சோர்வுக்குள் தள்ளியது. இதைப் பலநேரம் நண்பர்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஆனால் மலையாளத்தில் நாடகத்தைக் கற்பிக்கத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும் கூடச் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில்..?

முத்தமிழ் என்று பிரித்துப் பெருமையாகச் சொல்லும் நாம் –இயல், இசை, நாடகம் என்ற இந்த மூன்று தமிழ்களையாவது ஆரம்பக்கல்வி முதல் முனைவர் பட்டம் வரை முழுமையாகத் தமிழ் வழியாகக் கற்பிக்கத் தேவையான நூல்களை இன்னும் உருவாக்கவில்லை என்பது தான் உண்மை. உயர்கல்விக் கூடங்களில் தமிழ் வழியாகக் கற்கவும் கற்பிக்கவும் தேர்வுகள் எழுதவும் உள்ள உரிமைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தும் அரசியல் இயக்கங்களும் அறிவாளிகளும் தமிழை அதற்குத் தகுதியுடைய மொழியாக ஆக்கும் பொறுப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பை மேற்கொள்ளும் அரசோடும், அரசு நிறுவனங்களோடும் ஒத்துழைத்துச் செயலாற்றவும் வேண்டும். ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தமிழ்வழிக் கல்வி என்னும் தேர் நகரும்.

இங்கே இன்னொரு முக்கியமான கேள்வியும் நம்முன் இருக்கிறது. கல்வி எதற்காக என்பதே அந்தக் கேள்வி? சிந்தனையையும் வாழ்முறையையும் மேம்படுத்துவதற்காகவா? வாழ்வதற்கான பொருளியல் தேவைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவியாகவா? நிச்சயமாக நிகழ்காலத்தில் இரண்டாவது நிலையில் தான் கல்வி இருக்கிறது. அந்தக் கல்வியைத் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியைத் தகுதியுடைய மொழியாக – உலகத்தின் தகவல்களும் சிந்தனைகளும் நிரம்பிய மொழியாக ஆக்க வேண்டும். இவற்றையெல்லாம் தனது தாய் மொழியில் கற்கும் ஒருவனுக்கு அத்தகவல்களையும் சிந்தனைகளையும் சொந்த மொழியிலும், விருப்பத்தோடு கற்ற இன்னொரு மொழியிலும் எடுத்துச் சொல்லும் பாங்கு தானே உருவாகும். இப்படி உருவாக்கிக் கொண்ட தலைமுறை நம்முன்னே இன்னமும் இருக்கவே செய்கிறது.

உண்மைக்குப் பக்கத்தில் ஒரு சினிமா: ஆந்த்ரே வெய்தாவின் வாக்களிக்கப் பெற்ற பூமி

$
0
0
பழைய படம் தான். 1975 இல் வந்த அந்த போலிஷ் படத்தின் தலைப்பு ஜெமியாஒபிஜியானா. ஆங்கிலத்தில் ப்ரொமிஸ்டு லேண்ட்(Promised Land)என மொழி பெயர்க்கப் பெற்றதைத் தமிழில் வாக்களிக்கப் பெற்ற பூமிஎன பெயர்த்துச் சொல்லலாம். தொழிற்புரட்சி மற்றும் நகர்மயமாதலின் பின்னணியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தை எனது மாணவிகளோடும் மாணவர்களோடும் சேர்ந்து பார்த்தேன். எனக்கு நம்பிக்கையுள்ள கலை இலக்கியக் கோணத்தில் இந்தப் படம் முக்கியமான படம் என்று நான் சொன்னேன். உடனே அவர்களில் ஒருத்தியும் ”ஆமாம்; இது எங்களுக்கும் முக்கியமான படம்” என்று பலரையும் உள்ளடக்கிச் சொன்னாள்.
மற்றவர்களும் அதை மறுத்துச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி விட்டு இந்தப் படமும் அதன் இயக்குநரும் போலந்து சினிமாவுக்கும் முக்கியம் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டார்கள். சோசலிசக் காலத்தில் (1975) எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை எனது மாணவர்கள் பாராட்டியதும் நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியமாக இருந்தது.
போலந்து தேசம், சோசலிசக் கட்டுமானத்தைப் பின்பற்றிக் கொண்டு சோவியத் யூனியனின் நட்பு நாடாக இருந்த காலத்தைப் பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டாத என் மாணவிகளும் மாணவர்களும் இந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னதும் பாராட்டியதும் ஏன் என்பதைப் படம் பார்த்தபோதும் உணர்ந்தேன். படத்தைப் பார்த்த பின் நடந்த உரையாடல்களும் பிந்திய நிகழ்வுகளும் எனக்கு உணர்த்தியது.. மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் 1990 க்கு முந்திய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு மேல் வெறுப்பு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களில் பலரும் சோசலிசத்திலிருந்து முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மாறிய போலந்தில் பிறந்தவர்கள். கொஞ்சப் பேர் அதற்கு முன்பே பிறந்திருந்தாலும் மாற்றத்தின் போது குழந்தமைப் பருவத்தில் இருந்தவர்கள். மாற்றம் நிகழ்ந்த பின் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் கடந்த காலத்தைப் பற்றிச் சொன்ன எதிர்மறைக் கருத்துகளை மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். முடிந்து போன கொடுங்கனவாகச் சோசலிசத்தைக் காண்பித்துச் சொல்லப்பட்ட கதைகள் தான் அவர்களுக்குத் தெரியும்.
சோசலிசக் காலத்தில் அன்றாட உணவும் குளிருக்குக் குடிக்க வேண்டிய வோட்காவுக்குமே திண்டாட்டம் இருந்ததாகவும், அவற்றை வழங்கும் கடைகளின் முன் நீண்டு வளர்ந்த மனித வரிசைகளே சோசலிசத்தைத் தூக்கித் தூர எறிந்ததாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். வயிற்றுப்பாடுகள் அடிப்படையான உணர்ச்சிகளை எழுப்பும் என்பது உண்மை என்றாலும், அரசியல் மாற்றத்துக்கு அது ஒன்று மட்டுமே போதாது. சித்தாந்த முகம் ஒன்றும் அதற்கு எப்போதும் தேவை. அதை வழங்கிய அமைப்பாக 1980 களில் தோன்றி வளர்ந்த ஒற்றுமைக்கும் வலிமைக்குமான இயக்கம் (Solidarity movement)இருந்துள்ளது. நான் பணியாற்றும் வார்சா பல்கலைக் கழகத்தின் முன் செல்லும் அந்தச் சாலையில் தான் வலேசாபோன்றவர்கள் விடாப்பிடியாக ஊர்வலங் களையும் போராட்டங்களையும் நடத்தி மாற்றத்தை உருவாக்கி யிருக்கிறார்கள். அந்தக் கதைகளின் பாத்திரங்களாக வலேசா மட்டும் இருந்ததில்லை. சுதந்திரத்தை விரும்பிய எழுத்தாளர்கள், சினிமா, நாடகம், ஓவியம் முதலான கலைகள் சார்ந்த படைப்பாளிகளும் பொதுமக்களின் குரலோடு இணைந்திருக்கிறார்கள்.  கால் நூற்றாண்டுக்கு முன் மாற்றத்தை நோக்கிப் போலந்து மக்களைத் திசை திருப்பிய நிகழ்வுகளைப்  பசுமையாக நினைவு கூறும் மனிதர்கள் இப்போது 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்குள் யாராவது ஒருவர் சோசலிசக் காலத்தில் நடந்த நேர்மறை நிகழ்வுகளை நினைவுபடுத்தி யாராவது சொல்ல முன் வந்தால், விநோதப் பிறவிகளாகவும் சுதந்திரமான எண்ணங்களுக்கும் வேகமான வளர்ச்சிக்கும்  எதிரானவர்களாகக் கருதப் படும் வாய்ப்பே அதிகம் என்பதால் பெரிய அளவில் அதைப் பற்றிப் பேசும் குரல்களைக் கேட்க முடியவில்லை. .
இப்போதும் கூட எதிர்மறை யான கருத்துக்களே சொல் லப் படுகின்றன. சோசலிசத்தின் நல்ல அம்சம் எனப் பேசக்கூடிய ஒருவரையும் இந்த இரண்டு ஆண்டுகளில் சந்திக்க முடியவில்லை. கசப்பான அனுபவங் களைச் சுமந்தவர்களாகவும், சுமப்பவர்களின் கதைகளைக் கேட்டவர் களாகவும் இந்த போலந்து பூமி நிறைந்து கிடக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்திய வீரம் செறிந்த போரில் பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பலி கொடுத்த நாடு போலந்து. அதன் பண்பாட்டுத் தலைநகரமான க்ராக்கோவுக்குப் பக்கத்தில் பெருங்கூட்டத்தைச் சிறைப்படுத்தி அடைத்து வைத்து விஷ வாயுவைச் செலுத்திக் கொன்ற கொலைக்கூடம் இப்போதும் காட்சிப் படுத்தப்பட்டுக் காட்டப்படுகிறது. ஹிட்லரின் ஜெர்மனியின் மீது கொள்ள வேண்டிய கோபத்தின் அடையாளமாக அவை இருப்பதுபோல ஸ்டாலினின் ரஷ்ய அடக்குமுறையின் அடையாளமாக அவன் கட்டிக் கொடுத்த பண்பாட்டு மாளிகையும் கருதப்படுகிறது. ஜெர்மனியர் களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தங்கள்  தலைநகரான வார்சா தரைமட்டமாக்கப்பட்டது என்பதை ஒவ்வொ ருவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நகரம் திரும்பவும் அதே அடையாளங்களோடும் அதே அழகோடும் கட்டடங்களாக வளர்ந்து நிற்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட காலம் சோசலிசக் கட்டுமான காலம் தான். ஆனால் கட்டடங்களையும் கலைகளையும் அழகையும் திரும்பக் கொண்டு வந்த சோசலிசத்தின் காவலர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற அடிப்படையை மறந்திருக்கிறார்க்கிறார்கள் என்பதைப் பலரோடும் உரையாடும்போது கேட்க முடிகிறது. உறையும் பனிக்கட்டிகள் உடைக்கப்படாததாலும் உருக்கப்படாததாலும் வீட்டிற்குள்ளேயே முடக்கப் பட்ட மக்களின் தேவையை ஆட்சி யாளர்கள் உணரவில்லை. அதுதான் எதிர்ப்புணர்வின் வலிமையாக மாறியது. சுற்றியுள்ள நாடுகளின் அதிகாரப் போட்டியில் காணாமல் போன தங்கள் தேசம் திரும்ப உருவாக்கப் பெற்ற கதையை நினைவு கூரும் இளைய தலைமுறையிடம் சோசலிசம் ஒரு கொடுங் கனவாகவே படிந்துள்ளது. ஆனாலும் அது உருவாக்க நினைத்த மனிதாபிமானமும், பண்பாட்டுக் கவலைகளும் திரும்பக் கொண்டுவரப் பட வேண்டியவை என்ற நினைப்பு இன்னும் இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்களிக்கப் பெற்ற பூமியைப் பெருமையாகக் கருதும் மனநிலையைப் புரிந்து கொண்டேன்.
வாக்களிக்கப் பெற்ற அந்த பூமி என்ற சினிமாவில் காட்டப்பெற்ற பூமி இன்றும் போலந்தில் இருக்கிறது அந்த பூமியும் அந்தப் பூமியில் உருவானதாக இயக்குநர் காட்சிப் படுத்திக் காட்டிய அந்த நகரமும் கூட இப்போதும் இருக்கிறது. அந்த நகரத்தின் இப்போதைய பெயர் ஊஜ். இயக்குநர் அதே நகரத்தில் தான் தனது படத்தை எடுத்திருக்கிறார். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடும் எனக் குருட்டுத் தனமாக நம்பிய முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்தில் இயற்கையும் எளிமையான வாழ்க்கை முறைகளும் அழிக்கப்பட்டதைப் பேசுபொருட்களாக்கியுள்ள படம் அது. பெரும் தொழிற்சாலையும் அதன் இருப்புக்காக உருவாக்கப் பெற்ற நகர வாழ்க்கையையும் விரிவாகச் சித்திரித்துள்ளது. அப்படத்தில் மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்களாக வருகின்றனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு பின்னணியில் – ஒருவர் போலந்து நாட்டவன்; இன்னொருவன் ஜெர்மானியன்; மூன்றாமவன் யூதன் – இருந்து வந்தவர்கள் நண்பர்களாக ஆனதே தொழிற்சாலையை உருவாக்கவும் பணம் சேர்க்கவுமான வேட்கையால் தான். மூவரும் தொழிற்சாலையை வளர்த்தெடுப்பதில் காட்டும் அக்கறையால் எப்படி ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானக் குணத்தை இழக்கிறார்கள் என்பதைப் படம் அடுக்கிக் கொண்டே போகிறது. பிரமாண்டமான தொழிற்சாலை உருவாகும்போதே வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான நல்ல வீடு, போக்குவரத்து, மருத்துவம் போன்றன கவனம் பெறாமல் ஒதுங்கிப் போகிறது என்பதைச் சொல்வதோடு, கலை, அழகியல், பண்பாட்டு நடவடிக்கைகள் எனப் பலவற்றின் மீதிருந்த அக்கறைகளும் விலகிக் கொண்டே போவதையும் படம் சத்தமில்லாமல் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

இந்தப் படத்திற்கான அடிப்படைக் கதையை விவாடிஸ்வாரெய்மண்ட்என்பவரின் நாவலிலிருந்து இயக்குநர் உருவாக்கியிருக்கிறார் என்றாலும்,  இரண்டு நகரங்களின் கதைகளை எழுதிய சார்லஸ் டிக்கென்ஸ், ஐரோப்பிய நடுத்தர வர்க்க மன உருவாக்கத்தை எழுதிக் காட்டிய எமிலிஜோலா, தொழிற்சாலை உருவாக்கத்தோடு உருவாகும் தொழிலாளி வர்க்கத்தை எழுதிக் காட்டிய மார்க்சிம் கார்க்கிபோன்றவர்களோடு ஜெர்மானிய வெளிப்பாட்டியல் இயக்கத்தின் தாக்கமும் கொண்ட படைப்பாக அந்தப் படத்தை உருவாக்கித் தந்துள்ளார்.  உண்மையான நகரத்தை மட்டுமே பின்னணியாகக் கொள்ளாமல், அந்த நகரம் அதன் உருவாக்கக் காலத்தில் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதைக் காட்டுவதற்காக ஓவியங்களையும் கலை இயக்கத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி எடுக்கப்பெற்ற அந்தப் படம் தெரியாத மொழியில் இருக்கும் படம் என்ற உணர்வே இல்லாமல் எனக்குள் எளிமையாக நுழைந்து கொண்டது. அதற்கேற்றவாறு காட்சிகளை அடுக்கியிருப்பதோடு நடிகர்களின் பொருத்தமான உணர்வு வெளிப்பாடும் நடிப்பாற்றலும் பார்வையாளர்களைச் சென்றடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த படமாக இந்தப் படத்தை நினைக்கிறேன் 
இந்தப் படத்தைப் பார்த்தபின் மாணவிகளோடு நடத்திய உரையாடலும் ஒருநாள் பயணமும் மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகளை உருவாக்கும் நோக்கமும் பணத்தை ஈட்டுவதில் ஏற்படும் அளவுக்கடங்காத ஆசையும் மனிதாபிமான உறவுகளைச் சிதைக்கிறது என்பதைப் பேசும் இந்தப் படம் இப்போதைய போலந்துப் பொது மனநிலைக்கு எதிரானதாக இல்லையா? எனப் படம் பார்த்தபின் கேட்டேன். தொழிற்சாலைகளை விட மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய உறவும், பண்பாட்டின் மீது வைக்க வேண்டிய பற்றும் ஒரு விதத்தில் சோசலிசக் கலை இலக்கியவாதிகளின் மையமான கருத்தோட்டங்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லி விட்டுத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதற்குக் கிடைத்த உதிரி உதிரியான பதில்களிலிருந்து தொகுத்துப் புரிந்து கொள்ள வேண்டியன பல இருக்கின்றன..
போலந்து அடிப்படையில் கத்தோலிக்கக் கிறித்தவ நாடு. கொஞ்சம் பழைமையின் மீது – குறிப்பாகச் சடங்குகள் மீதும்,  மூதாதையர்களின் மீதும் கொண்டுள்ள பாசம் ஆசியச் சமூகங்களை ஒத்தது எனச் சொன்னாள் ஒரு மாணவி. இந்தக் கூற்று முழுமையாக உண்மையானது என்பதை ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கல்லறைத் தோட்டங்களும், அக்கல்லறைகளின் அருகில் புதிது புதிதாக வைக்கப்படும் படையல் பொருட்களும் இப்போதும் உணர்த்திக்  கொண்டே இருக்கின்றன. வருடத்தில் ஒரு நாள் உயிரோடு இருக்கும் தங்கள் குடும்பத்து மூத்தவர்களைத் தேடிச் சென்று வாழ்த்தைப் பெறும் சடங்கை இளைய சமுதாயம் மறந்து விடவில்லை. ஆண்களும் பெண்களும் திருமணம் முடித்துக் கொள்வதும் பிரிந்து வாழ்வதும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இங்கும் இயல்பாக இருக்கிறது என்றாலும் மூதாதையர்களுக்கான இடம் என்பது பண்பாட்டோடு தொடர்புடைய தனித்தன்மை என நினைக்கிறார்கள் போலந்துக்காரர்கள்.இந்த அடையாளத்தை அந்தப் படம் ஆழமாக உணர்த்திய படமாக நினைக்கப் படுகிறது. தொழில் வளர்ச்சிக்காக அந்த அடையாளத்தைப் போலந்துக்காரர்கள் விட்டுத் தரத் தயாரில்லை.

எப்போதும் போலந்து நாட்டுப் பொதுமனநிலை மற்றைய ஐரோப்பியப் பொது மனநிலையோடு முற்றிலும் ஒத்துப் போகும் தன்மை கொண்டதல்ல என்பதில் அவர்களுக்கு கொஞ்சம் பெருமிதமும் இருக்கிறது. பொது வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பெண்களின் இடம் கேள்விக்குரிய ஒன்றாக ஆவதற்குத் தொழிற் சாலைப் பெருக்கம் காரணமாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய வாக்களிக்கப் பெற்ற பூமி, அதற்காகவும் முக்கியமான படமாக இருக்கிறது என என் மாணவிகள் சொன்னார்கள். தொடர்ந்து அவர்கள் தந்த தகவல்களின் வழியாக அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றவர்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். படத்தின் இயக்குநர் ஆந்த்ரே வய்த [Andrzej Wajda (Polish pronunciation: ˈandʐɛj ˈvajda]போலந்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலச் சினிமா வரலாற்றில் மட்டும் அல்லாமல் அரசியல் பொருளாதார மாற்றங்களோடும்  தன்னை இணைத்துக் கொண்டவர். லெக் வலேசாவோடு சேர்ந்து சாலிட்டாரிட்டு இயக்கத்தில் பணியாற்றியவர்.  வாழ்நாள் சாதனைகளுக்காக ஆஸ்கர் குழுவின் பாராட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராட்டையும் பெற்றுள்ள ஆந்த்ரே வய்த போலந்து சினிமாவின் இன்னொரு முக்கியப் பெயரான  ரோமன் போலன்ஸ்கியின் நகர்வுகளோடு சேர்ந்தே நினைக்கப்படுகிறார். அந்தக் குறிப்புகளைச் சொன்ன எனது மாணவி ஒருத்தி நீங்கள் விரும்பினால் நாம் அந்த நகரத்துக்குப் போகலாம் எனச் சொன்னாள். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு ஒருநாள் அந்நகரத்துக்கு என் மாணவிகளோடு போனேன்.
தலைநகர் வார்சாவிலிருந்து ரயிலில் பயணம் செய்தால் 4 மணி நேரத்தில் வாக்களிக்கப் பெற்ற அந்த பூமியில் உருவாகியிருக்கும் ஊஜ் என்னும் அந்த நகரத்தை அடைந்து விடலாம். ஒரு பழைய நகர் மையம்; அதிலிருந்து சுற்றிச் சுற்றி விரியும் விரிநிலைத் தன்மையில் அமைப்பாகும் புதிய நகரப்பகுதி என்பதுவே போலிஷ் நகரங்களின் பொதுக்கட்டமைப்பு.. ஆனால் ஊஜ் ஒரு நதியைப் போல நீட்டு வாக்கில் நீண்டு கொண்டே போகிறது. நடுவில் செல்லும் ரயில் பாதையின் ஓரங்களில் பல தொழிற்சாலைகள் நிரம்பிய நகரமாக இப்போது இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட அந்த நகரம் கொஞ்சம் அழுக்கடைந்த நகரமாகவே இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற தொழிற்சாலை அமைந்திருந்த கட்டடத்தை மட்டுமல்லாமல் அந்த முதலாளிகளின் மாளிகைகளையும் கூடப் பார்த்தோம் தொழிற்சாலை இப்போது கண்காட்சிக் கூடமாக ஆக்கப் பட்டிருக்கிறது. படத்தில் காட்சிக்கு மெருகூட்டிய பொருட்கள் அந்த மாளிகையில் நிரந்தரக் காட்சிப்பொருட்களாக வைக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். போலந்தின் சுற்றுலா வரைபடத்தில் ஊஜ் நகரத்தை ஆக்கியதில் இந்தப் படம் முக்கியப் பங்காக இருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு அறையில் இயக்குநர் வய்தா பெற்ற பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் அடுக்கப்பெற்றுள்ளன.
ஊஜ் நகரம் ஆந்த்ரே வய்தவின் வாக்களிக்கப்பெற்ற பூமி என்ற சினிமாவோடு மட்டும் தொடர் புடைய நகரமாக இல்லாமல், போலிஷ் சினிமாவின் முக்கிய மையமாகவும் இருக்கிறது. போலிஷ் திரைப்பட அகாடெமி அங்கே தான் இருக்கிறது. சினிமாவின் அனைத்துப் பிரிவு களையும் கற்பிக்கும் அந்த நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல விரிந்து கிடக்கிறது. அத்துடன் ஊஜ் நகரத்தின் முக்கியமான தெரு ஒன்றில் பித்தளையால் ஆன பெரும் நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. அந்நட்சத்திரங்களில் போலந்து சினிமாவுக்குப் பெயர் வாங்கித் தந்தவர்களின் விவரங்கள் பதிவு செய்யப் பெற்றுள்ளன. நூற்றுக்கும் அதிகமான நட்சத்திரங்களில்  தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சினிமாவில் பங்கு பெற்றுச் சிறப்பிடம் போலந்துக் கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் எழுதி வைக்கப் பெற்றுள்ளன. இசைக்கலைஞர்கள், ஒளியமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிப்புக் கலைஞர்கள் என ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பெற்ற ஒவ்வொருவருக்காகவும் தனித்தனி நட்சத்திரம். அந்த நட்சத்திங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை வாசித்துக் கொண்டே நடக்கும் ஒரு போலிஷ் யுவதியும் இளைஞனும் தங்கள் தேசத் திரைப்படக் கலையின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு அந்தப் பூமியை – வாக்களிக்கப் பெற்ற அந்தப் பூமியை மனதில் பதித்துக் கொண்டே வளர்கிறார்கள்..



எது ஆறு? எது சேறு? இப்பவாவது சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!

$
0
0

விடுதலை அடைந்த இந்தியா தனக்கான அரசியல் அமைப்பை எழுதிப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்ட ஆண்டு 1950. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் பொதுவுடைமைக் கட்டமைப்பின் மீது நம்பிக்கையும் கனவுகளும் இருந்த நேரம். அந்த நம்பிக்கைகளும் கனவுகளும் தான் அப்போது விடுதலை அடைந்த நாடுகள் பலவற்றின் அரசியல் அமைப்பில் சோசலிசத்தை நோக்கிய பயணத்திற்கான குறிப்புகளைச் சேர்க்கச் செய்தன. 
இந்தியாவிற்கும்–இந்திய அரசைத் தலைமை தாங்கி நடத்திய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் சோசலிசக் கட்டுமானம் பற்றிய கனவுகளும் நம்பிக்கைகளும் இருந்தன. ஆனால் அவரது சமதர்மம் மொத்த தேசத்தையும் அரசின் உடைமையாக்கி, மக்களை அவற்றில் தங்கள் உழைப்பை வழங்கும் உழைப்பாளிகளாகவும், அவற்றின் வருமானத்தில் மட்டும் பங்கு பெறும் பங்காளிகளாகவும் வைத்திருக்க நினைத்த சோவியத் ருஷ்யா அல்லது செஞ்சீன மாதிரிகள் அல்ல. அவை பொருளாதாரப் பிளவுகளை முதன்மை முரண்பாடாகக் கொண்ட சமூகத்தைச் சமநிலைப் படுத்தும் நடைமுறைகளை இலக்காகக் கொண்ட மாதிரிகள். அவற்றைப் பின்பற்றாமல் கலப்புப் பொருளாதாரம் என்றொரு பொருளாதார நடைமுறையை நேரு பின்பற்றினார். தொழில் வளர்ச்சிக்காகத் தனியார் துறைக்கு அனுமதி அளிக்கும் அதே நேரத்தில் பெருந்தொழில்களையும் சேவைப் பிரிவுகளையும் அரசுத் துறைகளே ஏற்று நடத்தும் நடைமுறைகளைப் பின்பற்றினார். நேருவின் இந்தக் கொள்கை அப்போதே அறிவுஜீவிகளாலும், எதிர்க் கட்சியினராலும் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால்என்ற விமரிசனத்தைச் சந்தித்தது என்பது பழைய வரலாறு. பண்டித நேரு தன்னாலான விளக்கங்களையும் பதிலாகச் சொன்னார் என்பதைப் பழைய தலைமுறை மனிதர்கள் அறிவார்கள். அந்தப் பதில்களையும் விளக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவரைக் கொண்டாடினார்கள்; ஏற்காதவர்கள் அவரை விட்டு விலகிப் போனார்கள்.
அதே விமரிசனத்தை – ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால்– என்னும் விமரிசனத்தை இன்னும் அழுத்தமாகக் கடந்த இருபது ஆண்டுகளாகச் சந்திக்கும் டாக்டர் மன்மோகன்சிங் தன் மீதான விமரிசனங்களுக்கு எந்தப் பதிலும் சொன்னதில்லை; விளக்கங்களையும் விவரித்ததில்லை. அதே நேரத்தில்  தான் நம்பும் ’பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கும் முதலாளித்துவ –தாராளவாத- தனியார்மயப் பொருளாதார உறவு’ இந்திய நாட்டை முன்னோக்கி நகர்த்துவதாக நம்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் சொந்தக்கட்சி அரசியல்வாதிகளும், எட்ட நின்று அவ்வப்போது ”வாழ்க!” எனவும் ”ஒழிக!!” எனவும் மாறிமாறிக் கூச்சலிடும் எதிர்க்கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சிக்காரர்களும் இருபதாண்டுகளுக்கு முந்திய நிலையில் பயணம் செய்தால் கூடப் பரவாயில்லை; இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

அரசமைப்பை மையப்படுத்திய பொருளாதார உற்பத்தி முறைகளும் உறவுகளும் பண்டித நேருவின் மகள் இந்திராவின் ஆட்சியிலும் நீண்டது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட கட்சிகளின் கூட்டணியான ஜனதா ஆட்சியிலும் கூட நேருவின் கொள்கை பெரும் மாற்றத்தைச் சந்திக்கவில்லை. நேருவின் பேரன் ராஜீவ் காந்தி, தான் பிரதமராக ஆனவுடன் அந்தப் பாதையிலிருந்து தடம் விலகினார் என்றாலும் முழுமையான விலகல் ஏற்பட்ட ஆட்சிக் காலம் திருவாளர் பி.வி.நரசிம்மராவின் ஆட்சிக் காலம் என்பதை விவரம் அறிந்தவர்கள் நம்புவார்கள். அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் நரசிம்மராவ் என்பதை விட யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவரது அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக ஆக்கப் பெற்ற டாக்டர் மன்மோகன்சிங் தான் அந்த மாற்றத்தின் காரணி என்பதும் விபரமறிந்தவர்களுக்குத் தெரிந்த ரகசியம் தான்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங், சில காலம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக இருந்து விட்டு இந்திய அரசுப் பணிக்கு 1970 இல் வந்தார். வெளிநாட்டு வர்த்தகத்தில் தனக்கு ஆலோசனை சொல்வதற்காக அவரை அழைத்து வந்தவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த லலித் நாராயணன் மிஸ்ரா. அந்த நுழைவுக்குப் பின் இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பல பதவிகளில் –முதன்மைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக்குழுத் தலைவர் என முக்கியமான பதவிகளில் இருந்து அரசதிகாரத்தின் நகர்வைப் பின்னின்று இயக்கியவர் 1996 முதல் முன்னின்று இயக்கும் தளகர்த்தகராக அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகம் செய்த பி.வி. நரசிம்மராவ் முழுமனதோடு மன்மோகன்சிங் முன் வைத்த தாராளவாத பொருளாதார உறவுகளுக்குத் தடைகளின்றிக் கதவுகளைத் திறந்து விட்டார். அப்போதே மன்மோகன்சிங் செய்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலையைச் செய்யத் தவறினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. அன்று செய்யத் தவறிய அதே தவறை இன்னமும் இருபதாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.
நரசிம்மராவ் திறந்துவிட்ட வாசல் வழியே வெளியே வந்த மன்மோகன்சிங் முதலில் செய்திருக்க வேண்டிய வேலை அதுவரை பின்பற்றப் பட்ட நேருவின் பொருளாதாரக் கொள்கைகளின் மீது –பொதுத்துறையை மையப்படுத்திய உற்பத்தி உறவுகளின் மீதான தனது விமரிசனத்தைச் சொல்லியிருக்க வேண்டும். விமரிசனம் செய்திருக்க வேண்டும் என்று சொல்வதை விடக் கண்டித்திருக்க வேண்டும் என்று சொல்வதே சரியாக இருக்கும். இனி அந்தத் தடத்திலிருந்து இந்திய தேசம் மாறிப் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிப் புதிய திசையில் செல்லப் போகிறது என்பதைத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். செல்லும் போது கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்க வேண்டும். இதுவரை கிடைத்த சலுகைகள் இனிக் கிடைக்காது; அதற்குப் பதிலாக எத்தகைய வாழ்க்கைமுறை கிடைக்கும்; அமையும் என்பதையும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்வதின் மூலம் மக்களைத் திசை திருப்பித் தனது அரசாங்கத்தோடும் பொருளாதாரக் கொள்கையோடும் பயணிக்கத் தூண்டியிருக்க வேண்டும். அந்தப் பயணத்திற்காக மக்கள் எதையெல்லாம் கைவிட வேண்டியதிருக்கும் என்ற அறிவுரையை வழங்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கும்போதே அரசு நிர்வாகத்தில் பங்குபெற்றுள்ள அதிகார வர்க்கத்தினரின் மந்தத்தனத்தையும் போக்கியிருக்க வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் எவை? கற்றுக் கொள்ள வேண்டிய உத்திகள் எவை? கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் எப்படிப் பட்டவை என்பதையெல்லாம் விளக்கிக் காட்டியிருக்க வேண்டும். நிதியமைச்சராக இருந்தபோதே செய்திருக்க வேண்டிய இதையெல்லாம் நாட்டின் பிரதமராக ஆன பின்னும் டாக்டர் மன்மோகன் சிங் செய்யவில்லை என்பதுதான் வேடிக்கையைவிட விநோதமாக இருக்கிறது.
இருபது ஆண்டுகள் ஆனபின்பும் அதைச் செய்யாமல் வாய்மூடி மௌனியாக இருப்பதன் பின்னணியில் அவருக்கு இருப்பது குழப்பமா? தெளிவா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. மைய அரசின் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் கருவியாக மன்மோகன் சிங்கின் புதிய தாராளவாதக் கொள்கைகள் இருக்க முடியாது; நேருவின் ஏழைப்பங்காளன் பாத்திரமே ஓட்டு வாங்கும் சூத்திரமாகப் பயன்படும் என்று காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி நம்புவது போலவே  மன்மோகன் சிங்கும் நம்புகிறாரோ என்ற ஐயம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. நேரு, தான் நம்பிய கொள்கையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினார்; விளக்கினார். அவரது கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் மன்மோகன் சிங்கிற்கு அந்தத் தைரியமும் அறிவுத்திறனும் இல்லாமல் இருப்பது தான் நிகழ்கால இந்தியாவின் பெருந்துயரமாக இருக்கிறது.
இந்த இடத்தில் நான் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்த போலந்து நாட்டில் சந்தித்த சில நிகழ்வுகளையும் புரிதல் களையும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. போலந்தும் 1991 இல் பொதுவுடைமைக் கட்டமைப்பிலிருந்து தாராளவாதப் பொருளாதாரக் கட்டமைக்குள் நுழைந்த நாடு என்பதால் இந்த ஒப்பீடு பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். 2011 அக்டோபரில் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் இருக்கைக்கான வருகைதரு பேராசிரியராகச் சென்றேன். வார்சா விமான நிலையத்தில் இறங்கிய முதல் நாளே என் கண்ணில் பட்ட வரவேற்புப் பதாகைகளில் ஒன்று 14 ஆவது ஈரோ கோப்பைக் கால்பந்துப் போட்டிகள்பற்றிய அறிவிப்புகள் 2012, ஜூன் 8 முதல் ஜூலை 1 வரை நடக்க இருந்த ஈரோ கோப்பைக் கால் பந்து போட்டிகளைப் போலந்தும் அதன் அருகில் இருக்கும் உக்ரைனும் சேர்ந்து நடத்த இருப்பதாக அறிவிப்புகள் காட்டின. அப்போட்டியின் தொடக்க விழா நடைபெற இருந்த போலந்து தேசிய விளையாட்டு மைதானம் நான் வேலை பார்த்த வார்சா பல்கலைக்கழக வளாகத்திற்குப் பின்புறம் தான் இருந்தது. இரண்டையும் பிரிப்பது அந்நகரின் நடுவில் ஓடும் விஸ்துலா ஆறு.
பல்கலைக்கழகத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேறிப் பாலத்தின் வழியாக நடந்தால் விளையாட்டு மைதானத்தை அடைந்து விடலாம். தொடக்கவிழாவின் காட்சிகள் நகர் மையத்தில் நடந்தது தூரத்தில் இருந்து பார்த்தேன். வார்சாவில் நடந்த எல்லாப் போட்டிகளையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் போலந்து அணிக்கும் ரஷ்ய அணிக்கும் இடையே ஜூன் 12 இல் நடக்க இருந்த போட்டியை மைதானத்திற்குச் சென்று பார்க்க நினைத்து அனுமதிச் சீட்டு வாங்க முயன்றேன். எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் என் மாணவி போட்டியைக் காண நேரில் செல்ல வேண்டாம் எனத் தடுத்து விட்டாள். நிச்சயம் தகராறு நடக்கும். உங்களால் இரவு வீடு திரும்ப முடியாமல் போகலாம்; தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக ஒரு பெரிய ரெஸ்டாரெண்டின் புல்வெளியில் அகன்ற திரையில் வோட்கா குடித்தபடியே ஆட்டத்தைக் காணலாம். அதற்கான டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று சொன்னாள்.
அவளது எச்சரிக்கையை நான் மீறவில்லை. எச்சரிக்கையில் அவள் சுட்டிக் காட்டியபடி போலந்து –ரஷ்ய அணிகள் மோதிய ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் கூச்சல் குழப்பங்களும், கலவர உணர்வும் எழுந்து அடங்கியது என்பதும் உண்மை. கலவர உணர்வுக்குக் காரணம் கால்பந்து மீதான வெறியும், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆவேசமும் மட்டும் இருக்கவில்லை. போலந்து நாட்டுக்காரர்களுக்கு ரஷ்யர்கள் மீதும் சோசலிச அமைப்பின் மீதும் இருக்கும் அடக்க முடியாத கோபமும் சேர்ந்து தான் அப்படித் தூண்டியது. சோசலிச ஆட்சிக் காலத்தில் அன்றாட உணவும் குளிருக்குக் குடிக்க வேண்டிய வோட்காவுக்குமே திண்டாட்டம் இருந்ததாகவும், அவற்றை வழங்கும் கடைகளின் முன் நீண்டு வளர்ந்த மனித வரிசைகளே சோசலிசத்தைத் தூக்கித் தூர எறிந்ததாகவும் பலரும் சொன்னார்கள். வயிற்றுப் பாடுகள் அடிப்படையான உணர்ச்சிகளை எழுப்பும் என்பது உண்மை என்றாலும், அரசியல் மாற்றத்துக்கு அது ஒன்று மட்டுமே போதாது. சித்தாந்த முகம் ஒன்றும் அதற்கு எப்போதும் தேவை. அதை வழங்கிய அமைப்பாக 1980 களில் தோன்றி வளர்ந்த ஒற்றுமைக்கும் வலிமைக்குமான இயக்கம்(Solidarity movement)இருந்துள்ளது. சுதந்திரத்தின் தேவை என்ற முழக்கத்தைச் சித்தாந்தமாக முன் வைத்துப் போராடியுள்ளது. நான் பணியாற்றிய வார்சா பல்கலைக் கழகத்தின் முன் செல்லும் அந்த நெடுஞ்சாலையில் தான் லெக்வலேசாபோன்றவர்கள் விடாப்பிடியாக ஊர்வலங்களையும் போராட்டங்களையும் நடத்தி மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
உடைக்கப்படாத பனிக்கட்டிகள் நிரம்பிய சாலைகளில் அவற்றை உடைத்து வழி ஏற்படுத்த முடியாமல் தவித்த- சோசலிசக் கட்டு மானத் தின் பேரால் அதிகாரத் தைக் குவித்துக் கொண்ட -அரசு துகள்களாக்கப் பெற்ற பனிக்கட்டிகளைப் போலச் சிதறிப்போய் இரண்டு பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. அன்று தொடங்கிய சோசலிச எதிர்ப்புப் பரப்புரை இன்று போலந்தின் எந்த இடத்திலும் சோசலிசத்தின் அடையாளம் எதுவும் இருந்துவிடக் கூடாது என்ற எல்லையைத் தாண்டி விட்டது. முன்னால் சோசலிச நாடான போலந்தில் இன்று சோசலிசக் கட்டுமானம் ஒரு கொடுங்கனவு. தூக்கத்திலும் வந்து விடக்கூடாத கொடுங்கனவு. அதன் வெளிப்பாடாகவே ஈரோ கோப்பைக் கால்பந்து விளையாட வந்த ரஷ்ய அணியையும் அதன் ஆதரவாளர்களையும் விளையாட்டு நடக்க இருந்த தேசிய மைதானத்துக்கு 600 அடிக்கு முன்னால் இருந்து தான் ரஷ்யாவின் சிவப்புக் கொடியுடன் செல்ல வேண்டும் என்ற நெருக்கடியை உண்டாக்கியது.
போலந்து உதாரணத்தின் வழி நான் சொல்ல நினைப்பது இதுதான். சரியோ! தவறோ! கடந்த காலத்தில் நாம் கடந்து வந்த பாதை தவறானது என முடிவு செய்து விட்டால், அதன் மீதான விமரிசனங்களையும் கண்டனங்களையும் முழுமையாகச் சொல்லி மக்களைத் தங்கள் பாதைக்குத் திருப்ப வேண்டியது மாற்றத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பணி. அதைச் செய்யாமல் பொருளாதார அடித்தளத்தை மாற்றி விட்டால் அதன் மேல் கட்டப்படும் அனைத்தும் மாறிவிடும் என நினைப்பது இடதுசாரிகளின் அடிப்படை அரசியல் அணுகுமுறை. இடதுசாரிகளின் கொள்கைகளின் மீதும், அணுகுமுறைகளின் மீதும் எதிர்ப்பு நிலையைக் கொண்டுள்ள மன்மோகன் சிங் இடதுசாரிகளின் அரசியல் அணுகுமுறையையே பின்பற்றுவது எப்படி சரியாக இருக்க முடியும்? 
மதிப்பிற்குரிய மன்மோகன்சிங் அவர்களே! இப்போதாவது சொல்லி விடுங்கள். நீங்கள் எந்தப் பாதையை ஆறாகக் கணிக்கிறீர்கள். எந்தப் பொருளாதார வழிமுறையைச் சேறாக நினைக்கிறீர்கள். உங்கள் வாயால் ஒருமுறை சொல்வது மட்டும் போதாது. பன்னாட்டு மூலதனத்திற்குத் திறப்புகளை உருவாக்கித் தாராளமயத்தையும் தனியார் மயத்தையும் அனுமதித்தால் உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கின் உடன் பயணியாக இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் சென்று விடும் என்ற நினைப்பை அவ்வப்போது உதிரி உதிரியாகச் சொல்லி விட்டு மௌனமாக இருந்து விட்டால் போதாது. அதற்குத் தகுந்தவாறு மக்களைத் தயார்படுத்தும் வேலையும் உங்களுடையதுதான். அந்தக் கடும் பணியை மேற்கொள்வதற்கு முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு பணியாக நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அது சிறிய பணியா? பெரும்பணியா? என்பது உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறேன். நீங்கள் நம்பும் பொருளாதாரக் கொள்கைகளையும் எண்ணங்களையும் உங்களோடு உறவு வைத்துக் கொள்ளும் அரசியல்வாதி களுக்காகவது விளக்கிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்பது தான் அந்தப் பணி. .
இந்தியாவை முதலாளித்துவ நாடாக ஆக்குவதற்கு முன்னால் இந்திய அரசியல்வாதிகளை முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றிக் காட்டுங்கள். அதுவே இந்தியாவுக்கு நீங்கள் செய்த பெரும் பங்களிப்பாக இருக்கும். ஏனென்றால் முதலாளித்துவ அரசியல்வாதி தனிநபர்களின் உரிமைகளையும் நாட்டின் சட்டங்களையும் ஓரளவு மதிக்க நினைப்பான். சட்டத்திற்குக் கிடைக்கும் மரியாதை அரசு அமைப்புகளின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும். இது எதுவும் இப்போது நடக்கவில்லை. ஏனென்றால் நீங்கள் இருக்கும் காங்கிரஸ் பேரியக்கமே முதலாளித்துவ அரசியலில் நம்பிக்கை கொண்ட கட்சியாக இல்லை. அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் மாநிலக் கட்சிகளோ 18 ஆம் நூற்றாண்டு நிலப்பிரபுக்களின் – ஜமீந்தார்களின் பிடியில் இருக்கும் அமைப்புகளாக இருக்கின்றன. தலைவருக்குப் பின்னால் தலைவரின் வாரிசைகளிடம் விசுவாசத்தைக் கொட்டும் தொண்டர்களால் நிரம்பித் தளும்பி நிற்கின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான சாதிய உணர்வையும் மத உணர்வையும், வட்டார உணர்வையும் தூண்டி விட்டு ஓட்டு வாங்கிவிட முடியும் என்பதில் அபாரமான நம்பிக்கை கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அரசியலில் கேட்கக் கூடிய தனிநபர் உரிமை, சட்டத்தின் ஆட்சி, அரசமைப்புகளைப் பலப்படுத்துவது, அடிப்படைச் சேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்ற சொல்லாடல்கள் எதுவும் எழுப்பப் படாமல் இனாம்களாலும், மானியங்களாலும், உணர்வுகளாலும் ஒன்றிணைக்கப்படும் கூட்டங்களை நோக்கிய கூப்பாடுகளே இங்கு அரசியலாக இருக்கிறது. மரியாதைக்குரிய மன்மோகன்சிங் அவர்களே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்வது இதுதான்: முதலாளித்துவ நாடாக இந்தியாவை ஆக்குவதற்கு முன் நிபந்தனையாக முதலாளித்துவ அரசியல்வாதிகள் நிரம்பிய அரசியல் களத்தை உருவாக்கிக் காட்டுங்கள்.

==============================================  நன்றி: உயிர்மை, ஆகஸ்டு

குகைமரவாசிகள் : திரும்பவும் முருகபூபதியின் அந்நிய எதிர்ப்பு நாடகம்

$
0
0
முருகபூபதியின் எல்லா நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு எப்படியோ கிடைத்து விடுகிறது. கவனிக்கபட வேண்டிய மாணவன் என்ற நிலையில் அவனது ஆசிரியராக நானே உருவாக்கிக் கொள்கிறேன் என்று கூடச் சொல்லலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் மீதான விமரிசனங்களைப் பொறுப்புடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அவன் தயாரித்த நாடகங்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதோடு நிறுத்திக் கொண்ட நான் தனித்த அடையாளம் கொண்ட நாடகக்காரனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு அவனது தயாரிப்புகள் அனைத்தையும் பார்வையாளர்கள் செலுத்தும் அக்கறையைத் தாண்டிய அக்கறையோடு சென்று பார்த்து வந்துள்ளேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. நான் வார்சாவில் இருந்த காலத்தில் மேடையேற்றிய குகை மரவாசிகள் என்னும் நிகழ்வை இரண்டாவது சுற்றில் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆகஸ்டு 31 இல் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நான் அதிகம் நடந்து திரிந்த மணிக்கூண்டின் அருகில் பார்த்தேன். அந்த இடம் என் வாழ்நாளில் இளம்பருவத்தில் மூன்று ஆண்டுகளைத் தின்ற இடம். மண்சாலையில் ஓரத்தில் அமைக்கப் பெற்ற சிமெண்ட் திண்டில் உட்கார்ந்து விடுதியிலிருந்து வகுப்புகளுக்கும் வகுப்புகளிலிருந்து விடுதிக்கும் செல்லும் முதுகலைப் படிக்கும் அக்காமார்களைப் பார்த்த நினைவுகளோடு திரும்பவும் அந்த இடத்தில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்தேன். நாடகம் தொடங்கியபின் என் கல்லூரிக்கால நினைவுகளைத் திருகித் தூர எறிந்துவிட்டு மேடைப் பரப்பை என்னை உள்ளிழுத்திக் கொண்டது.

முந்திய நாடகங்களில் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளின் நுழைவுக்கெதிரான கருத்துக்களை வைக்கும் பூபதி இந்நாடகத்திலும் நிறுவனங்களை நோக்கிச் சொல் வீசியிருக்கிறான். ஆனால் நிறுவனம் என்பதின் மீதான புரிதல் தெளிவாக இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், தொழில் மயம், சார்ந்த வளர்ச்சியால் கிராமத்தில் இருந்த விவசாயப் பொருட்கள் காணாமல் போய்விட்டது என்பதற்காக வருத்தப்படுவதில் நியாயங்கள் இருக்கலாம். விவசாயத்தோடு தொடர்பு கொண்டதாக இருந்த துணைத் தொழிலாளர்களின் இடப் பெயர்வும் அதே நிலையில் வைத்து எண்ணப் பட வேண்டியதா? என்பதை யோசிக்க வேண்டும். நவீனக் கருவிகளும் அறிவியல் தொழில் நுட்பமும் நுழைந்ததால் இந்திய விவசாயம் சீரழிந்தது என விமரிசனம் வைக்கும்போது நமது திட்டமிடல்களில் இருந்த குறைகளையும், பாரம்பரியத்தில் எவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய அறியாமையால் விட்டுத் தொலைத்த விவசாயிகளின் பங்கையும் பேசாமல் நிறுவனங்களை மட்டும் குறை சொல்வதில் அதிக அக்கறை காட்டுவது சரியாகத் தோன்றவில்லை. புதுவகை நிறுவனங்களில் மீது விமரிசனம் வைக்கும் போது பழைய நிறுவனங்களைப் பாராட்டும் மனநிலையில் சொற்கள் வந்து விழுகின்றன. சாதியமைப்பு என்னும் ஒடுக்கும் நிறுவனத்தை விமரிசனம் வைக்காமல் புதுவகை நிறுவனங்களையும் மாற்றங்களையும் எதிர்ப்பதன் அரசியல் ஏற்கத்தக்கதாக எனக்குப் படவில்லை. அப்படி எதிர்ப்புக் காட்டுவதை அதன் எல்லாப் பலன்களையும் அனுபவிக்கும் நடுத்தர வர்க்கம் கண்ணை முடிக் கொண்டு ஆதரிக்கவே செய்யும். ஆனால் ஆதரவு மேடை நிகழ்வோடு நின்று போகுமே ஒழிய வாழ்க்கையின் பின்பற்றுதலாக இருக்கப் போவதில்லை.

முருகபூபதியின் ஒரு நாடகத்தை விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சின்னக் கிராமத்தில் மிகக் குறைந்த வெளிச்சத்தில்  பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அந்த நாடகத்தின் பெயர் வனத்தாதியா? கூந்தல் நகரமா?என்பது இப்போது நினைவில் இல்லை. அதைப் பற்றி விமரிசனக் குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை. வலைப்பூ, முகநூல் போன்றன இல்லாத காலம் அது. பத்திரிகைகளின் மட்டுமே விமரிசனங்கள் எழுதியாக வேண்டிய நிலை. செல்வம் என்பவரால் அறிமுகம் செய்யப்பெற்ற குன்னாங் குன்னாங்குர் என்ற அமைப்பின் மூலம் சிறுபத்திரிகைக்காரர்களுக்கு அறிமுகமான கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்தது அந்த இடம். குன்னாங்குன்னாங்குர் ஏற்பாடு செய்த இருநாள் நிகழ்வுக்கான இலங்கையைச் சேர்ந்த நாடகக்காரர் இளைய பத்மநாபனோடு போயிருக்கிறேன் என்றாலும் தனியாகப் போகும்போது பேருந்துகளின் நேரத்தைக் கணக்கிட்டுப் பயணம் செய்வதில் இருந்த சிரமங்கள் அதிகம்.  திரும்ப வரும்போது திருநெல்வேலியில் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு இப்போது புரவலராக இருக்கும் ரமேஷ் ராஜாவின் காரில் நாட்டுப் புறவியல் துறையின் ஆசிரியரான தர்மராஜனோடு பூபதியின் நாடக அக்கறை பற்றிப் பேசிக் கொண்டே வந்தேன்.

அடுத்து அவன் நிகழ்த்திக் காட்டிய செம்மூதாய்நாடகத்தை தூத்துக்குடி மாவட்டக் கடலோரக் கிராமம் ஒன்றின் [தாடகைப் பெருநிலம், தங்கம்மாள்புரம் தேரிக்காடு விளாத்திகுளம்வட்டம், தூத்துக்குடி மாவட்டம், நாள்;02-01-05.] செம்மண் பரப்பில் பார்த்துப் பிரமித்தேன்.  பிரமிப்புக்குக் காரணம் ஓவியர் மு.நடேஷின் ஒளிக்கோலங்கள். அந்நாடகத்தைத் தயாரிக்க முருகபூபதி செய்த சாகசங்களைப் போல அந்த நாடகத்தைப் பார்க்க நான் ஒரு சாகசப் பயணம் மேற்கொண்டேன் . சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் படித்துக் கொண்டிருந்த ஒளிப்பட மாணவன் கண்ணனின் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம் வழியாகப் பயணத்தைத் தொடங்கினோம். வரும்போது பாஞ்சாலக் குறிச்சி,சீவலப்பேரி  வழியாக வந்தோம். சல்லிகள் பரப்பிய- சீரற்ற மண் சாலைகளிலும், பிய்ந்துபோன தார்ச்சாலைகளிலும் பிற்பகல் ஒருமணிக்குத் தொடங்கிய பயணம் நள்ளிரவு 12 மணிக்கு முடிந்தது. எந்த நேரத்திலும் பயணம் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற நிலை. நல்ல சாலைகளில் கம்மங்கருதுகள் விரிக்கப்பட்டு வழுக்கும் வாய்ப்புகள். என்றாலும் ஆபத்துகள் எதுவும் இல்லாமல் 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து விட்ட சாகசம் அது.
ஒரு மணிநேரம் நாற்பது நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட மிருகவிதூஷகம்நாடகத்தை, சென்னை எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்த்தேன்.அடுத்த நாடகத்தை நண்பர் கே ஏ குணசேகரனோடு இணைந்து பார்த்தேன். எனது வழிகாட்டுதலில் செய்யப் பெற்ற ஆய்வேட்டின் மீது பொது வாய்மொழித் தேர்வு நடத்த வந்த நண்பர் குணசேகரனோடு நாடகம் பார்ப்பதற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்திக் கொண்டு இருவரும் காரில் போய் மதுரைக் கல்லூரியின் காட்டுப் பகுதியில் இறங்கினோம். நாடகம் தொடங்கும் முன்பே இறங்கி விட்டதால் நண்பர்கள் பலரையு பார்த்து விட்டு நாடகத்தையும் பார்த்தோம். நாடகத்தின் பெயர்சூர்ப்பணங்கு.

திரும்பத் திரும்ப ஒரே நாடகத்தை பெயர் மாற்றி மேடை ஏற்றும் முருகபூபதியைப் பற்றிய எனது விமரிசனமும் ஏற்கெனவே எழுதியதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். எனவே முந்திய நாடகங்களுக்கு நான் எழுதிய விமரிசனங்களின் சில பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகிறேன். அதை மட்டும் வாசித்தாலும் போதும். இல்லையென்றால் இணைப்புகளில் சென்று முழுமையாகவும் வாசிக்கலாம். 

திரும்பத் திரும்ப ஒரே நாடகத்தை பெயர் மாற்றி மேடை ஏற்றும் முருகபூபதியைப் பற்றிய எனது விமரிசனமும் ஏற்கெனவே எழுதியதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். எனவே முந்திய நாடகங்களுக்கு நான் எழுதிய விமரிசனங்களின் சில பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகிறேன். அதை மட்டும் வாசித்தாலும் போதும். இல்லையென்றால் இணைப்புகளில் சென்று முழுமையாகவும் வாசிக்கலாம்.

பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களில் தனித்த அடையாளங் களை நிறுவியுள்ள வேலுசரவணன் குழந்தைகள் அரங்கிற் காகவும்,முருகபூபதி இனவரைவியல் அடையாளங்களோடு கூடிய சூழல் அரங்கிற்காகவும் தமிழ்நாட்டில் குறிப்பிடத் தக்கவர்களாக வலம் வருகின்றனர்.
பனிவாள் என்ற ஒருமணி நேர நாடகத்தைக் குழந்தைகள் நாடகமாக மேடையேற்றியுள்ள வேலுசரவணன் பிரதிகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அயல் தேசத்துச் சிறார்கதை களிலிருந்தும், வேடிக்கை மற்றும் விநோதக் கதைகளிலிருந்தும் நாடகவெளியை உருவாக்கிக் கொள்ளும் அவர் அந்த வெளி தரும் உணர்வையும் குதூகலத்தையும் சிறார்களுக்குத் தனது நிகழ்விப்பின் மூலம் கடத்துகிறார். குழந்தைகளின் உலகத்தைக் குதூகலம், கொண்டாட்டம், விநோதம், வேடிக்கை, பாசம், அன்பு ஆகியவற்றால் நிரப்பிக் காட்டும் வேலு சரவணன் திருப்புமுனைகளை உருவாக்கிக் காட்டுவதில் ஆர்வம் அற்றவர் என்பதையும் சொல்ல வேண்டும்.
முருகபூபதி இதற்கு மாறானவர். தொடர்ந்து பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருப்பு முனைகளை உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர். பார்வையாளர்களை நோக்கி நாடக நிகழ்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கைக்கு எதிராகத் தனது நாடகங்கள் நிகழும் கிராமம் மற்றும் காடுகளுக்குப் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என நினைப்பவர். அவரது நாடகங்கள் பெரும்பாலும் எதோவொரு கிராமத்தின் பின்னணியிலேயே ஒத்திகை பார்க்கப்பட்டு அங்கேயே நிகழ்த்தப்படுவதை நோக்கமாகக் கொண்டவை. அந்தக் கிராமத்தின் சூழல் மற்றும் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட மொழியையும் தனதாக்கிக் கொண்டவை. அந்த வகையில் முருகபூபதியின் நாடகங்கள் சூழலியல் அரங்கின் சாயல் கொண்டவை.சூழலியல் சார்ந்த அரசியல் குறியீடுகளைக் கொண்ட முருகபூபதியின் பிரதிகள் நிகழ்காலச் சூழலில் மொழிக் குறியீடுகளின் வழியாக நவீனத்தை முன் வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தன்னகத்தில் உள்ளடக்கிய பிரதிகள் என்றும் சொல்லலாம். விருதுநகர் மாவட்டம் தேரிக்காட்டில் நிகழ்த்தப் பெற்ற செம்மூதாய் நாடகம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
நவீன விவசாயம் என்ற பெயரில் தமிழகக் கிராமஙகள் சிதைக்கப்பட்ட சமீபத்திய வரலாற்றை நினைவுபடுத்தும் செம்மூதாய், ஆங்கிலேயர்களின் வரவால் நிகழ்ந்த அனைத்தையும் எதிர்நிலை மனத்துடன் விமரிசிக்கும் தொனியுடன் தீவிரமாக வெளிப்பட்டது.தேரிக்காட்டின் மண்ணையே நிகழிடமாகக் கொண்ட அந்த நாடகம் நிகழ்ந்து முடியும் போது நடிகர்களின் ஒப்பனையுடன் அந்த மண்ணும் கலந்து உருவாக்கும் உணர்வெழுச்சிகள் பார்வையாளர்களின் மனத்திற்குள் ஆழமாகப் பதிந்து விடும் என்பது இயக்குநர் முருகபூபதியின் எண்ணமாக இருந்தது.

நடிகர்களின் உடல்மொழியை அதிகபட்ச தொடர்புச் சாதனமாக ஆக்க வேண்டும் என்பதோடு, குறியீடுகளின் வழியாகவும், மேடைப்படிமங்களின் வழியாகவும் பார்வையாளர்களுக்கு உணர்த்த விரும்பும் கருத்தை, நாடகத்தின் மையச் செய்தியாக ஆக்கி வருவது அவரது தனித்தன்மை. இந்தக் கூறுகளை அவரது முந்திய நாடகங்களான வனத்தாதி, கூந்தல் நகரம், செம்மூதாய் போன்றவற்றிலும் பார்க்கலாம். இப்போதைய மேடையேற்றமான மிருக விதூஷகம் அவற்றை இன்னும் அழுத்தமான நம்பிக்கையோடு செய்து பார்த்துப் பார்வையாளர்கள் முன் வைத்துள்ளது.

காலனியத்துக்குப் பிந்திய இந்தியா, பின்காலனியத்துக்குள் நுழைந்து தொழில் மயமாதலையும் நகர்மயமாதலையும் தாண்டி, பன்னாட்டுக் குழுமங்களின் பிடிக்குள் தனது பொருளாதாரக் கட்டமைப்பையும், மனிதர்களின் தனிவாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்துச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதன் வெளிப்பாடுகள் நகரவாசிகளுக்கு நேர்மறை விளைவுகளையும், கிராமவாசிகளுக்கு எதிர்மறை விளைவு களையும் தந்துள்ளன என்பதை அடியோட்டமாகத் தொட்டுக் காட்டும் மிருகவிதூஷகம், அழிக்கப்படும் கிராமத்தின் பழைய பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் விமரிசனங்களற்றுப் பாராட்டி அனைத்துக் கொள்ளும் ஆசையை முன் வைக்கிறது.

குற்றப் பரம்பரையினர் எனவும், மாறி வரும் நாகரிகத்திற்கு உகந்தவர்கள் அல்ல எனவும் முத்திரை குத்தப்பட்ட விளிம்புநிலை மனிதர்களான கழைக்கூத்தாடிகள், கோமாளிகள், குருவிக்காரர்கள், குறி சொல்லிகள், திருடர்கள், முதலான வாழ்க்கையை வாழும் நாடோடிகளின் வாழ்க்கைமுறை முற்ற முழுதாகக் காணாமல் போனதையும், அவர்களின் வாழ்வாதார வெளிகளான கிராமங்கள் சிதைக்கப்பட்டு விட்டதையும் சோகம் கப்பிய தொனியில் குறியீடுகளாகக் காட்டும் நாடகம், நகரவாசிகளின் நடுத்தர வர்க்கத்தின்- தற்போதைய சுயநல வாழ்க்கை முறையை எள்ளல் தொனியுடன் பேசுகிறது.

நிகழ்த்தப் பட்ட நாடகத்தில் ஒருமணி நேரத்தைக் காணாமல் போய்க் கொண்டிருக்கும் கிராமிய அடையாளங்களுக்கும்- சோகத்தின் வலிக்கும், பிந்திய நாற்பது நிமிடங்களை நகரவாசிகளை விமரிசிக்கும் எள்ளல் தொனிக்கும் ஒதுக்கிக் கொண்ட நாடகம், பார்வையாளர்களோடு உறவு கொள்ள எழுத்து மொழியின் பயன்பாட்டை விடவும் நடிகர்களின் உடல் மொழியையும், மேடைப்பொருட்கள் தரும் குறியீட்டு மொழிகளையுமே அதிகம் சார்ந்திருந்தது. கிழிக்கப்பட்ட துணிகளால் உருவாக்கப்பட்ட பழுப்புநிறப் படுதாக்கள், கால்நடைகள் மற்றும் மனித முகமூடிகள், கிராமப்புறத் தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள்,மூங்கில் நார்களால் உருவாக்கப்பட்ட கோழிக்கூண்டுகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்திச் சொல்ல வந்த செய்திகளை ஊகித்துக் கொள்ளத் தூண்டின.

மேடையேற்றும் அரங்கவெளி சார்ந்த பிடிவாதங்கள் வழியாகவும், உடல்களின் இணைவில் உருவாகும் காட்சி மொழியின் வழியாகவும் தான் பேச விரும்பும் பொருள் அல்லது கருத்து சார்ந்து தாக்கத்தை உண்டுபண்ண முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இவையே நாடகக் கலையின் முழுமை என அவர் கருதுவதாகவும் கொள்ளலாம். அதன் காரணமாகவே வாசிப்பின் வழியாக ஒரு நாடகப் பிரதி உருவாக்கும் குறைந்த பட்ச அர்த்தத் தளங்களை ஏற்படுத்தாத கவித்துவ மொழியில் தனது பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறார். உரையாடல் சார்ந்த நாடக எழுத்துக்கும் நாடகப் பிரதியின் கட்டுமானத்தை உருவாக்கும் முரண்நிலை வெளிப்படும் கட்டமைப்புக்கும் எதிரான வடிவத்தை முருகபூபதியின் நாடக எழுத்துக்கள் எப்போதும் கொண்டிருக்கின்றன. அதன்வழி அரங்கியலின் பிற கூறுகளை வன்மத்துடன் புறக்கணிக்கும் நோக்கம் அவற்றில் வெளிப்படுகின்றன.
இத்தகைய பிரதிகளை எழுதுபவர்கள் தங்கள் செயல்பாட்டில் இன்னொருவருக்குச் சம அளவிலான இடமளிக்கத் தயங்குபவர்கள் என நினைப்பதில் தவறில்லை. அவர்கள் எழுதும் நாடகத்தை அவர்கள் மட்டுமே இயக்கி மேடையேற்ற முடியும். கை தேர்ந்த நாடக இயக்குநர், எவ்வளவு முயன்றாலும் மேடையேற்றும் வாய்ப்புகளை மறுக்கும் இப்பிரதிகள் வாசிப்பனுபவத்தையும் தராது. இதே குறையை தமிழின் புகழ்பெற்ற இன்னொரு நாடகக்காரரான வ.ஆறுமுகத்தின் பிரதிகளும் கொண்டிருக்கின்றன என்பதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம். ஆறுமுகத்தின் பிரபலமான கருஞ்சுழிதொடங்கிக் கடைசியாக மேடையேற்றிய நடிகர்களுக்கு அனுமதியில்லைவரைத் தமிழ்நாட்டில் அவரால் மட்டுமே மேடையேற்றப்பட்டிருக்கின்றன. ஆறுமுகம் மேடைப் பொருட்களின் மேல் கொண்ட பற்றுடன்(Obsession)நாடகங்களை எழுதுகிறார் என்றால் பூபதி, வெளி சார்ந்த பிடிவாதத்துடன் (Obsession) நாடகப் பிரதிகளை உருவாக்குகிறார் என்பதுதான் முக்கியமான வேறுபாடு.
இருவரின் பிரதிகளிலும் அவர்கள் சொல்ல விரும்பும் பொருள் சார்ந்து குறியீடுகள் உருவாக்கப்பட்டு அவற்றின் தொகுப்புகள் குறுக்கும் நெடுக்குமாக கலைத்துப் போடப்படுகின்றன. அப்படிக் கலைத்துப் போடும்போது அக்குறியீடுகளின் கால, இடப் பொருத்தங்கள் மற்றும் முரணிலை சார்ந்த வைப்பு முறைகளின் தர்க்கம் எதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.பின்பற்றினால் பார்வையாளர்கள் நாடகப்பிரதிக்குள்ளும் மேடைக் காட்சிகளுக்குள்ளும் நுழையும் வாய்ப்புகள் ஏற்படும் என்பது மட்டுமே இங்கே கவனப்படுத்த வேண்டியது.


செம்மூதாய் நிகழ்வின் கருத்தியல் தளமும் வனத்தாதி, கூந்தல் நகரம், என்ற பெயர்களில் இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளின் கருத்தியல் தளம் ஏறத்தாழ ஒன்று தான்.கிராமமும் கிராமம்சார்ந்த வாழ்வியலின் மீதான பற்றுதலும் என்பது தான் அந்தக் கருத்தியல் தளம். நகரங்கள் வீங்கிப் பெருப்பதன் பின்னணியில் கிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன; அதற்குத் துணையாக இருக்கும் அறிவுவாதம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியன ஒதுக்கப்பட வேண்டியன என்னும்  கருத்தியல் தளத்திலிருந்து அரசியலைப் பேச முற்படுவது போலத் தோற்றமளிக்கின்றன இந்நிகழ்வுகள். சாராம்சமாக மேற்குலக எதிர்ப்பு அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும் அரசியல் தளத்தில் இயங்க விரும்பியுள்ளன எனக் கூறலாம். இப்படிச் சொல்வது கூட சில யூகங்களின் அடிப்படையில் தான்.ஏனென்றால் கிராமம், கிராமத்தின் அடையாளங்களாகக் காடுகள், மரங்கள்,பறவைகள்,பயிர்கள் என விரவிக் கிடக்கும் வார்த்தை மொழியும் இவைகளின் ஊடே வாழ்ந்து கொண்டிருப்பதாக- இருந்ததாக- சொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள், பற்றிய குறிப்புக்களும், காட்சி மொழியும் இடம் பெறுமளவுக்கு அதன் எதிர்வாகச் சொல்லப்படும் நகரங்களின் அடையாளங்களோ, ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடுகளோ நிகழ்வுகளில் அதிகம் இடம்பெற்றதில்லை என்பது தான் உண்மை.

முருகபூபதியின் இந்தக் கருத்தியல் தளம, கோணங்கியின் பிற்காலச் (உப்புக் கத்தியில் மறையும் சிறுகதைத் தொகுப்புக்குப் பிந்திய ) சிறுகதைகளிலும், பாழி, பிதிரா போன்ற நாவல்களிலும் வெளிப்பட்ட கருத்தியல் தளம்தான். இந்தக் கருத்தியல் தளம் மீதும்,வெளிப்பாட்டு முறை மீதும் பலருக்கு விமரிசனங்கள் இருக் கலாம். இன்றைய சூழலில் ஒரு கலைஞனின் முதல் பணியே தன் வாழிடத்தைத் தக்க வைப்பதுதான் என்றும், அந்த வாழிடத்தின் ஆதாரங்களைக் காவுகொள்ள முயலும் ஏகாதிபத்தியமும் அதன் முகவர்களும் அவை தரும் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கும் நகரவாசிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார்கள் எனவும் கூறி இந்நாடக நிகழ்வை வரவேற்கலாம். ஆனால் இதே நேரத்தில், இந்தியாவில் கல்வியைப் பரவலாக்கியது வௌ¢ளையர்களின் வரவுதான் என்ற அடிப்படையிலிருந்து விவாதங்களைக் கிளப்பி முற்ற முழுதாக எதிர்க்கப்பட வேண்டியதல்ல ஏகாதிபத்தியம் என்று ஒருவர் வாதிடவும் கூடும். சுய சாதி மக்களுக்கான நிறுவனங்களை நடத்திட விரும்பும் தேசிய முதலாளிகளுக்கெதிராக அடித்தள மக்களுக்கான திறப்புக்களை ஏற்படுத்தித் தருபவர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளே. எனவே பன்னாட்டு மூலதனத்தை வரவேற்பது என்பது தலித்துக்கள், மலைவாழ் மக்கள், பெண்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கான ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கான வழிமுறை எனக் கூறி சாதீய இந்தியாவின் வன்முறைக்கெதிராக பன்னாட்டு முதலாளித்துவத்தின் சுதந்திரத்தை ஒருவர் பரிந்துரை செய்யலாம். அந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்நாடகம் ஜனநாயகப் பரவலுக்கு எதிரான நாடகம். எனவே அத்தகைய பார்வையாளர்களோடு இந்த நிகழ்வுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.
சொந்த பூமிக்குத் திரும்புதல்-சொந்த அடையாளத்திற்கு-பழைய வாழ்முறைக்குத் திரும்புதல் என்பதில் உறுதி யான தொனியைக் கொண்டிருக்கிறது இந்த நாடகம். முருகபூபதிக்கும் அவரது சகோதரர் கோணங்கிக்கும் இருக்கும் அந்த உறுதியில்-நம்பிக்கையில்- நுழைய மற்றவர்கள் விரும்ப வேண்டியதில்லை; விட்டுவிடலாம்.
செம்மூதாய் தயாரிக்கப் பட்டுள்ள விதமும் நிகழ்த்தப்பட்ட விதமும் சிரத்தையின் வெளிப் பாடுகள் என்பதில் சந்தேக மில்லை. காடு களிலும் மரத்தின் அடியிலும் விலங்கு களைப் போலவும் பறவைகளைப் போலவும் தனது பிள்ளை களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அந்தக் காட்டோடும் இயற்கையோடும் இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் செம்மூதாய் தனது சந்ததிகள் காணாமல் போனதால் தவிக்கும் தவிப்பு உக்கிரமாக வெளிப் படுத்தப்பட்டது. நடிகர்களின் மெல்லசைவுகள் வழி இவை பார்வையாளர்களின் கண்ணுக்குள் செலுத்தப் பட்டது. அவர்கள் காணாமல் போனதில் இன்றைய ஏகாதிபத்தியங்கள் மட்டுமல்ல; இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்த வௌ¢ளை ஏகாதிபத்தியத்திற்கும்- அதன் குற்றப்பரம்பரைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கும்- பங்கிருந்தது எனக் கோடிகாட்டிவிட்டு , திரும்பவும் கிராமவாழ்வின் ஆதாரங்களை நோக்கிப் பயணம் செய்ய வேண்டியதின் தேவையைச் சொல்ல வருகிறது செம்மூதாய். இத்தகைய அனுமானத்துக்கு வருவதற்கு உதவுவதாக இருக்கும் காட்சிகளும் மொழிக்கோர்வைகளும் நிகழ்வு முழுவதும் தொடர்ந்து கிடைக்கின்றன எனச் சொல்வதற்கில்லை. வார்த்தைகளற்ற முன்பாதி நிகழ்வுகளைப் பொறுமை யாகக் கவனித்துக் கொண்டு வரும் பார்வையாளனுக்குப் பின்பாதியில் விரியும் காட்சிப் படிமங்களும் மனிதர்களை எண்ணால் அழைக்கும்- எண்களால் அடையாளப்படுத்தப்படும் போது உருவாக்கப்படும் இடம் சிறைகள் என்பது உறுதியாவதன் மூலம் -வார்த்தைகளும் சேர்ந்து ஓரளவு தெளிவான சித்திரம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. மேற்கின் மீது விமரிசனம் வைக்கும் இந்நாடகம் மேற்குலகம் கற்றுத்தந்த அரங்க மொழி களையும் (வார்த்தை, உடல் , காட்சி மொழிகளையும் ) அரங்கியல் தொழில் நுட்பங்களையும் (நவீன விளக்குகள், நவீன ஒலி அமைப்புக்கருவிகள்) ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பது ஒரு விநோத முரண். இத்தகைய விநோத முரணைப் பாரம்பரியத்திற்குத் திரும்புதல் பற்றிப் பேசும் எல்லோரிடமும் காண முடிகிறது. முருகபூபதியும் விலக்கல்ல.




2


காலத்தின் எழுத்தாளன்

$
0
0
இமையத்தின் பெத்தவன் கதை அண்மையில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது . தெலுங்கு- தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பில்  பெத்தவன் கதை முப்பது பக்கங்களில் (464-493) மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்த்துள்ளவர் புருஷோத்தம தாஸ். 20 கதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் பெத்தவன் கதை இடம் பெற்றுள்ளதும், திருப்பதி பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திற்கு ஏற்றுக் கொண்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.  தமிழ் நாட்டில் இதுபோல ஒரு பல்கலைக்கழகத்தில் உடனடியாகப் பாடமாக ஆகும் சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

இமையத்தின் பெரும்பாலான சிறுகதைகளுக்கு முதல் வாசகனாக இருந்திருக்கிறேன். பத்திரிகை வருவதற்கு முன்பே இந்த மாதம் அல்லது இந்த வாரம் இந்தக் கதை வருகிறது எனத் தொலைபேசியில் சொன்னவுடன் வாங்கிப் படித்துவிட்டு இமையத்தோடு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவன். வார்சாவில் இருந்தபோதும் அவருடன் தொலைபேசியில் பேசுவோம் என்றாலும் கதைகளை உடனடியாக வாசிக்க முடிந்ததில்லை. அச்சிட்ட இதழ்கள் அங்கு வந்து  சேர்வதில் இருந்த தாமதம் காரணமாக அவரது அண்மைக் கதைகளை உடனடியாக வாசிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பெத்தவன் கதை மட்டும் விதிவிலக்கு.
தமிழின் முக்கியமான இதழ்கள் அதன் அளவு கருதி அச்சுக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் என்னோடு தொலைபேசியில் பேசிய இமையம் அந்தக் கதையைப் பற்றிச் சொன்னார். அதனால் இணையம் வழியாகப் பெற்று அச்சுக்கு வருவதற்கு முன்பே அந்தக் கதையை படித்துவிட்டு உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரனோடு அந்தக் கதையைப் பற்றி உரையாடினேன். தமிழின் மிக முக்கியமான கதையாக இருக்கப் போகிறது என்று நான் சொன்னதற்காக அவர் அச்சிட்டார் என்று சொல்ல முடியாது. நல்ல கதைகளைக் கண்டறிந்து வெளியிடுவதில் அவருக்கு இருக்கும் தேர்ச்சி விளக்கிச் சொல்ல முடியாதது. ஒரேயொரு கதைக்காகக் கூட ஓர் உயிர்மையை ஒதுக்கித் தரும் தைரியமும் எழுத்து மற்றும் எழுத்தாளன் மீது அக்கறையும் கொண்டவர் மனுஷ்யபுத்திரன் என்பது எனக்குத் தெரியும். நான் உரையாடிய அடுத்த மாதம் உயிர்மையில் அந்த நெடுங்கதை அச்சாகியது
பெத்தவன் கதை உயிர்மையில் அச்சாகி சரியாக ஓராண்டு (செப்டம்பர் 2012) ஆகி விட்டது. அச்சான உடனே ஒரு வாசகர் கடிதம் எழுதினேன். ஒரு சிறுகதைக்காக அதுவரை நான் வாசகர் கடிதம் எழுதியதில்லை. பெத்தவன் கதை தான் என்னை முதன் முதலில் எழுதத் தூண்டியது. கதையைப் பற்றிப் பேசுவதோடு அந்தக் கதையை அச்சிட்ட உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரனைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையும் அந்த வாசகர் கடிதத்தின் பின்னால் இருந்தது. கடிதத்திற்கு நான் தந்த தலைப்பு இமையம் : என் காலத்தின் எழுத்தாளன் என்பது.

பெத்தவன் சிறுகதை அச்சாகி ஓராண்டுக்குள் பெற்றுள்ள கவனம் போல வேறொரு கதை பெற்றதில்லை என்று நிச்சயமாகச் சொல்வேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன். இதுவரை சில ஆயிரம் கதைகளை வாசித்தவன் என்ற நிலையில் சொல்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகளின் மீது உண்டாக்கிய சலனங்களைச் சிலசில விமரிசனச் சொல்லாடல்களாக வாசித்தவன். அவரது அக்கினிப் பிரவேசம் கதையையொட்டி எழுந்த சர்ச்சைகளும் எதிர்வினைகளும் அலையெனப் பரவிய காலம் இப்போது நினைவுக்கு வருகிறது. எழுதப் பெற்ற பத்திரிகையிலோ, விமரிசனங்களை முன் வைக்கும் இதழ்களிலோ இக்கதையைப் பற்றி அதிகம் எழுதவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தக் கதை வாசிக்கப் பட வேண்டிய கதை என்றும் விவாதிக்கப்பட வேண்டிய கதை என்றும் பலரும் பரிந்துரை செய்துள்ளதைப் பார்க்கிறேன். இணையத்தில் இந்தக் கதை இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறது.
எழுத்து சார்ந்த சர்ச்சைகளை எழுப்பவில்லை என்பதற்காகச் சலனம் அற்ற எழுத்து எனச் சொல்லி விட முடியாது. எழுத்து உலகத்தைத் தாண்டி ஒரு கதை செயல் தளத்தில் விளைவுகளை ஏற்படுத்த  முடியும் என்பதற்கான உதாரணக் கதையாக மாறி இருக்கிறது. இந்திய சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் சிக்கலாகவும் நிறுவனமாகவும் அழிவிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் திரும்பத் திரும்பப் பலத்தோடு எழும்பி நிற்கும் ஒன்றாக இருப்பது சாதி.. சாதியின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுரைகளாக எழுதி விவாதித்து விடுவது மிகச் சுலபமானது. அதைக் கதையாக - கலை நேர்த்தி கொண்ட கதையாக ஆக்கியுள்ள சிறப்பு இமையத்துக்கு கூடி வந்திருக்கிறது. சாதியின் இருப்பை அதன் உள்ளார்ந்த கவனத்துடன் , சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்திற்கான அழகியல் கெடாமல், மிக எளிமையான மொழியில் பாத்திரங்களின் உயிரோட்டத்தைத் தக்க வைக்கும் உரையாடல்களால் நகர்த்திக் காட்டிய அற்புதம் அந்தக் கதைக்குள் இருக்கிறது.
ஒரு சிறுகதை அதன் வாசகருக்கு தரும் உணர்வுகளும் தாக்கமும் உடனடியாகக் கணிக்கக் கூடியன அல்ல. ஆனால் இந்தக் பெத்தவன் கதை முன் வைத்த கௌரவக் கொலைகள் என்னும் சமூக நிகழ்வின் பின்னணியில் செயல்படும் சாதி ஆதிக்கக் கருத்தியலும், நிகழ்கால அரசியலில் தட்டி எழுப்பப் படும் ஜனநாயக விரோத மனோபாவமும் பேசுபொருளாக மாற்றப்பட்ட விதம் மூலம் முக்கியமான கதையாக மாறிக் கொண்டது பெத்தவன் கதை. உயிர்மையில் அச்சான பின் தனிக்கதையாக அச்சிடப் பெற்று இந்த ஒரு வருடத்திற்குள் 25000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது.  அந்தக் கதையை வாசித்த பண்பாட்டு இயக்கங்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாகத் தனியே அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டும் என நினைத்ததே அந்தக் கதையின் காத்திரத்தை உணர்த்தியது. அத்தோடு கலை இலக்கியத் துறையில் செயல்படும் அமைப்புகளின் பொறுப்புணர்வையும் வெளிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கம் முன்னெடுத்த அந்த நிகழ்வை அதன் சார்புப் பதிப்பகமான பாரதி புத்தகாலயம் தீவிரப்படுத்தியுள்ளது.
பெத்தவன் கதை இவ்வளவு கவனம் பெற்றதற்கு அந்தக் கதைக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வொன்றும் காரணம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். கொலையா? தற்கொலையா? என்ற விவாதத்தை உண்டாக்கிய இளவரசனின் மரணத்தின் முன் நிகழ்ந்த நிகழ்வுகள் கடந்த ஆறு மாதத்தில் தமிழக ஊடகங்களின் கவனத்திற்குரியனவாக இருந்தன.  இளவரசனைக் காதலித்த திவ்யா என்ற பெண்ணின் தந்தையின் தற்கொலை, அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி முன் வைத்த நாடகக் காதல்என்னும் கருத்துரு. அதன் தொடர்ச்சியாகத் தர்மபுரி மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டது எனத் தொடர் நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. இவை எல்லாம் நிகழ்வுகளாக நடப்பதற்கு முன்பே இமையத்தின் பெத்தவன் கதையில் எழுத்தாக மாறியிருந்தது என்பதுதான் ஆச்சரியம். இமையத்திடம் கேட்டால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. எல்லாம் தமிழ்நாட்டுக் கிராமங்களில்- குறிப்பாக வட தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவை தான் எனச் சொல்லுவார். இளவரசன் -திவ்யா காதலில் முதல் மரணம் திவ்யாவின் தந்தையின் தற்கொலை. பெண்பிள்ளையை பெத்தவன் அவர் தான்.
இமையத்தின் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அவரது எழுத்தின் பாணி. தன்னைச் சுற்றி  நடப்பனவற்றை – அதன் சாரமான முரண்பாடுகளோடும் காரணங்களோடும் கதையாக மாற்றும் பாணி. மனிதர்களின் பேச்சு மொழியைப் பயன்படுத்துவதில் இருக்கும் லாவகமும் இயல்பும் அவரது கதைகளுக்கு நவீனபாணியை உருவாக்காமல் நம்பகத் தன்மையை ஊருவாக்கித் தருகிறது. அதற்காக நம் காலத்துக் கதைகளை எழுதாமல் கடந்த காலத்தின் மீது ஏக்கம் கொண்ட மனத்தோடு கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் மண்வாசனை எழுத்தாளர்களின் பட்டியலில் அவரைச் சேர்த்து விட முடியாது. நவீனத்துவ வாழ்க்கை முறை, பாரம்பரியமான தமிழ் வாழ்வின் மீது செலுத்தும் காத்திரமான தாக்குதலை எளிய மொழியின் வழியாகச் சொல்லும் எழுத்தாளனாக இமையம் தொடர்ந்து வெற்றி பெற்றிக் கொண்டிருக்கிறார். அதைச் செய்ய முடியாமல் நவீனத்துவ எழுத்தாளர்கள் இருண்மையான மொழிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாவனைகளை முன் வைக்கும் மொழியின் வழியாக வெற்றுப் பதிவுகளைச் செய்யும் இலக்கியப் போக்கிற்கு மாற்றாகக் காத்திரமான நம்பகத்தன்மையின் மேல் கட்டப்படும் கதைத் தளம் எப்போதும் வாசகர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை. அதைத் தான் இமையம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் இமையம்.
இந்தக் குறிப்போடு பெத்தவன் கதை அச்சானவுடன் உயிர்மைக்கு அனுப்பிய வாசகர் கடிதத்தையும் இங்கே தருகிறேன். அப்போது வாசிக்காதவர்கள் இப்போது வாசித்துப் பார்க்கலாம்.
இமையம்: என் காலத்தின் எழுத்தாளன்
இமையத்தின் பெத்தவன்கதையை செப்டம்பர் மாத உயிர்மையில் வெளியிட்டதற்காகப் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். காலனிய ஆட்சிக்குப் பின் நாம் வரித்துக் கொண்ட ஜனநாயகமும், அதன் தத்துவப் பின்புலமாக இருக்கின்ற அறிவொளிக்கால மனநிலையும், அவற்றை இந்திய ஜன சமூகத்திற்குக் கற்றுத் தந்து பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என நம்பப்பட்ட மேற்கத்திய கல்வி முறையும் தொடர்ந்து அடைந்து கொண்டிருக்கும் தோல்வியின் வெளிப்பாடாக இந்தக் கதையை நான் வாசித்தேன். நமது இளம் யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தரப்படும் கல்வி, ஆண்- பெண் உறவு என்பதும், அதன் வழியாக உருவாக்கப்படும் குடும்ப வாழ்க்கை என்பதும் இரு மனங்கள் சார்ந்தது என்று சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்/ இந்திய வாழ்க்கையோ குடும்பத்தை உருவாக்குவதில் சாதி சார்ந்த அகமண முறை மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்பதை விடாப்பிடியாகவும் வன்முறையோடும் நிறுவிக் கொண்டே இருக்கிறது. சாதியின் பெயரால் தடுக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் நமது ஜனநாயகத்தின் முக்கிய அமைப்புகளான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தான். வெளியில் ஜனநாயக வேசம் போட்டுக் கொண்டுக் கிராமங்களில் ”ரத்த உறவுகள், சொந்த பந்தங்கள்” எனச் சொல்லி சாதி அரசியல் செய்கிறார்கள். இவர்களால்- இவர்களின் பிரதிநிதிகளால்-அளிக்கப்படும் தண்டனைகளின் பேரில் தான் சாதிமீறிய இளையவர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கு நமது ஊடகங்கள் கௌரவக் கொலைகள்என்று பெயர் தந்து கௌரவம் செய்கின்றன.
இந்தக் கொலைகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆதிக்க சாதி ஆண்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதி ஆணை விரும்பி விட்டால் கொதித்துப் போய் விடுகிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தரும் நெருக்கடியின் வழியாகச் சாதி தர்மம் காக்கப் பஞ்சாயத்து எனும் வேள்விக்குண்டங்களில் இறக்கித் தீக்குளிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து தமிழ்ச் சமூகம் சாதியச் சமூகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது; அதை மீற நினைப்பவர்களுக்கு அதன் கட்டமைப்பு வழங்கும் தண்டனை மிகக் குரூரமானது. வெளிப்படையாக நான் விளக்கிச் சொல்லும் நிகழ்காலத் தமிழ்ச் சமூக நடைமுறையை இமையத்தின் கை இந்தக் கதை மூலம் சிறுகதைக்கலையின் நுட்பங்களோடு வாசிக்கத் தந்திருக்கிறது. 
தன் பார்வைக்குள் படும் வட தமிழ் நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கையின் பகுதியாகவே தன் கதை வெளிகளையும் பாத்திரங்களையும் தெரிவு செய்யும் இமையம்அந்தக் கதைகள் எழுப்பும் பிரச்சினைகளை அந்தப் பகுதிகளுக்கு உரியதாக மட்டும் வைத்திருப்பதில்லை என்பது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே இமையத்தின் கதைகள் வட்டார மொழியில் எழுதப்பட்ட போதும் வட்டார எழுத்து என்ற அடையாளத்தைத் தகர்த்து இந்திய எழுத்தாகவும் உலக எழுத்தாகவும் கவனம் பெற வேண்டியனவாக இருக்கின்றன. நிலவும் வேறுபாடுகள் சார்ந்து ஒடுக்கப் படுகிறவர்களின் துயரத்தை எழுதும் படைப்பாளிகள் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் இது. பொதுவாகப் புனைகதைகள் நிகழ்காலத்தின் இருப்பை உரசிச் செல்வனவாக இருக்க வேண்டும். அதிலும் நாவலை விடச் சிறுகதைகள் அவை எழுதப்படும் காலத்தின் தத்தளிப்பைத் தடவிப் பார்க்காமல் சென்று விட்டால் அவை நம் காலத்து இலக்கியம் என்ற அர்த்தத்தை இழந்து விடும். இந்த அளவுகோலோடு வாசிக்கும் போது நம் காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கதைகள் சமகாலத் தன்மையைத் தவறவிட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட முடியும். நாவலில் கூட அதன் கால விரிவு கருதி பழைய காலத்திற்குள் பயணிக்கச் சாத்தியங்கள் உண்டு. ஆனால் சிறுகதைகள் அப்படி இருக்க முடியாது என நினைக்கிறேன். வரலாறு மற்றும் புராண காலப் பாத்திரங்கள் வழியாகக் கூட நம் காலத்தின் மனநிலையை உரசும்போதுதான் அவை சமகால இலக்கியமாக ஆக முடியும்.
இமையத்தின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் பெத்தவன்என்ற இந்தக் கதையை இமையத்தின் மிக முக்கியமான சமகாலக் கதையாக நினைக்கிறேன். நமது காலத்தின் –சமூகத்தின்- பெருநெருப்பு ஒன்றின் ஜ்வாலையைத் திறந்து காட்டிய இந்தக்  கதையைப் போலவே நம் காலத்தின் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை அவரது அண்மைக் காலக் கதைகளில் வாசித்திருக்கிறேன். உலகமயப் பொருளாதாரத்தின் வரவுக்குப் பின்னால் நமது கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று நிலமிழப்பு.கைவிரல் எண்ணிக்கைக் கணக்கில் ஒன்றிரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் தங்கள் நிலங்களை விவசாயமல்லாத வேறு காரியங்களுக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் எனது நேரடி அனுபவம் இது. ஆனால் வேதனையையும் வலியையும் மறைத்துக் கொண்டு விடாப்பிடியாக நிலத்தை விற்க மறுக்கும் இரண்டு மனிதர்களை தனது வெவ்வேறு கதைகளில் எழுதிக் காட்டியிருக்கிறார் இமையம்.
அந்த இருவருமே வயதானவர்கள். தங்களின் தேவை அன்றாட உணவு மட்டுமே என நினைக்கும் பழைய மதிப்பீட்டு மனிதர்கள். பணம் முக்கியமில்லை; எனக்குத் தேவையான வரகுச் சோறைத் தரும் இந்த நிலம் தான் எனக்கு முக்கியம் என நினைக்கும் தங்கம்மாளைத் தனது சோறுபணம்கதையில் சந்திக்க வைத்தார். அவளை ஒத்து இன்னொரு வயதானவரை உயிர்நாடிகதையில் எழுதிக் காட்டியிருந்தார் (இந்தக் கதை சுஜாதா 2008 தொகுத்த டைம்ஸ் இன்றுதொகுப்பில் இடம் பெற்றதாக நினைவு). உலக மயத்தின் வரவால் ஊதிப் பருத்துக்  கொண்டிருக்கும் ரியல் எஸ்டே தொழிலைப் போலவே நகரங்களில் மானாங்கண்ணியாக வலைய வரும் ஒரு வர்க்கமாக இருப்பவர்கள் தகவல் தொழில் நுட்பக் கூலிகள் (ஐ.டி). முகமறியாத மனிதர்களால் முகம் பார்க்காமலேயே தேர்வு செய்யப்படும் கூலிகளாக மாறும் இளையவர்கள் எதைப் பெறுகிறார்கள்; எதை இழக்கிறார்கள் என்பதைச் சொல்லும் இரண்டு கதைகளை –வேலை, ஃபேமிலி– எழுதி வாசகர்களுக்குத் தந்துள்ள இமையம் என் காலத்தின் எழுத்தாளராக ஆகிக் கொண்டிருக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் கதைகளை எழுதிய இமையத்தின் கைகள் இன்னும் இதுபோன்றே என் கால – அவர்கால- கதைகளையே எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன்.




ஆண்மை அடங்கட்டும்

$
0
0

தினசரிக் காட்சி என்று சொல்ல முடியாது. எனது பணி இடத்துக்குச் செல்லும் வாகனத்தைத் தவற விடாமல் பிடித்து விடும் நோக்கத்தோடு சரியான நேரத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் காணும் காட்சி என்று சொல்லலாம்.

நான் பயணம் செய்யும் வாகனத்தைப் பிடிக்கக் குறைந்தது 5 நிமிடம் முன்னதாகவே வந்து விடும் வழக்கம் எனக்கு. ஆனால் அவர் அப்படி இல்லை. நான் வாகனத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் என் முன்னால் தான் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவார். அதன் நிறுத்தியைச் சரி செய்து தூக்கி நிறுத்திச் சாவியைத் திருகி அதன் எஞ்சினைக் கூட நிறுத்த மாட்டார். வண்டி உறுமிக் கொண்டே இருக்கும். அவருக்குப் பின்னால் அமர்ந்து வரும் பெண்ணிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு இறங்கிக் கொள்வார். அந்தப் பெண் வண்டியைக் கிளப்பி நகர்வதையோ வேகம் எடுத்து முன்னேறி திருப்பத்தில் மறைவதையோ பொருட்படுத்திப் பார்க்கவே மாட்டார். அதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை என்பது என் கணக்கு.

அநேகமாக இறங்கிய அடுத்த நிமிடம் அவர் ஏற வேண்டிய பேருந்து வந்து நிற்கும். உடனே ஏறி விடுவார். அல்லது அவர் வருகிறார் என்பதைத் தூரத்திலேயே பார்த்துவிட்டு ஓட்டுநர் காத்திருப்பார் போலும். அவர் ஏறியவுடன் பேருந்து கிளம்பி விடும். ஏறுபவர் ஓரத்து இருக்கை தேடி அமர்ந்து வெளியில் பார்ப்பார். தன்னிடம் ஒப்படைத்த வாகனத்தைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் அதுவரை காத்திருக்கவும் மாட்டாள். தன் வசம் வந்த வாகனத்தை நிதானமாக முன் நகர்த்திப் பின் வேகம் பிடித்து முன்னேறி விடுவாள். அலாதியான லாவகத்துடன் முன் நகர்த்திச் செல்லும் அந்தப் பெண் சாலையின் திருப்பத்தில் திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். இருசக்கர வாகனத்தைச் செலுத்தும் அவளது லாவகமும் கவனமும் என்னிடம் இல்லை என்பதால் கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக் கொண்டு நிற்பேன்.

வீட்டிலிருந்து கிளம்பும் வாகனத்தில் இந்தப் பேருந்து நிறுத்தம் வரை அவள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, வாகனத்தை ஓட்டும் இடத்தில் அவர் அமர்ந்து ஓட்டி வருவார். தன்னை ஏற்றிச் செல்லும் பேருந்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற நினைப்புடன் வண்டியை ஓட்டி வரும் பதற்றம் அவர் வண்டியை நிறுத்தும்போது வெளிப்படும். சில நேரங்களில் பின்னிருக்கையில் இருக்கும் பெண் வாகனத்தின் கைப்பிடியைப் பற்றிக் கொள்வதற்குள் நடக்கத் தொடங்கிப் பின் நிதானமாகி ஒரு முறைப்புடன் ஒப்படைத்து விட்டுப் போவார்.

பல தடவை பார்த்த இந்தக் காட்சி தான் இது. ஆனால் இன்று தான் இந்தக் கேள்வியை உருவாக்கியது. இருசக்கர வாகனத்தை இவ்வளவு லாவகமாக ஓட்டும் அந்தப் பெண்ணிடம் வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தான் பின்னிருக்கையில் அமர்ந்து வரலாமே என்று எப்போதாவது யோசித்திருப்பாரா? என்ற கேள்வி தான் அது.  நீயே வீட்டிலிருந்து ஓட்டி வா; நான் உன் பின்னால் உட்கார்ந்து வருகிறேன் என்று சொல்லி வண்டியை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்தால் அவருக்கு ஏற்படும் பதற்றமும் படபடப்பும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தப் பெண் ஓட்டி வந்தாள் இவரை இன்னும் சற்று முன்னதாகவே அந்த நிறுத்தத்தில் சேர்த்து விடும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. நிதானமும் வேகமும் அவளது லாவகத்தில் வெளிப்படுவதை ஒவ்வொரு நாளும் பார்த்ததிலிருந்து சொல்கிறேன்.

தன் வீட்டிலிருந்து கிளம்பும்போது தானே வண்டியைக் கிளப்ப வேண்டும்; தன் பின்னால் தான் தன் மனைவி உட்கார்ந்து வர வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது எது? உண்டாக்கப் பெற்ற அந்த எண்ணத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொடரச் செய்வது எது?  ஆணின் அடையாளம் முன்னால் இருப்பது என்ற நிலைபாடாகத் தான் இருக்கும். நடந்து சென்றால் கூட ஆண் முன்னால் நடக்க, பெண்கள் அவர்களைத் தொடர்ந்து வர வேண்டும் என்று வலியுறுத்தும் நமது மரபான பழக்கம். கடையம் வீதியில் செல்லம்மாளை முன்னே நடக்கச் சொல்லித் தான் பின்னே நடப்பதும், சில நேரங்களில் அவள் தோள்மீது கைபோட்டு நடந்து செல்வதுமாக மாற்றிக் காட்டிய பாரதி நினைவுக்கு வருகிறான்.

மரபான பழக்க வழக் கங்கள் ஆண்களை முதன்மைப் படுத்து வதாகத் தோன்றலாம். முதன்மைப் படுத்தப் படும்போது ஆண்களின் சுமை கூடுகிறது என்பது ஏன் இந்த ஆண்களுக்குப் புரிவதில்லை. எல்லாச் சுமைகளையும் தன் தோளில் சுமக்கும்போது அவர்களின் உடல் நலம் கெட்டுப் போகும் என்பது கூடவா தெரியாது. நாளை பேருந்து நிறுத்தத்தில் அந்த நபர் என் முன்னே இறங்கும்போது தோளில் கைபோட்டு நிறுத்தி இந்த யோசனையைச் சொல்லிப் பார்க்க வேண்டும். ”வீட்டிலிருந்தே உங்கள் மனைவியை  வாகன ஓட்டியாக முன்னிடத்தில் உட்கார வைத்துப் பின்னிருக்கையில் அமர்ந்து வருவதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்” என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சமும் இருக்கிறது.

அவருக்கு மட்டுமல்ல. அந்தப் பெண்ணுக்கும் சொல்வதற்கு ஒரு செய்தி என்னிடம் இருக்கிறது. அவரிடமிருந்து வாகனத்தைப் பெற்றுக் கொண்ட உடனே கிளம்பாமல் நின்று ஒரு புன்முறுவலோடு கைகாட்டி அனுப்பினால் அவர் முகம் மலர்ச்சி அடையக்கூடும். அந்த எதிர்பார்ப்போடு தான் பேருந்தின் ஓரத்து இருக்கையில் அமர்ந்து சாலையைப் பார்ப்பார். அந்தக் கையசைப்பும் புன்னகையும் அவரது தினசரிப் பணிகளை அயர்வில்லாமல் நடத்துவதற்கு உதவக் கூடும்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதோடு புன்னகைகளையும் பரிமாறிக் கொள்ள முடியும் என்றால் களைப்பும் அயர்வும் குறையும் என்பது அனுபவசாலிகளின் நம்பிக்கை. கணவனுக்கு மனைவியின் புன்னகை அல்லது மனைவிக்குக் கணவனின் புன்னகை என்றில்லை. ஒரு பெண்ணுக்கு அவளைத் தெரிந்த ஒரு ஆடவனின் புன்னகையும் விசாரிப்புகளும் தருகின்ற ஆறுதலுக்குச் சற்றும் குறைந்ததல்ல தெரிந்த பெண்களின் புன்னகையும் விசாரிப்புகளும்.

அவர்களுக்கு இந்தச் செய்தியை நேர்க்கூற்றாகச் சொல்ல முடியாமல் போகலாம். அதனால் என்ன? அவர்கள் மட்டுமா இப்படி இருக்கிறார்கள். நம்மில் பலரும் அப்படித் தானே இருக்கிறோம். அதனால் தான் அந்தச் செய்திகளைப் பொதுவில் வைக்கிறேன். ஆண்மை அடங்கட்டும்.


நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்

$
0
0

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும் கொடுமையானதாக சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்காக பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப் படுகின்றன. ஒரு விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான், பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்”  என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விருதுபெற்ற ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “ அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால் அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக , யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.

விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார். 

என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அடுத்து பேராசிரியர் அ.ராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப் போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனைவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது. அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப் பாராட்டவேண்டும். எனக்கு தலித் பிரச்சனை குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும் ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச் செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”   
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர் கல்வியை அவர்  சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம் ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர். அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம் பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும் வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான் நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான் என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.”   
”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.அவற்றை எதிர்த்து அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில் அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில் படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன் கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்கவேண்டும்’. அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும் வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.”
“நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத் துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுப்பார்கள்?”
“ இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்படவேண்டுமென்றால் கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப் புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம் போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று வசந்திதேவி பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர் இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர்  கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். 

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது
நிகரி சமத்துவ ஆசிரியர் விருது
இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது. 

அம்பேத்கர்,  தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் குறிப்  பிட்டிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் இளையபெருமாள் காலத்திலிருந்ததைப்போலவே சமத்துவமற்ற நிலை இன்றும் தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால்  அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நிலவவில்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இது களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு
(National Advisory Council - NAC)  ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.ஆனால் அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
பள்ளிகளில் மட்டுமின்றி உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவ்வாறு இடையூறுகளுக்கு உள்ளான தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அறிவோம்.

இத்தகைய பாகுபாடுகளைப் போக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆங்காங்கே எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் இந்த நிலையை எதிர்த்துத் தம்மால் இயன்ற வழிகளில் போராடிவருகின்றனர். தலித் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். சந்தடியில்லாமல் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும்தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.
இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். 
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதற்கான விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
ரவிக்குமார்

பாண்டிச்சேரித் தொடர்பு

$
0
0

எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்"எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடுஇந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கும் ரவிக்குமாருக்கும் இடையேயுள்ள நட்பின் காலம் கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கால் நூற்றாண்டுக் கணக்கு கூட நேர்ச் சந்திப்பின் அடிப்படையில் சொல்லப்படும் கணக்குதான். பார்த்துக் கொள்ளாமலேயே நட்பாய் இருந்த காலத்தையும் கணக்கிட்டால் கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டது என்பதை உணர்கிறேன்,புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையின் ஆசிரியராகத் தேர்வு பெற்றுப் பணியில் சேர்ந்த மூன்றாவது நாள் அவரை நேரில் சந்தித்தேன். எங்கள் துறைக்கு மிக அருகில் இருந்த கட்டடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சிண்டிகேட் வங்கியின் ஊழியராக அவர் இருந்தார். அந்தச் சந்திப்பு புதுச்சேரியில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவைக்காக நடந்த சந்திப்பு அல்ல. அப்படியொரு தேவைக்காக என்றால் எனது முதல் விருப்பம் சிண்டிகேட் வங்கியாக இருந்திருக்காது. ரவிக்குமார் அங்கே வேலை செய்கிறார் என எனது நண்பரும் நான் தேர்வு செய்யப்பெற்ற அதே நாளில் நாடகத்துறையின் இணைப் பேராசிரியராய்த் தேர்வு செய்யப் பெற்ற கே.ஏ. குணசேகரன் சொன்னவுடன் போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்துச் சென்றேன். வங்கியின் வாடிக்கையாளனாக மாறினேன் என்பதைவிடத் தினசரி அந்த வங்கிக்குச் சென்று வரும் நபராக மாறினேன் என்பதுதான் சரியாக இருக்கும்.
மார்க்சீய – லெனினிய அமைப்புகள் இந்தியாவைப் பற்றி வரையறுத்துச் சொன்ன கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவனாக மதுரையில் நண்பர்களோடு விவாதங்களில் ஈடுபட்ட காலங்களில் உச்சரிக்கப் பெற்ற பெயர்களில் ஒன்றாக ரவிக்குமார் என்ற பெயரும் இருந்தது. "கவிதையால் புரட்சியைக் கொண்டு வர முடியும்"என்ற நம்பிக்கையோடு அலைந்த அந்தக் காலம் தொட்டு ஏற்பட்ட அந்தப் பழக்கம் – நட்பு -ஒரே நேர்கோட்டில் செல்லாமல் வளைந்தும் நெளிந்தும் இடைவெளி விட்டும் தாவியும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவரது கருத்துகளோடும் நடவடிக்கைகளோடும் எனக்கு வேறுபாடு தோன்றுகிறது என்றாலும் நான் விட்டு விலகித் தூரப் போய்விடுபவன் அல்ல. அப்படித் தூரப் போய்விடும் மனம் இந்திய சமூகத்தின் பொது மனப் போக்கு. வேண்டாதவனை விலக்கி வைக்கும் தீண்டாமைக்குள் சிக்கிய மனம் தான் விலகலைக் கடைப்பிடிக்கும். எல்லாவற்றையும் அதனதன் இருப்பில் ஏற்றுக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும், தொடர்ந்து உரையாடல் நடத்தி மாறவும், மாற்றவும் செய்யும் மனம் பொதுமனத்தோடு விலகிய நிலைப்பாடு கொண்டது. நமக்குத் தேவை விலகலையும் ஒதுக்குதலையும் விட்டொழிக்கும் மனங்கள் தேவை. அதற்குப் பதிலாக உள்வாங்கும் மனத்தை உருவாக்கிக் கொள்ள நாம் பழக வேண்டும். உள்வாங்கும் மனங்களோடு சேர்ந்து உள்வாங்கும் அரசியலை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனென்றால் எல்லாவற்றையும் தேசம், மதம், சாதி, வெளி, மொழி என்னும் பேரடையாளங்களை முன் வைத்தோ, கருத்தியல் சார்ந்த மதிப்பீடுகளையும் எதிர்வுகளையும் முன்னிறுத்திச் சொல்லாடல்களை உருவாக்கும் சிற்றடையாளங்களாலோ விலக்கித் தூர எறியும் கருத்தோட்டங்களால் நாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்; அத்தகைய அரசியலே நிகழ்காலத்தில் பயமுறுத்தும் அரசியலாக ஆகிக் கொண்டிருக்கிறது. விலக்கி வைக்கும் அரசியலுக்கு எதிராக உள்வாங்கும் அரசியலை முன் வைத்து வேலை செய்யும் தேவையை உணர வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். நவீன இந்தியச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான அம்பேத்கரிடமிருந்து ஒட்டு மொத்த இந்திய சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியன ஏராளம் இருக்கின்றன.
புதுச்சேரியில் இருந்தவரை ரவிக்குமாருக்கும் எனக்கும் நேர்ப் பேச்சுகளாக இருந்த விவாதங்களும் உரையாடல்களும் திருநெல்வேலிக்குப் போனபின்தொலைபேசியைத் துணையாக்கிக் கொண்டன.  இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் நானும் ரவிக்குமாரும் பலவற்றை நேரிலும் தொலைபேசியிலும் விவாதித்திருக்கிறோம். விளக்கம் பெற்றிருக்கிறோம். திட்டமிட்டிருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம். பொதுத் தளங்கள் என்றில்லாமல் குடும்பம் சார்ந்த முடிவுகளுக்காகக் கூட தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து விலகியிருக்கிறேன் எனச் சொல்லிக் கொள்ளாமல் விலகி இருந்த காலத்திலும் கூட அவரது திட்டமிடலையும்  விளக்கிக் கூறலையும் செயல்படுவதையும் செயல்படுத்து வதையும் கண்டு வியந்தவன் நான். கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உழைப்பும் வாசிப்பும் எழுத்தும் அவரிடம் இருப்பதை எப்போதும் பொறாமையோடு பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன் . நிற்க.
வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புப் போலத்தான் இரண்டு வாரங்களுக்கு  முன்னால் தொலைபேசியில் அழைத்தார். நிகரி விருது உருவாக்கம் பற்றிச் சொன்னார் ரவிக்குமார். பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 24 இல் விருது வழங்க வேண்டும் என்றார். கூட்டம் திண்டிவனம் அல்லது விழுப்புரம் என்றார். ”சரி ரவி!நான் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்றேன் கேட்டேன். ” உங்களுக்குத் தான் அந்த விருது; உங்களோடு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் விருது வழங்கப் போகிறோம். கல்யாணியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு அந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது தயக்கம் இருக்கிறதா? இருந்தால் சொல்லி விடுங்கள்” என்று சொல்லி விட்டு நிறுத்தினார்.
தமிழ்நாட்டில் விருதுகள் வழங்குவதில் உள் அரசியல் இருப்பது போல அவற்றை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் கூட எல்லாவகை அரசியலும் இருக்கின்றன என்பது எனக்கும் தெரியும்; நண்பர் ரவிக்குமாருக்கும் தெரியும் என்பதால் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அதனால் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி விட்டு அதன் பிறகு என்னைவிட இன்னொருவரைத் தேடி விருது வழங்கலாமே என்றேன்.’இல்லை இந்த வகை விருதுக்கு இன்னொருவரைத் தேட வேண்டியதில்லை; நீங்களே பொருத்தமானவர்’ என்று ரவிக்குமார் சொன்ன போது ‘ நான் என்ன வகையில் பொருத்தமானவன் ‘ என்று யோசித்துப் பார்த்தேன்.1989 இல் புதுச்சேரி நாடகப்பள்ளிக்கு வருவதற்கு முன்பு என்னை நான் இடதுசாரிச் சிந்தனை கொண்டவனாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே முழுமையாக பிறப்பு அடிப்படையிலான சாதி வரையறையையும், அதே அடிப்படையைக் கொண்டு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சலுகையின் மீதும் ஒருவித ஒவ்வாமை எனக்குள் இருந்தது. இட ஒதுக்கீட்டின்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு வருபவர்கள் திறமையானவர்களின் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்; அவர்களின் தகுதிக்கும் அதிகமான சலுகைகளைப் பெறுகிறார்கள் எனப் பொதுப்புத்தியில் இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டம் எனக்குள்ளும் இருந்தது. ஆனால் அந்த எண்ண ஓட்டம் பாண்டிச்சேரியில் கிடைத்த நட்புச் சூழலாலும் விவாதங்களாலும் வாசிப்பாலும் தான் மாற்றம் பெற்றது. இட ஒதுக்கீடு மட்டுமே சலுகை அல்ல என்பதும், இந்திய அரசாங்கம் பலவிதமான சலுகைகளைப் பலவிதமான பொருளாதார நிலையிலும் சமூகத் தட்டிலும் இருப்பவர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது புரிந்தது. சாதிய அடுக்குகளாகப் புரிந்து கொள்ளப்படும் இந்திய சமூக அமைப்பில் உயர்ந்த இடத்தில் இருப்பதாக நம்பும் பிராமணர்களுக்குக் கடந்த கால அரசுகளும், நிகழ்கால அரசுகளும் வழங்கிய- வழங்கும்- சலுகைகள், மானியங்கள் எப்போதும் தகுதியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பது இப்போது எனக்குப் புரிகிறது. குறிப்பிட்ட வகையான பதவிகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளும் மானியங்களும் விருதுகளும் கேள்விக்கப்பாற்பட்டவையாக இருப்பதை எனக்கு முழுமையாக உணர்த்தியது 1991 தொடங்கி கொண்டாடப்பெற்ற அம்பேத்கர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தான். பாண்டிச்சேரிக்குப் போவதற்குமுன்பு கட்டாயம் படிக்க வேண்டியவர்கள் பட்டியலில் பெரியாரும் அம்பேத்கரும் இருந்ததில்லை. பெரியாருடைய பேச்சுக்களையும் எழுத்துகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரது பேச்சுத் தொனிக்காகவும், எளிய சொற்களைப் பயன்படுத்திய மொழி ஆளுமைக்காகவும் வாசித்திருந்தேன். ஒரு இலக்கிய மாணவன் தெரிந்து கொள்ள வேண்டிய அளவு என்று அதைச் சொல்லலாம். அவரைச் சமூகப் போராளியாகவோ, தமிழ்ச் சமூகத்தின் போக்கில் பெரிதான அதிர்வுகளை உருவாக்கிய சிந்தனையாளராகவோ ஏற்றுக் கொண்டு வாசித்தவனில்லை. அம்பேத்கரைப் பற்றிய அறிவும் வாசிப்பும் பெரியாரைப் பற்றிய அறிதல் அளவுக்குக் கூட இருந்ததில்லை. இவ்விருவர் பக்கமும் போக வேண்டிய அவசியம் இல்லை என்று என்னைத் தடுத்து வைத்திருந்தது மாணவப் பருவம் தொடங்கி எனக்கிருந்த இடதுசாரிகளின் தொடர்பும், பல்கலைக்கழகத் தமிழியல் துறைகளுக்குள் இடதுசாரித் திறனாய்வுத் செலுத்திய ஆதிக்கத்தின் விளைவும் என்று சொல்லலாம். எங்கெல்ஸையும் மார்க்ஸையும் அவரை உள்வாங்கிச் சமூகவியல் மற்றும் இலக்கியவியல் கோட்பாடுகளைத் தந்தவர்களையும் வாசித்த எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் அம்பேத்கரும் பெரியாரும் அந்நியர்கள் என்பது போன்ற எண்ணம் எப்படி? யாரால் உருவாக்கப் பெற்றது என்பது தனிக்கதை.
1989 இல் ஏற்பட்ட பாண்டிச்சேரி தொடர்பு தான் என்னை முற்றிலுமாக மாற்றிப் போட்டது. பாண்டிச்சேரியிலிருந்து 1997 இல் திருநெல்வேலிக்கு - நாடகத்துறையை விட்டு விட்டு இலக்கியத்துறை ஆசிரியனாகப் போன பின்பு என்னைப் பார்க்கும் பலரும்,“ ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு பிரெஞ்சுத் தொடர்பு ஏற்படுத்திய தாக்கம் போல” தமிழ் நாட்டிற்குள் பாண்டிச்சேரித் தொடர்புகள் காத்திரமான மாற்றங்களை உண்டாக்கி வருகிறது என்று சொல்வார்கள். அந்தக் கூற்று மற்றவர்களைப் பொருத்துச் சரியானதா என்று நான் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்த வரையில் முற்றிலும் பொருத்தமானது. வர்க்க அரசியல், வர்க்க இலக்கியம், வர்க்க சமுதாயம் என்ற சொல்லாடல்களுக்குள் இருந்த என்னை தேசிய இன அரசியல், உடல் அரசியல், விளிம்புநிலை அரசியல், ஒடுக்கப்படுதல் மற்றும் ஒதுக்கப்படுதலின் அரசியல் எனப் பல தளங்களுக்குள் நகர்த்திக் கொண்டு வந்தது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இந்திய சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்; சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள அம்பேத்கரின் ஆய்வுகளை வாசித்தாக வேண்டும் என்ற நெருக்கடியை உணர்ந்தேன்; வாசித்தேன்; புரிந்து கொண்டேன். அதன் வெளிச்சத்தில் எனது எழுத்துகளின் தொனியை மாற்றிக் கொண்டேன். அதுவரை அம்பேத்கரைக் கேள்வி ஞானத்தின் வழியாகவே புரிந்து வைத்திருந்த நான் கார்ல் மார்க்ஸுக்கு இணையாக வாசித்தவராகவும் எழுதியவராகவும் அம்பேத்கரைச் சொல்லத் தயங்குவதில்லை இப்போது.  மாற்றத்தை முன் வைத்துச் செயல்படும் ஓர் அறிவுஜீவியின் நோக்கமும் வாசிப்பும் எழுத்தும் இவ்வளவு பரந்த பரப்பாக இருக்க வேண்டுமா? என்ற மலைப்பை அவர்கள் இருவரும் எனக்குள் உண்டாக்கியிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசு மற்றும் சோசலிச அரசு என்ற எதிர்நிலைக் கட்டுமானங்களை விமரிசனம் செய்வதில் தொடங்கி இந்திய அரசுருவாக்கத்தில் தேசிய இனைப்பிரச்சினையின் இடம், இந்திய சமூக அமைப்பில் சாதியக் கருத்துரு, உலக அளவில் எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் போராட்டம் மற்றும் விடுதலை, இவ்வகை அரசியல் செயல்பாடுகளோடு இணைந்தும் விலகியும் நிற்கும் கலை இலக்கியப் போக்குகள் பற்றியெல்லாம் கவனப்படுத்திய நிறப்பிரிகையின் செயல்பாடுகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த ரவிக்குமார் அம்பேத்கர் நூற்றாண்டின் எழுச்சியிலும் மையமாக இருந்தார். அவரது வீட்டில் தான் பல விவாதங்களின் ஆரம்பம் தொடங்கியது. அங்கு தொடங்கும் விவாதம் புதுச்சேரி வணிக அவை அல்லது பிரெஞ்சு இந்திய நிறுவன வளாகம் அல்லது பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பரப்பு என விரிந்தது.. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஆசிரியனாக இருந்த எனக்கு அம்பேத்கரின் நூற்றாண்டு சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. மதுரை நிஜநாடக இயக்கம் என்னிடத்தில் மூன்றாம் அரங்கு என அழைக்கப்பட்ட ஏழ்மை அரங்கின் தத்துவம் மற்றும் செயல்தளத்தை உருவாக்கிப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் 20 க்கு மேற்பட்ட தெரு நாடகங்களில் நடிகனாகப் பங்கேற்ற அனுபவத்தோடு மதுரை நகரக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திண்டுக்கல்,எனச் சிறுநகரங்களின் கல்வி வளாகங்களிலும் மேடையேற்றிய அனுபவம் எனக்குள் இருந்தது. மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்களோடு இணைந்த இயக்கங்களுக்காகவும் நாடகங்கள் செய்திருந்தோம். அந்நாடகங்களில் பலவும் நடுத்தர வர்க்கம் சார்ந்த அமைப்பு எதிர்ப்பு, அமைப்புகளின் மீதான விமரிசனம் என்ற தளத்தில் அமைந்தவை. ஆனால் ஒரு நாடகம் மட்டும் முற்றிலும் விதிவிலக்கானது. ”நியாயங்கள்” என்ற தலைப்பில்  நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் தமிழ்நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்களால் சில ஆயிரம் முறை நிகழ்த்தப் பெற்ற நாடகம். அந்த நாடகமும் கூடநீதித்துறையின் மீதான விமரிசனத்தை வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது என்றாலும் காட்சிப் படுத்தும் நிகழ்வுகளாக இருப்பன  வெண்மணிச் சம்பவங்கள்.
1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும்  இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அணிகள் இல்லாமையும் தான் எனக் காட்டினோம். அந்த நிகழ்வுக்கு தொல். திருமாவளவன் ஒரு பார்வையாளராக வந்திருந்தார். 1992 இல் தொடங்கிய நியாயங்கள் என்னும் நாடக மேடையேற்றம் தலித்திய அரங்கின் எல்லைகள் பலவற்றை உருவாக்கிக் காட்டி விட்டு 1997 இல் நான் திருநெல்வேலிக்குப் போனதோடு முடிந்து போனது. இந்து மதத்தில் “தண்ணீர்” எவ்வாறு சாதியிருப்பின் காரணியாக இருக்கிறது என்பதை ஒரு நாடகத்தில் சொன்னது போல பிரபஞ்சனின் அகலிகை என்ற பெண்ணிய நாடகத்தில் “ தாடகை” என்ற பாத்திரத்தை உருவாக்கியதின் மூலம் கறுப்பு வண்ணம் கொண்ட விளிம்பு மனிதர்களுக்கு எதிராக இந்து மதப் புனிதர்கள் நடத்திய யுத்தத்தையும் சொல்லாடல்களையும் முன் வைத்தோம். சமூக உணர்வு கொண்ட படைப்பாளிகளின் நியாயத்தை - குற்ற உணர்வைத் தூண்டும் விதமாக வடிவமைக்கப் பெற்ற வார்த்தை மிருகம் என்ற நாடகத்திற்குள் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய பிரதியாக ரவிக்குமார் எழுதித் தர உடலரசியல், சாதி அரசியல், மொழி அரசியல் எனப் பல தளங்களில் சொல்லாடலை உருவாக்கிய மேடை நிகழ்வைத் தயாரித்தேன். இந்நாடகங்கள் எல்லாம் தலித் இயக்கம் எழுச்சி பெற்ற முதல் ஐந்தாண்டுகளில் பாண்டிச்சேரியில் மட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி எனப் பல இடங்களில் நிகழ்த்தப் பெற்றதோடு மதுரையில் நடந்த எல்லா தலித் கலைஇரவுகளிலும்  நிகழ்த்திக் காட்டப்பட்டது. தலித்திய அரங்கின் வரையறைகளை - எல்லைகளை விரிவாக்கிக் காட்டிய மேடை நிகழ்வுகள் அவை.
நாடகத்துறை சார்ந்த செயல்பாடுகளில் அலுப்பு என்பதைவிடப் புதுச்சேரி நாடகப் பள்ளியில் பணியாற்றும் சூழலில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் சோர்வினால், மையப் பல்கலைக்கழக வேலையை விட்டுவிட்டு இலக்கியத்துறைக்குத் திரும்பி விட வேண்டும் என நினைத்தேன். என்னைத் திறமையான நேர்காணலின் வழியாக உள்வாங்கிய துணைவேந்தர் மதிப்பிற்குரிய வே. வசந்திதேவி இந்த நிகரி விருதை வழங்கி அமர்ந்திருக்கிறார்கள். அவருக்குத் தெரியும் எனக்கு அந்தப் பல்கலைகழகத்தின் பணி வாய்ப்பை உருவாக்கியதில் தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் இயக்கங்கள் பற்றி நான் கொடுத்த விளக்கங்கள் முக்கியப் பங்காற்றின என்பது. அரசுத்துறை அதிகாரிகளாக வந்திருந்த வல்லுநர்கள் முதலில் எனக்கு என்னவெல்லாம் தெரியும் எனக் கேள்வி கேட்பதை மாற்றிக் கொண்டு,”எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் தலித் இயக்கங்கள்” பற்றி என்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலை வெளிப்படுத்தினார்கள். 55 நிமிடங்கள் நடந்த நேர்காணலில் முக்கால் மணி நேரம் தலித்தியம் பற்றி நான் பேச அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம் தலித்தியம் சார்ந்து நான் புதுச்சேரியில் கற்றுக் கொண்டவை தான் திருநெல்வேலியில் என்னை இணைப்பேராசிரியராக மாற்றியது. அதையே எனது முதல் விருதாக - தலித்தியம் சார்ந்த எனது செயல்பாடுகளுக்குக் கிடைத்த முதல் விருதாக நினைக்கிறேன். இப்போது தரப்படும் நிகரி- சமத்துவ ஆசிரியர் விருது ஒரே காரணத்துக்காகத் தரப்படும் இரண்டாவது விருது என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருநெல்வேலிக்குப் போன பிறகும் தலித்திலக்கியம், தலித்திய விமரிசனம் சார்ந்து தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி ஒன்றை நண்பர் ரவிக்குமார் தான் உருவாக்கினார்.  2000 இல் சென்னையில் நடந்த தமிழினி 2000 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற கட்டுரையை வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த வாய்ப்பு முதலில் தலித் விமரிசகராக அறியப்பட்ட ராஜ் கௌதமனிடம் வழங்கப்பட்டு அவரால் இயலாமல் என்னிடம் வந்து சேர்ந்தது. அவர் செய்யாததை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு ரவிக்குமார் பரிந்துரைக்க கருத்தரங்க அமைப்புக்குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தமிழில் எழுதப்பெற்ற தலித் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து வாசித்தேன். அவற்றை விளக்கிக் காட்டவும் விமரிசனம் செய்யவும் தேவையான அடிப்படைகளையும் உருவாக்கிக் கொண்டு 50 பக்கக் கட்டுரை ஒன்றை எழுதித் தந்தேன். அந்தக் கட்டுரை தான் இன்றளவும் தமிழில் தலித் இலக்கியம் பற்றிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு அடிப்படையான தரவுகளைத் தந்து கொண்டிருக்கும் கட்டுரையாக இருக்கிறது.
தமிழில் எதாவது ஒரு எழுத்தாளரை மையப்படுத்தி வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து தனக்கான நியாயங்களை முன்னிறுத்திக் கொண்டு மற்றவர்களை விலக்கி வைக்கும் -ஒதுக்கித் தள்ளும் திறனாய்வு முறையே தமிழில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன. அந்தக் கட்டுரை ஒதுங்குதலையும் ஒதுக்குதலையும் மையப்படுத்தாமல் உள்வாங்கும் திறனாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் போக்காக தலித் இலக்கியப் போக்கு இருக்கிறது என்பதைப் பல்வேறு கட்டுரைகள் வாயிலாகவும் கருத்தரங்கப் பொழிவுகள் வழியாகவும் உரையாடல்கள் மூலமும் நிறுவும் பணியைச் செய்துள்ளேன். இந்தச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பெற்ற அம்பேத்கரியல் மையத்தை மாற்றினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதியிலிருந்து  உருவாக்கப் பெற்ற மையம்  எமது பல்கலைக்கழக வளாகத்தில் மாணாக்கர்களின் யாதொருவரும் பிறப்பு அடிப்படையிலான சாதியக் கருத்துகளாலும் எண்ணங்களாலும் ஒதுக்கப்படக் கூடாது என்ற வலுவான நிலைபாட்டை உருவாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் செயல்பட்ட அறிவுஜீவிகள், செயலாளிகள் அனைவரும் அந்த வளாகத்தில் வந்து ஆற்றிய உரைகளின், இலக்கியப் பதிவுகளின் தாக்கம் அது. அதன் மையமாக இருந்து -அம்பேத்கரியல் மையத்தின் இயக்குநராக இருந்து செயல்பட்ட அந்தக் காலம் எனது வாழ்க்கையின் நினைக்கத் தக்க காலம்.
ஒரு மனிதனின் நினைக்கத் தக்க காலத்தைத் அவனே நினைத்துக் கொள்வது போதுமானது தான். உவகை அளிப்பது தான். என்றாலும், மற்றவர்களும் நினைத்துப் பாராட்டுகிறார்கள்; அங்கீகரிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பது உவகையினும் உவகை. அந்த உவகையிலும் உவகையான தருணத்தை மணற்கேணி ஆய்விதழ் வழங்கியிருக்கிறது. உவகையிலும் உவகையோடு இந்த விருதை - நிகர்நிலைச் சமூகத்தை உருவாக்கும் செயல்களைச் செய்யுங்கள்; தொடருங்கள் என ஆணையிட்டுச் சொல்லும் - நிகரி விருதைப் பெற்றுக் கொள்கிறேன். அதன் ஆணையை நெஞ்சினுள் நிறுத்திச் செயல்பட வேண்டும் என உறுதி கொள்கிறேன். 

மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு

$
0
0
எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். 
பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது


பயிலரங்கின் நோக்கம்: தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி என்பது பாடத் திட்டங்களின் அடிப்படையில் மூன்று நிலைகளில் செயல்பாட்டில் இருக்கிறது அவை:

1. இளம் கலையியல், இளம் அறிவியல் பட்டப்படிப்புகளில் பகுதி I (PART-I ) பாடமாகத் தமிழ் கற்பித்தல்.
2. இளம் கலையியல்- தமிழ் இலக்கியம் என்னும் பட்டப்படிப்பில் முதன்மைப் பாடமாகத் தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழ் கற்பித்தல் 
3. இளம் கலைப் பட்டத்தின் தொடர்ச்சியாக முதுகலைத் தமிழியல் மற்றும் இளநிலை ஆய்வுக்கான பட்டத்திற்காகவும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன.
இம்மூன்று நிலைகளுக்குமான பாடத்திட்டங்களை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியே உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. என்றாலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் என்ற நிலையில் அதன் வழிகாட்டு முறையிலிருந்து அதிகம் விலகி இருக்க முடியாது. பொதுநிலைப் பட்ட அடிப்படைத்தாள், அடிப்படைத்தாள்களோடு உறவுடைய சார்புத் தாள், மொழி மற்றும் இலக்கியத்துறை சார்ந்து விருப்பத் தாள்கள் என்ற கூறுகளோடு பிறதுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பிறதுறைப் பாடங்கள் என்ற பொது அமைப்புக்குள்ளேயே செயல்படுகின்றன. இப்பொது அமைப்பிலிருந்து விலகாமல் நிகழ்காலத் தேவைக்கேற்ற மொழிக் கல்வியை வடிவமைத்துத் தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்வியை உலகத்தரமானதாக மாற்றும் நோக்கத்தோடு புதிய பாடத்திட்ட முன்வரைவுகளை உருவாக்க இப்பயிலரங்கு முயற்சி செய்யும். 

இருப்பும் மாற்றங்களின் தேவைகளும்:
• நிகழ்காலத் தேவைக்கான மொழியாகத் தமிழை மாற்றுவதற்குப் பல்கலைக்கழக அளவில் செய்யக் கூடிய மாற்றம் மொழிப்பாடத்தில் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும். கலையியல் மற்றும் அறிவியல் பட்டங்களுக்கான தமிழ்த் தாளான பகுதி ஒன்றின் நோக்கம் இலக்கிய அறிமுகம் மற்றும் ரசனை உருவாக்கம் என்பதை முதன்மையாகக் கருதாமல் மொழிவளம் மற்றும் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டதாகப் பாடத் திட்டத்தை உருவாக்குதல் மிக அவசியம். வேண்டும்.

• இப்போது பகுதி ஒன்று தாள்களின் கூறுகளுக்கும், இளநிலைத் தமிழ் இலக்கியப் படிப்பில் இடம் பெற்றுள்ள தாள்களின் அமைப்புக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. இரண்டுக்கும் ஒரே நோக்கம் தான் இருக்கிறது. இதனை மாற்றுவது அவசியமானது. கலையியல் மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களுக்கான தமிழ்த் தாள் அவர்களின் முதன்மைப் பாடங்கள் சார்ந்த சொல் வளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக மாற்றப் பட வேண்டும். அந்நிலையில் தான் தமிழ்மொழியை அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் மொழியாக மாற்ற முடியும். எனவே இலக்கியக் கூறுகளைக் குறைத்துக் கொண்டு மொழிக்கூறுகளை அதிகப்படுத்தித் தமிழைப் பிழையின்றி எழுதவும், அவர்கள் துறை சார்ந்த எடுத்துரைப்புகளைப் பேச்சு வழியாகவும் எழுத்து வழியாகவும் நிகழ்த்தவும் தூண்டும் விதமாகப் பாடத் திட்டத்தை மாற்றியாக வேண்டும். இம்மாற்றத்தைத் தமிழின் வாழ்வுக்கான தேவையாகக் கருதிச் செய்தாக வேண்டும். எப்போதோ செய்திருக்க வேண்டிய இம்மாற்றத்தை இப்போதும் செய்யவில்லை என்றால் தமிழ்மொழியின் இருப்பும் எதிர்காலமும் வாழ்வும் பெரும் கேள்விக்குரியாக மாறி விடும். தமிழ்ப் பாடங்கள் பயனுடையதாக மாற்றப்படவில்லை என்றால் தமிழ் மொழியின் எதிர்காலம் மட்டுமல்ல; தமிழாசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதே.

• முதன்மைப் பாடமாகத் தமிழைப் பயிலும் பட்டப் படிப்பில் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்து இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கல்வியின் தேவையை அதிகரிக்கும் விதமாகப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இலக்கியப் படிப்பின் அடிப்படைகளைக் கற்றுத் தருவதோடு முழுமையாகப் படிப்பதன் தேவைகளையும் உருவாக்கித் தர வேண்டும். இவை எந்தவொரு மொழியிலும் இலக்கியம் கற்றவரோடு உறவாடத் தேவையான அடிப்படைகளாக இருக்க வேண்டும். அத்தோடு தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியையும், இன்னொரு இந்திய மொழிப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்யும் விதமாகப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்

• மூன்றாவது கட்டமாக முதுகலைத் தமிழ்ப் படிப்பில் இலக்கியக் கல்வியை மாணவர்களை மையமிட்டதாக மாற்றி ஆசிரியர்களின் துணையின்றி இலக்கியப் பனுவல்களை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும். திறனாய்வு மனப்பான்மை, பிறதுறை அறிவை இலக்கியக் கல்விக்குப் பயன்படுத்தும் வழி முறைகள் போன்றவற்றோடு பிறமொழி அறிவோடு கூடிய ஒப்பாய்வு, மொழி பெயர்ப்பு போன்றவற்றில் ஈடுபடும் நிலையை உருவாக்கும் விதமாகப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இளநிலை ஆய்வுப் பட்டத்தில் ஆய்வுமுறையியல் மற்றும் அணுகுமுறைகளை மட்டும் கற்றுத் தந்து விட்டு ஒவ்வொரு மாணாக்கரும் தங்களுக்கான தனித்தாள்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் விதமாகப் பாடத்திட்டம் உருவாக்கப் படவேண்டும். எனவே பயிலரங்கு நிகழ்நிலையிலுள்ள பாடத் திட்டங்களின் மீதான மதிப்பீடு, மாற்றம் செய்ய வேண்டிய மையப்புள்ளிகளைக் கண்டறிதல், மாற்றுப் பாடத்திட்ட வரைவை உருவாக்குதல் என்பதாக அமையும். 

இந்தப் பயிலரங்கில் கல்வி நிலையங்கள் சாராத வல்லுநர்கள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கும் பலரையும் பங்கெடுக்கச் செய்யலாம் என நினைத்துள்ளேன். தமிழ் உயிர்ப்புள்ள மொழியாக இருப்பதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது. உங்கள் ஆலோசனைகள்/ கட்டுரைகளை எனது முகநூலில் பதிவு செய்யலாம். அல்லது இணைய முகவரியான : ramasamytamil@gmail.com - இல் அனுப்பலாம். எனது தொலைபேசி : 9442328168 இல் பேசலாம்.
உங்கள் கருத்துக்கள்/ கட்டுரைகளின் அடிப்படையில் நேரடிப் பங்கேற்பிக்கான வாய்ப்பினை வழங்க முடியும். அழைக்கப்படுபவர்களின் பயணச் செலவு, தங்குமிடச் செலவு, உணவு ஆகியன ஏற்பாடு செய்யப்படும்.

• பயிலரங்கு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ள நாட்கள் : 2013, டிசம்பர் 4,5 (புதன், வியாழன்)

(அ.ராமசாமி)

வகுப்பறையில் மாணவர்கள் - ஆசிரியர்கள்

$
0
0
2013 அக்டோபர் 6 இல் ஒளிபரப்பான நீயா நானாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றிருந்தேன். கல்வித்துறை சார்ந்த விவாதமேடை அதிலும் வகுப்பறைகள் எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதம்.
எனக்குப் பலவிதமான வகுப்பறைகளைப் பார்த்த அனுபவம் உண்டு. மாணவனாகவும் ஆசிரியனாகவும் கல்லூரி முதல் சில பல்கலைக்கழகங்கள் வரை வகுப்பறையில் பாடம் கற்றிருக்கிறேன்; கற்பித்திருக்கிறேன். அதையெல்லாம் இங்கே சொல்ல வாய்ப்பில்லை. விவாதத்தைக் கேட்டுப் பாருங்கள்:  http://www.youtube.com/watch?v=T0NdSRvDcyo

கேள்விகளா? குற்றச்சாட்டுகளா?

$
0
0

எழுத்தாளர் இமையம் 22-10-2013 தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையை அப்படியே தருகிறேன். அதில் நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அவைகளைக் கேள்விகள் என நினைப்பதை விடக் குற்றச்சாட்டுகள் என்றே கொள்ள வேண்டும். சொரணையுள்ள கதைக்காரர்கள் முன் வந்து விவாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் நமது புனைகதை எழுத்தாளர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் ஆசை தான்.
நல்ல விவாதங்கள் எழுப்பப் பட வேண்டும் என்ற ஆசை. இனி அவரது கட்டுரை:
=========================================
எழுத்தாளர்களின் கவனத்திற்கு. 
-------------------------------------------------------------------
                   தமிழ் எழுத்தாளர்களே ! கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் அடைந்த வளர்ச்சி, பெற்ற முன்னேற்றங்கள், மாற்றங்கள் அளப்பரியது. மனமாற்றம், சிந்தனை மாற்றம் என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மாறியிருக்கிறது. உணவில், உடையில், தனிமனித, குடும்ப, சமூக வாழ்வில் பெரிய மாற்றங்கள். நேற்றைய ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் இன்று கேலிக்குரியவையாக மாறியிருக்கின்றன. நம்முடைய புனிதங்கள் இன்று தெருச்சாணியாக்க்கிடக்கிறது. தொழிற்நுட்பமே வாழ்க்கை.
   செல்ஃபோன், சாட்டிங், முகநூல், கம்ப்யூட்டர், இணையம், ஈமெயில்,
ஹெட்போன், ஆங்கிலம், அமெரிக்க கனவு இல்லாத வாழ்வை இன்று நினைத்துப் பார்க்கமுடியுமா? நகரம் முதல்கிராமம்வரை – கிழவிகள் முதல் குழந்தைகள்வரை-
நைட்டிதான் பொது உடை. சென்னையில் நாளுக்கு நாள் பெண்களுக்கான விடுதிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், மண்ணில் காலை பதிக்காத குழந்தைகள், தங்க நாற்கர சாலை, ஐந்தாம் வகுப்பு மாணவன் சாட்டிங் செய்தல். முகநூலில் அவனுக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள். அதிநவீன தொழிற்நுட்ப செல்போன் குழந்தைகளின் கையில்- விளையாட்டு பொருளாக. கட்டிட வேலை செய்கிற சித்தாள் முதல் கிராமத்தில் ஆடுமேய்க்கிற பையன்வரை எல்லாருடைய கையிலும் செல்ஃபோன். ஹலோ என்ற சொல்லை உச்சரிக்காத மனிதர்கள் தமிழ் நாட்டில் இருப்பார்களா? ஆக தமிழ்ச்சமூகத்தின் முகமும், வாழ்வும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. குலைந்து போயிருக்கிறது.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்தான் எவ்வளவு மாற்றங்கள்? பாவம் குலதெய்வங்கள். சினிமா-நடிகர் நடிகைகளின் பெயர்களுக்குப் பின்னால் அடிப்பட்டுப் போய்விட்டன. தெருவில் விளையாட வேண்டிய குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடுகின்றன. தொழிற்நுட்ப குழந்தைகள். கிரஷ்கள் மட்டுமல்ல முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன. வாடகைத்தாய்- வாடகைக் கர்ப்பபைகளின்-வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. வாழ்க்கை என்பது ஓட்டம் பரபரப்பு என்றாகிவிட்டது. பொருள்களை வாங்கி மடியில் கட்டிக்கொள்வது எத்தனை ஆண்டுகால பழக்கம்? இன்று எல்லாரும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் வாங்குவதுதான் நாகரீகம். ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினாலும் பாலிதீன் பையில் போட்டுத்தான் வாங்குகிறோம்.
       பெண்கள் குறித்த எல்லாவகையான கற்பிதங்களும், கற்பனைகளும், பழமொழிகளும் பொசுங்கிப்போய்விட்டன. பெற்றோர்கள்தான் இன்று தங்கள் குழந்தைகளை பெண்கள் விடுதியில் சேர்க்கிறார்கள். குழந்தைகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஏங்குகிறார்கள். வழியனுப்பி வைக்கிறார்கள். நவீன உடைகளையும், ஆன்ட்ராய்டு போன்களையும் அவர்கள்தான் வாங்கித்தருகிறார்கள். பஸ், ரயில், விமானம், சாலையில் என்று தனியாக பயணம் செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி, எல்லா இடத்திலும் பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நகரங்களில், பெரு நகரங்களில் ஐந்து வயது குழந்தைகள்கூட தனியாக வீட்டில் கதவைப் பூட்டிக்கொண்டு கார்ட்டூன் பார்த்தப்படி உட்கார்ந்திருக்கிறார்கள் அப்பா அம்மாவின் வருகைக்காக காத்திருந்தபடி.
       தமிழர்கள் இன்று பேசும்மொழி ஊடக- சினிமா மொழியாக இருக்கிறது. தமிழர்களின் உடை தமிழ் சினிமா நடிகர் நடிகைகளின் உடையாக இருக்கிறது. பெரும் கலாச்சார விழாவாக நாம் கொண்டாடும் பொங்கல்-தீபாவளிகூட இன்று தொலைக்காட்சியைப் பார்த்தபடிதான் கொண்டாடுகிறோம். பிறந்த நாள், கல்யாண நாள் கொண்டாடாதவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். பிறந்த நாளுக்கு, கல்யான நாளுக்கு வெளியில் அழைத்து செல்லாததால், புதுத்துணி எடுத்துத்தராததால் தற்கொலை செய்துகொள்ளும் தமிழ்ப்பெண்களின் எண்ணிக்கை பெருகியபடி இருக்கிறது.
       இருபத்தி நான்கு மணிநேர செய்தி சேனல்கள் வந்துவிட்டன. நகைச்சுவை சேனல்களுக்கும் பஞ்சமில்லை. ரியல் எஸ்டேட் தொழில் இன்று அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் குப்பைகளாக மண்ணில் புதையுண்டுபோயிருக்கின்றன. இன்று ஒரு லிட்டர் தண்ணீர் பதினைந்து ரூபாய். கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. கருங்கல், செங்கல், மணல்மாதிரி, எல்.கே.ஜி. ஒருலோடு, பிரி.கே.ஜி. ஒரு லோடு என்ற கணக்கில் கொண்டுவந்து குழந்தைகளை கொட்டுகிறார்கள். ஜனநாயக விரோத செயலை, அடக்குமுறையை பள்ளியின் பெருமையாகப் பேசும் பெற்றோர்கள். கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கோவில்களின் எண்ணிக்கை எப்படி அதிகரிக்க முடியும்? கல்வி வள்ளல்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி இருக்கின்றன. மருத்துவம் தனியாரிடம் போய்விட்டது. இன்று தமிழகத்தில் இருக்கிற ஐ.டி கம்பெனிகளின் முதலாளிகள் யார், எந்த நாட்டைச் சார்ந்தவர்- என்று அந்த கம்பனியில் வேலைப் பார்க்கும் தொழிலாளிக்குத் தெரியுமா? சந்தேகம்தான். 1970-80 காலம் வரைகூட முதலாளி என்பவர் தொழிலாளியின் வீட்டு வைபவங்களில் பங்கேற்கக்கூடிய நபராக இருந்திருக்கிறார்.
       தமிழச்சமூகம் பெற்றிருக்கும் வளர்ச்சி நல்லதா-கெட்டதா? நவீன தொழிற்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்ம் நல்லதா கெட்டதா? தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில்- சமூக வாழ்வில்- என்பது குறித்து தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் அக்கறைப் பட்டிருக்கிறதா? எழத்தாளர்கள் கவலைப் பட்டிருக்கிறார்களா? இதுகுறித்து வெகுசன இதழ்கள் எழதிய அளவுக்குக் கூட இலக்கிய இதழ்கள், இலக்கிய எழுத்தாளர்கள் கவலைப் படவில்லை. அப்படியென்றால் நம்முடைய இலக்கிய கர்த்தாக்கள் எந்த உலகில் இருந்துகொண்டு தங்களுடைய அதி உன்னதமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும், அவர்கள் எப்போது தங்களுடைய கண்களைத் திறந்து நிஜ உலகத்தைப் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிஜத்தைப் பாருங்கள், நிஜத்தை எழுதுங்கள். சினிமா நடிகரை நேரில் பார்த்ததை வாழ்வின் பயன் என்று கூறாதீர்கள்.
       மனிதனுக்காக தொழிற்நுட்பம் என்பதற்குப் பதிலாக, தொழிற்நுட்பத்திற்காக மனிதன் என்றாகிவிட்டது. இன்று ஒரு மனிதனால் செல்ஃபோன் இல்லாமல் ஒரு நாள் வாழமுடியுமா? கற்பனை செய்துப்பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியைப் பார்காமல் ஒரு மனிதனால் ஒரு நாள் பொழுதை கழிக்க முடியுமா? சாத்தியமில்லை. கம்பிபூட்டர் இல்லாமல், இணையம் இல்லாமல், ஈமெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பாமல் இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி மனித உடலின் உறுப்புகளாக மாறின என்பது குறித்து ஏன் தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இதுவரை பேசவில்லை. நடைமுறை வாழ்விலிருந்து எழுத்தாளர்கள் அந்நியப்பட்டு நிற்கிறார்களா? நிகழ்கால வாழ்வுக் குறித்து அதன் நெருக்கடிகள், வலிகள், செளகரியங்கள் குறித்து, தனி மனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் தொழிற்நுட்பம் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எப்போது எழுதுவார்கள்? தமிழில் ஏன் அறிவியல் கவிதை, சிறுகதைகள், நாவல்கள் இல்லை?
       2100ஆண்டுளுக்கு மேலாகியும் சங்ககால இலக்கியங்கள் இன்னும் எப்படி உயிருடன் இருக்கின்றன? நம்முடைய காவியங்கள் எப்படி இன்னும் உயிருடன் இருக்கின்றன? ஆனால் நவீன கால நவீன மகா கலைஞர்கள் போன ஆண்டு எழுதிய கவிதை, சிறுகதை, நாவல் இந்த ஆண்டு அதை உருவாக்கிய மகா கலைஞனாலேயே படிக்க முடியாமல் போனதற்கு எது காரணம்? இதை நம்முடைய மகா கலைஞர்கள் அறியமாட்டார்களா? உயிரோட்டமான கதை இல்லை. உயிரோட்டமான வாக்கியங்கள் இல்லை, தன் அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றத் தெரியவில்லை. வாழ்விலிருந்து உருவாகாமல் வாழ்வின் மீது ஊன்றி நிற்காத படைப்புகளின் கதி என்னாகும்? படைப்பை உருவாக்கிய படைப்பாளியாலேயே படிக்க முடியாத படைப்பாகத்தானே இருக்கும்? கவிதைகளற்ற கவிதைகளை, கதைகளற்ற கதைகளை, நாவல்களற்ற நாவல்களை- உருவாக்கினால் அது எப்படி சமூகத்தின் பிரதிபலிப்பாக கலைப்படைப்பாக இருக்கும். வெறும் சொற்களை-சொற்களின் கூட்டு சேர்க்கையை அச்சடித்த காகிதமாகத்தான் இருக்கும்.
                சுநாமி வந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். அது குறித்து தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை. அழிந்த கலைகள் எதுவும் ஆவணமாகவில்லை. எந்த வரலாறும் படைப்பாகவில்லை. காதலியை இழப்பது, குடும்பத்தை இழப்பது மட்டும்தான் சோகமா? இலக்கியமா? எழுத்து- இலக்கியம் எதிலிருந்து எப்படி உருவாக வேண்டும்-என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர்களின் கண்ணில் எது படுகிறது என்ற கேள்வியும் வருகிறது.
       கோயில் கும்பாபிஷேகம் மாதிரி திருமணங்கள் எப்படி மாறின. திருமண நிகழ்வுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை வீடியோக்காரனிடமும், போட்டோக்காரனிடமும் ஒப்படைத்தது யார்? அப்பாவுடைய  பெயருக்குப்பதிலாக சினிமா நடிகரின் பெயரைப் போட்டுக்கொள்ளும் மனோபாவம் இளைஞர்களிடம் தொற்று வியாதியாக எப்படி பரவியது? தமிழ்ச்சமூகம் எப்போது, எப்படி, ஏன் சினிமா சமூகமாக மாறியது? மழை வேண்டி, நோய் நீங்க வேண்டி, கொள்ளை நோய் பரவுவதை தடுக்க வேண்டி, பஞ்சம் நீங்க வேண்டி, வழிபாடு நடத்திய தமிழர்கள்- இன்று சினிமா  நடிகர் உடல் நலம்பெற வேண்டி ஒரே நேரத்தில் நூறுபேர் மொட்டைப் போட்டுக்கொண்டு பிரார்த்தனை செய்யும் மனிதர்களாக மாற்றியது எது? இதுபோன்ற- இன்ன பிற கேள்விகளை உள்ளடக்கியதாக தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எப்போது உருவாகும்?
       கிராமம் புனிதமானது. கிராமத்து மனிதர்கள் புனிதமானவர்கள். கிராமத்தில் மட்டுமே மனித உறவுகள் பேணப்படுகின்றன. கிராமத்துப் பெண்களே கண்ணியமானவர்கள் என்பது மிகை கற்பனை. அந்த மிக் கற்பனையை கவிதை, சிறுகதை, நாவலாக, புனைவாக மாற்றினாலும் - அதற்கான மொழி நகரத்து மொழியாகவும் இல்லாமல் கிராமத்து மொழியாகவும் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘தக்கை‘ மொழியாக இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் கிராமத்தைவிட்டு வந்து முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையைதான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அப்போது பேசிய மொழியைத்தான் இப்போதும்  பேசுகிறார்கள் என்று எண்ணிகொண்டு எழுதுவது நம்முடைய எழுத்தாளர்களின் போலித் தன்மைக்கு ஒரு சான்று. எதார்த்தமும் இல்லை. முற்றிலும் கற்பனையும் இல்லை. அறிவுத்தனமும் இல்லை. இந்த மூன்றும் இல்லாமல் தமிழ் சினிமாவைப்போல்வே கவிதை, சிறுகதை, நாவல் எழுதுகிறார்கள். தமிழ்ச்சினிமாக்காரர்கள் வியாபாரிகள். கலை ரசனை இல்லாதவர்கள். ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள் தூய இலக்கிற வாதிகள். நம் காலத்தின் மகா கலைஞர்கள், கலாச்சாரக் காவலர்கள்.
பிறருடைய படைப்புகளை படிக்காதவர்களாக, முந்தைய காலத்து இலக்கிய ஆக்கங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் நவீன கவிதைகள், நவீன கவிஞர்களுக்கே புரிய மாட்டேன்என்கிறது. கவிதை நூல்கள் அதிகம் விற்பதில்லை என்று புலம்புகிற கவிஞர்களுக்கு தங்களுடைய கவிதைத் தொகுப்பு சிறப்பாக இல்லை என்பது மட்டும் தெரியவில்லை. அதே மாதிரி முக நூலிலும், பிளாக்கிலும் அக்கப்போர் எழுதுவதில்தான் முழுமூச்சாக இருக்கிறார்கள் என்பதும் மறந்துபோய் விடுகிறது. இணையத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும்  தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
புதிய தொழிற்நுட்பம் புதியபுதிய சொற்களையும் உருவாக்குகிறது. குறிப்பாக- இணையம், முகநூல், குறுஞ்செய்தி, கைபேசி இப்படி பல. இது நகரத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது நம்முடைய தமிழ் எழுத்தாளர்கள் இன்று வரை உணரவில்லை. அவர்களுடைய கற்பனையில் தமிழக கிராமங்கள் இன்னும் 17வது நூற்றாண்டிலேயே இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் பேனர் தொழிற்நுட்பம் நகரங்களைவிட கிராமங்களில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த தொழிற்நுட்பத்தால் லட்சக் கணக்கான சுவரில் விளம்பரம் எழுதுகிறவர்கள் தொழிலை இழந்தார்கள். இதுபோன்ற விசயங்கள் குறித்தும் தமிழ் இலக்கியத்தில் பதிவுகளைக்காண முடியாது. அப்படியென்றால் நம்முடைய எழுத்தாளர்கள் எந்த வாழ்க்கைக் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
       நகர வாழ்வின் நெருக்கடிகளையும் எழுதுவதில்லை. கிராம வாழ்வின் அசலான முகத்தையும் பதிவு செய்வதில்லை. அப்படியென்றால் நம்முடைய எழுத்தாளர்கள் இல்லாத ஒன்றை- கற்பனையான ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது காத்திரமான இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. அதற்கு காரணம் இலக்கிய படைப்புகள் மனதிலிருந்து, வாழ் அனுபவத்திலிருந்து உருவாகாமல்- தட்டையான ஒரு கற்பனைபிலிருந்து உருவாகிறது- உருவாக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் எப்படி இலக்கியப் படைப்புகைளாக இருக்க முடியும்? இவ்வளவு காட்சி ஊடகங்கள் பெருகிய பிறகும் இலக்கியங்கள் ஏன் எழுதப்படுகின்றன, ஏன் படிக்கப்படுகின்றன? என்ற நோக்கம் புரியாமையின் வெளிப்பாடு இது?
  கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களையும் குற்றம் சொல்லமுடியாது. பாவம் அவர்கள், இன்னும் பண்ணையார்கள், வர்க்கம், விடியல், உதயம், என்ற குளத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அந்தக் குளத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டாகும. அவர்களால் ஒரு போதும் நிஜ வாழ்க்கைக்கு வரமுடியாது. தூய எழுத்தாளர்கள், மகா கலைஞர்கள்- தங்களுடைய இளமைக்கால வாழ்க்கைக்குறித்தே ‘அந்த பொன்னுலகம்‘ குறித்தே இருபது முப்பதாண்டுகள் கழிந்த பின்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமே வாழ்க்கை இல்லை. அது மட்டுமே இலக்கியமில்லை. தமிழக கலாச்சாரத்தின் உன்னதம் என்று எதை உங்கள் கவிதைகளில், கதைகளில், நாவல்களில் எழுதுகிறீர்களோ. அதை நீங்களே கேலி செய்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். நீங்கள் மறக்க நினைக்கும் பாழும் பழைய நினைவுகள்தான் உங்களுடைய கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருக்கிறது என்பதாவது தெரியுமா? இன்றைய தமிழ் இலக்கியப் படைப்புகள் என்பது பழைய ஞாபகங்கள். நினைவுகள் மட்டுமே.
தமிழ் எழுத்தாளர்களே! மூடுண்டிருக்கும் உங்களுடைய கண்களைத் திறவுங்கள். நிகழ்காலத்தைப் பாருங்கள்.
தமிழ்ச்சமூக வாழ்க்கை மின்னலைவிட வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. காற்றைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 


ஆறு மாதத்தில் தமிழ் நெடுங்கணக்கைக் கற்றுக் கொண்டார்கள்

$
0
0

 வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்த அனுபவம் சுகமானது. இங்கிருந்து போன முதல்வருடம் புதிய மாணாக்கர்கள் இல்லை. இரண்டாம் ஆண்டில் 7 பேரும், மூன்றாம் ஆண்டில் 3 பேருமாகப் 10 பேர் தான். அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் கற்பிப்பதுதான் எனது வேலை. தமிழ் நெடுங்கணக்கு ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும் . அதைக் கற்பிக்கும் வாய்ப்பு அந்த வருடம் வாய்க்கவில்லை.

ஆனால் இரண்டாவது வருடம் அந்த வாய்ப்பு கிடைத்தது. முதலாம் ஆண்டு தமிழ்ப் பிரிவில் முதலில் சேர்ந்தவர்கள் 15 பேர். 10 பேர் தான் முதல் பருவம் முடியும்போது தொடர்ந்தார்கள். இப்படி நடப்பது தமிழ்ப் பிரிவில் மட்டுமல்ல. எல்லாப் படிப்பிலும் இப்படித்தான் அங்கே நடக்கும். பாதியிலேயே வேறு பாடங்களுக்குப் போவதும் வேறு பாடங்களில் இருந்து இங்கே வருவதும் முதலாம் ஆண்டில் நடக்கக் கூடியது தான். 

அக்டோபர் தொடங்கி ஜனவரி முடிய நடக்கும் முதல் பருவத்தில் தமிழின் பெயர்ச்சொற்களை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து வினைச்சொற்களுக்குள் நுழைந்தேன். எழுதிக் காட்ட மொழியியலில் பயன்படும் ஒலியனியல் வடிவ எழுத்துகள் தான். அவை பெரும்பாலும் ரோமன் வரிவடிவங்களும் குறிகளும் கொண்டது. அந்த வடிவத்தில் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து சின்னச் சின்ன வாக்கியங்கள் அறிமுகம் ஆனபின் தமிழ் வரிவடிவத்தை அறிமுகம் செய்தேன். ஒலியனியல் வடிவத்திலிருந்து தமிழ் வரிவடிவத்திற்கு மாறும் போது தொடக்க நிலையில் பெரும் தடுமாற்றங்களைச் சந்தித்தார்கள். எழுதுவதற்குச் சிரமமாக இருந்த அதே நேரத்தில் அவற்றை உச்சரிப்பது அவர்களுக்கு எளிமையாக இருந்தது. காரணம் ஒலியனியல் வடிவில் சொல்லிப் பார்த்த சொற்கள் தான். மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்த வரிவடிவ அறிமுகம் ஆறாவது வாரத்தில் முழுமையடைந்து விட்டது. ஆறு வாரத்தில் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் எழுதிப் பழகிக் கொண்டார்கள். அந்தப் பருவம் முடியும் போது சொற்களை எழுத்துக் கூட்டி வாசித்தார்கள். 

வாசிப்புப் பயிற்சி இப்படி என்றால் பேச்சுப் பயிற்சி வேறு வகையானது. முதல் பருவம் முடிவில் சின்னச் சின்னக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களில் பதில் சொல்வார்கள். முதல் வருடம் முடியும்போது சொற்களை சொல்லச் சொல்லத் தமிழ் வரிவடிவத்தில் எழுதிக் காட்டுவார்கள். போலந்தில் மட்டுமல்ல; செக், ப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆஸ்திரேலிய எனப் பல நாடுகளில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் தமிழைத் தமிழ் நெடுங்கணக்கின் உதவியோடு தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கணிணியில் இருக்கும் யுனிகோட் உதவியில் எழுதவும் செய்கிறார்கள். 

அவர்களிடம் போய் எங்கள் ஊரின் முக்கியமான எழுத்தாளர் தமிழ் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்;அதனை ஏற்று உடனடியாக மாற்றி விட்டோம். இனி நீங்கள் தமிழை உரோமன் வரிவடிவத்திலேயே படித்துக் கொள்ளலாம் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. காலனியாதிக்கத்திலிருந்து விடுபடவே இல்லை என்பதைத் திரும்பவும் சொல்கிறீர்களா? என்று கேட்பார்கள். ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் மொழிகளுக்குப் பொதுத் தன்மைகள் அதிகம் இருந்த போதிலும் தனித்துவத்தைத் தக்க வைப்பதற்காகச் சிறப்பு எழுத்துகளையும், குறியீடுகளையும் ஓசைக்குறிப்புகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. பெயர்களைக் கடன் வாங்கும் அம்மொழிகள் தங்களின் வினைச்சொற்களை தங்கள் மொழியின் வேர்களிலிருந்தே உருவாக்குகின்றன. இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் படித்தாலும் சரி சமஸ்கிருதம் படித்தாலும் சரி இன்னொரு இந்திய மொழியைப் படித்துத் தான் ஆக வேண்டும். இவையல்லாமல் அவர்களது தேசமொழியான போல்ஸ்கி. அப்புறம் இன்னொரு ஐரோப்பிய மொழி . முந்திய தலைமுறையினர் படித்தது ரஷ்யன். இப்போது ஜெர்மன், பிரெஞ்சு, அல்லது ஆங்கிலம். ஆம் ஆங்கிலம் முதல் விருப்பம் அல்ல. இம்மொழிகளைப் படிப்பதால் அவற்றின் மூல மொழியான லத்தீனும் அதன் வரிவடிவத்திலேயே அறிமுகமாகி விடுகிறது. இந்தியப் பண்பாட்டு அடையாளம், 

இந்தியக் கல்விமுறை, இந்திய இலக்கியம் என “ இந்திய” தாகம் கொண்டலைந்த ஜெயமோகனுக்குத் திடீர் என்று எப்படி ஒட்டுமொத்த உலகத்திற்குமான எழுத்து வடிவத்த்தைப் பரிந்துரைக்கும் யோசனை வந்தது? தொடர்ந்து ஆச்சரியங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

நிஜம் அல்ல; புனைவு

$
0
0
 05:42  காலை வணக்கம்
05:47 காலை வணக்கம்
 05:49  இந்த எழுத்தின் வழி உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
05:49  நானும் அப்படியே..
 05:50  மலேசியாவில் பிறந்தவரா..? இந்தியாவிலிருந்து போனவரா?
05:53  இரண்டும் இல்லை. மலேசியாவில் இருக்கிறேன். 10 வருடங்களாக இங்கு வாழ்கிறேன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்; அதன் பண்பாடு விருப்பமானது. அதனால் இந்தியப் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கியிருக்கிறேன்

 05:55  உங்கள் முகநூல் முகப்புப் படத்தை வைத்து நீங்கள் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர் என நினைத்தேன்.
05:56  நான் இந்தியா அல்ல; அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை
 05:56  இவ்வளவு பிடிக்குமா இந்தியாவை?
05:57 ஆமாம். இந்தியாவைப் பற்றி..  அவர்களின் பண்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறேன்
 05:58  ஆனால் இந்தியா ஒற்றைப் பண்பாடு கொண்ட நாடல்லவே! பண்பாட்டில் அதற்குப் பல முகங்கள் இருக்கிறது.
05:59 ஆமாம்.. அது  எனக்குத் தெரியும்..
 05:59 பிறகு எந்த அம்சங்கள் உங்களைக் கவர்ந்திழுக்கின்றன.
06:00  மலேசியாவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்; பெரும்பாலும் தமிழர்கள்
 06:01 உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
06:01 அவர்கள் (இந்தியர்கள்) தங்களின் பாரம்பரியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதைப் போன்ற அக்கறையை மற்ற குழுக்களிடம் - சமூகத்தினரிடம் காண முடியவில்லை. என் பெயர் ஸோபியா ;வயது முப்பத்தைந்து
 06:02 ராமசாமி வயது 55. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; இலக்கியம் கற்பிக்கிறேன்

06:04 நல்லது. வாரக் கடைசியிலும் வேலை செய்வீர்களா?
 06:06 இல்லை. இரண்டு நாள் விடுமுறை. என்ன செய்கிறாய்?
06:07 நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி; சத்துணவு பற்றிய ஆய்வு
 06:07 எந்தப் பல்கலைக் கழகத்தில்
06:08 மலேசியாவில், புத்ர பல்கலைக்கழகத்தில்
 06:09  என்னைப் போல ஒரு பேராசிரியராக ஆவதற்கு என் வாழ்த்துகள்
06:10 பேராசிரியராக ஆவது ரொம்பக் கடினமானது. நீங்கள் தமிழா
 06:10 ஆமாம் நான் தமிழ் தான்
06:11 இந்தியாவிலிருக்கும் மற்ற குழுக்களை விடத் தமிழர்கள் ரொம்பவும் மரபானவர்கள் - நான் இப்படி நினைப்பதும் சொல்வதும் தவறா?
 06:13  மரபின் மீது பற்றுக் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்வதில் தமிழர்கள் விருப்பம் கொண்டவர்கள் தான். ஆனால் அவர்களைவிடக் கேரளத்தவர்கள் மரபின் மீது அதிகம் பற்றுக் கொண்டவர்கள் என்பது எனது கருத்து. (கேரளா என்பது மலையாள மொழி பேசும் மாநிலம்) உனது தாய் மொழி இனம் பற்றிச் சொல்லலாமா?
06:14 நான் துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்டவள்
 06:15 வேலைக்காக மலேசியாவுக்கு வந்தவரா? வேறு காரணங்களுக்காகவா?
06:16  படிப்பதற்காக
 06:17  உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ஸோபி என்று அழைக்கலாமா?
06:17 அப்படி அழைத்தால் மகிழ்வேன்
 06:17 நன்றி ஸோபி எனும் அன்புக்குரிய நங்கையே
06:18 உங்கள் நட்புக்கு நல்வரவு பேராசிரியரே
 06:19 நண்புக்கு இடையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி விலகிக் கொள்கிறாய்
06:19 எந்தச் சொல்?
 06:19 பேராசிரியர்
06:20
எப்படி நான் அழைப்பது ?
 06:21 உன்னை அழைக்க ஸோபி என்ற சொல்லைத் தேர்வு செய்தேன். அதில் ஒரு மென்மை இருக்கிறது. அது போலொன்றை நீ தேர்வு செய்யலாம்.
06:21 ராமி
 06:22 உன் விருப்பம் ; ஆனால் இது பெண்மையைக் குறிக்கும் சொல்
06:22 மன்னிக்க. எனக்கு அது தெரியாது
 06:22 ஸோபிக்கு இந்தியாவைப் பார்க்கும் ஆசை இருக்குமே
06:23 ஆம்; நிச்சயமாகப் பார்க்க வேண்டும். எப்படி உங்களை அழைக்கலாம்?
 06:23 உனது முதல் விருப்பப்படி..
06:23 ரமஸா..? இது பெண்பால் அடையாளம் கொண்டதல்லவே
 06:24 ம்ம்.. இவ்வளவு நீளம் வேண்டுமா..?
 முதல் ஒலியை நீக்கி விடுகிறேன். மஸா என்று.. மஸா இருக்கலாமா?
06:24 ம்ம் ..சரி அப்படியே அழைக்கிறேன்
 06:25 ஸோபியின் விருப்பங்கள். ஆசைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
06:26 எனக்கு விருப்பமானவை பயணங்கள். எனக்கான தொழில் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  அதன்பிறகு ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்
 06:28  பயணங்கள் எனக்கும் விருப்பமான ஒன்று தான் ஏன் திருமணத்தை விரும்பவில்லையா?
06:29  ஏற்கெனவே திருமணம் ஆனவள் தான். 9 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து ஆகி விட்டது
 06:30 இன்னொரு ஆணைக் கணவனாக ஏற்றுக் கொள்ள அச்சமாக இருக்கிறது
06:30  ஆமாம்ம்ம்..
 06:31 விவாகரத்தும் மறு கல்யாணமும் ஐரோப்பிய வாழ்க்கையில் இயல்பானது
06:32 ஒரு ஆணை கணவனாக ஏற்றுக் கொள்வதற்குப் பதில் நண்பனாக ஏற்றுக் கொள்ளலாம். இது தமிழர்களுக்கு இயல்பானதா?
 06:33  ஹ் ஆ... ஆ.. நீ ஏற்கெனவே சொல்லி விட்டாய். தமிழர்கள் ரொம்பவும் மரபானவர்கள் என்று. அவர்கள் அதற்கான முயற்சியே செய்வதில்லை
06:34 அதாவது விவாகரத்து அவர்கள் விரும்பும் ஒன்றல்ல என்கிறீர்கள். ஆனால் கணவனாகவும் மனைவியாகவும் இருப்பதைப் பற்றி விவாதித்துத் தானே ஆக வேண்டும்
 06:35 தமிழர்கள் விவாகரத்தை அதிகம் விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்கள்
06:36  தமிழ் ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு உண்மையாக இருக்கிறார்களா? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? திருமணம் செய்து கொண்டு இன்னொரு பெண்ணைத் தோழியாக நினைத்துக் கொள்ளவும் தயாரா இருப்பார்களோ?
 06:37 பொதுவாக மனைவிகளுக்கு உண்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் பல பெண்களின் நட்புக்காக ஏங்கவே செய்கிறார்கள்
06:38  உண்மையாகவா சொல்கிறீர்கள் .வாய்ப்புக் கிடைத்தால் தோழிகளை விரும்புவார்கள் என்றா சொல்கிறீர்கள்? வாழ்க்கையில் இடமளிப்பார்கள் என்றா சொல்கிறீர்கள்?
 06:39 ஆமாம். இது பொதுவான ஒன்று தான். அதே நேரத்தில் மறைக்கவும் முயற்சிப்பார்கள்
06:39 ஆனால் பல பேர் பெண் நட்புகள் குறித்து ஆசைப்படுகிறவர்களாகப் பார்க்கிறேன். அதேநேரத்தில் அச்சப்படுகிறவர்களாகவும் பார்க்கிறேன். அச்சம் அவர்கள் பார்க்கும் வேலை காரணமாக ஏற்படுகிறது
 06:40  மரபுக்கும் நவீன மனநிலைக்குமான ஊசலாட்டப் பிரச்னை . நவீன மனிதனாக இருப்பதாகப் பாவனை செய்வதால் ஏற்படும் சிக்கல்..
06:40  நவீன மனிதன் என்றால்
 06:42  ஆமாம். ஒருத்திக்கு ஒருவன் என்பது மரபான கருத்தியல் ; ஆனால் நவீன மனிதன் தன் வாழ்க்கையில் பலருக்கும் பலவிதத்திற்கும் இடமுண்டு எனக் காட்ட விரும்புகிறான்
06:43 தமிழ் ஆண்கள் அதிகமும் தமிழ்ப் பெண்கள் அல்லது இந்தியப் பெண்கள் மேல் ஆர்வமாக இருக்கிறார்களா? அல்லது அயல் தேசத்தினரிடமா? நான் பார்த்தவரையில் தமிழ் ஆண்கள் எளிமையாக ஆடை உடுத்திய பெண்களையே விரும்புகிறார்கள் என்பது என் கருத்து. அதிகம் ஒப்பனை செய்து கொண்ட, அலங்காரமாக ஆடை உடுத்திய பெண்களை நாடுவதில்லை என்று கருதுகிறேன்.
 06:46  தமிழ் ஆண்கள் தமிழ்ப் பெண்களையே திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் வேற்று மொழி அல்லது நாட்டுப் பெண்களைத் தோழிகளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
ஸோபி உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்
06:47 வேலை இருக்கிறதென்றால் நிறுத்திக் கொள்வோம். பிறகொரு நாள் உரையாடலாம்.
 06:47 எனது மன்னிப்பு அதற்காக அல்ல.
06:48 எனது கேள்விகளைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே!
 06:48 விவாகரத்து செய்து கொண்ட ஒருத்தியிடம் திருமணம் பற்றிய பேச்சு  புதிய உணர்வுகளை உண்டாக்கி விடக் கூடும் என்பதால் மன்னிப்புக் கேட்க நினைக்கிறேன்.
06:49  அதற்கான வாய்ப்புகள் இல்லை. என்னைச் சுற்றி நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இதையெல்லாம் கேட்கிறேன்.
 06:49 அப்படியானால் தொடரலாம் ஸோபி
06:50  அவர்களின் பண்பாடு பற்றி அறியும் விருப்பம் தான். இவ்வளவு பேசியது போதும் என நினைக்கிறேன். பேச்சை மாற்றிக் கொள்ளலாம்
 06:50 ஹ்ஹா. ஹ்ஹா..
06:52 பொதுவாக வாரக்கடைசியில் என்ன செய்வீர்கள்?
 06:53 பெரும்பாலும் வாரக்கடைசிகளில் ஊர் சுற்றுவேன்
06:54 எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு? அவர்களோடு நேரம் செலவழிப்பீர்களா?
 06:54 ஒரு மகள். ஒரு மகன் இரண்டு பேரும் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை நான் இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. ஆய்வைத் தவிர வேறு எதாவது செய்கிறாயா ஸோபி?
சூரிய வெளிச்சத்தைத் தடுக்கும் கண்கண்ணாடிகளுக்கும் உதட்டுச் சாயக் கட்டி ஒன்றிற்கும் விளம்பர மாடலாக இருக்கிறேன்
06:57 வாழ்க்கை ரொம்பக் கடினமானது.. அதிலும்  தனிமையில் இருக்கும் பெண்களுக்கு..
 06:57 ஆமாம் எனக்குத் தெரியும்.
06:58 மாடலிங் தான் எனக்கு இங்கே கிடைத்த ஒரே வாய்ப்பு
 06:59 மாடலிங் மலேசியாவில் கடினமான ஒன்றா? தனிமை பெண்ணுக்கு மட்டுமல்ல; இருபாலாருக்கும் சுமையும் துயரமும் தான்.
07:00 இங்கே மற்ற வேலைகளை எதிர்பார்ப்பது கடினமானது. அதனால் மாடலிங் எனது தேர்வாகி விட்டது. மலாய்க்காரர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமானது அல்ல. அவர்கள் மோசமான இனத்துவவாதிகள்
 07:02 ஆமாம் நானும் மலேசியாவைப் பற்றிக் கொஞ்சம் படித்திருக்கிறேன். ஸோபிக்கு துருக்கி தான் சொந்த நாடா? ஐரோப்பாவா?
எனக்கு துருக்கி தான் சொந்த நாடு
 07:05 அப்படியானால் மலேசியாவில் வேலை கிடைப்பது சிரமம் தான்.
07:06 என்னோடு நேரம் செலவழித்து உரையாடியதற்கு நன்றி. நான் நிறைய கேள்விகள் கேட்டு விட்டேன். மன்னிக்க..
 07:07 ஒரு பேராசிரியராக எப்போதும் நிறையக் கேள்விகளை எதிர்பார்ப்பவன் நான். என்னோடு உரையாடியதற்காக ஸோபிக்கு ரொம்பவும் நன்றி
07:07 நேரம் அனுமதிக்கும்போது தொடர்ந்து உரையாடலாம்.
 07:07 நீங்கள் ஒரு கனவான். இந்த வார இறுதி மகிழ்ச்சியாக இருக்கட்டும். நன்றிகள் பல.
 07:08 அப்படியே ஆகட்டும் உனக்கும். விடை பெறுவோம் 

காணாமல் போன ராமசுவாமி

$
0
0
நேற்று (17-12-2013)மாலைபாளையங்கோட்டைசேவியர்கல்லூரியின்லயோலாஅரங்கின்முன்பாகவியாபாராமாயணம்என்னும்நாடகநிகழ்வொன்றைப்பார்த்தேன். அக்கல்லூரியில்தகவல்தொடர்பியல்துறைஏற்பாடுசெய்திருந்தது. அதனோடுமேலும்சிவசுவும் , சித்திரமும்கைப்பழக்கம்கதிரும்இணைந்திருந்தார்கள். பாளையங்கோட்டையில்இவர்களைப்போன்றதொடர்பாளர்களின்இணைப்புகளால்தான்பலநிகழ்வுகள்நடக்கின்றன. அதன்மூலம்நிறுவனங்களுக்குப்பெருமையும்ஏற்பாடுசெய்பவர்களுக்குச்சிலதகுதிகளும்உண்டாகின்றன. அதைப்பற்றிஎப்போதாவதுபேசலாம். இப்போதுநாடகத்தைப்பற்றி .


நாடகப்பேராசிரியர்மு.இராமசுவாமிஎழுத்தாக்கத்தைராஜிவ்கிருஷ்ணன்இயக்கியிருப்பதாகக்குறிப்புகள்சொல்லப்பட்டன. நடிகர்களில்ஒருவர்மு.இராமசுவாமி; இன்னொருவர்ஆனந்தசாமி. இசைமணிகண்டன். மேடைநிர்வாகம்சுதர்சன்.

தமிழ்நாட்டின்வடக்கேதொடங்கிதெற்குநோக்கிப்பயணம்செய்துகொண்டிருக்கும்அந்தநாடகத்தின் 20 ஆவதுமேடையேற்றம்எனகதிர்அறிமுகம்செய்தஅந்தநாடகநிகழ்வு, 55 நிமிடங்கள்நிகழ்ந்தது. தரைத்தளத்திலேயேநிகழ்வுகளைவிரித்தநாடகக்காட்சிகள்எனக்குத்தெரியாதுஎனக்கருதிபின்வரிசையில்அமர்ந்திருந்தநான்கொஞ்சநேரம்நின்றபடியேபார்த்துக்கொண்டிருந்தேன். 10 நிமிடத்தில்அப்படிநின்றுகொண்டேபார்க்கவேண்டியதில்லைஎன்றுதோன்றியது. காட்சிமாற்றத்தைஉரையாடல்மாற்றத்தைக்கொண்டேஉருவாக்கிக்கொண்டநாடகம், வசனத்தையேமுழுமையாகநம்பிஇருந்தது. உரையாடல்களின்ஒலியொற்றுமை, அதன்வழியாகஉருவாகும்- உருவாக்கும்- நிகழ்காலஅரசியல்அரசியல்அர்த்தம்பார்வையாளர்களிடம்அவ்வப்போதுசிரிப்பொலியைஉருவாக்கியது. 

நிகழ்காலப்பன்னாட்டுவியாபாரம் , விற்பதற்கானபண்டத்தைமட்டும்உற்பத்திசெய்யவில்ல, வாங்குபவர்களையும்அதுவேஉற்பத்திசெய்கிறது; வாங்கவேண்டும்என்றமனஎழுச்சியையும்விளம்பரங்களின்வழிஉற்பத்திசெய்கிறது. அதற்கானஅழிவனபற்றியும், அழிப்பனபற்றியும்அதற்குஎந்தவிதஅக்கறையும்இல்லை; குற்றவுணர்வும்கிடையாதுஎன்னும்கட்டுரைக்கானகருத்தைஉரையாடல்வழிச்சொல்லிக்காட்டியஇந்தநாடகத்தைநிகழ்வாகத்தான்நடத்தவேண்டும்என்பதில்லை. முறையானஒலிப்பதிவுக்கருவிகளைக்கொண்டுபதிவுசெய்துகுறுந்தகடுகளாகவேஎல்லாருக்கும்அனுப்பிவைக்கலாம். நேரம்கிடைக்கும்போதுபோட்டுக்கேட்டுக்கொள்ளலாம். 

இந்தநாடகத்தின்முக்கியமானபங்கைச்செய்திருப்பவர்எனக்குநாடகஅறிவை - அரங்கச்செயல்பாடுகளின்காத்திரமானபணிகளை, பங்களிப்பைச்சொல்லிக்கொடுத்தமு.ராமசுவாமி. கண்வழிக்காட்சிகளுக்குமுக்கியத்துவம்கொடுக்கும்கலைவடிவம்அரங்கியல்கலைஎனச்சொல்லித்தந்தமு.ராமசுவாமியைப்பார்க்கவேபோனேன். அவர்இந்தநாடகமேடையேற்றத்தில்காணாமல்போயிருந்தார். 

கலகக்காரர்தோழர்பெரியார் - என்றநாடகத்திலேயேகாணாமல்போனமு.ராமசுவாமியைஇந்தநாடகத்தில்தேடியதுஎன்னுடையதவறுதான். காணாமல்போனவர்அவராகவேதிரும்பக்கிடைப்பதுவரைதேடுவதைநிறுத்திக்கொள்வதைத்தவிரவேறுவழியில்லை.

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

$
0
0
எல்லாத் துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும் பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது. விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும் விருதுக்குப் பின்னால் இருக்கிறது.

வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட அமைப்புகளும் நிறுவனங்களும் தமிழில் எழுதும் படைப்பாளிகளுக்கு வழங்கும் விருதுகள் எழுப்பும் பரபரப்பையும் கவனக் குவிப்பையும் விடச் சாகித்ய அகாடெமி விருது வழங்கப்படும்போது உண்டாகும் பரபரப்பும் கவனக் குவிப்பும் கூடுதலானவை என்பதில் சந்தேகமில்லை. “இது ஜனநாயக இந்தியக் குடியரசு அரசு தரும் விருது” என்பதுதான் காரணமாக இருக்க முடியும். அரசு தரும் விருது மக்கள் தரும் விருதாக அர்த்தப்படும்போது கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கவே செய்யும். கொற்கைஎன்ற நாவலை இந்த ஆண்டின் விருதுக்கான படைப்பாக அறிவித்ததன் மூலம் இந்திய அரசின் கலை பண்பாட்டின் துறையின் கவனத்தைத் தன் மீது குவித்துக் கொண்டவராக ஆகி இருக்கிறார் ஜோ.டி.குருஸ்.
இலக்கியப் பரப்பின் கருத்தியல் மோதல்களின் களமாக இருக்கும் சிறுபத்திரிகை/ இடைநிலைபத்திரிகைகளின் பின்புலம் எதுவும் இல்லாமல் நேரடியாகத் தனது நாவல்களின் வழி தன்னை நிலைநாட்டிக் கொண்டவர் ஜோ.டி.குருஸ். அப்படியொரு நிலைநிறுத்தலுக்கு வாய்ப்பாக இருப்பது அவரது படைப்புலகம் மட்டுமே என உறுதியாகச் சொல்லலாம். கொற்கை குருஸின் இரண்டாவது நாவல். அவரது முதல் நாவல்ஆழிசூழ் உலகு.  தமிழக அரசின் விருதைப் பெற்ற நாவல் அது. எழுதிய இரண்டு நாவல்களையும் மாநில, மத்திய அரசுகளின் விருதுகளைப் பெறும் படைப்புகளாகத் தந்துள்ள ஜோ.டி.குருஸின் இடம் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தனித்த அடையாளம் கொண்ட ஒன்று.
ஆதித் தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் தனித்துவமான அடையாளம் அதற்குள் செயல்படும் ஐந்திணைப் பாகுபாடு. திணை என்பது ஒருவிதத்தில் கருத்தியல் குறியீடாக இருந்தாலும் பருண்மையான வெளிப்பாடாக இருப்பவை அவற்றின் நிலவியல் பின்னணிகள். மலை, காடு, வயல், கடல், மணல் என ஒவ்வொரு திணையும் அவற்றிற்குரிய நிலவியல் பின்னணியால் தான் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தொடர்ச்சி தமிழில் அவ்வப்போது விட்டுவிட்டுத் தலைகாட்டுவதுண்டு. தலைகாட்டும் அந்த அடையாளம் எப்போதும் கொண்டாடப்படும் ஒன்றாகவும் கவனிக்கப்படும் ஒன்றாகவும் இருந்திருக்கிறது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றை நுட்பமாக வாசிப்பவர்கள் அறியக் கூடும். அந்தத் தொடர்ச்சியின் காத்திறமான அண்மை வெளிப்பாடுகள் தமிழ் நாவல் பரப்பில் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன
ஐவகைத் திணைசார் வாழ்க்கையில் அதிகம் எழுதப்படாத பரப்பாக இருப்பது நெய்தல். கடல் என்னும் நீர்ப்பரப்பும் கடல்சார்ந்த மீன்பிடித் தொழிலும் தமிழ் எழுத்திற்குள் அதன் சரியான அர்த்தத்தில் எழுதப்படாமலேயே இருந்தன. கடல் சார்ந்த வாழ்க்கையைக் களனாகக் கொண்டு அலைவாய்க்கரை, கடல்புரத்தில், ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, உப்பு வயல்  எனச் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை உருவாக்க நினைத்த படைப்பனுவங்கள் வேறானவை. முன் நிறுத்தப்பெற்ற முறைகளும் வேறானவை. அந்த நாவல்களின் ஆசிரியர்கள் கடல் வாழ்க்கையை அந்நியர்களின் பார்வையில் - அந்த சமூகத்திற்கு வெளியே இருந்து பார்த்துச் சொல்வதன் மூலம் வாசகர்களையும் கடல் வாழ்க்கையில் இருக்கும் துயாத்தையும் வலியையும் சிக்கல்களையும் கவனிக்கும்படி தூண்டியவர்கள். அந்த வகையில் அவர்களின் நோக்கங்கள் கொஞ்சம் விலகலானவை. ஜோ.டி.குருஸ் தனது நாவல்களில் அந்நியராக இல்லாமல் உள்ளிருப்பவராக இருக்கிறார் என்பது முக்கியமான வேறுபாடு. தனது சமூகத்தின் உள்ளுக்குள் இருந்து பேசுபவனின் எழுத்து அந்த சமூகத்தின் நம்பத் தக்க குரலாக இருக்க முடியும். அவன் பயன்படுத்தும் மொழி அதனை உறுதியாக்கும் வேலையைச் செய்யும். அவன் சொல்லும் வரலாறும், வரலாற்றை இயக்கிய காரணிகளும் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தும். இவை அனுபவம் சார்ந்த இலக்கிய ஆக்கத்தின் பொதுத் தன்மைகள் மட்டுமல்ல; சாதகமான கூறுகளும் கூட. 
ஜோ.டி.குருஸின் ஆழிசூழ் உலகும் கொற்கையும் அளவில் பெரிய நாவல்கள். 1174 பக்கத்தில் காலச்சுவடு பதிப்பகம் 2009 இல் வெளியிட்ட கொற்கை, தமிழினி பதிப்பகம் வெளியிட்ட ஆழிசூழ் உலகைவிட இரண்டு மடங்கு பெரியது. அளவில் பெரியது என்ற குறிப்பைப் பக்க அளவை மட்டும் குறிப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. நாவலின் நிலப் பரப்பையும் காலப் பரப்பையும் அதற்குள் உலவும் மனிதர்களின் எண்ணிக்கையின் அளவையும் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். 1914 தொடங்கி 2000 வரையிலான 86 ஆண்டுக்கால கதை என்ற குறிப்பை கொற்கை நாவலில் வலிந்தே தருகிற குருஸ் ஆழிசூழ் உலகும் நாற்பதாண்டுக் கால வரலாறு (1945-1985) என்பதைச் சொல்ல விரும்பியிருக்கிறார். ஆண்டுக்கணக்குகள் மட்டுமல்லாமல், பரம்பரைக் கணக்குகள், படங்கள் போன்ற குறிப்புகளையெல்லாம் கூடக் கொற்கை நூலில் இடம் பெறச் செய்துள்ளார். இந்தக் குறிப்புகள் எல்லாம் வாசகனை நாவல் வாசகனாக நினைக்கத் தூண்டாமல் வரலாற்று நூலின் வாசகன் என்ற எண்ணத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இதை அவரும் அவரது பதிப்பாளரும் உணர்ந்தே செய்திருப்பார்கள் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தக் குறிப்புகள் தவிர்க்கப்பட்டிருந்தால் வரலாற்றை நாவலாக வாசிக்கும் அனுபவத்தைக் கூடுதலாக ஆக்கியிருக்க முடியும்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பரதவர்களின் -குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்ட மீனவக் கிராமங்களின்- தொலைந்து போன பொருளாதார, சமூக வாழ்க்கையின் பின்னணியில் எவையெல்லாம் இருந்தன என்பதைப் பற்றிப் பேசுவதற்காக ஐரோப்பியக் காலனி ஆட்சியாளர்களின் வருகையைப் பற்றிய விவாதங்களைப் பல தளங்களில் இரண்டு நாவல்களிலும் எழுப்பியுள்ளார் குருஸ். இந்த விவாதங்களை கிராமம் சார்ந்த - நிறுவனத் தன்மை இல்லாத- உள்ளூர் மரபைச் சிதைத்த கத்தோலிக்க நிறுவனச் சமயத்தின் செயல்பாடுகள் என்பதாக வாசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் இருக்கும் கிறித்தவசமயம் x இந்து சமயம் என்பதாக வாசித்தால் இரண்டு நாவல்களின் நோக்கத்தின் மீது வேறுவிதமான கேள்விகள் எழுப்பபடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்த இரண்டு நாவல்களையும் வாசித்த விமரிசகர்கள் அப்படியொரு திசையை - அடையாளத்தை இந்த இரண்டு நாவல்களின் மீதும் பூசியிருக்கிறார்கள் என்பதால் இந்தக் குறிப்பை இங்கே சொல்ல நேர்ந்தது.
ஜோ.டி.குருஸின் இரண்டு நாவல்களையும் வாசித்த நான் உலகமெங்கும் உருவாகி இலக்கியப் பரப்பில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருக்கும் அடையாள அரசியலின் சரியான தமிழ் வெளிப்பாடுகளாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்தியச் சூழலில் காலனியாதிக்கம் முடிந்த பின்பும் அதன் நீட்சிகளும் அழுத்தங்களும் வேறு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும்- நுழைந்து கொண்டிருக்கும் நிலையில் தாங்க முடியாத துயரத்தோடு தனது குரலை உயர்த்தும் கடல்சார் மனிதர்களின் ஓலமாகவே குருஸின் நாவல்களில் வரும் மனிதர்களின் குரலை அடையாளப்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புகிறேன். இதன் காரணமாகவே இவ்விரண்டு நாவல்களும் உலக இலக்கியப் பரப்பிற்குள் இடம் பிடிக்கக் கூடியன எனக் கருதுகிறேன்
அங்கீகரித்த சாகித்ய அகாடெமிக்கும் அங்கீகாரம் பெற்ற ஜோ.டி.குருஸிற்கும் வாழ்த்துகள்.

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

$
0
0
 ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.
ஊரின் மேற்கோரத்தில் அவர் வீடு இருந்தது. அதனால் மேற்கு வலசல் ராமையா என்று அவரை அழைப்பார்கள். கையெழுத்துப் போடத் தெரிந்த அவர் ஒருமுறை ராமசாமி என்று எழுதினார். அப்போது தான் எனக்கு அவரது பெயரும் எனது பட்டாப் பெயரும் ஒன்று என்று தெரிந்து கொண்டேன். அவர் கதை சொல்லும் விதத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பத்து நிமிடத்தில் சொல்லி முடிக்கக் கூடிய கதையைப் பத்து மணி நேரம் சுவையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் கதை சொல்லும் முறையில் இன்று சொல்லும் நாடக உத்திகள் இருந்தன. கதை கேக்கும் நபர்களைப் பங்கேற்க வைப்பது; கேட்பவர்களின் மனதைக் கதாபாத்திரங்களின் மனதோடு இணைத்துச் சொல்லுவது; இடையில் விலகிச் சென்று ஊரில் நடக்கும் ரகசியமான செயல்களை அதில் புகுத்தி விடுவது என்றெல்லாம் விரிக்கக் கூடியவர்.

இன்னொரு பக்கம் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருப்பான். நான் படித்த புத்தகங்களில் மிகப் பெரியதும் இன்றும் நினைவில் இருப்பது மகாபாரதத்து விராட பர்வம் . விராட பர்வத்தையும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகனையும் தான். அதை எழுதியதால் தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்று அழைக்கப்பட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. என்னுடைய சின்ன தாத்தா- அம்மாவின் சித்தப்பா படுத்த படுக்கையாக இருந்தார். பேச்செல்லாம் இல்லை. காது கேக்குமா என்பது சந்தேகம் தான். என்றாலும் விராடபர்வத்தைக் கேட்டால் சாவு நல்ல சாவாக அமையும் என்றும், சொர்க்கம் போகும் வாய்ப்புக் கூடுதலாகும் என்றும் நம்பியதால் ஒவ்வொரு நாளும் யாராவது அவர் அருகில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது நான் விராட பர்வம் முழுவதையும் வாசித்தேன். கேட்டு விட்டு தனது ஆயுளை நீட்டித்துக் கொண்ட தாத்தா அரையாண்டுத் தேர்வில் சக்கரவர்த்தித் திருமகன் படிக்கச் சொன்னார். முழுப் பரீட்சை விடுமுறையில் பாரதக் கதையின் ஆதிபர்வத்தைத் தொடங்கினேன். அதை முடிக்கும் முன்பே அவரது கதை முடிந்து விட்டது. ஒருவேளை ஒன்றிரண்டு வருடம் அவர் படுத்த படுக்கையாக இருந்திருந்தால் இந்தியாவின் கதைக் களஞ்சியமான மகாபாரதக் கதை முழுவதையும் அப்போதே வாசித்து முடித்திருப்பேன். இவற்றையெல்லாம் வாசித்த போது ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம்.

அப்புறம் அம்மாவின் சின்னம்மாக்கள் ரெண்டு பேர் நீண்ட காலம் விதவைகளாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் எங்கள் உறவினரில் யாரும் வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு விதவைக் கோலத்தில் வாழ்ந்ததில்லை. விதவை வாழ்க்கையின் கடைசி அடையாளங்கள் அவர்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவர்களது விதவை வாழ்க்கையின் பதிலீடாகவே அவர்களுக்குக் கதை கேட்டல் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.. அவர்கள் அம்மாவின் சின்னம்மாக்கள் என்ற உறவுக்கும் மேலாக அப்பாவுக்கும் சித்தப்பா வழி அக்காமார்களும் கூட. இருவருமே ஒரே புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரே நாளில் விதவைகளானவர்கள். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு வாசிக்கத் தெரியும். அவரது தந்தைக்கு இரண்டு பேர் மட்டும் தான் பிள்ளைகள். ஆண் வாரிசு எதுவும் இல்லை என்பதால் அவரது நிலபுலன்களுக்கும் அவர் சேர்த்து வைத்திருந்த புராண, இதிகாசப் புத்தகங்களுக்கும் அவர்கள் தான் வாரிசுகள். அவர்களுக்கம் நான் பல நாட்கள் கர்ணன் சண்டை, அசுவமேத யாகம், கிருஷ்ணன் தூது, அல்லியரசாணி மாலை ,சுமந்திரன் களவு மாலை போன்ற பெரிய எழுத்துக் கதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். எங்கள் வீடுகளில் இருந்த புத்தகங்களில் ஒன்று கூட சிவனை மையப் படுத்திய புத்தகங்கள் இருந்ததில்லை. வைணவக் குடும்பங்கள் என்பதற்கான அடையாளங்களாக இவை பெரிய டிரங்க் பெட்டிகளில் அடுக்கப் பட்டிருந்தன.

மிகச் சின்ன கிராமம் என்றாலும் பாரதக்கதையின் தொகுப்புக்கள் எங்களூர்ச் சாவடியில் ஒன்றும் சில வீடுகளிலும் இருந்தன என்பது முக்கியம்.எனது தாய்மாமாவுக்கு முக்கியமான வேலையே பாரதம் படிப்பதுதான். நல்ல குரல்வளத்தோடு ஜனமே ஜய மகராசனே எனத் தொடங்கி அவர் பாரதம் படிப்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
இப்படியெல்லாம் பாரதக் கதைகளைக் கேட்டும் வாசித்தும் வளர்ந்தவன் தான் என்றாலும் என் காலத்து மனிதன் ஜெயமோகன் -தன்னை நவீன வியாசனாக மாற்றிக் கொண்டு எழுதிப் போகும் வெண்முரசின் முதல் ஐந்து கூறுகளையும் இன்று ஒருசேர வாசித்துப் பார்த்தேன். என்னால் இப்படித்தான் வாசிக்க முடியும். எனது 35 வருட வாசிப்பு வாழ்க்கையில் ஒரு கதையைக் கூட தொடராக நினைத்து விட்டுவிட்டுப் படித்ததில்லை. மொத்தமாகப் படிப்பதுதான் எனது வழக்கம். அதில் ஒரு சிறுமாற்றமாக ஒவ்வொரு வாரமும் மொத்தமாக ஆக்கிக் கொண்டு ஜெயமோகனின் வெண்முரசை வாசிக்கப் போகிறேன். நண்பர்களே நீங்கள் உங்கள் விருப்பம்போல வாசிக்கலாம்.


===========================================
நன்றி அ.ரா
ஆனால் சட்டென்று ஒரு வருத்தம். எல்லாமே கடந்தகாலமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எதுவுமே இல்லையா? எவருமே வாசிப்பதில்லையா?
ஐந்நூறு வருடம் முன்பு  அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் ஆரம்பித்த பேரியக்கம் மகாபாரத பிரவசனம். கிராமம் தோறும் பாரதமண்டபம் கட்டுவித்து கதைசொல்லிகளுக்கு கோயில் உரிமையும் அளித்து தொடங்கப்பட்டது. தென்னகத்தில் அது ஒரு பெரிய சலனம்
உங்கள் வரிகளைப்பார்த்தால் அதற்கு திரைவிழுந்துவிட்டது என்றல்லவா தோன்றுகிறது
ஜெ

=================================================
அன்புடன் ஜெயமோகனுக்கு
ஆமாம்.. எல்லாம் கடந்த காலமாகி விட்டது தான். எட்டாம் வகுப்புக்குப் பிறகு நான் விடுதியில் தங்கிப் படிக்கத் திண்டுக்கல் போய்விட்டேன். எங்கள் ஊரில் இருந்த பாரதக் கதைகளின் இடத்தை எம்ஜிஆரின் கதைகள் பிடித்துக் கொண்டன. ஊர் முழுக்க எம்ஜிஆர் தான் நிறைந்திருந்தார். எம்ஜிஆர் சினிமா, எம்ஜிஆர் அரசியல்,எம்ஜிஆர் பாட்டு, எம்ஜிஆர் காதல், எம்ஜிஆர் சட்டை, எம்ஜிஆர் காதலித்த பெண்களின் பாவாடை, தாவணி, சடை என எல்லாம் எம்ஜிஆர் மயம்.. 
நான் பள்ளிப்படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரிக்குப் போன போது நவீனத்துவ மனிதனின் நெடி எனக்குள் நுழைந்தது. பழைய கதைகளுக்குப் பதில் புதுக்கதைகள், யதார்த்தக் கதைகள், புரட்சிக் கதைகள். சோதனைக்  கதைகள், பரிசோதனைக் கதைகள் , வாசிப்பே காரியார்த்தமாக ஆகிப் போன பிறகு திரும்பவும் என்னை பாரதக் கதைகளுக்குள் இழுத்துப் போகிறீர்கள். 
திரும்பவும் நன்றி

அ.ரா.


நள்ளிரவு ரயில் பயணங்கள்

$
0
0


கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.
நள்ளிரவு 01.15 க்குத் திருப்பத்தூர் போய்ச் சேரும்; ஆனால் 12.30 -க்குக் கண் விழித்துக் காத்திருங்கள் என்றார் பயணச்சீட்டுப் பரிசோதகர். பத்து மணியிலிருந்து கண்ணை மூடிப் பார்த்தும் விழிப்பதற்கான வாய்ப்பையே தரவில்லை கண் இமைகள். அவை மூடினால் தானே திரும்பவும் திறக்க முடியும். மூடாத கண்களோடு திருப்பத்தூரில் இறங்கியபோது தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் நண்பர் பார்த்திபராஜா ரயில் நிலையத்தில் காத்திருந்தார். குளிரண்டா ஆடைகளோடு வாருங்கள் என்ற எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதை உறுதி செய்து கொண்டு அழைத்துப் போனார். 

மறுநாள் அவரது ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “செவ்வியல் இலக்கியங்களில் புரவலரும் புலவரும்” என்ற பொருளிலான பயிலரங்கில் நான் பேச வேண்டும். தலைப்பை முழுமையாக ஏற்றுப் பேசினேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் செவ்வியல் கவிதை தொடங்கி நிகழ்காலக் கவிதை வரை வாசிப்பதற்கான தமிழ் மரபுசார்ந்த நவீன வாசிப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்தினேன். பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றார்கள் என்பது தெரிந்தது. நிறைவில் அதை உறுதி செய்வது போலப் பலரும் உரையாடியதிலிருந்தும் உணர முடிந்தது. 
திருப்பத்தூருக்கு வந்த அந்த நள்ளிரவுப் பயணம் போலவே அங்கிருந்து சென்னைக்குப் போன பயணமும் நள்ளிரவுப் பயணமாக ஆகி விட்டது. 12 மணிக்கு ஏறி அதிகாலை 04.15 -க்குப் பெரம்பூரில் இறங்கும் திட்டம். இந்த முறை இமைகள் என்னை ஏமாற்றி விட்டன. அவ்வப்போது விழித்து மூடிக் கொண்டே இருந்தன. நான்கு மணிக்கு வைக்கப் பட்டிருந்த நினைவூட்ட ஓசை ஒலித்தபோது ரயில் பெரம்பூரைத் தாண்டி பேசின்பிரிட்ஜ் போய் விட்டது. நல்ல வேளை பரிசோதனை எதுவும் இல்லை. செண்ட்ரலில் இறங்கித் திரும்பவும் நகர ரயில் அம்பத்தூர் பயணம். இந்த ராத்திரியும் தூக்கம் தொலைந்த ராத்திரியாகவே ஆகி விட்டது. குட்டிகுட்டி ரயில் பயணங்கள் செய்த காலங்கள் முடிந்து நீண்ட தூரப் பயணங்களுக்காகவே ரயிலை நாடும் நிலைமை ஏற்பட்டுப் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதுவும் ஊதக் காத்து வீசும் ரயில் பெட்டிகளில் இறங்க வேண்டிய நிறுத்தத்தைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற தவிப்போடு காத்திருக்கும் அனுபவம் எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் பேருந்துப் பயணங்களையே தவிர்த்து விட்டு மகிழுந்துகளிலேயே பயணம் செய்கிறார்கள். தூக்கமில்லா நள்ளிரவு ரயில் பயணங்களை நான் தவிர்த்து விட மாட்டேன்.
Viewing all 58 articles
Browse latest View live